பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

புதன், 11 செப்டம்பர், 2024

தேமதுரத் தமிழோசை - பாரதியார் நினைவுநாள்


மொழி என்பது ஒரு தகவல்த் தொடர்பு சாதனம் மற்றுமல்ல அது அவ்வினத்தின் தொன்மை, பண்பாடு, மரபு ,தனித்தன்மை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. தமிழ் வளர்த்த சான்றோர் பெருமக்களுள் மகாகவி பாரதியார் குறிப்பிடத்தக்கவராவர்.

நல்லதோர் வீணை செய்தே அதை

நலம்கெடப் புழுதியில் எறிவதுண்டோ

சொல்லடி சிவசக்தி எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

வல்லமை தாராயோ இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவசக்தி - நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ..

எனச் சுடர்மிகும் அறிவுடன் தோன்றி மண் பயனுற வாழ்ந்தவர்  மகாகவி பாரதியார்.

பாப்பா பாட்டில்,

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
என்று பாடினார்

 

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே

என்று பாடிய பாரதியால் அவர் வாழ்ந்த காலத்திலேயே தமிழின் நிலையைத் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. அறிவியலின் முன்னோடியாக இருந்த தமிழன்..
அறிவியலின் பின்னோடியாக மாறியதற்கு அடிப்படைக் காரணம் தாய்மொழியான தமிழைப் புறக்கணித்ததே,

இன்றொரு சொல்லினைக் கேட்டேன்-இனி

ஏதுசெய் வேன்?என தாருயிர் மக்காள்!

கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு

கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!

"புத்தம் புதிய கலைகள்-பஞ்ச

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;

மெத்த வளருது மேற்கே-அந்த

மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

 

சொல்லவும் கூடுவ தில்லை-அவை

சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;

மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த

மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை உரைத்தான்

 

மிழ் வெறும் பக்தியின் மொழிதானா அறிவியல் நுட்பங்களைத் தமிழில் சொல்லமுடியாதா? ஏன் முடியாது? என்று சினம் கொண்ட பாரதி,

முடியும்! தமிழால் முடியும். முடியாது என்றவன் பேதை என தன்னை ஆற்றுப்படுத்திக்கொண்டார். பின் இப்படி சொல்வதற்கு நாம் ஏன் இடம்தரவேண்டும் என்று சிந்தித்து..

 

இந்த வசையெனக் கெய்திட லாமோ?

சென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

எனத் தமிழ்த்தாயின் கோரிக்கையாக இக்கருத்தை முன்வைத்தார்.

பாரதி கண்ட பல கனவுகள் இன்று நனவாகியுள்ளன. என்றாலும் இன்றும் தாய்மொழி உணர்வற்று பலர் உள்ளனர். தமிழ் மொழியோடு ஆங்கிலத்தைக் கலந்து பேசும் பலரையும் நாம் பார்க்கிறோம்.

வேறுவேறு பாஷைகள் - கற்பாய்நீ

     வீட்டு வார்த்தை கற்கிலாய்போபோபோ

என்று பாரதி பாடியது இன்றும் பொருத்தமாகவே உள்ளது

இன்று பாரதி இருந்தால் அவர்களைப் பார்த்து,

நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
என்று தான் பாடியிருப்பார்.

அவர் வாழ்ந்த காலத்தில் பெரிய தொழில்நுட்ப வசதிகள் ஏதும் இல்லை,

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்  என்று பாடினார்.

இன்று சமூகத் தளங்களின் வழியாக நேரலையாக நாம் பல்வேறு நாட்டிலிருப்பவர்களுடனும் நம் தாய்மொழியில் தகவல் தொடர்புசெய்யமுடிகிறது. கருத்தைப் பகிர்ந்துகொள்ளமுடிகிறது.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

  இனிதாவது எங்கும் காணோம்.

என பல மொழிகளை அறிந்த பாரதி சொன்ன உண்மையைத் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டாலும், பிழையின்றிப் பேசவும் எழுதவும் இயலாதவர்கள் சிந்திக்கவேண்டும்.

 தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

  பரவும்வகை செய்தல் வேண்டும்.

 

இயல், இசை, நாடகம் என்றிருந்த தமிழை இன்று இணையத்தில் ஏற்றி தமிழின் பெருமையை உலகறியச் செய்து வருகிறோம். இன்று செயற்கை நுண்ணறிவு உரையாடிகளுடன் தமிழில் உரையாடி வருகிறோம். தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்த்து உலக அரங்கில் பகிர்வதுடன் பல மொழிகளின் அறிவுச் செல்வங்களையும் நம் மொழியில் வாசித்தறிகிறோம். இருந்தாலும்,

 

தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடாஎன்று சொன்னவர் யார் என்று இணையத்தில் தேடினால், பாரதியார் படம்போட்டு இவர்தான் சொன்னார் எனப் பல பரிந்துரைகள் வருகின்றன. ஆனால் இப்படிச் சொன்னவர் நாமக்கல் கவிஞரல்லவா. பாரதி சொன்னதுபோல தேமதுரத் தமிழோசையை உலகமெலாம் பரப்புவது நம் கடமைதான் என்றாலும் உண்மையான நம்பகத்தன்மையுடன் செய்திகளைப் பரப்புவதும் நம் கடமையல்லவா.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
  
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
  
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை
;

பாரதி போற்றிய தமிழ்ச்சான்றோர்களான திருவள்ளுவரையும், இளங்கோவையும், கம்பரையும் நாமும் கொண்டாடுவோம்.

ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
  
வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
  
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

எங்கும் ஆங்கிலம் எதிலும் ஆங்கிலம் என்ற நிலையை மாற்றுவோம். பாரதி சொல்வதுபோல எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்குவோம். தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்வோம்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
  
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
  
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;

அறிவு ஒரு மொழிக்கு மட்டுமே சொந்தமானதில்லை என்பதை உணர்வோம் அறிவு எந்த மொழியில் இருந்தாலும் அதை நம் மொழியில் பெயர்த்துக்கொள்வோம். புதிய நூல்களை தமிழில் இயற்றுவோம்.

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
  
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
  
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

நமது மொழியின் தொன்மை தொடர்ச்சி எனப் பெருமை பேசியது போதும் இயன்றவரை இனிய தமிழில் பேசுவோம், பிறமொழியுடன் தமிழ் மொழியைக் கலந்து பேசுவதைத் தவிர்ப்போம். சமூகத்தளங்களில் தமிழ்மொழியையே பயன்படுத்துவோம்.

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
  
வாழிய வாழிய வே
என்ற

மகாகவி கண்ட கனவுகள் மெய்ப்படட்டும்

  

1 கருத்து: