வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

இதுவும் கடந்துபோகும் - வானொலி உரை

 


இன்பமும் துன்பமும் வாழ்க்கையின் இரண்டு பக்கங்கள். இன்பம் சிரிப்பையும், துன்பம் அழுகையையும் வரவழைக்கிறது. உண்மையான நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ இன்பத்தைப் பகிர்ந்துகொண்டால் இரண்டு மடங்காகிறது. துன்பத்தைப் பகிர்ந்துகொண்டால் பாதியாகக் குறைகிறது. நமக்குப் பிடித்த செயல்களில் உள்ள துன்பங்களை மனம் கண்டுகொள்வதில்லை. நமக்குப் பிடிக்காத செயல்களில் உள்ள சிறு துன்பங்களையும்,  மனம் ஏற்றுக்கொள்வதுமில்லை, சகித்துக்கொள்வதுமில்லை. பக்குவமுடையவர்கள் இன்பங்களையும் துன்பங்களையும் சமமாகவே பார்ப்பார்கள். பக்குவத்தின் முதிர்ந்த நிலை துன்பத்திலும் சிரிப்பது.

 திருக்குறளில் (63) இடுக்கண் அழியாமை என்றொரு அதிகாரம் உண்டு

 இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில். - 621

துன்பம் வரும்போது சிரிஅதுதான் துன்பத்தை வெல்லும் வழி  என்றார் திருவள்ளுவர். துன்பத்தில் சிரிக்கமுடியுமா? அப்படிச் சிரித்தால் அவர்களை இந்த உலகம் எப்படிப் பார்க்கும். இவருக்கு மனநலம் ஏதும் பாதிக்கப்பட்டுள்ளதா என்றுதானே பார்க்கும்.  மருத்துவர் ஊசி போடும் போது குழந்தைகள் அழுவதைப் பார்த்திருப்போம். ஆனால் பெரியவர்கள் அழுவதில்லை. இது எப்படி சாத்தியமானது? இருவருக்கும் வலி பொதுவானதுதானே.. இருந்தாலும் வலியை ஏற்றுக்கொள்ள மனம் துணிந்துவிட்டால் துன்பங்கள் தெரிவதில்லை..

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்

உள்ளத்தின் உள்ளக் கெடும்.- 622

வெள்ளம்போல பெருந்துன்பத்தையும் மனவலிமையால் வெல்லலாம்

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர்.- 623

துன்பத்தில் கலங்காதவர்துன்பத்திற்கே துன்பம் கொடுப்பார்கள்

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.- 624

காளைபோன்ற விடாமுயற்சியுடைவனிடம் துன்பமே துன்பப்படும்

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற

இடுக்கண் இடுக்கட் படும்.- 625

தொடரும் துன்பமும்மனவலிமையுடையவனிடம் துன்பம் கொள்ளும்

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று

ஓம்புதல் தேற்றா தவர்.- 626

செல்வத்தால் பெருமிதம் கொள்ளாதவர்வறுமையில் வருந்தமாட்டார்

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்

கையாறாக் கொள்ளாதா மேல்.- 627

உடல் துன்பம் தரும் என உணர்ந்தவர் அதற்காகக் கலங்கார்

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

துன்பம் உறுதல் இலன்.- 628

இன்பத்தை விரும்பாமல்துன்பத்தை இயல்பு என்பவனுக்கு ஏது துன்பம்

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்

ஒன்னார் விழையுஞ் சிறப்பு.- 630

துன்பத்தில் கலங்காதவரை பகைவரும் விரும்புவர்


துன்பம் வரும் போது அழுகை தானே வரும்.
சிரிப்பு எப்படி வரும் என்கிறீர்களா..?

நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் துன்பத்திலும் சிரிக்க முடியும்.!
நேர்மறை எண்ணங்களுக்கும் – எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையிலான போராட்டம் தான் நம் வாழ்க்கை.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல். - 314

தீமை செய்தவரும் வெட்கப்பட நன்மை செய்து விடு என்ற குறளை ஆழ்ந்து நோக்கினால்..

தங்களுக்கு ஒருவர் இன்னா செய்தால் அதை பொறுத்துக்கொண்டு இன்னா செய்தவர் வெட்கப்படுமாறு அவருக்கு நன்மை செய் என்று மட்டும் சொல்லாமல், செய்து விடல் என்றார். விடல் என்ற சொல் உனக்கு அவர் இன்னா செய்ததையும் மறந்து விடு. நீ அவருக்கு இனிய செய்ததையும் மறந்து விடு. எதையும் மனதில் தூக்கிச் சுமக்காதே என்ற அறிவுரையாகவே தோன்றுகிறது. மனதில் தூக்கிச் சுமப்பதால் தான் இன்பம், துன்பம் என்பன சில நேரங்களில் இருமடங்காகத் தெரிகின்றன.

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தம்நோய்போல் போற்றாக் கடை.- 315

பிறர் துன்பத்தையும் தன்துன்பமாக நினைப்பதே அறிவின் பயன்.

ஒருவர் கால் தவறி கீழே விழுந்துவிட்டார் என்றால் அவரைப் பார்த்து சிரிப்பவர்கள் சிலபேர்..உதவுபவர்கள் சிலபேர்.. அறிவுரை சொல்பவர்கள் சிலபேர்..உடனே திறன்பேசியில் அதைப் பதிவு செய்ய முயல்வோர் சிலர்..

இன்னொருவரின் துன்பத்தை பலவாறு எதிர்கொள்கிறோம். ஆனால் அறிவுடையவர்கள் இன்னொருவரின் துன்பத்தையும் தம் துன்பமாகவே கருதுவர்.

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு  என்று குறள் சுட்டும், துன்பங்களை நீக்கும் நல்ல நண்பர்களாக இருப்போம்..

இன்பங்கள் தோன்றுவது நேர்மறை எண்ணங்களால்…
துன்பங்கள் தோன்றுவது எதிர்மறை எண்ணங்களால்…
அளவுக்கதிகமான இன்பமும் மூளையைச் செயலிழக்கவைக்கும்..
அளவுக்கதிகமான துன்பமும் மூளையைச் செயலிழக்கவைக்கும்..

சொர்க்கம்! நரகம்! இரண்டும் எங்கோ இல்லை …
நம் நேர்மறை, எதிர்மறை எண்ணங்களாலேயே இவ்விரண்டும் தீர்மானிக்கப்படுகின்றன.

இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை!
துன்பம் வரும் போது சிரி என்றார் வள்ளுவர்..
துன்பத்தை எதிர்கொள் - துன்பத்தை இன்பமாகக் காண்
இன்னாதது தான் உலகம் - அதில் இனியவை காண்பர் உலகின் இயல்பு உணர்ந்தோர் என்கிறார் பக்குடுக்கை நன்கணியார் என்னும் புலவர்.

 

 

ஒரு வீட்டில் சாக்காட்டுப்பறை 

( சாவுக்கொட்டு மேளம்) ஒலிக்கிறது. 

ஒரு வீட்டில் திருமணத்துக்கு இசைக்கும் முழவோசை முழங்குகிறது. 

கணவரோடு கூடிய மகளிர் மலர் அணிந்து மகிழ்ச்சியோடு உள்ளனர். கணவரைப் பிரிந்த மகளிர் வருத்தத்துடன் கண்களில் கண்ணீர் வரக் கலங்குகின்றனர்.

இந்த உலகைப் படைத்தவன் என்று ஒருவன் இருந்தால் அவன் நற்பண்பில்லாதவனாகவே இருப்பான். ஏனென்றால் தாங்கிக்கொள்ள இயலாத துன்பங்களை இன்பங்களுக்கிடையே வைத்தானே !
உலகம் இன்னாதது தான் - அதன் இயல்பினை உணர்ந்துகொண்டால்

அது இனிமையானதுதான்.

இனியது என்பது இன்பமானது,
இன்னாதது என்பது துன்பமானது என நாம் வரையறைசெய்து வாழ்ந்து வருகிறோம்.

நம்மைச்சுற்றி நாம் வாழும் வாழ்க்கையில் கணக்கிலடங்கா இன்பமும், துன்பமும் நிறைந்திருக்கிறது. இன்பம் வந்தபோது மகிழும் மனது துன்பம் வந்தபோது துவண்டு போகிறது.

எதிர்மறை எண்ணங்கள் நம்மைத் துவளச் செய்யும்
நேர்மறை எண்ணங்கள் நம்மை எழச் செய்யும்
நாம் எதிர்பார்ப்பது போல் வாழ்க்கை எப்போதும் அமையாது..
எதிர்பாராத நிகழ்வுகளின் தொகுப்பே வாழ்க்கை!
இன்பம், துன்பம் என்பதற்கான அளவீடு அதனை நாம்

எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதிலேயே அமைகிறது.

துன்பம் நாம் வரவழைத்துக்கொள்வது ! இன்பம் எப்போதும் நம்மோடு இருப்பது !

ஒரு கதை,

அரசன் ஒருவனுக்கு எல்லாம் இருந்தும் ஏதுமில்லாதது போன்ற மனநிலை. மகிழ்ச்சியைத் தேடி துறவியாகலாம் என காட்டுக்குச் சென்றான். கையில் வழிச்செலவுக்குக் கொஞ்சம் பணம், மாற்று ஆடைகளுடன் சிறு பை ஒன்று வைத்திருந்தான். வழியில் ஓர் துறவியைக் கண்ட அரசன் அவரிடம் தன் நிலையை எடுத்துரைத்தான். எல்லா இன்பங்களும் இருந்தும் மனதில் நிறைவில்லை. மகிழ்ச்சி இல்லை என்று சொன்னான் அரசன். சற்றும் எதிர்பாரத நேரத்தில் அந்தத்துறவி அரசனின் கையிலிருந்த பையைப் பறித்துக்கொண்டு ஓடினான். இவர் போலியான துறவியாக இருப்பாரோ எனக் கருதிய அரசன் அத்துறவியை நீண்ட தூரம் பின்தொடர்ந்து சென்றான். சிறிது நேரத்துக்குப் பின் அத்துறவி எங்கு அந்தப் பையைப் பறித்தாரோ அதே இடத்தில் நின்று அரசனிடம் அந்தப் பையைக் கொடுத்தார். அரசன் ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று கேட்டார். அதற்கு அத்துறவி இப்போது தங்கள் மனநிலை எப்படியிருகிறது என்று கேட்டார். அதற்கு அரசன் தொலைந்த பொருள் கிடைத்தால் மகிழ்ச்சியாகத்தானே இருக்கும் என்றார். அதற்குத் துறவி இதே பை இதற்கு முன்பும் தங்களிடம்தானே இருந்தது. அப்போது இந்த மகிழ்ச்சி எங்கே இருந்தது எனக் கேட்டதாக ஒரு கதை உண்டு.

நம்மிடமிருக்கும் இன்பங்களை நாம் பலநேரம் உணர்வதில்லை. எப்போதவது வரும் துன்பங்களை மட்டும் எப்போதும் எண்ணி வருந்துகிறோம். துன்பங்களை நினைத்துப் பார்ப்பது இரண்டுமுறை துன்பப்படுவதற்குச் சமமானது.

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்“
என்றார் கவிஞர் கண்ணதாசன்.

உறங்குவது போன்றது மரணம், விழிப்பது போன்றது பிறப்பு இத்தகைய வாழ்க்கையில் இன்பம் மட்டுமே இருக்கவேண்டும் என நினைப்பது பேராசை! 

துன்பம் வந்தால் இன்பத்தைப் போல ஏற்றுக் கொள்ளும் மனநிலையை வளர்த்துக்கொள்ளவேண்டும்.  தாமரை இலையில் நீர்துளி போல வாழ்பவர்கள் துன்பத்திலும் இன்பத்திலும் கலங்குவதில்லை.

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்

துன்பம் உறுதல் இலன்.- 629

இன்பத்தால் மகிழாதவனுக்குதுன்பத்தில் துயரம் ஏற்படுவதில்லை   என்ற திருவள்ளுவரின் சிந்தனையை உணர்வோம்..

இதுவும் கடந்து போகும் என்று..

துன்பங்களைச் சிரித்துக்கொண்டே கடந்து செல்வோம்!

 

 

முனைவர் இரா.குணசீலன்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக