வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 28 ஜனவரி, 2025

தமிழ் மின் உள்ளடக்கங்களுக்கான தேடுபொறி உகப்பாக்கம் - SEO




Search Engine Optimization for Tamil e-Contents

குறிச்சொற்கள்

          தமிழ் மின் உள்ளடக்கங்கள்தேடுபொறி உகப்பாக்கம்தேடுபொறி மேம்படுத்தல்வலைப்பதிவுமின்னூல்வலையொளி, Tamil E-Contents, SEO, Search Engine Optimization, Blog, E-Book, Youtube


 கட்டுரைச் சுருக்கம்

          அறிவைப் பெறும் வாயில்களுள் ஆசிரியர்கள் முதன்மையானவர்கள். ஆசிரியர்களுக்கு இணையாக இன்று இணையதளங்கள் வளர்ந்துள்ளன. இணையதளங்களில் கொட்டிக்கிடக்கும் செய்திகளுள் பயனர்களுக்குத் தேவையான செய்திகளைப் பெறத் தேடுபொறிகள் உதவுகின்றன. தேடுபொறிகளால் மனிதர்களின் அறிவுப் பரப்பு விரிவடைந்துள்ளது. மொழி எல்லைகளைக் கடந்து அவரவர் தாய்மொழியில் பல நுட்பங்களையும் அறிந்துகொள்ளத் தேடுபொறிகள் உதவுகின்றன. தமிழ் மின் உள்ளடக்கங்களைப் பலரும் உருவாக்கினாலும், தேடுபொறிகளுக்கு இணையத்தில் உள்ள பல்வேறு தமிழ் வளங்கள் தெரியவில்லை. தமிழ் மின் உள்ளடக்கங்களுக்கான தேடுபொறி உகப்பாக்கம் குறித்து நுட்பமாக எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.

 

தேடுபொறி

          தேடுபொறி என்பது ஒரு கணினி நிரலாகும். இது இணையத்தில்  உள்ள தரவுகளிலிருந்து பயனர்கள் தேடும் தரவுகளைத்  திரட்டி வழங்குகிறது. இத்தரவுகளின் துல்லியத்தன்மை, நம்பகத்தன்மை, விரைந்து வழங்குதல் ஆகிய நிலைகளில் தேடுபொறிகளின் தரநிலை மாறுபடுகிறது. “ஆர்ச்சி (Archie) தேடுபொறி[1]  1990 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட முதல் தேடுபொறியாக அறியப்படுகிறது. அதைத் தொடர்ந்து யாகூ, கூகுள், பிங், பைடு என பல தேடுபொறிகள் பல்வேறு நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.


 தேடுபொறிகளின் செயல்பாடு

          ஒவ்வொரு தேடுபொறிகளும் செய்திகளைத் தேடுவதில் பல முறைகளைப் பின்பற்றுகின்றன. பொதுவாக, வலம்வருதல், அட்டவணைப்படுத்துதல், தரவரிசைப்படுத்துதல் (Crawling, Indexing, Ranking) ஆகிய செயல்பாடுகள் குறிப்பிடத்தனவாகும்.

 தவழுமிகள் (Crawlers) 

தவழுமி என்பது தேடுபொறிகளால் பயன்படுத்தப்படும் ஒரு செயலி ஆகும். இணையத்தில் ஒரு பக்கம் பல பக்கங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த வழியைப் பின்பற்றி  தவழுமிகள் இணையத்தில் உலாவி, தரவுகளைப் பெற்றுக்கொள்கின்றன. தவழுமிகள் ஒரு வலைத்தளத்தில் தவழுகை செய்யும் போது பல்வேறு காரணிகளைப் பார்வையிடுகின்றன. தேடுபொறிகளால் ஒவ்வொரு பக்கமும் பட்டியலிடப்படுவதில்லை.தேடும் பட்டியலில் இருந்து தேவையற்ற உள்ளடக்கத் தரவுகளைத் தவிர்ப்பதற்காக, களத்தின் முதன்மை கோப்பகத்தில் நிலையாக இருக்கும் robots.txt கோப்பின் மூலமாக, சில குறிப்பிட்ட கோப்புகள் அல்லது கோப்பகங்களைக் தவழுகை செய்ய வேண்டாம் என்று வலைத்தலைமைகள் உளவிகளுக்கு தகவல் அனுப்பிவிடும்.”[2] தவழுமிகளின் செயல்திறனே ஒரு தேடுபொறியின் தரத்தைக் காட்டுவதாக அமைகிறது.

தேடுபொறி அட்டவணைப்படுத்தல் (Indexing)

        தேடுபொறி அட்டவணைப்படுத்தல் என்பது விரைவான மற்றும் துல்லியமான தகவலைப் பெறுவதற்கு வசதியாகத் தரவுகளை சேகரித்தல், பாகுபடுத்துதல் மற்றும் சேமித்தல் செயல்முறை ஆகும்.[3] தேடல் வினவலுக்கான தொடர்புடைய ஆவணங்களைக் கண்டுபிடிப்பதில் வேகம் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கு இச்செயல்முறை உதவுகிறது.

 தளவரைபடங்கள் (Sitemaps)

தளவரைபடங்கள் என்பது XML வடிவமைப்பில் உள்ள ஒரு நெறிமுறையாகும், இது இணையதளத்தைப் பற்றித் தெரிவிப்பதற்கான ஒரு வழியாகும். இணையதளத்தின் புதுப்பித்தலுக்கான இடைவெளிகளை அறிந்துகொள்ள இம்முறை உதவுகிறது. தவழுமிகள், தளத்தை மிகவும் திறமையாக வலைவலம் செய்யவும் மற்றும் தளத்தின் மற்ற உள்ளடக்கத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட பக்கங்களைக் கண்டறியவும்[4] தளவரைபடங்கள் பெரிதும் உதவுகின்றன. 

பக்கத் தரவரிசை (PageRank)

இணையதளப் பக்கங்களின் தரவரிசை (PR) என்பது தேடுபொறிகளால் திரட்டப்பட்ட தகவல்கள் அட்டவணைப்படுத்தலுக்குப் பிறகு தரவரிசைப்படுத்தும் முறையாகும்.”உலகளாவிய வலையில், ஒரு பக்கமானது மற்ற அனைத்துப் பக்கங்களுக்கும் மத்தியில் எந்த அளவு முக்கியமானதாக உள்ளது என்பதை ஒரு வாக்களிப்பு மூலம் அறிவதாகும்[5] இணையதளப் பக்கங்களின் தரவரிசை அடிப்படையிலேயே பயனர்கள் தேடும்போது தொடர்புடைய செய்திகள் பட்டியலிடப்படுகின்றன. 

கூகுள் சர்ச் கன்சோல்

          தேடுபொறிகளுள் அதிகம் பயன்படுத்தப்படுவது கூகுள் தேடுபொறி ஆகும். கூகுள் நிறுவனத்தின் பயன்பாடுகளுள் கூகுள் சர்ச் கன்சோல் குறிப்பிடத்தக்கது. இணையதளம் அல்லது வலைப்பதிவுகளை இதில் பதிவுசெய்யும்போது கூகுள் தேடுபொறி எளிதில் பதிவுகளைக் கண்டுகொள்ளும். ” 20 மே 2015 வரை, இந்தச் சேவை Google Webmaster Tools என்று அழைக்கப்பட்டது. ஜனவரி 2018 இல், கூகுள் பயனர் இடைமுகத்தில் மாற்றங்களுடன் தேடல் கன்சோலின் புதிய பதிப்பை அறிமுகப்படுத்தியது.[6] வலைப்பக்கத்தின் தள அமைப்பைச் சமர்ப்பிக்கவும் சரிபார்க்கவும் உதவுகிறது. வலைவல விகிதத்தைச் சரிபார்த்து, ஒரு குறிப்பிட்ட தளத்தை கூகுள் போட் எப்போது அணுகுகிறது என்பதைப் பற்றிய புள்ளிவிவரங்களைப் பார்க்கப் பயன்படுகிறது. தளத்தில் அட்டவணைப்படுத்தல், ஸ்பேம் அல்லது பிற சிக்கல்களை கூகுள் சந்திக்கும் போது விழிப்பூட்டல்களைப் பெற இயலும். பார்வையாளர்களின் வருகை விவரம், மற்றும் அதிகம் வாசிக்கபட்ட இடுகைகள், பார்வையாளர்கள் சுட்டிய குறிச்சொற்கள் விவரம் ஆகிய விவரங்களை இதன்வழியாக அறிந்துகொள்ள இயலும்.

 தமிழ்மின் உள்ளடக்கங்களுக்கான தேடுபொறி உகப்பாக்க நுட்பங்கள்

        இணையதளம், வலைப்பதிவு, மின்னூல், வலையொளி ஆகிய தளங்களில் தற்போது பலரும் மின் உள்ளடக்கங்களை உருவாக்கிப் பகிர்ந்து வருகின்றனர். அத்தகைய மின் உள்ளடக்களுள் பல தேடுபொறிகளின் தேடல் முடிவுகளில் கிடைப்பதில்லை. மின் உள்ளடக்கங்களை உருவாக்குவோர் தேடுபொறிகள் செயல்படும் நுட்பத்தை அறிந்துகொள்வதால் தேடல் முடிவுகளில் தமிழ் மின் உள்ளடக்ளைத் துல்லியமாக இடம்பெறச்செய்ய இயலும்.

·         ஒருங்குறி எழுத்துரு வடிவில் உள்ள இணையப்பக்கங்களைத் தேடுபொறிகள் எளிதில் அறிந்துகொள்ளும். அதனால் பல்வேறு எழுத்துருக்களைப் பயன்படுத்தும் உருவாக்குநர்கள் தமிழ் ஒருங்குறி எழுத்துருக்களையே பயன்படுத்துவது சிறந்த வழியாகும்.

·         இணையதளம் அல்லது வலைப்பதிவு திறன்பேசிக்கான இணக்கம் உடையதாகவும் சமூகத்தளத் தொடர்புகளுக்கு இயைபுடையதாகவும் இருத்தல்வேண்டும்.

·         திறக்கும் நேரம், மையக் கருத்து, எழுத்துரு, வண்ணம், இணையதள இணைப்புகள் என யாவும் தேடுபொறி உகப்பாக்கத்தில் குறிப்பிடத்தக்கன என்பதை உருவாக்குநர் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

·         இணையப் பக்களுக்கான தலைப்பு, குறிச்சொற்கள் தேடுபொறி உகப்பாக்கத்தில் முதன்மையான பங்கு வகிக்கின்றன. அதனால் உருவாக்குநர்கள் ஒருங்குறித் தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் இவற்றை வழங்குவதால் தேடுபொறிகள் எளிதில் பக்கங்களை இனம் கண்டுகொள்ளும்.

·         இணையப்பக்கங்களில் உள்ளீடுசெய்யும் படங்கள், ஒலி, ஒளிக் கோப்புகளுக்கான இயல்பான பெயர்களை மாற்றி மறுபெயர் கொடுக்கும்போது ஒருங்குறி தமிழில் பெயர் வழங்குவது நல்லது. சான்றாக பாரதியார் பற்றிய கட்டுரை என்றால் நாம் உள்ளீடுசெய்யும் படத்தில் இயல்பாக உள்ள பெயரை மாற்றிபாரதியார்என வழங்குவதால் தேடுபொறிகள் எளிதில் இப்பக்கத்தை அறிந்துகொள்ளும்.

·         மின்னூல் உருவாக்குநர்கள் தலைப்பு, குறிச்சொற்களில் கவனம் செலுத்துதல் வேண்டும்.

·         வலையொளி உருவாக்குநர்கள், காணொளிகளுக்கு ஏற்ற தலைப்பு, விளக்கம், குறிச்சொற்களை ஒருங்குறி தமிழிலும், ஆங்கிலத்திலும் வழங்கலாம். மேலும் காணொளிகளில் Subtitle எனப்படும் உள்ளீட்டு வசனத்தையும் இயன்ற அளவு ஒருங்குறி தமிழில் வழங்கலாம்.

 

தேடல் முறைகளும் கோப்பு வகைகளும்

தேடுபொறிகளில் எழுத்துகளை வழங்கித் தேடுதல், குரல்வழியாகத் தேடுதல், நிழற்படங்களை வழங்கித்தேடுதல், குறிப்பிட்ட வகைக் கோப்புகளைத் தேடுதல் எனப் பல முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதனால் மின் உள்ளடக்கங்களை உருவாக்குவோர் தாம் உருவாக்கும் கோப்பு பற்றிய விவரங்களை குறிச்சொற்களாக வழங்கவேண்டும். சான்றாக வேர்டு, பவர்பாயின்ட், பி.டி.எப், ஒலி, காணொளி, படம் என எந்த வகைக் கோப்பு என்பதைத் தேடுபொறிகளுக்கு புரியுமாறு பதிவு செய்வதால் தேடல் முடிவுகளில் பதிவுகள் எளிதில் இனம் காணப்படும். 

நிறைவுரை

        இணையத்தில் உள்ள தரவுகளைத் தேடிப் பெறுவதற்கு தேடுபொறிகள் பயன்படுகின்றன. தேடுபொறிகள் பல்வேறு நாடுகளில், பல மொழிகளில் இருந்தாலும் பெரும்பாலும் தேடுபொறிகளின் செயல்பாடுகள் பயனர்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்படுகின்றன. தேடுபொறி உகப்பாக்கம் என்பது மின் உள்ளடக்கங்களைத் தேடுபொறிகளுக்குப் புரியும் வகையில் வழங்கும் முறையாகும்.

· தேடுபொறிகளின் செயல்பாடுகளுள், வலை வலம்வருதல், அட்டவணைப்படுத்துதல், தரவரிசைப்படுத்துதல் ஆகிய மூன்று செயல்பாடுகள் குறிப்பிடத்தக்கன.

·  தவழுமிகள் வழியாக வலைவலம் செய்வதால் இணையத்தில் உள்ள தரவுகள் திரட்டப்பட்டு தேடுபொறிகளின் வழங்கிகளில் சேமிக்கப்படுகின்றன.

·         திரட்டப்பட்ட தரவுகள் அட்டவணைப்படுத்தப்படுவதால் தேடுபொறிகள், பயனர்கள் தேடும் குறிச்சொற்களை ஒப்பிட்டு எளிதில் புரிந்துகொண்டு தொடர்புடைய செய்திகளை விரைவாகவும் துல்லியமாகவும் வழங்கமுடிகிறது.

·   தரவரிசைப்படுத்தல் காரணமாக குறிச்சொற்களுக்குத் தொடர்புடைய செய்திகள் முதல் பத்து பரிந்துரைகளில் இடம்பெறும் வாய்ப்பு ஏற்படுகிறது. 

·         மேற்கண்ட மூன்று செயல்பாடுகள் தேடுபொறிகளுக்கேற்ப மாறுபடுவதாலும், வணிக நிலையில் தங்கள் தயாரிப்பு முதல் பரிந்துரையாக இடம்பெற பணம் செலுத்தப் பல நிறுவனங்கள் முன்வருவதாலும் தேடுபொறிகளுக்கேற்ப தேடல் முடிவுகள் மாறுபடுகின்றன.  

·   இணையதளம், வலைப்பதிவு, மின்னூல், வலையொளி ஆகிய தளங்களில் மின் உள்ளடக்கங்களை உருவாக்குவோர் ஒருங்குறித் தமிழைப் பயன்படுத்துதல் அடிப்படையான தேவையாகிறது.

· மின் உள்ளடக்கங்களை உள்ளீடு செய்யும்போது, தலைப்பு, குறிச்சொற்கள், கோப்பு வகை, திறன்பேசி இணக்கம், சமூகத்தளத் தொடர்பு, எழுத்துரு, வண்ணம், பக்கம் திறக்கும் நேரம் ஆகிய கூறுகளில் கவனம் செலுத்தவேண்டும்.

·   கூகுள் சர்ச் கன்சோல் பக்கத்தில் இணையப்பக்கங்களை உள்ளீடு செய்வதால் பயனர்களின் தேவையையும் தமது இணையபக்கத்தின் வளர்ச்சியையும் மின் உள்ளடக்க உருவாக்குநர்கள் அறிந்துகொள்ள இயலும்.

         


[1] https://www.seomechanic.com/complete-history-search-engines/

[2] https://ta.wikipedia.org/wiki/தேடுபொறி_உகப்பாக்கம்

[3] https://en.wikipedia.org/wiki/Search_engine_indexing

[4] https://en.wikipedia.org/wiki/Sitemaps

[5] https://en.wikipedia.org/wiki/PageRank

[6] https://en.wikipedia.org/wiki/Google_Search_Console

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக