பாரியின் பறம்பு நாட்டில், புன்செய் நிலத்தில் வரகு, தினை, எள் போன்ற பொருள்கள் நிறைய விளைந்தன. அந்நாட்டு மக்கள் மிகுந்த அளவில் கள்ளும் ஊனும் உண்டார்கள். இது போன்ற புது வருவாயுடைய வளமான நாடு இனி அழிந்துவிடுமோ என்று எண்ணிக் கபிலர் புலம்புவதாக இப்பாடல் அமைகிறது.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான கருத்துகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.
வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல்
கார்ப் பெயர் கலித்த பெரும் பாட்டு ஈரத்துப்,
பூழி மயங்கப் பல உழுது, வித்திப்
பல்லி ஆடிய பல்கிளைச் செவ்விக்
களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி,
மென் மயிற் புனிற்றுப் பெடை கடுப்ப நீடிக்,
கருந்தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து,
கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து,
வாலிதின் விளைந்த புது வரகு அரியத்
தினை கொய்யக், கவ்வை கறுப்ப, அவரைக்
கொழுங்கொடி விளர்க் காய் கோட்பதம்ஆக,
நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல்
புல் வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து.
நறுநெய்க் கடலை விசைப்பச் சோறு அட்டுப்,
பெருந் தோள் தாலம் பூசல் மேவர,
வருந்தா யாணர்த்து; நந்துங் கொல்லோ:
இரும்பல் கூந்தல் மடந்தையர் தந்தை
ஆடு கழை நரலும் சேட் சிமைப், புலவர்
பாடி யானாப் பண்பிற் பகைவர்
ஓடுகழல் கம்பலை கண்ட
செருவெஞ் சேஎய் பெருவிறல் நாடே!
புறநானூறு - 120
பாடியவர்: கபிலர்
வெப்பம் நிறைந்ததாகவும் வேங்கை மரங்களுடையதுமான சிவந்த
மேட்டு நிலத்தில் கார்காலத்து மழைக்குப் பிறகு மிகுந்த ஈரமான பெரிய
இடத்தில் புழுதி கலக்குமாறு உழவர்கள் பலமுறை உழுது பின்னர்
விதைகளை விதைக்கின்றனர்.
அதன் பிறகு, இடையே முளைக்கும் பல்லிச் செடிகளைக் களைந்து எறிவர்.
பல கிளைகளையுடைய வரகுப் பயிர்களிலிருந்து களைகள்
அடியோடு நீக்கப்பட்டதால் அவை இலைகளுடன் தழைத்துப் பெருகி,
கரிய தண்டுகள் நீண்டு, கருவுற்றிருக்கும் பெண்மயில் போல் உடல்
விரிந்து கதிர் விடும்.
எல்லாக் கதிர்களும் விரிந்து, அடியிலும் மேல் பாகத்திலும்
காய்த்து சீராக விளைந்த புதிய வரகை உழவர்கள் அறுவடை
செய்கின்றனர்.
தினைகளைக் கொய்கின்றனர். எள்ளிளங்காய்கள் முற்றி இருக்கின்றன.
அவரையின் வெண்ணிறக்காய்கள் பறிப்பதற்கு ஏற்ற நிலையில் உள்ளன.
நிலத்தில் புதைக்கப்பட்ட முதிர்ந்த கள்ளை,
புல்லைக் கூரையாகக்கொண்ட குடிசையில் உள்ள மக்கள் அனைவருக்கும்
கொடுக்கின்றனர்.
மணம் வீசும் நெய்யில் கடலையை வறுத்து அதைச் சோறோடு சேர்த்துச்
சமைத்து அனைவருக்கும் மகளிர் உணவளித்துப் பின்னர்
பாத்திரங்களைக் கழுவுகின்றனர்.
கரிய கூந்தலுடைய மகளிரின் தந்தையாகிய பாரி,
அசையும் மூங்கில் ஒலிக்கும் உயர்ந்த மலை உச்சியையுடையவன்.
அவன் புலவரால் பாடப்படும் பெருமையில் குறைவற்றவன்.
பகைவர் புறமுதுகு காட்டி ஓடும் ஆரவாரத்தைக் கேட்டவன்.
அவன் போரை விரும்பிய முருகனைப் போன்ற பெரிய
வெற்றியையுடையவன்.
அவன் நாடு, வருந்தாமல் கிடைக்கும் புது வருவாய் உள்ள நாடு.
அந்நாடு அழிந்துவிடுமோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக