பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

திங்கள், 30 செப்டம்பர், 2024

அறிவெனப்படுவது…


 அறிவெனப்படுவது பேதையார் சொல் நோன்றல் என உரைக்கிறது கலித்தொகை அறிவில்லாதவர்களின் சொல்லைப் பொறுத்துக்கொள்ளுவதே அறிவுடைமை என்பது இதன் பொருள்.

கல்வி அறிவு, கேள்வி அறிவு, அனுபவ அறிவு,இயற்கை அறிவு, நுண்ணறிவு, என அறிவு பல வகைப்பட்டதாக ஒவ்வொரு துறைசார்ந்தும் பாகுபடுத்தப்படுகிறது.

இப்பிறவியில் கற்பது ஏழு பிறவிக்கும் உதவும் என்பது வள்ளுவர் வாக்கு.     

திருக்குறளில் அறிவுடைமை என்ற அதிகாரத்தில் மட்டுமின்றிப் பல குறட்பாக்களில் அறிவைப் பற்றி திருவள்ளுவர் எடுத்துரைத்துள்ளார்.

 

அறிவு என்றால் என்ன? அறிவை எதற்கு, எங்கு, எப்படிப் பயன்படுத்தவேண்டும்? என்று வள்ளுவரைக் கேட்டால்..

 

மனதை நல்வழியில் செலுத்துவதே அறிவு

உயர்ந்தோரிடம் பழகி, இன்ப, துன்பங்களைச் சமமாகக் காண்பதே அறிவு

தீங்கிழைத்தவருக்கும் தீமை செய்யாமையே தலைசிறந்த அறிவு

யாரிடம் கேட்டாலும் உண்மையை ஆராய்ந்து அறிவதே அறிவு

மணற்கேணியில் நீர்போல, கற்க கற்க அறிவு வளரும்

அறிவுடையோர் எதிர்காலத்தை அறிவர், பேதையர் அறியார்

அறிவே உடைமை, பிற உடைமைகள் மதிப்பில்லாதவை

அரம்போன்ற கூர்மையான அறிவுடையவராயினும், மக்கட் பண்பின்றிப் பயனில்லை

அரியவை கற்ற, குற்றமற்றாரிடமும் அறியாமை இருக்கும்

நுட்பமான நூல்கள் பல கற்றாலும் இயற்கையான அறிவே மிகும்

தன்னறிவுடன், நூலறிவும் கொண்டவருக்கு முன் சூழ்ச்சிகள் நில்லாது   

அறிவும், செல்வமும் ஒருசேர அமைவதில்லை                                                            துன்பத்தில் காக்கும் கருவி! எதிரிகளால் அழிக்கமுடியாத அரண் அறிவு!

என உரைத்த வள்ளுவர்,

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்.                                                     140

என்றும்

 

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை.                                        315
என்றும் உரைத்துள்ளார்.


தொல்காப்பியர் உயிர்களை வகைப்பாடு செய்யும் போது,

மனிதர்களுக்கு ஐம்புலனறிவோடு சிந்திக்கும் ஆற்றலும் இருக்கும் என்பதை, மக்கள் தாமே ஆறறிவுயிரே என உரைக்கிறார்.

 

நன்னூலார், மாணவர்களை,

அன்னப்பறவையும் பசுவையும் போன்றவர் தலை மாணாக்கர்.

மண்ணையும் கிளியையும் போன்றவர் இடை மாணாக்கர்.

ஓட்டைக்குடம்ஆடுஎருமைபன்னாடை போன்றவர் கடைநிலை மாணவர்கள் என உரைக்கிறார்.

 

அந்தக் காலத்தில் மாணவர்களைகற்பூர புத்திகரித்துண்டு புத்திவாழை மட்டை புத்தி என்று பாகுபாடு செய்வார்கள்

நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு என்பார் ஔவையார்.

 

அறிவை விரிவுசெய்!  என்று பாடினார் பாவேந்தர்

ஒரு கதை

ஒரு துறவி இறக்கும் நிலையில் இருப்பார். அவரைச்சுற்றி அவரது சீடர்கள் சூழ்ந்திருப்பார்கள். குரு கடைசியில் என்ன வார்த்தை சொல்லப் போகிறார் என்று கேட்க சீடர்கள் ஆவலாகக் காத்திருந்தார்கள். அந்தக் கடைசி வார்த்தை அவரது வாழ்வின் மொத்த அனுபவமாக இருக்கும் என்று அந்த வார்த்தையைத் தெரிந்துகொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தனர்.

அந்த குருவோ தம் சீடர்களில் தலை சிறந்த சீடனை அருகே அழைத்தார். அவரிடம் தம் வாயைத் திறந்து காட்டினார். பின் என்ன தெரிந்தது என்று கேட்டார்.

சீடன் சொன்னார், குருவே பற்கள் தெரிகின்றன, நாக்கு தெரிகிறது“ என்றார்.

குரு சொன்னார். பார்த்தாயா.. உனக்கே எல்லாம் தெரிந்திருக்கிறது. பற்கள் நிலையில்லாதவை, நாக்கு நிலையானது என்பது உனக்குத் தெரிந்திருக்கிறது. இந்த உலகில் எல்லாமே இப்படித்தான் நமக்குத் தெரியும் என்பதுதான் பலநேரங்களில் நமக்கு மறந்துபோகிறது என்றார்.

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை…என்று கண்ணதாசன் பாடினார்.

வாழ்க்கையில் வெற்றிபெறப் புத்திசாலித்தனம் மட்டும் போதாது, உணர்வுகளைக் கையாளும் திறனும் இருந்தால்தான் வெற்றிபெறமுடியும்.

அறியாமையை அறிவதுதான் அறிவு என்றார் சாக்கரடீஸ்

பரந்த உலகம் ஒரு பள்ளிக்கூடம் இதில் முட்டாள்கள் எதுவும் கற்பதில்லை.

நமக்கு எதுவும் தெரியாது என்பதைத் தெரிந்துகொள்ள நிறையவே தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும்

செம்பொருள் காண்பது அறிவு.                                       358

 

அறியாமையுடன் நூறாண்டுகள் வாழ்வதைவிட அறிவுடன் சில காலங்கள் வாழ்வதே மேலனாது என்பதை உணர்வோம். இதுவரை நாம் கண்ட சான்றோர் சிந்தனைகளின் வழியாக அறிவு என்பது புத்தக வாசிப்பின் வழியாகவோ கல்விச்சாலை வழியாக மட்டுமே கிடைப்பதில்லை என்பதை சிந்திப்போம். புத்தகத்தை பணம் கொடுத்து வாங்கலாம் அறிவையோ ஆர்வத்தையோ விலைகொடுத்து வாங்கமுடியாது. அறிவு யாரிடமிருந்தாலும் அதை எவ்வாறு பெறவேண்டும் என்பதை வள்ளுவப்பெருந்கை,

 

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர். (395) என்றுரைக்கிறார்.

 

மனிதர்களின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் அடிப்படையாக அமைவது அறிவே!

மனித வடிவில் இருப்பவர்களை விலங்குகளிலிருந்து வேறுபடுத்துவது அறிவே!

 

அத்தகைய அறிவால் நாம் நமது அறியாமை இருளை நீக்கி அடுத்த தலைமுறையினர் நம்மைக் காட்டிலும் அறிவுடையவராவதை எண்ணிப் பெருமிதம் கொள்வோம்..

 

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிதல்லவா..

 

அறியாமை இருள் நீங்கி அகிலமெல்லாம் அறிவென்னும் வெளிச்சம் பெற

சிந்தித்து செயல்படுவோம்.. மண் பயனுற வாழ்வோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக