வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 30 டிசம்பர், 2022

அம்பல் ஊர்


நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க...

ஊர் என்ன பேசும்..

அடுத்தவங்க என்ன நினைப்பாங்க...

உலை வாய மூடலாம் ஊர்வாய மூடமுடியுமா..

கிசுகிசு பேசுதல்

என்றெல்லாம் காலந்தோறும் அடுத்தவர்களைப் பற்றிப் பேசுவது குறித்து அறிவோம்..

அன்று கிணற்றடி, குளத்தங்கரை, ஆற்றங்கரைகளில் பேசப்பட்ட ஊர்க்கதைகள் இன்று சமூகத்தளங்களில் பேசப்படுகின்றன.

அடுத்தவர்களைப் பற்றி அதிகம் பேசுவது ஆண்களா? பெண்களா? என்றால் இருவரும்தான்..

இருந்தாலும் ஆண்களைவிடப் பெண்களே அதிகமாக அடுத்தவர்களைப் பற்றிப் பேசுவார்கள் என்பதைச் சங்கப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

அம்பல், அலர், கௌவை என இது உரைக்கப்பட்டிருக்கிறது.

அம்பல் என்பது மொட்டு, அலர் என்பது மலர்ந்த நிலை,

தலைமக்களின் காதல் வாழ்க்கையை சிலர் மட்டும் அறிந்து உரைத்தால் அது அம்பல், பலரும் அறிந்து பேசினால் அது அலர்..

 குறுந்தொகைப் பாடல் ஒன்றில் அம்பல் பேசும் ஊர் பற்றிக் காண்போம்..

கூன் முள் முண்டகக் கூர்ம் பனி மா மலர்

நூல் அறு முத்தின் காலொடு பாறித்

துறைதொறும் பரக்கும் தூ மணற் சேர்ப்பனை

யானும் காதலென்; யாயும் நனி வெய்யள்;

எந்தையும் கொடீஇயர் வேண்டும்

அம்பல் ஊரும் அவனொடு மொழிமே.

 

குறுந்தொகை - 51- நெய்தல் - இரங்கல் இரங்கல் நிமித்தம்

குன்றியனார் பாடல்

(வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி வரைவு மலிவு கூறியது.)

 திருமணம் நடக்காமல் காதல் வாழ்க்கை நீள்வதை எண்ணி வருந்தும் தலைவியிடம்

விரைவாகத் திருமணம் நடக்கும் எனத் தோழி எடுத்துரைக்கிறாள்.

தோழி தன் தலைவிக்கும் தலைவனுக்கும் உள்ள உறவைத் தாய் அறிந்த பின் தந்தைக்கு வெளிப்படுத்துகிறாள்.

இவள் காதலன் சேர்ப்பன். தூய மணல் பரப்பு கொண்ட சேர்ப்பன்.

வளைந்த முள்ளோடு கூடிய முண்டகப்  பூ, பனி மிகுந்திருக்கும் காலத்தில் பூத்து, காற்று வீசும்போது

மாலையின் நூல் அறுந்து சிதறி விழும் முத்துக்களைப் போல முண்டகப்பூ கொட்டும் அத்தககைய நிலத்தின் தலைவன்.

அவனை இவள் காதலிக்கிறாள்

இவர்கள் மணம் முடித்து மகிழ்வுடன் வாழ நானும் விரும்புகிறேன்.

தாயும் விருப்பம் உடையவளாக இருக்கிறாள்.

தந்தையும் மணம் செய்து கொடுத்தால் நல்லது.

பழி தூற்றும் இந்த ஊர் அவனோடு உன்னை தொடர்புபடுத்தி பேசுகிறது.

 பழிதூற்றுவது ஊரின் இயல்புதான். ஆனாலும் களவு, கற்பாக மாற இந்த பழிமொழியும் ஒரு காரணம் அல்லவா!

இவர்கள் திருமணம் முடிந்தால் மட்டும் பழி தூற்றுவது நின்றுவிடுமா..

அம்பல் தூற்றும் இவ்வூர் இவர்களை விட்டுவிட்டு இன்னொருவரைப் பற்றிப் பேசும்...

உள்ளுறை
முட்கள் நிறைந்த முள்ளியிடத்திலுள்ள முண்டக மலரைப் பறித்தால் அதிலுள்ள முட்கள் பறிப்பவரின்  கைகளை வருத்தும். ஆனால், காற்றில் பறந்து கடற்கரையில் பரவிக் கிடக்கும் முண்டக மலர்களைப் பறிப்பது எளிது.   அதுபோல், தலைவன் தலைவியின் காதலைப் பற்றிய செய்தி ஊர் மக்களிடம் பரவியிருப்பதாலும், தலைவனைத் தோழி, தலைவியின் தாய் மற்றும் தந்தை ஆகியோருக்குப் பிடித்திருப்பதாலும், தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணம் நடைபெறுவது எளிதாகிவிட்டது  என்பது குறிப்பு.

 சொற்பொருள் விளக்கம்

 வரைவு நீட்டித்தல் - திருமணம் செய்யக் காலம் தாழ்த்துதல்

வரைவு மலிதல் - திருமண முயற்சி நிகழ்வது குறித்து எண்ணி மகிழ்தல்

கூன் - வளைந்த

கூர்ம்பனி - உடலை வாட்டும் கூர்மையான பனி

அம்பல் - சிலர் அறிந்து கூறும் மொழி, பழிச்சொல், பழிமொழி, பூ மலர்வதற்கு முன் உள்ள நிலை

கால் - காற்று

பாறி - சிதறி

சேர்ப்பன் - நெய்தல் நிலத் தலைவன்

வெய்யள் - விருப்பமுடையவள்

 தொடர்புடைய இடுகை


கிசுகிசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக