வாழ்க்கையில் வெற்றிபெறத்
தேவையான பண்புகளுள் குறிப்பிடத்தக்க நற்பண்பு ஊக்கம் ஆகும்.
சோம்பலின்
இழிவைப் பற்றி மடியின்மை அதிகாரத்திலும், முயற்சியின்
பெருமையை ஆள்வினையுடைமை அதிகாரத்திலும் மன உறுதி பற்றி வினைத் திட்பம் அதிகாரத்திலும்
பேசிய திருவள்ளுவர் ஊக்கமுடைமை அதிகாரத்தில் ஊக்கத்தின் சிறப்பியல்புகளைப் பேசியுள்ளார்.
ஊக்கம் என்பது ஒருவருக்கு பல நிலைகளில்
ஏற்படலாம். பட்டம் உயரே பறப்பதற்கு காற்று மிகவும்
தேவையாகிறது. அதுபோல மனிதர்கள் உயர ஊக்கம் தேவைப்படுகிறது
ஊக்கத்தை மனதின் எழுச்சி,
புத்துணர்ச்சி, உற்சாகம் என பலவாறு அழைக்கிறோம்..
ஊக்கத்தை உள் ஊக்கம்,
புற ஊக்கம் எனப் பிரிக்கலாம்.
உள் ஊக்கமானது மனதளவில் தோன்றக்கூடியது..
புற ஊக்கம் நம்மைச் சுற்றியுள்ளவர்களாலும்
சூழல்களாலும் தோன்றுகிறது.
ஊக்கமது கைவிடேல் என்றார் ஔவையர். ஊக்கத்தை எப்போதும் கைவிடக் கூடாது என்பதுதான் இதன் பொருள் ஆனால் ஊக்கம் தரும் மதுவைக் கைவிடேல் எனச் சிலர் தவறாகப் புரிந்துகொண்டு மது ஊக்கம் தருகிறது என்று நம்புகிறார்கள். மேலும் மதுவைப் போல பல போதைப் பொருள்கள் ஊக்கம் தருவதாக நம்புவோர் பலர் உள்ளனர். விளையாட்டுப் போட்டிகளில் கூட விளையாட்டு வீரர்கள், ஊக்கம் தரும் உணவுப்பொருள்களோ, போதைப் பொருள்களோ பயன்படுத்தியுள்ளனரா என சோதிப்பது வழக்கமாக உள்ளது.
ஊக்கம் ஒருவருக்கு எப்படித் தோன்றுகிறது..
புத்தக
வாசிப்பு,
தன்னம்பிக்கைச் சொற்பொழிவு, இசை, நண்பர்களுடன் பேசுதல், விளையாட்டு, நடைப் பயிற்சி என மனதுக்குப் பிடித்த எந்த ஒரு செயலும் ஒருவருக்கு ஊக்கத்தை
தோற்றுவிக்கலாம்.
தூங்குவதால்
கூட ஊக்கம் பிறக்கிறது என்று சிலர் கருதுவதுண்டு.
எந்த
ஒரு செயலும் தொடர்ந்து செய்யும் போது சோர்வு தோன்றும்.
ஊக்கத்துடன் செய்கிறேன் என்று தொடர்ந்து செய்வதால் அந்த செயல் முழுமையடையாமல்
போவதும் உண்டு. அதனால் ஊக்கம் என்ற உள்ளுணர்வை முதலில் நாம் உணரவேண்டும்.
ஊக்கத்துடன் எதை நோக்கிச் செல்கிறோம் என்ற இலக்கு குறித்த தெளிவு வேண்டும் மேலும் ஊக்கத்துடன்
தொடர்புடைய முயற்சி, ஆர்வம் ஆகிய பண்புகளை வளர்த்துக்கொள்வது
சிறப்பு.
தமக்கு
உயர்வு வேண்டி மனத்தில் எழுச்சி கொள்ளுதல் இனிமையைத் தரும் என்னும் பொருளில் "உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே" என்றார்
பூதஞ்சேந்தனார்.
மனவுறுதி
இருந்தால் நினைத்தது நிறைவேறும் என்பதை,
எண்ணிய
எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப்
பெறின்.- 666 என்ற திருவள்ளுவர்.
சொல்லுவது
யார்க்கும் எளிது, சொல்லியபடி
செய்துமுடிப்பதே அரிது
என்று ஏன் சொன்னார்
என்று சிந்தித்தால் மன உறுதியும் ஊக்கமும் கொண்டவர்களே சொல்லியபடி செய்வார்கள் என்று
புரியும்.
செயற்கரிய
செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய
செய்கலா தார். (26)
ஊக்கம் உடையவர்களே
அரிய செயல்களைச் செய்யும் பெரியவர்களாவர்.
‘மனதில் உறுதி வேண்டும்“ என்றும்,
“விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டிய
படிசெல்லும் உடல்கேட்டேன்,“ என்றும்
பாரதியார் பாடியுள்ளார்
மனம்
இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
துணிந்துவிட்டால்
தலையில் எந்த சுமையும் தாங்கலாம் என்றார் கவிஞர் கண்ணதாசன். எல்லாம் மனதின் செயல்தான்.
திருக்குறளில் 60.
ஊக்கம் உடைமை என்றொரு அதிகாரம் உள்ளது.
உடையரெ
எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ
மற்று.- 591
ஊக்கத்தைத்
தவிர பிற உடைமைகள் பெரிதல்ல
உள்ளம் உடைமை உடைமை
பொருளுடைமை
நில்லாது
நீங்கி விடும்.- 592
பொருளுடைமை
நீங்கிவிடும், ஊக்கமாகிய உடைமை
நீங்காது
ஆக்கம்
இழந்தேமெனறு அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம்
கைத்துடை யார்.- 593
பெருஞ்செல்வத்தை
இழந்தாலும் மனவுறுதியுடையார் கலங்கார்
ஆக்கம்
அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா
னுழை.- 594
ஊக்கமுடையவரிடம்
செல்லும் வழிகேட்டு செல்வம் வந்து சேரும்
சிதைவிடத்து
ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா
டன்றுங் களிறு. - 597
அம்பு
தைத்தும் கலங்காத யானைபோல துன்பத்தில் கலங்காதிரு
உள்ளம் இலாதவர்
எய்தார் உலகத்து
வள்ளியம்
என்னுஞ் செருக்கு.- 598
ஊக்கமுடையவருக்கே
ஈகைப் பண்பு என்னும் செருக்கு இருக்கும்
பரியது
கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம்
புலிதாக் குறின்.- 599
ஊக்கமுடைய
புலியிடம், பெரிய யானையும்
தோற்றுவிடும்
உரமொருவற்கு
உள்ள வெறுக்கை அஃ தில்லார்
மரம்மக்க ளாதலே
வேறு.- 600
ஊக்கமில்லாதவர்கள்
மரத்துக்கு ஒப்பானவர்கள்
என ஊக்கத்தின் பெருமைகளை
எடுத்துரைத்துள்ளார் திருவள்ளுவர்.
ஒரு கதை,
சாலையில் சென்ற ஒரு இளைஞன் வழியில்
இருந்த ஒரு மாமரத்திலிருந்த மாம்பழத்திற்கு ஆசைப்பட்டு மேலே ஏறிவிட்டான். கீழே இறங்கும் போது தாம் மிக உயரத்தில் இருப்பதாகக் கருதினான். அந்த வழியாக மிதிவண்டியில் வந்த முதியவரிடம் கீழே இறங்க உதவுமாறு கேட்டான்.
அவரோ சிறு கல்லை எடுத்து அந்த இளைஞன் மீது எறிந்தார். உதவி கேட்டால் ஏன் கல்லால் எறிகிறீர்கள் முடிந்தால் உதவுங்கள் இல்லையென்றால்
செல்லுங்கள் என எச்சரித்தான். அவர் மீண்டும் ஒரு சிறு கல்லெடுத்து
அவன் மீது எறிந்தார். இப்போது அந்த இளைஞன் கீழு விழுந்தாலும்
பரவாயில்லை என்று கிளைகளைப் பற்றி தட்டுத்தடுமாறி கீழே இறங்கி வந்து அந்த முதியவரிடம்
அருகில் வந்து உதவி கேட்டால் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கோபமாகக் கேட்டான்.
அதற்கு அந்த முதியவர் பொறுமையாக நான் உனக்கு உதவிதானே செய்தேன் என்றார்.
கல்லால் அடித்ததா உதவி என்று கேட்ட இளைஞனிடம். உன்னால் இறங்கமுடியும், உனக்கு யாரும் உதவவேண்டியதில்லை
என்று புரியவைத்தது எவ்வளவு பெரிய உதவி என்று கேட்டார் முதியவர்
ஊக்கம்
சில நேரங்களில் இயல்பாகவே நமக்குள் தோன்றுகிறது.
சிலநேரங்களில்
அன்பான மொழிகளாலும், கோபத்தாலும், தன்மானம் கருதியும் ஊக்கம் தோன்றுகிறது.
மனிதர்களை மூன்று
வகையாகப் பிரித்தால்,
· என் தகுதிக்கு மதிப்பில்லை எனப்
புலம்புவோர்!
· கிடைத்ததுபோதும் என்று தன்னைத்
தேற்றிக்கொள்வோர்!
· இந்த உலகம்
மிகவும் பெரிது, என்
தகுதிக்கு மதிப்பளிப்போர் உலகில் எங்கும் உள்ளார்கள் எனத்
தன் தகுதியின் மீது தன்னம்பிக்கை கொண்டோர்!
எனப் பகுக்கலாம்.
இதில் மூன்றாவது வகை மனிதர்கள் அரிதானவர்கள். அறிவு, ஆற்றல், தன்னம்பிக்கை, தன்மானம் ஆகிய பண்புகளை ஒன்றாகப் பெற்று வாழ்பவர்கள். ஊக்கமுடையவர்களுக்குத் தான் இத்தகைய
பண்புகள் இயல்பாகவே இருக்கும். இதனை,
வருக என வேண்டும் வரிசையோர்க்கே
பெரிதே உலகம்; பேணுநர் பலரே (புறநானூற்றில்,)
எனப்
பெருஞ்சித்திரனார் பாடியுள்ளார்.
புற
ஊக்கங்களுள் நண்பர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர். பெற்றோர், ஆசிரியர்களுக்குத் தெரியாத நம் திறமைகளையும்
நம் நண்பர்கள் வழியாக அறிந்துகொள்வோம். அந்த நண்பர்கள் எப்படிப்பட்டவர்களாக
இருக்கவேண்டும்?
“எலி போன்ற நண்பர்களைத்
தேர்ந்தெடுக்கக்கூடாது”
“புலி போன்ற
நண்பர்களையே தேர்ந்தெடுக்கவேண்டும் என்று சோழன் நல்லுருத்திரனார்
புறநானூற்றில்
பாடியுள்ளார்.
வயலில்
இருந்து கதிராகிய உணவைக் கொண்டுசென்று எலி தன்
வலைக்குள் மிகுதியாகச் சேர்த்து வைக்கும். அவ்வெலியைப் போல சிறுமுயற்சியையும்,
சுயநலமும் கொண்டவர்களிடம்
நட்புக் கொள்வதைவிட. வீரம் செறிந்த புலி முதல்நாள் வேட்டையாடிய ஆண்பன்றி இடப்பக்கம்
விழுந்தால் அதனை உண்ணாது, அடுத்தநாள்
காத்திருந்து பெருமலைப்பக்கத்தில் வீரம் நிறைந்த ஆண்யானையை வலப்பக்கமாக வீழ்த்தி
உண்ணும். அத்தகைய புலிபோன்ற பெருமுயற்சியும், கொள்கையும்,
ஊக்கமும் கொண்டவர்களிடம் நட்புக் கொள்வதே சிறந்தது என்று பாடியுள்ளார்.
காட்டில்
வாழும் முயலைப் பிடிக்க எண்ணியவன் அந்த முயலை எய்து வருவதைவிட,
பெரிய யானையைக் கவர முயன்றவன் எய்த அம்பு பிழைத்து வெறுங்கையுடன்
வந்தாலும் அது தான் சிறப்பு என்பதை,
கான
முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல்
ஏந்தல் இனிது. – குறள்
-772. என்றார் திருவள்ளுவர்.
யானை வேட்டுவன்
யானையும் பெறுமே
குறும்பூழ்
வேட்டுவன் வறுங்கையும் வருமே – புறநா-214
யானை
வேட்டுவன் தவறாது யானையை வேட்டையாடி மீள்வதும் உண்டு. சிறு பறவைகளை வேட்டையாட
விரும்பிச் செல்வோர் அவற்றைப் பெறாது வெறுங்கையுடனே வருவதும் உண்டு என்றார் கோப்பெருஞ்
சோழன்.
அதனால்
உள்ளுவ
தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந்
தள்ளாமை நீர்த்து.- 596
கிடைத்தாலும்
கிடைக்காவிட்டாலும் உயர்வாக எண்ணுவதே என்றும் உயர்வு
வெள்ளத் தனைய
மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது
உயர்வு.- 595 என்பதை உணர்வோம்
நீரளவுக்கு
மலர் நீளும், ஊக்கத்தின் அளவே உயர்வு
அமையும்..
ஊக்கத்துடன் வாழ்வோம்! உயர்வை அடைவோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக