கோவிந்தசாமியுடன் உரையாடல் - மகாகவி பாரதியார்
பாரதியார், இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் கவிதைகள் வாயிலாக மக்கள் மனதில் சுதந்திர உணர்வை ஊட்டியவர். இவர் கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், சமூக சீர்திருத்தவாதி, மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத் தன்மைகொண்டவர். .
'எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்' என்று தன்னைச் சித்தனாகவும் அறிமுகம் செய்துகொண்டவர். சி.எஸ்.முருகேசனின் ‘பாரதி கண்ட சித்தர்கள்’ என்ற நூலில் பாரதி கண்ட சித்தர்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்துள்ளார். பாடப்பகுதியில் இடம்பெற்ற கோவிந்த சுவாமியுடன் உரையாடல், பாரதி-அறுபத்தாறில் இடம்பெற்றுள்ளது.
கோவிந்தசாமி என்னும் ஞானியை முன்பே அறிந்திருந்த பாரதி அவர் மறைந்த தம் பெற்றோரின் உருவத்தைக் காட்டியதாலும், அவரின் அன்பாலும் ஞானத்தாலும் அவரைக் குருவென்று சரணடைந்தார். கோவிந்தசாமியால் மரணபயம் நீங்கி வலிமை பெற்றதாகக் குறிப்பிட்ட பாரதிஅந்த கோவிந்த சாமியை மீண்டும் சந்தித்தபோது நடந்த உரையாடலாக இப்பாடப்பகுதி அமைகிறது.
இவ்வுரையாடலின் வழியாக பாரதியார் ஒற்றுமையை எடுத்துரைத்துள்ளார்.
கோவிந்த சுவாமியுடன் உரையாடல்
''மீளவுமங் கொருபகலில் வந்தான் என்றன்
மனையிடத்தே கோவிந்த வீர ஞானி,
ஆளவந்தான் பூமியினை,அவனி வேந்தர்
அனைவருக்கும் மேலானோன்,அன்பு வேந்தன்
நாளைப்பார்த் தொளிர்தருநன் மலரைப்போலே
நம்பிரான் வரவுகண்டு மனம் மலர்ந்தேன்;
வேளையிலே நமதுதொழில் முடித்துக் கொள்வோம்,
வெயிலுள்ள போதினிலே உலர்த்திக் கொள்வோம்.
மீண்டும் அங்கு ஒரு பகலில் கோவிந்தசாமி என்னும் ஞானி
வீட்டருகே வந்தார்.
அவர் இந்த மண்ணை ஆட்சிசெய்ய வந்தவர். உலகை ஆளும்
அரசர்களுக்கெல்லாம் மேலானவர், அன்பானவர்!
சூரியனைப் பார்த்து ஒளி வீசும் மலரைப் போல எம் இறைவன்
வந்ததைக்கண்டு மனம் மலர்ச்சியடைந்தேன்.
விரைவாகவே நமது வேலைகளை முடித்துக்கொள்வோம்.
வெயில் உள்ள போது ஆடைகளையும் உடலையும்
உலர்த்திக்கொள்வது போல ஞானியைக் காணும் போதே மனதை
சீர்செய்துகொள்வோம்.
காற்றுள்ள போதேநாம் தூற்றிக் கொள்வோம்;
கனமான குருவையெதிர் கண்டபோதே
மாற்றான அகந்தையினைத் துடைத்துக் கொள்வோம்;
மலமான மறதியினை மடித்துக் கொள்வோம்;
கூற்றான அரக்கருயிர் முடித்துக் கொள்வோம்;
குலைவான மாயைதனை அடித்துக் கொள்வோம்;
பேற்றாலே குருவந்தான்;இவன்பால் ஞானப்
பேற்றையெல்லாம் பெறுவோம்யாம்''அன்றெனுள்ளே.
காற்றுள்ளபோது தூற்றிக்கொள்வதுபோல ஞானமுள்ள குருவை
எதிர்கொண்டபோதே நம் அகந்தையை நீக்கிக்கொள்வோம்,
மறதி என்னும் கொடிய பண்பை விட்டு விலகுவோம்,
இவை நமக்குக் எமனைப் போன்றவை என்பதை உணர்ந்துகொள்வோம்.
நம்முள் தோன்றும் மயக்கமான மாயையை அடித்துக்கொள்வோம்.
நாம் செய்த தவத்தின் பயனாகக் குரு வந்தார். இவரிடம் ஞானம் யாவும்
பெறுவோம்.
சிந்தித்து ''மெய்ப்பொருளை உணர்த்தாய் ஐயே!
தேய்வென்ற மரணத்தைத் தேய்க்கும் வண்ணம்
வந்தித்து நினைக்கே டேன் கூறாய்''என்றேன்.
வானவனாம் கோவிந்த சாமி சொல்வான்;
''அந்தமிலா மாதேவன் கயிலை வேந்தன்
அரவிந்த சரணங்கள் முடிமேற் கொள்வோம்;
பந்தமில்லை;பந்தமில்லை;பந்தம் இல்லை;
பயமில்லை;பயமில்லை;பயமே இல்லை;
சிந்தித்து மெய்ப்பொருளை உணர்த்துவாய்! என அவரை வணங்கி,
மரணத்தைத் தேய்குமாறு சொல்வாய் என்றேன்.
வானவனாம் கோவிந்தசாமி சொல்வான்..
முடிவில்லாத மாதேவன், கைலாய அரசன் அரவிந்தனின் சரணங்கள்
சொல்வோம்..
உறவு இல்லை! உறவு இல்லை! உறவு இல்லை!
அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமே இல்லை!
''அதுவேநீ யென்பதுமுன் வேத வோத்தாம்;
அதுவென்றால் எதுவெனநான் அறையக் கேளாய்!
அதுவென்றால் முன்னிற்கும் பொருளின் நாமம்;
அவனியிலே பொருளெல்லாம் அதுவாம்;நீயும்
அதுவன்றிப் பிறிதில்லை;ஆத லாலே,
அவனியின்மீ தெதுவரினும் அசைவு றாமல்
மதுவுண்ட மலர்மாலை இராமன் தாளை
மனத்தினிலே நிறுத்தியிங்கு வாழ்வாய் சீடா!
இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான்.
அதனால் அதுவே நீ! அதுதான் வேதம்!
அது என்றால் பொருளின் பெயர்!
உலகில் உள்ள பொருட்கள் எல்லாம் அதுவே!
நீயும் பொருளும் வேறல்ல!
அதனால் உலகில் எது வந்தாலும் மனம் கலங்காதே!
தேன் உண்ட மலர் மாலை அணிந்த இராமன் பாதங்களை மனதில்
நிறுத்தி இங்கு வாழ்வாய் சீடனே..
என்றான் கோவிந்த ஞானி!
'பாரான உடம்பினிலே மயிர்களைப்போல்
பலப்பலவாம் பூண்டு வரும் இயற்கை யாலே;
நேராக மானுடர்தாம் பிறரைக் கொல்ல
நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா;
காரான நிலத்தைப்போய்த் திருத்தவேண்டா;
கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா;
சீரான மழைபெய்யும் தெய்வ முண்டு;
சிவன் செத்தா லன்றிமண்மேல் செழுமை உண்டு.
உடலில் தோன்றும் முடிகளைப் போல மண்ணில் தோன்றும் இயற்கையால்..
மனிதர்கள் சக மனிதர்களைக் கொல்ல நினையாது வாழ்ந்திட்டால்..
மண்ணில் உழுதல் வேண்டாம்!
கால்வாய்களில் தண்ணீர் பாய்ச்சுவதில் சக மனிதருடன் சண்டை வேண்டாம்!
ஒற்றுமையாக வாழ்ந்திட்டாலே இறை அருளால் சீராக மழை பொழியும்!
சிவன் உள்ளவரை மண்ணில் வளம் உண்டு!
''ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்
அனைவருக்கும் உழைப்பின்றி உணவுண் டாகும்!
பேதமிட்டுக் கலகமிட்டு வேலி கட்டிப்
பின்னதற்குக் காவலென்று பேருமிட்டு
நீதமில்லாக் கள்வர்நெறி யாயிற் றப்பா!
நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சி யன்றோ?
பாதமலர் காட்டினினை அன்னை காத்தாள்;
பாரினிலித் தருமம்நீ பகரு வாயே.
அதனால் மனிதர்கள் அடுத்தவர் பொருளைத் திருடுவதை விட்டால்
அனைவருக்கும் உழைப்பின்றி உணவு உண்டாகும்.
அதைவிட்டு சகமனிதர்களுடன் பாகுபாடு காட்டிக் கலகம் செய்து
தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேலிகட்டி
அதற்கு காவல் என்று பெயரிட்டுக்கொள்வதால் என்ன பயன்?
இது நீதி நெறியல்லாத கள்வர் நெறியல்லவா! நினைத்துப்பார்த்தால்
இது எவ்வளவு கொடிய நிகழ்வு!
சக்தியின் பாதமலர்களைப் பணிவாயே..
உலகில் உன்னால் இயன்ற தருமங்கள் செய்தாலே கள்வர் தம் திருடும்
தொழிலை விடுவாரே!
''ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொ டுக்கும்
ஒருமொழியே மலமொழிக்கும் ஒழிக்கும் என்ற
ஒருமொழியைக் கருத்தினிலே நிறுத்தும் வண்ணம்
ஒருமொழி 'ஓம் நமச் சிவாய' வென்பர்;
'ஹரிஹரி'யென் றிடினும் அஃதே;'ராம ராம'
'சிவசிவ'வென்றிட்டாலும் அஃதேயாகும்.
தெரிவுறவே 'ஓம்சக்தி'யென்று மேலோர்
ஜெபம்புரிவ தப்பொருளின் பெயரே யாகும்.
ஒரு மொழியே பல மொழிகளாக அறியப்படும்
ஒரு மொழியே மனித மனங்களின் அழுக்குகளை நீக்கும்!
அந்த ஒரு மொழி! ஓம் நமச்சிவாய என்று சிலர் சொல்லுவார்கள்!
ஹரி ஹரி என்று சிலர் சொல்லுவார்!
ராம ராம என்றாலும், சிவசிவ என்றாலும் அதில் பேதமில்லை!
ஓம் சக்தி என்று சொன்னாலும் அது இறைமொழியே!
''சாரமுள்ள பொருளினைநான் சொல்லிவிட்டேன்;
சஞ்சலங்கள் இனிவேண்டா;சரதந் தெய்வம்;
ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
எப்போதும் அருளைமனத் திசைத்துக் கொள்வாய்;
வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்;
எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்;
பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்.
வேதத்தின் சாராம்சத்தை நான் சொல்லிவிட்டேன்.
இனி எந்தக் குழப்பமும் வேண்டாம். யாவும் தெய்வம்!
அன்பில்லாத நெஞ்சமுள்ளவர்கள் சிவனைக் காணமாட்டார்கள்!
எப்போதும் அருளுடன் வாழ்வாயாக!
வீரமில்லாத நெஞ்சுடையவர்களும் சிவனைக் காணமாட்டார்கள்!
அதனால் எப்போதும் வீரமிக்க செய்லகளையே செய்வாய்!
புகழ்பெற்ற அல்லாவின் வழியைப் பின்பற்றுபவர்களையும்
மதித்தல் வேண்டும்!
''பூமியிலே,கண்டம் ஐந்து,மதங்கள் கோடி!
புத்த மதம்,சமண மதம்,பார்ஸி மார்க்கம்,
சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,
சநாதனமாம் ஹிந்து மதம்,இஸ்லாம்,யூதம்,
நாமமுயர் சீனத்துத் 'தாவு''மர்க்கம்,
நல்ல ''கண் பூசி''மதம் முதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே;
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே.
இந்த மண்ணிலே ஐந்து கண்டங்கள்! கோடி மதங்கள்! அவை,
புத்த மதம், சமண மதம், பார்சி மதம், இயேசு மதம், இந்து மதம்,
இசுலாம் மதம், யூதம், சீனர்கள் பின்பற்றும் தாவு மதம்,
கன்பூசியசின் மதம் முதலாக நாம் அறிந்த மதங்கள் பல உள்ளன.
இவை யாவும் சொல்லும் கருத்து இங்கு ஒன்றுதான்!
''பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்
பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்:
சாமி நீ;சாமி நீ;கடவுள் நீயே;
தத்வமஸி;தத்வமஸி;நீயே அஃதாம்;
பூமியிலே நீகடவு ளில்லை யென்று
புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை;
சாமிநீ அம் மாயை தன்னை நீக்கிச்
சதாகாலம் 'சிவோஹ'மென்று சாதிப் பாயே!''
உலகில் வழங்கும் மதங்களுக்கெல்லாம் பொருளை நான் சொல்வேன் கேளாய்..
சாமி நீ! சாமி நீ!
கடவுள் நீயே! கடவுள் நீயே!
தத்வமஸி - நீயே கடவுள்
(தத் : அது (அப்பரம் பொருள்),
துவம் : நீ(யாக),
அஸி : இருக்கின்றாய்,
அல்லது 'நீ அதுவாக இருக்கின்றாய்' என்றும் சொல்லலாம்)
உலகில் கடவுள் என்று ஏதுமில்லை என்று தோன்றுவது உன் மனதின் மாயைதான்!
நீ கடவுள் அதனால் அந்த மாயையை நீக்கி எப்போதும் சிவோஹம் (சிவம் அகம்) என்று வணங்குவாயே...
மிகவும் அருமையான விளக்கம்.... நன்றி
பதிலளிநீக்குநல்ல விளக்கம் குணா
பதிலளிநீக்குநல்ல விளக்கம்
பதிலளிநீக்கு