பாரதிதாசன் பாண்டிச்சேரியில் பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன், தம் எழுச்சி மிக்க எழுத்துகளால், "புரட்சிக் கவிஞர்" என்றும் "பாவேந்தர்" என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் (கவிதை வடிவில்) ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.
தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக்கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர் என பல துறைகளில் தமிழ்மொழியின் இனிமையை உலகெலாம் பரப்பியவர். இவரது பிசிராந்தையார்
நாடகத்துக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.
ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் மாலை 4 மணிக்குச் சென் னை, பக்கிங்காம் கால்வாயில் தோணி ஏறி, மறுநாள் காலை 9 மணிக்கு மாவலிபுரம் சேர்ந்தோம், நானும் என் தோழர் பலரும். வழிப்போக்கின் இடைநேரம் இனிமையாய்க் கழிந்தது. எனினும் அப்பெருந்தோணியைக் கரையோரமாக ஒரு கயிறு பற்றி ஒருவன் இழுத்துச் சென்றமையும், மற்றோர் ஆள் பின்புறமாக ஒரு நீளக் கழியால் தள்ளிச் சென்றமையும் இரங்கத் தக்க காட்சி, அதையும், ஆங்குக் கண்ணைக் கவர்ந்த மற்றும் சில காட்சிகளையும் விளக்கி அப்போது எழுதியதாகும் இப்பாட்டு
சென்னையிலே ஒருவாய்க்கால் - புதுச்
சேரிநகர் வரை நீளும்.
அன்னதில் தோணிகள் ஓடும் - எழில்
அன்னம் மிதப்பது போலே.
(தோணி - ஓடம்; கப்பல்; மிதவை
அன்னம் -பறவை இனங்களுள் ஒன்று)
என்னருந் தோழரும் நானும் - ஒன்றில்
ஏறி யமர்ந்திட்ட பின்பு
(தோழர் - நண்பர்)
சென்னையை விட்டது தோணி - பின்பு
தீவிரப் பட்டது வேகம்.
தெற்குத் திசையினை நோக்கி - நாங்கள்
சென்றிடும் போது விசாலச்
(விசாலம் - அகலம் )
சுற்றுப் புறத்தினில் எங்கும் - வெய்யில்
தூவிடும் பொன்னொளி கண்டோம்
நெற்றி வளைத்து முகத்தை - நட்டு
நீரினை நோக்கியே நாங்கள்
அற்புதங் கண்டு மகிழ்ந்தோம் - புனல்
அத்தனையும்ஒளி வானம்.
சஞ்சீவி பர்வதச் சாரல் - என்று
சாற்றும் சுவடி திறந்து
(சஞ்சீவி பர்வதச் சாரல் - பாரதிதாசன், முதன்முதலில் படைத்த தொடர்நிலைச் செய்யுள் (சிறிய காவியம்) சஞ்சீவி பர்வதத்தின் சாரல்)
சஞ்சார வானிலும் எங்கள் - செவி
தன்னிலும் நற்றமிழ் ஏற்றி
(சஞ்சாரம் - பயணம், உலா)
அஞ்சாறு பக்கம் முடித்தார் - மிக்க
ஆசையினால் ஒரு தோழர்,
செஞ்சுடர் அச்சம யத்தில் - எம்மைச்
செய்தது தான்மிக்க மோசம்
(செஞ்சுடர் - சூரியன்)
மிக்க முரண்கொண்ட மாடு - தன்
மூக்குக் கயிற்றையும் மீறிப்
பக்க மிருந்திடும் சேற்றில் - ஓடிப்
பாய்ச்சிடப் பட்டதோர் வண்டிச்
சக்கரம் போலிருள் வானில் - முற்றும்
சாய்ந்தது சூரிய வட்டம்!
புக்க பெருவெளி யெல்லாம் - இருள்
போர்த்தது! போனது தோணி.
வெட்ட வெளியினில் நாங்கள் - எதிர்
வேறொரு காட்சியும் கண்டோம்.
குட்டைப் பனைமரம் ஒன்றும் - எழில்
கூந்தல் சரிந்ததோர் ஈந்தும்
(ஈந்து - பேரீந்து>பேரீந்தை>பேரீத்தை என்பதன் மருவிய பலுக்கமே பேரீச்சை என்று ஆயிற்று)
மட்டைக் கரங்கள் பிணைத்தே - இன்ப
வார்த்தைகள் பேசிடும் போது
கட்டுக் கடங்கா நகைப்கைப் - பனை
கலகல வென்றுகொட் டிற்றே.
(நகை - சிரிப்பு)
எட்டிய மட்டும் கிழக்குத் - திசை
ஏற்றிய எங்கள் விழிக்குப்
பட்டது கொஞ்சம் வெளிச்சம் - அன்று
பௌர்ணமி என்பதும் கண்டோம்.
(பௌர்ணமி - முழுநிலா)
வட்டக்குளிர்மதி எங்கே என்று
வரவு நோக்கி யிருந்தோம்.
ஒட்டக மேல்அர சன்போல் - மதி
ஓர்மரத் தண்டையில் தோன்றும்.
( அண்டை -பக்கம்)
முத்துச் சுடர்முகம் ஏனோ - இன்று
முற்றும் சிவந்தது சொல்வாய்.
இத்தனை கோபம் நிலாவே - உனக்கு
ஏற்றியதார் என்று கேட்டோம்.
உத்தர மாக எம் நெஞ்சில் - மதி
ஒன்று புகன்றது கண்டீர்.
(உத்தரம் - மறுமொழி)
சித்தம் துடித்தது நாங்கள் - பின்னால்
திருப்பிப் பார்த்திட்ட போது,
தோணிக் கயிற்றினை ஓர் ஆள் - இரு
தோள்கொண் டிழுப்பது கண்டோம்.
காணச் சகித்திட வில்லை - அவன்
கரையொடு நடந்திடு கின்றான்.
கோணி முதுகினைக் கையால் - ஒரு
கோல்நுனி யால்மலை போன்ற
தோணியை வேறொரு வன்தான் - தள்ளித்
தொல்லை யுற்றான்பின்புறத்தில்.
(தொல்லை -துன்பம்)
இந்த உலகினில் யாரும் - நல்
இன்ப மெனும்கரை யேறல்
சந்தத மும்தொழி லாளர் - புயம்
தரும்து ணையன்றி வேறே
(சந்ததம்) - எப்பொழுதும்)
எந்த விதத்திலும் இல்லை - இதை
இருப துதரம் சொன்னோம்.
சிந்தை களித்த நிலாவும் - முத்துச்
சிந்தொளி சிந்தி உயர்ந்தான்.
(களிப்பு - இன்பம், மகிழ்ச்சி)
நீல உடையினைப் போர்த்தே - அங்கு
நின்றிருந் தாள்உயர் விண்ணாள்
வாலிப வெண்மதி கண்டான் - முத்து
மாலையைக் கையி லிழுத்து
நாலு புறத்திலும் சிந்தி - ஒளி
நட்சத்திரக்குப்பை யாக்கிப்
பாலுடல் மறையக் காலை - நாங்கள்
பலிபுரக்கரை சேர்ந்தோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக