வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 11 அக்டோபர், 2023

தமிழ் மின் உள்ளடக்கங்களுக்கான காப்புரிமைகள்

 


தமிழ் மின் உள்ளடக்கங்களுக்கான காப்புரிமைள்

Copyrights for Tamil e-Content

முனைவர் இரா.குணசீலன்

தமிழ் இணைப்பேராசிரியர்

பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்

முன்னுரை

திறன்பேசி, மடிகணினி, பலகைக் கணினி ஆகிய கருவிகளிலும் மென்பொருள், குறுஞ்செயலிகள் என பல நிலைகளிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்தி வருகிறோம். அவற்றுள் மின் உள்ளடக்கங்கள் குறிப்பிடத்தக்கன. Electronic content என்ற சொல்லைத் தமிழில் மின்னணு உள்ளடக்கம் என்று மொழிபெயர்க்கலாம். e-book என்ற சொல்லைத் தமிழில் மின் புத்தகம் அல்லது மின்னூல் என்று அழைப்பதுபோல, மின்னணு உள்ளடக்கம் என்ற சொல்லை மின் உள்ளடக்கம் என்று அழைக்கிறோம். தமிழ் மின் உள்ளடக்கங்களுக்கான காப்புரிமை வகைப்பாடுகளையும், காப்புரிமைபெறும் வழிமுறைகளையும் இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.

காப்புரிமை (Copyrights)

காப்புரிமை என்பது பலவகைப்படும், பதிப்புரிமை (copyright), வணிகச் சின்னம் (Trademark),படைப்புரிமம் (Patent), புவிசார் குறியீடு (Geographical Indication), வணிக இரகசியம் (Trade Secret) என இதை வகைப்படுத்தலாம். பொருளுக்கு மட்டுமின்றி வடிவமைப்புக்கும்  காப்புரிமை பெறலாம்.

 

 பதிப்புரிமை 

ஒரு எழுத்தாளருக்கோ, படைப்பாளருக்கோ தமது மூலப் படைப்புகளைப் பாதுகாக்க சட்டத்தினால் அவருக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட உரிமையாகும். இவ்வுரிமையானது அப்படைப்புகளை நகலெடுத்தல், பரப்புதல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்துதலையும் உள்ளடக்கியதாகும்.(1) முன்பு, பதிப்புரிமைச் சட்டம், புத்தகங்கள் நகலெடுப்பதற்கு எதிராக மட்டுமே பயன்பட்டது. இப்போது இச்சட்டம் நிலப்படம், இசை, நாடகம், நிறழ்படம், ஒலிப்பதிவு, திரைப்படம், கணினி நிரல், மென்பொருள் ஆகியவையும் இதில் அடக்கம். காப்புரிமை என்பது அறிவுசார் சொத்துரிமை என்ற பிரிவின் கீழ் வருகிறது. இந்தியாவில், சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நான்கு இடங்களில் காப்புரிமை அலுவலகங்கள் அமைந்துள்ளன. இஙகு விண்ணப்பித்து காப்புரிமைகளைப் பெறமுடியும்.

 அறிவுசார் சொத்துரிமை (Intellectual property)

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை - திருக்குறள் -411

 செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் தலையானதாகும் என்பார் திருவள்ளுவர். சொத்துகளை அசையும் சொத்து அசையாச் சொத்து என வகைப்படுத்துவதுண்டு. சொத்துகளுள் அறிவு என்பதும் ஒரு சொத்தாகவே மதிக்கப்படுகிறது. ஒரு படைப்பை உருவாக்கவோரே அதன் உரிமையாளர். பொதுவாக படைப்பாளிக்கு அல்லது படைப்பை ஆக்கும் நிறுவனத்துக்கு அந்த படைப்பின் சொத்துரிமை சேரும்.

ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு சொத்துரிமை உள்ளோரின் அனுமதி இன்றி இவற்றை பிறர் பயன்படுத்த முடியாது. அது  பாட்டு, கதை, கட்டுரை, ஓவியம், படங்கள், கண்டுபிடிப்புகள், நுட்பங்கள், வணிகச் சின்னங்கள் போன்ற ஆக்கபூர்வமான எந்தப் படைப்பாக இருந்தாலும் அதன் உரிமை படைப்பாளிக்குரியது. அந்த உரிமையைப் படைபப்பாளி சட்டப்படி பதிவு செய்துகொள்ளலாம். இந்த உரிமையை,

1.தனியுரிமை, 2.படைப்பாக்கப் பொதுமங்கள் என இருவகைப்படுத்தலாம்.

1. தனியுரிமம் (Proprietary License)

தனியுரிமம் என்பது தனது படைப்புக்கான உரிமமாகும். தனியுரிம காப்புரிமம் என்பது இணையதளம், வலைப்பதிவு, மென்பொருள்கள், அச்சுநூல்கள், மின்னூல்கள், ஒலிநூல்கள், படங்கள், இசைக்கோப்புகள் என படைப்பு சார்ந்த எதற்கும் பெற இயலும்.

2. படைப்பாக்கப் பொதுமங்கள் (Creative Commons License)

படைப்பாக்கப் பொதும உரிமம் என்பது படைப்பாளி தன் படைப்பை தான் உரிமை கொள்ளாமல், பொதுமக்கள் பயன்படுத்த, மாற்றிப் பயன்படுத்த, வணிக நோக்கில் பயன்படுத்த அனுமதி வழங்குவதாகும். இணையதளம், வலைப்பதிவு, மென்பொருள்கள், அச்சுநூல்கள், மின்னூல்கள், படங்கள், இசைக்கோப்புகள் என படைப்பு சார்ந்த  எந்தப் படைப்பையும் இந்த உரிமத்தில் வழங்க இயலும்.

 2. யூடியூப் காணொலிகளுக்கான காப்புரிமங்கள்

யூடியூப் (வலையொளி) என்பது காணொலிகளைப் பகிர்ந்துகொள்வதற்காகப் பலரும் பயன்படுத்திவரும் இணையதளம் ஆகும். இதில் பதிவேற்றப்படும் காணொளிகளை, 1. நிலையான காப்புரிமம் (Standard Youtube License)

2. படைப்பாக்கப் பொதும உரிமம் (Creative Commons Attribution) என இரண்டு வகையான காப்புரிமங்களில் வெளியிடமுடியும்.

 1. நிலையான காப்புரிமம் (Standard Youtube License)

நிலையான காப்புரிமம் என்ற உரிமத்தைப் பயன்படுத்தினால், காணொலியைப் பதிவேற்றுவோரே அதன் உரிமையாளர் ஆவா். அதே காணொலியை வேறு யாரும் தம் பக்கத்தில் பதிவேற்றினாலோ, பயன்படுத்தினாலோ அதன் உரிமையாளர் உரிமை கோரலாம். இதற்கு பதிப்புரிமைக் கோரிக்கை (Copyright Claim) என்று பெயர். ஒரு யூடியூப் சேனல் வைத்திருப்பவர் காப்புரிமை சார்ந்த விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். தன் படைப்புகளை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது என்பதுபோல அடுத்தவர் படைப்பைத் தாம் பயன்படுத்தக்கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஒருவர் தனது யூடியூப் சேனலில் மூன்று முறைக்கு மேல் பிறர் காப்புரிமை வைத்துள்ள படைப்புகளைப் பயன்படுத்தினால் அவரது சேனல் (வலையொளி பக்கம்) தடைசெய்யப்படும்.

 படைப்பாக்கப் பொதும உரிமம் (Creative Commons Attribution)

படைப்பாக்கப் பொதும உரிமம் என்பது அறிவு, பொதுச் சொத்து என்ற அடிப்படையில் யாவரும் பயன்படுத்தும் வகையில் இடம்பெறும். இது போன்ற காணொலிகளை யாரும் பயன்படுத்தலாம். இருந்தாலும் தாம் பயன்படுத்தும் காணொலிகளை உருவாக்கியவர் பெயருடன் பகிர்வது மரபாகும்.

3. படங்களும் காப்புரிமங்களும்

அழைப்பிதழ், சான்றிதழ், புத்தகம், வலைப்பதிவு, இணையதளம், காணொலி உருவாக்கம் என பல தேவைகளுக்காக நாம் கூகுள் உள்ளிட்ட தேடுதளங்களில் நிழற்படங்களைத் (Image) தேடிப் பயன்படுத்திக் கொள்கிறோம். சான்றாக, கூகுள் தேடுதளத்தில் படங்களைத் தேடும்போது என Tools என்ற பகுதியைச் சுட்டினால் Size, Colour,Type,Time,Usage Rights என சில வசதிகள் கிடைக்கும். அவற்றுள் எல்லாம் (All), படைப்பாக்கப் பொதுமம் (Creative Commons licences), வணிக மற்றும் பிற உரிமங்கள் (Commercial and other licences) என மூன்று வசதிகள் காணக்கிடைக்கும். அவற்றுள் படைப்பாக்கப் பொதும உரிமத்தில் உள்ள படங்களைப் பயன்படுத்த எவ்விதமான தடைகளும் இல்லை. வணிக மற்றும் பிற உரிமம் பெற்ற படங்களைப் பயன்படுத்தினால் அதன் உரிமையாளர்கள் தங்களிடம் உரிமை கோரலாம்.

இசைகளும் காப்புரிமங்களும்

நாம் உருவாக்கும் காணொலிக்காகப் பல திரை இசைக் கோப்புகளையோ, ஒலிக் கோப்புகளையோ நாம் இணையத்தில் இருந்து பதிவிறக்கிப் பயன்படுத்துவோம். படங்களைப் போலவே இவற்றுக்கும் தனியுரிமம், மற்றும் படைப்பாக்கப் பொதும உரிமங்கள் உண்டு.

  • ·       இந்திய அரசின் அறிவுசார் சொத்துரிமை (2)
  • ·       இந்திய அரசின் காப்புரிமம்(3)
  • ·       படைப்பாக்கப் பொதும உரிமம்(4)
  • என காப்புரிமைகளைப் பதிவு செய்ய இணையதளங்கள் உள்ளன.

 படைப்பாக்கப் பொதும உரிமங்கள்

      படைப்பாக்கப் பொதுமங்கள் (கிரியேட்டிவ் காமன்சு - Creative Commons) என்பது ஆக்கங்களை சட்டப்படி மற்றவரோடு பகிர்வதை ஊக்குவிப்பதையும் விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக்கொண்டு இயங்கும் இலாபநோக்கற்ற அறக்கட்டளை ஆகும். இது 2001 இல் லோறன்ஸ் லெஸிக் என்பவரால் தொடங்கப்பட்டது. ஒரு அறிவுசார்ந்த படைப்பை இணையத்திலோ வேறு வடிவங்களிலோ பகிர்வதற்கான கட்டுப்பாடுகளுள் கிரியேட்டிவ் காமன்ஸ் அல்லது படைப்பாக்கப் பொதுமங்கள் குறிப்பிடத்தக்கன ஆகும்.

           

1. Creative Commons Attribution BY - குறிப்பிடுதல் (CC-BY)

2. Creative Commons Attribution-ShareAlike -குறிப்பிடுதல்-அதே மாதிரிப் பகிர்தல் (CC-BY-SA)

3. Creative Commons Attribution-NoDerivs குறிப்பிடுதல்- வழிப்பொருளற்ற (CC-BY-ND)

4. Creative Commons Attribution-NonCommercial குறிப்பிடுதல் - இலாப நோக்கமற்ற (CC-BY-NC)

5.Creative Commons Attribution-NonCommercial-ShareAlike-குறிப்பிடுதல்-இலாப நோக்கமற்ற – அதே மாதிரிப் பகிர்தல்(CC-BY-NC-SA)

6. Creative Commons Attribution-NonCommercial-NoDerivs குறிப்பிடுதல் – இலாபநோக்கமற்ற, வழிப்பொருளற்ற (CC-BY-NC-ND)

 

கட்டற்ற வளங்களை வெளியிடுவதில் இந்த ஆறு வகையான உரிமங்கள்  குறிப்பிடத்தக்கனவாகத் திகழ்கின்றன.

 

நிறைவுரை

·   Electronic content என்ற சொல்லைத் தமிழில் மின்னணு உள்ளடக்கம் என்று மொழிபெயர்க்கலாம்.

·       e-book என்ற சொல்லைத் தமிழில் மின் புத்தகம் அல்லது மின்னூல் என்று அழைப்பதுபோல, மின்னணு உள்ளடக்கம் என்ற சொல்லை மின் உள்ளடக்கம் என்று அழைக்கிறோம்.
· பதிப்புரிமை (copyright), வணிகச் சின்னம் (Trademark),படைப்புரிமம் (Patent), புவிசார் குறியீடு (Geographical Indication), வணிக இரகசியம் (Trade Secret) என காப்புரிமைக் கூறுகளை வகைப்படுத்தலாம்.
· இணையதளம், வலைப்பதிவு, மென்பொருள்கள், அச்சுநூல்கள், மின்னூல்கள், ஒலிநூல்கள், படங்கள், இசைக்கோப்புகள் என மின் உள்ளடக்கங்கள் எதற்கும் காப்புரிமை பெறலாம்.
·       இந்த உரிமையை, 1. தனியுரிமை, 2. படைப்பாக்கப் பொதுமங்கள் என இருவகைப்படுத்தலாம்.
·   யூடியூப் (வலையொளி)  1. நிலையான காப்புரிமம் (Standard Youtube License) 2. படைப்பாக்கப் பொதும உரிமம் (Creative Commons Attribution) என இரு பிரிவுகளைக் கொண்டது.
· இணையத்தில் தேடிப் பெறும் நிழற்படங்கள், ஒலி, காணொளிகளுக்கும் உள்ள காப்புரிமை குறித்த விவரங்களைப் பயன்படுத்துவோர் அறிந்திருக்கவேண்டும்.
·  இந்திய அரசின் அறிவுசார் சொத்துரிமை, இந்திய அரசின் காப்புரிமம், படைப்பாக்கப் பொதும உரிமம் என காப்புரிமைகளைப் பெற இந்தியாவில், சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நான்கு இடங்களில் காப்புரிமை அலுவலகங்கள் அமைந்துள்ளன. இஙகு விண்ணப்பித்து காப்புரிமைகளைப் பெறமுடியும்.
·  கட்டற்ற வளங்களை வெளியிடுவதில்  ஆறு வகையான படைப்பாக்கப் பொதும உரிமங்கள் குறிப்பிடத்தக்கனவாகத் திகழ்கின்றன.
காப்புரிமைகளின் வகைப்பாடுகளை அறிதலும், காப்புரிமையுள்ள உள்ளடக்கங்களைப் பயன்படுத்தும் வழிமுறைகளை அறிதலும் மின் உள்ளடக்கங்களை உருவாக்குவோரின் அடிப்படையான தேவையாக அமைகிறது.

சான்றெண் விளக்கம்

1.    https://ta.wikipedia.org/wiki/பதிப்புரிமை

2.   https://ipindia.gov.in/

3.   https://copyright.gov.in/

4.   https://ta.wikipedia.org/படைப்பாக்கப்_பொதுமங்கள்  


        நன்றி - இனம் பன்னாட்டுத் தமிழாய்விதழ் 

                                       (பிப்ரவரி 2023 பதிப்பு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக