வினை விதைத்தவன் வினை அறுப்பான்,
தினை விதைத்தவன் தினை அறுப்பான்
எதை
விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்..
பிறர்க்கின்னா
முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல்
தாமே வரும்.- 319
பிறர்க்கு முற்பகல் செய்யும் தீமை, நமக்கு
பிற்பகல் தாமே வரும்
என்பது வள்ளுவர் வாக்கு.
செய்நன்றி அறிதல் என்ற அதிகாரத்தில்,
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும்
ஆற்றல் அரிது.- 101
நாம்
உதவிசெய்யாதவர், நமக்கு
உதவுவது மிக உயர்ந்தது
காலத்தி
னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின்
மாணப் பெரிது.- 102
உரிய
காலத்தில் செய்த உதவி உலகைவிட மிகப் பெரியது
பயன்தூக்கார்
செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை
கடலின் பெரிது.- 103
பயன்
எதிர்பார்க்காதார் செய்த உதவி கடலைவிட பெரியது
தினைத்துணை
நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வார்
பயன்தெரி வார்.- 104
சிறு
உதவியையும், பேருதவியாகக் கருதவேண்டும்
உதவி
வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார்
சால்பின் வரைத்து.- 105
உதவியின்
அளவு பெற்றவரின் மனநிலை சார்ந்தது
மறவற்க
மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள்
துப்பாயார் நட்பு.- 106
நல்லவர்கள், துன்பத்தில் உதவியவர்கள் நட்பை மறக்காதே
எழுமை
எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந்
துடைத்தவர் நட்பு.- 107
துன்பத்தில்
உதவியவர்களை ஏழு பிறப்பிலும் நினைக்கவேண்டும்
நன்றி
மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே
மறப்பது நன்று.- 108
தீயதை
மறந்து, நன்றி மறக்காமல் இருப்பது நன்று
கொன்றன்ன
இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று
உள்ளக் கெடும்.- 109
பெருங்கேடு
செய்தாலும் அவர் செய்த நன்மை எண்ணிப்பார்
எந்நன்றி
கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி
கொன்ற மகற்கு.- 110
நன்றி
மறந்தவர்க்கு உய்வே இல்லை
என்று நன்றிக்கடன் பற்றி திருவள்ளுவர் எடுத்துரைத்துள்ளார்..
நாம் ஒருவரிடம் பெறுகிறோம்..
நாம் ஒருவருக்கு ஏதோ ஒன்றைக் கொடுக்கிறோம்..
எது மகிழ்ச்சி தரக்கூடியது பெறுவதா? கொடுப்பதா?
என்று சிந்தித்தால்.. பெறுவதைக் காட்டிலும் கொடுப்பதே பெரு மகிழ்ச்சி தரக்கூடியது என்பது
புரியும்.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு -231
நாம் வாழும்போது இந்த உடலுக்கு என்ன தேவையோ
யாவற்றையும் நிறைவுசெய்துகொள்கிறோம்.. உயிருக்கு என்ன செய்கிறோம்.. கொடுப்பதால் கிடைக்கும்
புகழ் அதுதான் உயிருக்கு கிடைக்கும் ஊதியம் என்பது வள்ளுவர் வாக்கு.
புறநானூற்றில் கழைதின் யானையார் என்ற புலவர் பாடியதாக ஒரு பாடல் உண்டு,
ஈஎன இரத்தல்
இழிந்தன்று; அதன்எதிர்,
ஈயேன் என்றல்
அதனினும் இழிந்தன்று;
கொள்எனக்
கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,
கொள்ளேன் என்றல்
அதனினும் உயர்ந்தன்று;
பிச்சை கேட்பது இழிவானது.அவ்வாறு கேட்பவர்க்கு இல்லை என்று கூறுவது அதைவிட
இழிவானது. ஒருவரிடம் அவரின் நிலையை உணர்ந்து பொருளைக் கொள் எனக் கொடுத்தல் உயர்வானது.அவ்வாறு
கொடுப்பவரிடம் கொள்ளேன் எனக் கூறுவது அதைவிட உயர்வானது.என்பது இவ்வடிகளின்
பொருளாகும்.
இந்த உலகம், இயற்கை, மனிதர்கள் யாவும் எதிரொலிபோல
நாம் கொடுப்பதையே திருப்பித்தருகின்றன.
ஒரு குழந்தையிடம் நாம் அன்பாகப் பேசினால் அக்குழந்தையும்
நம்மிடம் அன்பாகப் பேசும்
அக்குழந்தையிடம் மரியாதையில்லாமல் பேசினால்
அக்குழந்தையும் மரியாதையில்லாமல் பேசும்..
இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம் என்பது பழமொழி அதே நேரம் இளமையில் ஊக்கமுடன் இருந்தால் முதுமையில்
மகிழ்ச்சியாக வாழலாம் என்பதை நாம் உணரவேண்டும்..
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.- 594
ஊக்கமுடையவரிடம் செல்லும் வழிகேட்டு செல்வம் வந்து சேரும்
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.- 595
நீரளவுக்கு மலர் நீளும், ஊக்கத்தின்
அளவே உயர்வு அமையும் என்றுரைக்கிறார்
திருவள்ளுவர்.
பிற்பகல்
என்ன விளையவேண்டும் என நாம் நினைக்கிறோமோ அதற்கு முற்பகலில் நாம் செய்யவேண்டியன
செய்யவேண்டும்.
என்ன
செய்யவேண்டும் என்பதை நமக்குச் சொல்லித்தருபவர்கள் பெற்றோர்களும், ஆசிரியர்களும்
தான்.
பெற்றோர்களே முதல் ஆசிரியர்கள்,
ஆசிரியர்களே இரண்டாவது பெற்றோர்..
இவ்விருவரிடமும் கற்காதவர்கள்
சமுதாயத்தில் அனுபவம் வழியாகவே கற்றுக்கொள்வார்கள்.
ஆனால் இந்த பரந்த உலகம் ஒரு
பள்ளிக்கூடம் முட்டாள்கள் எதுவும் கற்பதில்லை.
பெற்றோர்களும் ஆசிரியர்களும்
நல்ல பண்புகளையும், ஒழுக்கம், உண்மை, நேர்மை, அறம் ஆகியவற்றை பிள்ளைகளின் மனதில் விதைத்தால்
அவர்கள் நல்ல குடிமக்களாக உயர்வார்கள், நல்லதொரு சமூகம் உருவாகும்.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. 68
தம்மைவிட அறிவுக்குழந்தைகளைப் பெறுதல் அந்தக் குடும்பத்திற்கு மட்டுமல்ல உலகிற்கே
இனிது
என்பதை நாம்
உணரவேண்டும்.
யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
என்ற கணியன் பூங்குன்றனாரின்
புறநானூற்றுப் பாடலை நாம் அறிவோம்..
அப்பாடலில்,
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்கிறார் பூங்குன்றனார்.
ஆற்று நீரின் வழியே செல்லும்
தெப்பம் போல ஆருயிர் முறைவழிப்படும் என்கிறார். நாம்
செய்யும் பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் நம் பிறப்பு அமைகிறது என்ற நம்பிக்கை பலரிடமும்
உள்ளது. இப்பாடலில் ஊழ் என்றோ, விதி என்றோ உரைக்காமல் முறைவழிப் படூஉம் என்று உரைத்தமை
சிந்திக்கத்தக்கது.
முறைவழி என்ற சொல்லை,
நன்மை - தீமை என்ற முறை வழி இன்பம் - துன்பம் என்பன வந்து சேரும் என்று
பொருள் கொள்வது நயமுடையது.
ஆம் நாம் ஒருவருக்கு நன்மை செய்தால் நமக்கு நன்மை நடக்கும்..
நாம் ஒருவருக்குத் தீமை செய்தால்
நமக்குத் தீமை நடக்கும் தீதும் நன்றும் பிறர் தர வாராது.
வரப்புயர நீர் உயரும், நீர்
உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும்
குடி உயர கோல் உயரும், கோல்
உயர கோன் உயர்வான் என்ற ஔவையின் சிந்தனை இங்கு ஒப்புநோக்கத்தக்கது.
நெல்லை விதைத்தால் நெல் விளையும்..
சொல்லை விதைத்தால் சொல் விளையும்..
இனிய
சொல்லாக விதைத்தால் இனிய சொல்லே விளையும்
இன்னாத
சொல்லை விதைத்தால் இன்னாத சொல்லே விளையும்
அன்பை விதைத்தால் அன்பே விளையும்..
அறிவை
விதைத்தால் அறிவே விளையும்.
சொல்லுதல்
யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய
வண்ணம் செயல். - 664
சொல்லுவது யார்க்கும் எளிது, சொல்லியபடி
செய்துமுடிப்பதே அரிது என்றுரைத்த திருவள்ளுவர் தான்,
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.- 666
மனவுறுதி இருந்தால் நினைத்தது நிறைவேறும் என்றும் உரைத்துள்ளார்.
மன
உறுதியுடன் வாழ்வோம் நல்லதை விதைப்போம் நல்லதே விளையும்
இவற்றுள் எந்நன்றி கொன்றார்க்கும் என்ற குறளில் செய்நன்றி என்ற வார்த்தையின் பொருளை எவ்வாறு நீங்கள் குறிப்பிடுகிறீர்?
பதிலளிநீக்குசெய்நன்றி என்ற சொல் அடுத்தவர் நமக்குச் செய்த, நாம் அடுத்தவருக்கு செய்த என்ற இரு பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நீக்குவள்ளுவர் கூறிய கருத்துகளோடு தாங்கள் பிற பழமொழிகளோடும் செய்திகளோடும் ஒப்பிட்டு கூறியுள்ளது தெளிவாக புரியும்படி இருக்கிறது ஐயா
பதிலளிநீக்குநன்றி
நீக்குதெளிவாக புரியும்படி உள்ளது ஐயா.
பதிலளிநீக்குமிகவும் எளிமையாக புரியும் வகையில் உள்ளது ஐயா
பதிலளிநீக்குநன்றி
நீக்கு