பச்சைக் குழந்தைக்குப் பாலுமில்லை
என்ற இவரது கவிதைக்குச் செல்லும் முன், வள்ளுவர்,
பாரதியார், வள்ளலார், திருமூலர்
ஆகியோரின் சிந்தனைகளை ஒப்புநோக்கிய பின் செல்வோம்
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராதியல்வது நாடு
பசி, நோய்,
பகை இல்லாததே நாடு
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றியான்
பிச்சைக்காரர் வாழும் நாட்டைப் படைத்தவன், கெட்டு ஒழியட்டும் என்று
சினம் கொண்டார் திருவள்ளுவர்.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்
என்றார் மகாகவி பாரதி.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் இராமலிங்க வள்ளலார்.
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே
தன்னையொத்த மனிதன் பசித்திருக்கையில் கடவுட்கு ஒரு பொருளைக்
காணிக்கையாக அளித்தால் அது நடமாடும் கோயிலான மனிதனுக்குச் சென்று பயன்தராது. ஆனால்
நடமாடும் கோயிலான பசித்த மனிதனுக்கு ஒன்று ஈந்தால் அது இறைவனுக்குச் சென்று சேரும்
என்று திருமூலர் கூறுவார்..
ப.ஜீவானந்தம் அவர்களின் கவிதைக்குச் செல்வோம்
பச்சைக் குழந்தைக்குப் பாலுமில்லை - அதன்
பட்டினி அழுகை கேட்டதில்லை
இச்சையுடன் பாலைச் சாமிக்கென்றே கல்லில்
இட்டு வணங்குகிறார் முக்திக் கென்றே.
உயிருள்ள குழந்தையின் பசிக்கு வழங்கப்படாத பால் உயிரற்ற கல்லின்
மீது கொட்டப்படுவது சரியா
என்ற கேள்வியின் நியாயத்தை நாம் சிந்திக்க வேண்டும்.
ஏழை எளியவர் ஆடையின்றிக் கந்தை
ஏற்றுடுத்தி மனம் ஏங்குகின்றார்
பாழான கல்லுக்குப் பட்டாடை கட்டிடும்
பக்தரெல்லாம் வெறும் பித்தரன்றோ.
மனிதர்களின் அடிப்படைத்தேவைகளை உணவு, உடை, உறைவிடம் எனப் பகுக்கிறோம்.
ஏழை எளியவர் கந்தையாடை உடுத்தியிருக்கும்போது கல்லுக்கு பட்டாடை கட்டுபவர்களை
பித்தர் என இவர் சொன்னதில் என்ன தவறுள்ளது என்பதை நாம் சிந்திக்கவேண்டும்.
கூழுக்கழு மக்கள் கோடியுண்டு - நித்தம்
கும்பியெரிபவர் கோடியுண்டு
பாழுக்கழுகின்றார் சாமிக்கென்று கல்முன்
பாற்சோறு பொங்கல் படைத்துமே தான்.
உண்ண உணவின்றி வாடுவோர் பலர் இருக்க கல் முன் உணவிட்டு சாமி சாமி
என்று அழும் பக்தர்கள் செய்வது எந்தவிதத்தில் சரியாகும்..
எண்ணெயற்றுத்தலை ஈஞ்சுசெடி போன்றோர்
எத்தனை கோடி இத்தேசத்திலே
கண்ணை மூடிக்கொண்டு எண்ணெய் குடங்குடம்
கல்மேலே கொட்டும் கருத்தென்னவோ?
பால், தயிர்,
சந்தனம், குங்குமம், எண்ணெய்
என கல்லுக்கு எதற்கு அபிசேகம் அலங்காரம், இவையெல்லாம்
உயிருள்ள எளியவர்களுக்குக் கிடைக்கிறதா..
கடவுளின் பெயரால் ஏன் இந்த நாடகம் என்று கேட்கிறார்.
குள்ளக் குடிசைக்கும் குட்டிச் சுவருக்கும்
கொஞ்சமல்ல மக்கள் கெஞ்சுகின்றார்
உள்ள பொருள் எல்லாம் கல்லுத்தெய்வம் வாழ
ஊட்டுகின்றார் கோவில் நாட்டுகின்றார்
இருக்க இடமின்றித் தவிக்கும் மக்கள் பலரிருக்க கல்லில் செய்த
சிலையில் கடவுள் இருப்பதாக நம்பி அந்தக் கல் வாழ கோயில் தேவையா என்கிறார்.
காசில்லை யென்பாருக் கொல்லையில்லை
விஞ்சு கற்சாமி பிழைத்திடவே கோடி
வேலி நிலமுண்டு விந்தையன்றோ?
உழைத்துவாழ வேண்டும் என்று நினைத்தாலும் பலருக்கு காணி நிலம்கூட
இல்லை. கற்சாமி பிழைத்திட கோடிவேலி நிலம் எதற்கு என்று கேட்கிறார்.
சாமிக்களித்த வித்தேசத்து நன்மக்கள்
சாகின்றார் பஞ்சத்தும் நோய்களிலும்
சேமித்து நாம் நம்மைக் காத்திடுவோம் என்றும்
சீவானந்தம் பெற வாழ்த்திடுவோம்
கோயில், குளம், உணவு, ஆடை, நிலம் என கடவுளுக்கு வாரி வழங்கிய மக்கள் இங்கு பசியிலும் நோயிலும் சாகின்றனர்.. கடவுளின் பெயரால் இவ்வாறு செலவிடாமல் சேமித்தால் இல்லாதவர்களுக்கு வழங்கினால் ஆனந்தம் பெற்று வாழ்ந்திடலாம் என்கிறார்.
ப.ஜீவானந்தம் அவர்கள் நாத்திக சிந்தனையாளர் என்பதால் கடவுள்
மறுப்பு சிந்தனையின் வெளிப்பாடாக இக்கவிதை எழுதப்பட்டுள்ளது என்ற புரிதலைக்
கடந்து. இவரது கேள்விகளில் உள்ள
மனிதாபிமானம், பொதுவுடைமை,
அறிவுடைமையையும் நாம் சிந்திக்க வேண்டும்.
உண்மை
பதிலளிநீக்குஅருமையாக உள்ளது
பதிலளிநீக்குஎத்தனை ஆண்டுகள் ஆனாலும் பொதுவுடைமை சிந்தனை பேசிக்கொண்டே தான் இருப்போம்
அற்புதமான பதிவுங்கய்யா
பதிலளிநீக்குHh
பதிலளிநீக்குபச்சைக் குழந்தைக்கு பாலும் இல்லை என்ற கவிதையின் விளக்கம் எளிமையாக உள்ளது ஐயா
பதிலளிநீக்குஇனிமை
பதிலளிநீக்கு