வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 27 அக்டோபர், 2022

ரோமியோ ஜூலியட் - புரட்சிக்கவி - கொடிமுல்லை ஒப்பீடு

 

ரோமியோ ஜூலியட் - புரட்சிக்கவி - கொடிமுல்லை ஒப்பீடு

சேக்சுபியர், பாரதிதாசன், வாணிதாசன் ஆகியோர் படைப்புகளை ஆராய்ந்து காதலில் வீரமும், வீரத்தில் காதலும் இருப்பதாக இக்கட்டுரை சான்றுகளுடன் இயம்புகிறது.

காதலும் வீரமும் தமிழரின் இருகண்கள். காதலில் வீரமும், வீரத்தில் காதலும் நுட்பமான உள்ளீடுகளாக உள்ளன, மொழி எல்லைகளைக் கடந்து இவ்வுணர்வுகள் இலக்கியங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. வில்லியம் சேக்சுபியரின், ரோமியோ ஜூலியட், பாவேந்தர் பாரதிதாசனின் புரட்சிக்கவி, வாணிதாசனின் கொடிமுல்லை ஆகிய படைப்புகளில் காதல் அடிக்கருத்தியலாக இருந்தாலும் காதலில் வீரத்தையும், வீரத்தில் காதலையும் படைப்பாளர்கள் நயம்பட பதிவுசெய்துள்ளனர். ஒப்பீட்டு நிலையில் இக்கதைக்களங்களின் சிறப்பியல்புகளை இக்கட்டுரை ஆராய்கிறது.

ரோமியோ ஜூலியட்

வில்லியம் சேக்சுபியரின் ரோமியோ ஜூலியட் என்ற துன்பியல் நாடகம் 1595-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதன்முதலாக அரங்கேற்றப்பட்டது. இந்நாடகம் பாலியல் எண்ணம் செறிந்த, பருவகால வயது, காதல் மற்றும் மரணம் இவற்றினாலான புகழ்பெற்ற காதல் வீரத் துன்பியல் நாடகம் ஆகும்.

புரட்சிக்கவி

புரட்சிக் கவி என்னும் காப்பியத்தைப் பாரதிதாசன் 1937 ஆம் ஆண்டு வெளியிட்டார். வடமொழியில் எழுதப்பட்ட பில்கணியம் என்னும் காவியக் கருத்தில் தமிழ் உணர்வு கொடுத்துப் 'புரட்சிக் கவி' என்னும் காப்பியமாகப் பாரதிதாசன படைத்துள்ளார்.

கொடிமுல்லை

 கவிஞர் வாணிதாசன் அவர்கள் 1950ல் கொடிமுல்லை என்ற காதல் குறுங்காப்பியத்தை இயற்றினார் இவர் பாரதிதாசனின் மாணவர் ஆவார். தலைமை

மாந்தர்கள் ஒப்பீடு

1. ரோமியோ, ஜூலியட் இருவரும் மேட்டுக்குடியைச் சார்ந்தவர்கள், இரு குடும்பத்தாரும்

 

பகையுடன் வாழ்பவர்கள். ரோமியோ ஜூலியட்டைப் பார்க்கும் முன்னர் ரோசலின் என்ற

பெண் மீது காதல் கொண்டிருந்தான். ரோசலின், அவன் மீது காதல் கொள்ளவில்லை.

2. உதாரன், அமுதவல்லி - உதாரன் தமிழ்க்கவிஞன். அமுதவல்லி அரசனின் மகள், தமிழால் இருவருக்கும் காதல் வந்தது.

3 அழகன், கொடிமுல்லை அழகன் தச்சன், கொடிமுல்லை. மாமல்ல அரசன் மகள்,

கண்டதும் காதல் கொண்டனர்.

துணைமை மாந்தர்கள் ஒப்பீடு

ரோமியோவின் நண்பர்களாக, பென்வாலியோ, மெர்கூசியோ ஆகியோர் இடம்பெறுகின்றனர். கேபுலட்டின் சகோதரியின் மகனாக டைபால்ட் இடம்பெறுகிறார், திருமணம் நடத்திவைக்கும் துறவியாக லாரன்சு உள்ளார்.

புரட்சிக் கவியில் மன்னன், அமைச்சர், மக்கள் ஆகியோரைத் துணை மாந்தர்களாகக் காண்கிறோம். கொடிமுல்லையில், மாமல்லன் அரசராகவும், செங்காந்தள் அரசியாகவும், நுழைபுலத்தான் பல்லவ நாட்டு அமைச்சராகவும், மானவன்மன் படைத்தளபதியாகவும் மாமல்லனின் உறவினாகவும் நண்பனாக பல்லவ நாட்டுப் புலவன் நலம்பாடி இடம்பெறுகிறார். அல்லி கொடிமுல்லையின் தோழியாகவும் இடம்பெறுகின்றனர்

ரோமியோ ஜூலியட்டில், காதல் - வீரம்

பகைக் குடும்பம் என்று அறிந்தும் ரோசலின் மீதுகொண்ட காதலுக்காக பிரபு கேபுலட் விருந்தில் கலந்துகொள்கிறான் ரோமியோ, அங்கு அழகான ஜுலியட்டைக் காண்கிறான் அவள் பாரிசு என்ற இளைஞனுக்கு நிச்சயம் செய்யப்பட்டவள் என்று அறிந்தும் அவள் மீது காதல் கொள்கிறான், நண்பனான மெர்கூசியாவை டைபால்ட் கொன்றதால் ரோமியோ டைபால்ட்டை கொன்றான் துறவி லாரன்சின் உதவியுடன் திருமணம் செய்துகொள்கிறான். இறுதியாக ரோமியோவுக்காக ஜூலிபட் உயிரைப் பணயம் வைத்து இறந்தவள் போல நடிக்கிறாள், அவள் இறந்துவிட்டாள் என தவறாக எண்ணி ரோமியோ விசம் குடித்து இறந்துவிடுகிறான் மயக்கம் தெளிந்த ஜூலியட் ரோமியோ இல்லாத உலகில் தான் வாழவிரும்பாமல் இறந்துவிடுகிறாள் மேற்கண்ட காட்சிகளில் ரோமியோவும், ஜுலியட்டும் தம் காதலுக்காக வீரத்துடன் போராடினாலும் இறுதியில் காதலை வாழவைத்து அவர்கள் இறந்துவிடுகிறார்கள்.

புரட்சிக் கவியில், காதலும் வீரமும்

தமிழ்க்கவிஞனான உதாரன், அமுதல்லி அரசனின் மகள் என்றறிந்தும் அஞ்சாது காதல் கொண்டான். தம் காதலை அரசன் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிந்தும் தம் பேச்சால் புரட்சி செய்து மக்களையும் சிந்திக்கவைத்தான் ஒரு மனிதன் தேவைக்கே இந்தத் தேசம் உண்டு என்றால், அத்தேசம் ஒழிதல் நன்றாம் என முழங்கி மன்னராட்சிக்கு முடிவுகட்டி மக்களாட்சி மலரச்செய்து தன காதலிலும் வெற்றிகண்டான்

கொடிமுல்லையில் காதலும் வீரமும்

அரசன் மகள் என்று அறிந்தாலும், அழகன் கொடிமுல்லை மீது காதல் கொண்டான், தன் காதலின் வெளிப்பாடாக அவளை அழகான சிலையாக வடித்துவைத்தான், தன் காதலையும், கலையையும் மதிக்காததால் மன்னனையும் எதிர்த்தான் தன் கலையை அவமதித்த மானவன்மனை உளியால் குத்தி கொலைகாரனாகவும் ஆனான். அழகன் இறந்தான் என தவறாக எண்ணி காதலனுக்காக உயிர்நீத்தாள் கொடிமுல்லை. தன் காதலி இறந்தால் என அறிந்து இந்த சமுதாய அவலங்களை எண்ணி வருந்தி அழகனும் அவளுக்காக உயிர் நீத்தான்.

சூழ்ச்சிகளும் - தண்டனைகளும்

ரோமியோ ஜூலியட்டின் காதலைச் சேர்த்துவைப்பதற்காக துறவி லாரன்சு, ரகசியமாகத் திருமணம் செய்துவைக்கிறார். மேலும் ஜுலியட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்திலிருந்து தப்பிக்கவும் ரோமியோவுடன் அவளைச் சேர்த்துவைக்கவும் மூலிகை மருந்துகொடுத்து இறந்தவள் போல நடிக்குமாறு சூழ்ச்சி செய்கிறார். விதிவசத்தால் இந்த சூழ்ச்சி ரோமியோவுக்குத் தெரியாமல் போய்விடுகிறது. ரோமியோ டைபால்ட்டை கொன்றதால் வெனோரா நகரத்துக்குள் ரோமியோ நுழையக்கூடாது என இளவரசர எஸ்கல்ஸ் தண்டனை வழங்குகிறார்.

இளமை வாய்ந்த அமுதவல்லியும் இளைஞனான உதாரனும் நேரில் சந்திக்கக் கூடாது என்று மன்னன் கருதினான் எனவே, அமுதவல்லி தொழு நோயாளி என்று உதாரனிடம் தெரிவித்தான், உதாரன், குருடன் என்று அமுதவல்லியிடம் தெரிவித்தான். குருடனை நேரில் பார்ப்பது அபசகுனம், எனவே இருவருக்கும் இடையில் ஒரு திரையைக் கட்டித் தொங்க விடுங்கள் என்று தெரிவித்தான், இவர்கள் சந்திக்கக்கூடாது என சூழ்ச்சி செய்தாலும் தமிழால் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் காதல் கொண்டனர். தம் காதலை ஏற்றுக்கொள்ளாத அரசனால் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அமுதவல்லியும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இருவருக்கும் மரணதண்டனை விதிக்கப்படுகிறது.

அழகனைக் காப்பாற்ற பல்லவ நாட்டுப்புலவனான நலம்பாடி முகமுடி அணிந்து மானவன்மனிடமிருந்து முதல் முறை காப்பாற்றுகிறான். தண்டனைக்குள்ளானபோதும் அழகனைக் காப்பாற்ற கருப்பு உடையணிந்து சூழ்ச்சி செய்து அழகன் தப்பிக்க வழிவகை செய்கிறான். மானவன்மனைக் கொன்றதற்காக அழகனைக் கழுவேற்றி கொல்லவேண்டும் என தண்டனை விதித்தான் பல்லவன் மாமல்லன், இருந்தாலும் நலம்பாடி தன நண்பன் அழகனுக்காக சூழ்ச்சி செய்து கருப்பு உடையணிந்து அவளைன் காப்பாற்றி தான் உயிர் துறக்கிறான்

ரோமியோ - உதாரன் - அழகன்

சேக்சுபியர். ரோமியோ என்ற கதாபாத்திரத்தை, தன் காதலுக்காக, நட்புக்காக உயிரையும் விடக்கூடியவனாகப் படைத்துள்ளார். காதல் போயின் சாதல் என்ற கோட்பாட்டின் அடையாளமாக ரோமியோவைக் காண்கிறோம்

பாரதிதாசன், உதாரன் என்ற கதாபாத்திரத்தைத் தன் காதலுக்காக மட்டுமின்றி மன்னாராட்சிக்கு எதிராகவும், மக்களாட்சி மலரக் காரணமாகவும் புரட்சியாளனாகவும் படைத்துள்ளார். காதலால் சாதல் ஏன்? என்ற கேள்வியின் குறியீடாக காதலுக்காக உயிரைவிடுவதை

ஜூலியட் அமுதவல்லி கொடிமுல்லை

திருமணம் நிச்சியிக்கப்பட்டாலும் தனக்குப் பிடித்த காதலனுடன் வாழ ஜுலியட் எடுத்துக்கொண்ட முயற்சிகள் காதலின் ஆழத்தைக் காட்டக்கூடியன. இரகசியத் திருமணம் செய்துகொள்வது, உயிரைத் துச்சமென மதித்து மூலிகை மருந்தை உட்கொள்வது என காதலில் இவளது வீரம் அழகாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.

தன் காதலன் கொலைதண்டனை விதிக்கப்பட்டிருக்கிறான் என அறிந்து அரசனாகவும், தன் தந்தையாகவும் இருந்தாலும் அஞ்சாது அவனுக்காகவும், காதலுக்காகவும் குரல் கொடுத்த அமுதவல்லி பெண்களின் எழுச்சிக்குறியீடாகவே பதிவுசெய்யப்பட்டுள்ளாள். கொடிமுல்லை தன் காதலன் இறந்துவிட்டான் எனத் தவறாக எண்ணி தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு அழகன் மேல் காதல் கொண்டவளாகப் படைக்கபட்டுள்ளாள்,

சேக்கபியர் பாவேந்தர் - வாணிதாசன்

சேக்சுபியர், ரோமியோ ஜூலியட் என்ற படைப்பில் காதலை, காதலால், காதலுக்காக என்று பாடியுள்ளார். இக்காதலுக்கு சமூகநிலை குறித்த கவலை கிடையாது. ரோசலின் மீது காதல்கொண்ட ரோமியோ, ஜூலியட்டைப் பார்த்ததும் காதல் கொண்டது, ஜூலியட்டை விட அழகான ஒரு பெண்ணைக் கண்டால் இவன் அவள் மீது காதல் கொள்ளக்கூடும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. காதலி உயிருடன் இருக்கும்போதே அதை அறியாமல் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் சூழலில் ரோமியோ அவசரக்காரனாகவும் தோன்றுகிறான்.

பாவேந்தரின் புரட்சிக்கவி என்ற படைப்பில் காதலை, தமிழால், தமிழுக்காக, தமிழருக்காக என்ற பாடியுள்ளார். பெயருக்கேற்ப உதாரன் புரட்சியாளனாகவும், சமூக அவலங்களைக் கண்டு பொங்கி எழுபவளாகவும், மன்னாராட்சி ஒழிந்து மக்களாட்சி மலரக் காரணமானாகவும் படைக்கப்ட்பட்டிருக்கிறான. உயிர் துறக்கும் நிலையிலும் தன் காதல் என்ற சுயநலத்தைக் கடந்து பொதுமக்களின் அறியாமையை நீக்கவேண்டும் என்ற பொதுநலத்துடன் போராடுகிறான்.

வாணிதாசனின் கொடிமுல்லை என்ற படைப்பில் காதலை. தமிழால், சமநீதிக்காக என்று பாடியள்ளார். நட்பு, காதல், சமூக ஏற்றத்தாழ்வு என மூன்று நிலைகளில் போராடும் பாத்திரமாக அழகன் பாத்திரம் வடிவமைக்கபட்டுள்ளது. அழகன் இறந்தான் என எண்ணி கொடிமுல்லை உயிர் துறப்பதும், அதை அறிந்து அழகன் உயிர்துறப்பதும் கவிஞர் வாணிதாசனுக்கு ரோமியோ ஜூலியடின் தாக்கம் இருந்தமைக்கான சான்றாகக்கொள்ளலாம்.

நிறைவுரை

காதலில் வீரமும், வீரத்தில் காதலும் நுட்பமான உள்ளீடுகளாக மொழி எல்லைகளைக் கடந்து வில்லியம் சேக்சுபியரின், ரோமியோ ஜூலியட், பாவேந்தர் பாரதிதாசனின் புரட்சிக்கவி, வாணிதாசனின் கொடிமுல்லை ஆகிய படைப்புகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

பாரதிதாசன், வாணிதாசன் இரு கவிஞர்களுக்கும், தமிழ், சமூகம், சாதி, சமயம், மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண் விடுதலை குறித்த சிந்தனைகளில் தம் படைப்பில் ஒரே சிந்தனையுடையவர்களாகக் காணமுடிகிறது.

பாரதிதாசனுக்கு பாரதி மற்றும் பெரியாரின் தாக்கத்தையும், பாரதிதாசனின் மாணவர் என்பதால் வாணிதாசனுக்கு பாரதிதாசனின் தாக்கத்தையும் காணமுடிகிறது பாரதிதாசனுக்குப் பிரஞ்சுப் புரட்சியின் தாக்கமும். வாணிதாசனுக்கு ரோமியோ ஜுலியட்டின் தாக்கமும் இருந்தமை உணரமுடிகிறது. மூன்று படைப்புகளிலும் தலைமை மாந்தர்களின் காதல் பொதுவானதாகவும், அதை அடைய அவர்கள் எடுத்துக்கொண்ட போராட்டங்கள் காலத்தால் அழியாதவையாகவும் விளங்குகின்றன.

ரோமியோ ஜுலியட்டிலும், கொடிமுல்லையிலும் நட்பு குறித்த கருத்துக்கள் காதலோடு நட்பும் சிறப்பாகப் பேசப்படுவதாக உள்ளது.

காதலில் வென்று வாழ்க்கையில் தோற்றவர்கள் என ரோமியோ ஜூலியட்டையும், அழகன் கொடிமுல்லையையும் 'காலம் கொண்டாடினாலும், காதலிலும் வென்று வாழ்க்கையிலும் வென்றவர்கள் என்று உதாரன், அமுதவல்லியைக் காலம் பாராட்டும்.

ரோமியோ ஜூலியட்டின் மரணம் இரு குடும்பங்களின் பகைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைகிறது.

உதாரன், அமுதவல்லியின் காதல் வெற்றி மன்னராட்சிக்கு முற்றுப்புள்ளிவைத்து, மக்களாட்சிக்கு வித்திடுவதாக அமைகிறது

அழகன், கொடிமுல்லையின் மரணம் சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்த கேள்விகளை முன்வைப்பதாக அமைகிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக