நரந்தப்பூவின் மணம் கமழ்கின்ற கரிய கூந்தலையும்,
வரிசையான ஒளி வீசும் பற்களையும் கொண்ட பெண்ணே!யானைகள்
மிதித்தமையால் உண்டாகிய பள்ளத்தில் தங்கிய நீர் விளங்கும் மலைப்
பக்கத்திலுள்ள தெய்வத்தால் விரும்பப் பெற்றாளைப் போன்றவளாகிய,
நீ உன் கற்பிற்கு களங்கம் வருமோ என்றுஅஞ்சி நடுங்குவதை அறிந்து,
உன் வருத்தத்தைப் பொறுக்கமுடியாத நான்சிறிது சிறிதாக
அவ்வப்பொழுதுகளில் இரங்கி வருந்தினெனல்லவா? என்று தோழி
தலைவியிடம் பேசுகிறாள். இதுதான் பாடலின் கருத்து.
குறுந்தொகை -52 -பனம்பாரனார்
குறிஞ்சி
வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்றமையால் இது விளைந்தது என்று கூறியது
(தலைவன் தலைவியை மணந்து கொள்வதற்கான முயற்சிகளைச் செய்வதை
அறிந்து மகிழ்ந்த தலைவியை நோக்கி, “நீ வருந்துவதை அறிந்த நான் உண்மையைத் தாயார்க்கு
அறிவித்தேன்; அதனால் இஃது உண்டாயிற்று” என்று தோழி உணர்த்தியது.)
குறிப்புப் பொருள்
ஆர்களிறு மிதித்த -
தலைவன் இரவுக்குறியில் வந்தபோது எதிர்கொண்ட துன்பத்தை நினைத்தது,
பள்ளங்களில் தங்கிய நீர் -
தலைவனின் களவொழுக்கம் ஊரார் அலர் மொழிகளால் வரைவுக்குக் காரணமானது.
சூர்நசை - தலைவன் வரும் வழியின் துன்பம் எண்ணி, ஊரார் அலர்
மொழி நினைத்தும், காப்பு மிகுதியாலும், வெறியாட்டாலும் தலைவி தெய்வம் ஏறியவள்
போல் நடுங்கினாள்
சொற்பொருள்
நரந்தம் - நரந்தம் புல்
நிரந்து - வரிசையாக
சிலம்பு - மலை
சூர் - தெய்வம்
பரிதல் - வருந்துதல்
இறை - சிறிது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக