தலைவனும், தலைவியும் சுரத்தின் வழியே செல்வதைக் கண்டவர்கள், இக்கொடிய சுரத்தில் மென்மை பண்புடைய தலைவியை அழைத்துச் செல்லும் இந்த இளைஞன் மனம் இடியைவிடக் கொடியது எனக் கவலைப்பட்டுக் கூறினர்.
தலைவனும், தலைவியும் இரவில் காட்டு வழியில் செல்கின்றனர்.
அவர்களைப் பார்த்தவர்கள் பேசிக்கொள்கின்றனர்.
அவள் மென்மையானவள்.
அவள் முன்னே செல்ல அவன் பின்னே செல்கிறான்.
புயலும் மழையுமாக இருக்கும்போது இடிக்கும் இடியைக் காட்டிலும்
கொடியது தலைவன் இந்த இளைஞன் உள்ளம்.
ஏனென்றால்,
மாலையில் நேரத்தில், குண்டும் குழியுமாக இருக்கும் குன்றத்து வழியே
அழைத்துச் செல்கின்றனான்.
அக்குன்றம் பெரிய குளிர்ச்சியையுடையது.
உலவை என்னும் பேய்க்காற்று வீசுகிறது. ஈந்து தழைத்திருக்கிறது.
இண்டங்கொடி முள்ளுடன் படர்ந்திருக்கிறது.
வழியில் செல்வோர் தலைமேல் புலிக்குட்டிகள் பாய்கின்றன.
அவை இரை தின்ற குருதியோடு கூடிய வாயை உடையவை.
இப்படிப்பட்ட வழியில் செல்லத் துணிந்திருக்கிறானே! இவன் உள்ளம்
கொடிது.
அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,
ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு,
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த
செம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய,
வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை,
மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே;
வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்,
காலொடு பட்ட மாரி
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே!
- பெரும்பதுமனார்.
உடன்போகா நின்றாரை இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது
சொற் பொருள்
ஒலிதல்-தழைத்தல். உலவை-காற்று. நெய்த்தோர்-இரத்தம். வல்லியம் - புலி.
இவர்தல் - படர்ந்தேறுதல். வை-கூர்மை. எல் - இராத்திரி. மிளிர்க்குதல்-புரட்டுதல். ஐயள் - மெல்லியள்