வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

நூல் பல கல்..

 

அறிவை வளர்க்கும் வாயில்களுள் நூல்கள் குறிப்பிடத்தக்கன.

கல்வெட்டு, ஓலைச்சுவடிகள் என பதிவுசெய்யப்பட்ட மனித சமூகத்தின் அனுபவங்கள் அச்சுவடிவில் புத்தகங்களாப் பதிப்பிக்கப்பட்டன.

புத்தகங்களைப் பணம்கொடுத்து வாங்குகிறோம்..

ஆனால் அறிவை விலைகொடுத்து வாங்கமுடியாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆம்..

புத்தகங்களுக்குக் கொடுக்கும் பணம் என்பது அச்சாக்கத்துக்குப் பயன்படுத்திய மை மற்றும் காகிதங்களுக்கான பணம் தானே தவிர அறிவுக்கானது அல்ல..

அறிவை விலைகொடுத்து வாங்கமுடியாது.

அச்சுப் புத்தகங்களை வாசித்த காலம் மாறி இன்று மின் புத்தகங்களாகவும் ஒலிப்புத்தகங்களாகவும் தொழில்நுட்ப மாற்றத்தால் பல வடிவங்களில் நூல்கள் கிடைக்கின்றன.

உயிர்களுக்கு சுவாசித்தல் எவ்வளவு முதன்மையானதோ அதுபோல மனிதர்களுக்கு வாசிப்பு மிகவும் தேவையானது.

வாசித்தல் சிலருக்குப் பொழுதுபோக்கு, சிலருக்குத் தவம்,

நல்ல நூலானது ஒருவரின், அனுபவம், அறிவு நிலைகளுக்கேற்ப புதிய புதிய சிந்தனைகளைத் தருகிறது.

 

திருக்குறளில் நூல்களைப் பற்றி பல குறட்பாக்கள் உள்ளன.

 

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு. - 396

மணற்கேணியில் நீரைப்போலகற்க கற்க அறிவு வளரும்

 

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய

நூலின்றிக் கோட்டி கொளல்.   (401)

 

நல்ல நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போன்றது.

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவை யற்று.- 407

 

நிறைவான நூல்களைக்  கல்லாதவர்அழகான மண்பொம்மை போன்றவராவர்.

 

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்.- 410

 

கல்லாதவரும் விலங்குகளும் ஒன்றாகவே கருதப்படுவர். ஆனால் நூல்களை வாசித்தால் மனிதராகலாம்.

 

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு. - 783

நல்ல நூல்களிலும்நல்ல நண்பர்களிடமும் நாளும் பல கற்கலாம்..  

 

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்

வென்றி வினையுரைப்பான் பண்பு.-  683

நல்ல நூலறிவுடையவனே தூது செல்லத் தகுதியானவன்

 

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்

சொல்தெரிதல் வல்லார் அகத்து. – 717

நல்லறிஞர்கள், கற்றோர் அவையில் பேசும்போது நூல்களின் பெருமை நன்கு விளங்கும்

 

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்

நுண்ணவை அஞ்சு பவர்க்கு. – 726

கோழைக்கு வாள் எதற்குஅவையஞ்சுவோருக்கு நூல் எதற்கு?   

 

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து

அஞ்சு மவன்கற்ற நூல்.- 727

அவையயஞ்சுபவன் கற்ற நூல் பேடியின் வாளுக்குச் சமம்

 

என நூல்களின் பெருமை பற்றி பல குறட்பாக்களில் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள்,

 

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்

உண்மை அறிவே மிகும். -373

 

நல்ல நூல்கள் பல கற்றாலும் இயற்கையான  அறிவே மிகும் என்று ஊழ் என்ற அதிகாரத்தில் சொன்ன திருவள்ளுவர் கல்வி என்ற அதிகாரத்தில்,

 

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. -398  என்று கூறியுள்ளார்.

ஒரு பிறவியிலே தான் கற்ற கல்வியானது, ஏழு பிறப்புக்களிலும் தொடரும்

 

இவ்விரு குறட்பாக்களிலும் விதி, பிறவி தொடர்பான நம்பிக்கைகளை நாம் இன்றைய அறிவியல் குறிப்பிடும் மரபியல் கூறுகள் வழி ஒப்பு நோக்கினால் நாம் பெறும் அறிவு மூளையில் பதிவாகி அடுத்த தலைமுறைக்கும் தொடர்வதை உணரமுடியும்.

  • குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி என்ற பழமொழி இதையே வலியுறுத்துகிறது.

நாம் வாசிப்பதால் நமக்குக் கிடைக்கும் நூலறிவு மரபுக் கூறுகள் வழியாக அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்லும் அறிவுசார்ந்த சொத்து. அதுபோல நாம் சேர்த்து வைக்கும் நல்ல நூல்களைவிட சிறந்த செல்வம் வேறென்ன இருக்கமுடியும். நூல்களைத் வாசிப்பதும், தொகுப்பதும் தேவைதான் என்றாலும் படித்தவற்றுள் ஏதாவது கடைபிடிக்கவேண்டுமல்லவா. நல்ல நூல்களைப் படித்தால் அறிவு, அன்பு, ஒழுக்கம், ஊக்கம் என பல நற்பண்புகள் தோன்றும்.

 

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை -322

அறநூல்களில் தொகுக்கப்பட்ட அறக்கருத்துகளைவிட மேலானது பகுத்துண்டு பல உயிர்களையும் பாதுகாப்பது என்பதை உணர்வோம். இன்றைய சூழலில் பல ஊர்களிலும் புத்தகக்கண்காட்சிகள் நடைபெறுகின்றன,  கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி ஊர்களிலும் பொது நூலகங்களிலும் நூல்களை வாசிப்பதற்கான வாய்ப்புள்ளது. நூலகங்கள் திறக்கப்படும்போது சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என நூல்களின் பெருமை பேசுவதுண்டு. இன்றைய சூழலில் சிறைச்சாலைகளிலும் நூலகங்கள் திறக்கப்படுகின்றன.

 

நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற

நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு என்ற ஔவையார் கருத்து சிந்திக்கத்தக்கது.

 

நூல் பல கல் என்ற தொடர் ஆத்திசூடியில் இடம்பெற்றுள்ளது.

கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் என்பது அதற்கு இணையான பழமொழி.

பல நூல்களைக் கண்டு அதில் சிறந்த நூலைக் கற்றவன் பண்டிதன் ஆவான் என்பது இதன்பொருள்.

 

மனிதரெலாம் அன்புநெறி காண்பதற்கும்
மனோபாவம் வானைப்போல் விரிவடைந்து
தனிமனிதத் தத்துவமாம் இருளைப் போக்கிச்
சகமக்கள் ஒன்றென்ப துணர்வ தற்கும்,
இனிதினிதாய் எழுந்தஉயர் எண்ண மெல்லாம்
இலகுவது புலவர்தரு சுவடிச் சாலை
புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்
புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும் என்றார் பாரதிதாசன்

 

ஒரு கதை,

ஒரு நூலகத்தில் இருந்த குப்பைத்தொட்டி தனியே புலம்ப ஆரம்பித்தது...

இந்த நூலகத்தில் நிறையபேர் பயன்படுத்துவது என்னைத்தான். இங்கு நிறைய சுமப்பவனும் நான்தான். இருந்தாலும் என்னை யாருமே மதிப்பதில்லை. ஆனால் இங்கு யாருமே பயன்படுத்தாத நூல்கள் நிறைய உள்ளன. இருந்தாலும் அவை எதையும் சுமப்பது கூட இல்லை. இருந்தாலும் அந்த நூல்களையே எல்லோரும் மதிக்கிறார்கள். 
என்ன உலகமடா இது..” என்று தன்னைத்தானே நொந்துகொண்டது குப்பைத்தொட்டி.

சிலநூல்கள் குப்பைத்தொட்டியின் அறியாமையை எண்ணிச் சிரித்தன. அந்த நூல்களுள் ஒருநூல் மட்டும் குப்பைத்தொட்டிக்கு அறிவுரை சொன்னது...
நாம் எத்தனை முறை பயன்படுத்தப்படுகிறோம்?  என்பதைவிட

எதற்குப் பயன்படுகிறோம் என்பதல்லவா சிந்திக்கத்தக்கது!

நாம் எவ்வளவு சுமக்கிறோம் என்பதைவிட

எதைச் சுமக்கிறோம் என்பதுதானே பெருமைதருவது!

என்று குப்பைத்தொட்டிக்கு அதன் அறியாமையைச்சுட்டிக்காட்டியது ஒரு நூல்.

இருந்தாலும் குப்பைத்தொட்டி புலம்பிக்கொண்டே இருந்தது. எல்லாம் என் தலைவிதி என்று..

 

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு – 358

 

அறியாமையை அறிந்துகொள்வதுதானே அறிவின் தொடக்கம்.

 

எம்மை யுலகத்தும் யாங்காணேம் கல்விபோல்

மம்மர் அறுக்கும் மருந்து என நாலடியார் உரைக்கிறது.

 

அறியாமையை நீக்கும் அறிவு கல்விச்சாலைகளில் மட்டுமல்ல நல்ல நூல்களிலும் கிடைக்கும்.

 

ஆயிரம் நூல்களைப் படிப்பதைக் காட்டிலும் படித்தவற்றுள் ஏதாவது நற்பண்புகளை வாழ்க்கையில் கடைபிடிப்பது மேலானது.

 

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார்.   (140) 

பல நூல்களைக் கற்றாலும் ஒழுக்கம் என்ற பாதையைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

பல நூல்களைக் கற்றுவிட்டேன் என்ற கர்வம் தலைக்கேறிவிடக் கூடாது..

கல்வி கரையில; கற்பவர் நாள் சில என்பதை என்றும் நினைவில் கொள்ளவேண்டும்.

 

உடலுக்கு உணவுபோல,சிந்தனை வளத்துக்கு நல்ல நூல்கள் தேவை.

வாசிப்பு என்பது ஒரு வாழ்நாள் பயணம். புத்தக வாசிப்பு நம்மைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளவும், நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும். எனவே, வாசிப்பை ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்வோம்.

 

புத்தக வாசிப்பு சிந்தனையைத் தூண்டுகிறது

அறிவை விரிவு செய்கிறது..

அறியாமையை அறிந்துகொள்ளத் துணைநிற்கின்றது.

கற்பனைத் திறன், சொல்வன்மை மேம்படுகிறது,

கருத்தாழம் தோன்றுகிறது..

பல துறைசார்ந்த அறிவு வளர்ச்சி ஏற்படுகிறது.

தனிமனித ஒழுக்கம் தோன்றுகிறது..

பரந்த உலகத்தை நோக்கி தன்னம்பிக்கையுடன் அடியெடுத்துவைக்க உதவுகிறது.

 

கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் பேசிய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள்தமிழ் மொழிக்கு சீரும், சிறப்பும் ஏற்படுத்தியவர்களில் திருவள்ளுவர்உ.வே.சா, ஜி.யு.போப், பாரதியார் ஆகியோர் எனது மனதில் நீங்காத இடம் பிடித்தவர்கள்” என்று பேசினார். அவர் சொன்னதுபோல நல்ல நூல்களை ஆழ்ந்து படித்தால் அந்த நூல்கள் நம் மனதில் நீங்கா இடம்பிடிக்கலாம். அந்நூல்கள் வழியாகப் பெற்ற அறிவு, அனுபவம் நம் வாழ்வின் திருப்புமுனையை ஏற்படுத்தலாம். அதில் சிறந்த நூல் நம் வாழ்க்கையின் வழிகாட்டியாகலாம்.

 

நூல்கள் பல கற்போம்! நல்லறிவு பெறுவோம்!

 

 

 

முனைவர் இரா.குணசீலன்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக