வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 7 அக்டோபர், 2024

புகழ்I வானொலி உரை



ஒருவன் எவ்வளவு உயராமானவன் என்பதைவிட – அவன்

எவ்வளவு உயர்வானவன் என்பதையே காலம் திரும்பிப்பார்க்கிறது.

ஒருவன் எவ்வளவு அழகானவன் என்தைவிட – அவன்

எவ்வளவு அழகான பண்புகளைக்கொண்டவன் என்பதையே இவ்வுலகம் எண்ணிப்பார்க்கிறது.

 ஒருவன் வாழும்போது எவ்வளவோ இடங்களை ஆளுமை என்ற பெயரில் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அதையெல்லாம்விட.... அவன் இறந்தபின்...

 எவ்வளவு மனங்களில்..எவ்வளவு இடங்களை...தன் அன்பால்ஆளுமையால் ஆக்கிரமித்திருந்தான் என்பதே நினைவில் கொள்ளத்தக்க சிறப்பான பண்பாக அமைகிறது..

 

ஒருவன் உடலும்உயிரும் இருக்கும்போது அவன் காதுபட பேசப்படும் புகழுரைகள் பெரும்பாலும் சுயநலம் கருதியதாகவும்பொய் நிறைந்தவையாகவுமே விளங்குகின்றன.

ஆனால்..

ஒருவர் மறைவுக்குப் பின்னர் பேசப்படும் புகழுரைகளில் சுயநலம் மறைந்து உண்மை மட்டுமே நிறைந்திருக்கக் காண்கிறோம்..

 

உன்னைப் புகழும்போது செவிடனாக இரு!

உன்னை இகழும்பொது ஊமையாக இரு! என்றொரு பொன்மொழி உண்டு..

 

புகழ்ச்சி என்றால் விருப்பம் கொள்ளும் மனிதமனம் இகழ்ச்சி என்றால் சினம்கொள்கிறது.

வாழும்போதும் வாழ்க்கைக்குப் பிறகும் புகழ்பெற்றிருக்கவேண்டும் என்றே யாவரும் எண்ணுகிறோம்.

 

புகழ் என்னும் அதிகாரத்தில் வள்ளுவப் பெருந்தகை கூறும் கருத்துகள் சிந்திக்கத்தக்கன.

நாம் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் ஊதியம் எதிர்பார்க்கிறோம்

ஊதியம்..உடலுக்குச் சேர்கிறதாஉயிருக்குச் சேர்கிறதா?

 

உடலுக்குச் சேரும் ஊதியம் உடலோடு அழிந்துபோகிறது!

உயிருக்குச் சேரும் ஊதியம் அழியாது நிலைத்து நிற்கிறது!

உடல் விரும்பும் ஊதியம் உணவு! உயிர் விரும்பும் ஊதியம் புகழ்!

உடல் தன்னை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று சுயநலத்துடனேயே செயல்படுகிறது அதனால் காலவெள்ளத்தில் அழிந்துபோகிறது..

உயிர் புகழைத்தவிர வேறு எதையும் விரும்புவதில்லை அதனால் எத்தனை காலங்கள் ஆனாலும் நினைவில் கொள்ளப்படுகிறது..

 

ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு என்று சொன்ன திருவள்ளுவர்,

(திருக்குறள் -231)

 

உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைப்பது வேறொன்றும் இல்லை என்றார்.

 

பிறக்கும் போதே யாரும் புகழுடன் பிறப்பதில்லை ஆனால் புகழ் பெறுவதற்கான திறமையுடன் தான் பிறக்கிறோம்இதனை,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

             செய்தொழில் வேற்றுமை யான்.                                              972

எவ்வுயிர்க்கும் பிறப்பு பொதுவானதுசெயலே பெருமை தருகிறது என உரைக்கிறார்நமது பெருமையை நாம் உணரும்போது புகழ் நம்மைத் தேடி வருகிறது.  மேலும் புகழ் பற்றி பேசும் வள்ளுவர்,

 

·         தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மை நொந்துகொள்ளாமல் தம்மை இகழ்பவரை நொந்துகொள்ளக் காரணம் என்னஎன்று கேட்கிறார்.

·         தாம் வாழும் வாழ்க்கையில் பழியின்றி வாழ்பவரே உயிர் வாழ்கின்றவர்.

புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவர் உயிர்வாழாதவர் என்று உரைக்கிறார்.

 

புகழைப் பற்றி சங்கஇலக்கியத்தில் பல அரிய செய்திகள் இடம்பெற்றுள்ளன

 

புகழும் முன்னர் நாணுப

பழியாங்கு ஒல்பவோ காணுங் காலே?

எனக் குறுந்தொகை (252)யில் குறிப்பு உள்ளது.

சான்றோர் என்போர் தம்மைப் புகழ்வதற்கு முன்னாலேயே நாணம் அடைவர்சிந்தித்துப்பார்த்தால்அவர்கள் பழிச்சொல்லை எவ்வாறு தாங்கிக்கொள்வார்கள்என்பது இதன் பொருள்.

 

புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின்
  உலகுடன் பெறினும் கொள்ளலர்

என கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடியுள்ளார்.

 

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந்த தனரே

எனப் பெருந்தலைச்சாத்தனார் பாடியுள்ளார்

 

மாங்குடி மருதனார்  மதுரைக்காஞ்சி ( 235)யில்

பணை கெழு பெருந்திறல்பல்வேல் மன்னர்,
கரை பொருது இரங்கும்கனை இரு முந்நீர்த் திரை இடு மணலினும் பலரே

என உரைக்கிறார்.

புகழ்பெறும்படி வாழ்ந்து மறைந்தவர்களே கடல் மணலினும் பலர் என்றால்புகழ்பெறாமல் மறைந்தவர்கள் எவ்வளவு பேர் என்று சிந்திக்கவேண்டும்.

 

தம் புகழைக் கேட்ட சான்றோரைப்போலத் தலைசாய்ந்து மரங்கள் உறங்கின என கலித்தொகையியில் ஒரு உவமை இடம்பெற்றுள்ளது

 

பெருமை இல்லாதவர்களைப் புகழ்ந்து கூறுவதால் ஏற்படும் நலத்தை விரும்பிஅவர்கள் செய்யாதவற்றைச் சொல்லி அவர்கள் குணங்களைப் புகழ்ந்து கூறமாட்டேன் என்ற கருத்தை

 

பீடுஇல் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச்

செய்யாக் கூறிக் கிளத்தல்

எய்யாது ஆகின்று எம் சிறு செந்நாவே

வன்பரணர் தெரிவித்துள்ளார்.

 

அறிவும் புகழும் உடையோர் இறந்துவிட்டார்கள் என்று வெற்றிடத்தை உடையது இல்லை இந்த உலகம்... எந்தத் திசையில் சென்றாலும் எமக்கு அந்தத் திசையில் சோறு கிடைக்கும் என்று புறநானூற்றில்ஔவையார் உரைத்துள்ளார்.

 

இவ்வுலக மக்களைக் காப்பதற்கு பாரி ஒருவன் மட்டும் இல்லைமழையும் அப்பணியைச் செய்கிறது என்று பாரியை இகழ்வது போல் புகழ்ந்துள்ளார் கபிலர்.

 

இன்றைய சூழலில் சமூகத்தளங்களின் வழியாக ஒருவர் ஒரே நாளில் உலகம் முழுவதும் சில மணித்துளிகளில் புகழ் பெறமுடியும்அந்தப் புகழால் அவர் பொருள் ஈட்டலாம்பெருமை கொள்ளலாம்இன்று உண்மை ஒரு முறை உலகைச் சுற்றும் முன் பொய் மூன்று முறை உலகைச் சுற்றி வந்துவிடுகிறதுஅதனால் எப்படிவேண்டுமானலும் புகழ் பெறமுடியும்ஆனால்,

நாம் பெரும் புகழுக்கு நாம் தகுதியானவராக உண்மையானவராக இருக்கவேண்டும்.

அந்தப் புகழ் நம் மதியை மயக்காத அளவுக்கு பக்குவமானவராக இருத்தல்வேண்டும்.

 

நம் பெருமைக்கும்சிறுமைக்கும் நம் செயல்களே அடிப்படை என்றார் திருவள்ளுவர்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றார் கணியன் பூங்குன்றனார்.

தடம் பார்த்து நடந்தது போதும்.. தடம் பதித்து நடப்போம்

 

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதில்லார்

தோன்றலின் தோன்றாமை நன்று -236


 என்ற திருவள்ளுவரின் சிந்தனையை உணர்வோம்..

 

எந்தத் துறையில் தோன்றினாலும் புகழ்பெறத் தோன்றுவோம்.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக