பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

சனி, 18 மே, 2024

பொறுமையின் சிறப்பு



பொறுமை (Patience) என்பது துன்பம் ஏற்படும்போது உணர்ச்சவசப்படாமலும், கோபம் கொள்ளாமலும் இருக்கும் மனநிலையே..

சகிப்புத் தன்மை, நிதானம், அமைதி, சிந்தித்தல் ஆகிய படிநிலைகளைக் கடந்தவர்களே பொறுமைசாலிகள் எனப்படுவர்.

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மானப் பெரிது -124

எந்த நிலையிலும் தன்னிலை மாறாமல் அடங்கியிருத்தல் மலையை விடப் பெரியது என்கிறார் திருவள்ளுவர்.

சிறியோர் செய்த சிறு பிழையெல்லாம்

பெரியொர் பொறுப்பது கடனே

என்றார் அதிவீர ராம பாண்டியர்.

பிறர் தன்னை உயர்த்திப் பேசும்போது வெட்கப்பட வேண்டும்

தன்னை விரும்பாதவர் இகழ்ந்து பேசும்போது பொறுத்துக் கொள்ளவேண்டும் என்றுரைக்கிறார் நல்லாதனார்.

பொறுமையை இழப்பது என்பது போரில் தோற்பதற்குச் சமமானது என்றார் காந்தியடிகள். அவரது அகிம்சைக்கோட்பாட்டின் அடிப்படையாக அமைந்தது பொறுமை என்பதை நாம் உணரவேண்டும்.



பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தாரே பூமியாள்வார்,

ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும் ஆகிய பழமொழிகள் பொறுமையின் பெருமையைப் பேசுகின்றன.

ஒரு வேலையை விரைவாகச் செய்யும் வழி ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டுமே செய்வது. ஆனால் சில திறமையாளர்கள் ஒரு நேரத்தில் பல வேலைகளைச் செய்வார்கள்..

·         ஒரே நேரத்தில் எட்டு வேலைகளை செய்பவர் – அஷ்டாவதானி

·         ஒரே நேரத்தில் பத்து செயல்களை செய்பவர் - தசாவதானி

·         ஒரே நேரத்தில் நூறு வேலைகளை செய்பவர் – சதாவதானி

என்று அழைப்பதுண்டு.

இதற்கெல்லாம் பொறுமை என்பது மிகத் தேவையான ஒன்று.

அவசரக்காரர்களால் ஒரு நேரத்தில் ஒரு வேலையைக் கூட முழுமையாகவும் சரியாகவும் செய்யமுடியாது.

திருக்குறளில் பொறுமையின் பெருமையையும் அதனைத் திறமையுடன் கையாளும் வழிமுறைகளையும் திருவள்ளுவர் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்.

பொறுமையிழக்கும்போது நாம் கோபப்படுகிறோம், இன்னா செய்கிறோம், துன்பமைகிறோம்..

இதனையே வள்ளுவர் வெகுளாமை, இன்னா செய்யாமை, இடுக்கன் அழியாமை என மூன்று அதிகாரங்களிலும் எடுத்துரைத்தள்ளார்.

சிறிது நேரம் காத்திருந்தால் சிறிய நன்மை அடையலாம், நீண்ட காலம் காத்திருந்தால் பெரிய நன்மைகளை அடையலாம் என்று இரண்டு விருப்பத் தேர்வுகளைக் கொடுக்கும் போது, சிறிது நேரம் காத்திருந்து சிறிய நன்மை என்பதையே பலரும் பெரும்பாலும் தேர்வு செய்கிறார்கள். காத்திருக்கும் பொறுமை பலருக்கும் இருப்பதில்லை..

கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது. (திருக்குறள் – 772) என்பது திருக்குறள்.

முயலைப் பிடிப்பது எளிது.. யானையைப் பிடிப்பது அரிது..

அரிய செயல்களைச் செய்பவர்களே பெரியவர்கள் என்கிறார் திருவள்ளுவர். பெரிய இலக்குகளை அடைபவர்களின் தனிச்சிறப்புகளுள் பொறுமை குறிப்பிடத்தக்க பண்பாக அமைகிறது.

பொறையுடைமை என்ற அதிகாரத்தில்…பொறுமையின் பெருமையை,

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வாரைப் பொறுத்தல் தலை.-151

உன்னை இகழ்வாரையும் நிலம் போலத் தாங்கு

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று.- 152

தீமையைப் பொறுத்தலைவிட மறப்பது மிக நன்று

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்

வன்மை மடவார்ப் பொறை.- 153

விருந்தோம்பாமை வறுமைஅறிவற்றவரைப் பொறுத்தல் வலிமை

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை

போற்றி யொழுகப் படும்.- 154

நிறைவெனப்படுவது பொறுமையின் நிறைவே

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்

பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.- 155

தண்டித்தவரை உலகம் மறந்துவிடும்பொறுத்தவரை என்றும் மறக்காது

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

பொன்றுந் துணையும் புகழ்.- 156

நிலையான இன்பமென்பது தீமையைப் பொறுத்தலே

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து 

அறனல்ல செய்யாமை நன்று.-157

தீயைவை பிறர் செய்தாலும் அறனல்லதை செய்யாதிரு

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல்.- 158

இன்னா செய்தவரையும் இனிய செய்து வென்றுவிடுக

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்

இன்னாச்சொல் நோற்கிற் பவர்.-159

தீய சொற்களைப் பொறுப்பவர் துறவிகளைவிடச் சிறந்தவராவார்

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்

இன்னாச்சொல் நோற்பாரின் பின்.-160

தவமிருக்கும் துறவிகளும் இன்னா சொல் பொறுப்பாரின் பின்

என்று பொறுமையின் சிறப்பை உரைக்கிறார் திருவள்ளுவர்.

பொறுமையைத் திறமையாகக் கையாளும் வழிகளாக,

இன்னா செய்யாமை என்ற அதிகாரத்தில்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல். – 314 என்ற குறளில்,

தீமை செய்தவரும் வெட்கப்பட நன்மை செய்து விடு என்கிறார்.

பொறுமையைக் கடைபிடிக்கும் பண்புடையவர்களே தமக்கு இன்னா செய்தவர்களுக்கும் இனிய செய்வார்கள். இக்குறளில் “விடல்“ என்ற சொல் நுட்பமானது. ஒருவர் தமக்கு இன்னா செய்தார் என்பதையும் அதற்குத் தாம் இனிய செய்தோம் என்பதையும் மறந்து விடுதல் என்று பொருள் கொள்வது நயமாகும்.

இடுக்கண் அழியாமை என்ற அதிகாரத்தில்,

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில். - 621

துன்பம் வரும்போது சிரிஅதுதான் துன்பத்தை வெல்லும் வழி  

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர்.- 623

துன்பத்தில் கலங்காதவர்துன்பத்திற்கே துன்பம் கொடுப்பார்கள் என்கிறார்.

காலம் அறிதல் என்ற அதிகாரத்தில்,

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்

கருதி இடத்தாற் செயின். - 484

காலம்இடமறிந்து செயல்பட்டால் உலகையே வெல்லலாம்

என்றுரைக்கிறார். பொறுமைசாலிகளால் தான் காலத்தையும் இடத்தையும் அறியமுடியும்.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. -127

பொறுமை காப்பவர்களால்தாள் நாவைக் காக்கமுடியும்..

நீண்ட நேரம் சிந்தித்தபின் உங்கள் நாவை அசையுங்கள் நீங்கள் அவமானப்படமாட்டீர்கள் என்ற அரிஸ்டாட்டிலின் சிந்தனை இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

நாம் பேசும்போது பொறுமை இழந்தால் உறவுகளை இழக்கிறோம்..

பயணத்தில் பொறுமை இழந்தால் விபத்தை சந்திக்கிறோம்..

விளையாட்டில் பொறுமையிழந்தால் தோல்வியடைகிறோம்.

பொறுமையும் ஒரு திறமைதான் அதனை எங்கே வெளிப்படுத்துகிறோம்..என்பது ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது.

கோபத்தில் இன்னாத வார்த்தைகளைப் பேசுவோர் சராசரி மனிதர்கள்

கோபத்தில் ஏதும் பேசாமல் அமைதியாக இருப்பவர்கள் மனவலிமையுள்ளவர்கள்

கோபத்திலும் இனிய வார்த்தைகளைப் பேசுபவர்களே மாமனிதர்கள்.

உடல் பலத்தைவிட மனபலமே சிறந்தது.

புத்தியுள்ள மனிதர்களைவிட உணர்வுகளைக் கையாளும் திறனுள்ள மனிதர்களே வாழ்க்கையில் வெற்றிபெறுகிறார்கள்.

நாம் பேசும் வார்த்தைகளில், செயலில் பொறுமையைக் கடைபிடிப்போம்..

பிறர் குறையைக் காண்பவன் அரை மனிதன், தன் குறையைக் காண்பவன் முழுமனிதன் என்பார் விவேகானந்தர்.

பொறுமையைக் கடைபிடித்தால் நாமும் முழு மனிதர்களே..

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக