வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 28 பிப்ரவரி, 2022

பெற்ற மனம் பித்து



பெற்றோர் எவ்வளவுதான் பிள்ளைகள் மேல் ஆசை வைத்து, அன்பாக வளர்த்தாலும் சில நேரங்களில் பிள்ளைகள் நன்றியில்லாமல் தனக்குப்பிடித்தவர்களுடன் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். இதைத்தான் பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு என்று நம் முன்னோர் பழமொழியல் சொன்னார்கள் போலும். இந்த அகநானூற்றுப்பாடல் ஒன்றில் அப்படித்தான்,

ஒரு தலைவி தனைக்குப் பிடித்த தலைவனுடன் சென்றுவிட்டாள். பெற்ற மனம் அந்தப்பிரிவைத் தாங்க முடியாமல் தவிக்கிறது. இருந்தாலும் தன் மகள் சென்ற இடம் அவளுக்கு ஏற்றதாக இருக்கவேண்டும். அங்கு வாழ்வோர் அவளுக்கு அன்பு செலுத்தவேண்டும் என எண்ணிக்கொள்கிறாள்..


என் ஆசை நிறைவேறுவதாயின். என் மகள் சென்ற ஊர்...
துளு நாடு போல் வெறுங்கையுடன் சென்ற புதியவர்களைப் பேணும் அறிந்த மக்களை உடையதாக அமையட்டும்.

சோசர் உடம்பெல்லாம் அணிகலன்கள் பூண்டிருப்பர். செம்மைப் பண்பு கொண்டவர்கள். 
துளுநாட்டுக் கோசர் அந்நாட்டுக்குச் சொல்லும் புதியவர்களை அறிந்த மக்கள் போலப் பேணுவர்.
அவர்களுடைய நாட்டில் மயில்கள் மிகுதி. அவை அங்கு விளையும் பாகற்காயை விரும்பி உண்ணும்.

என் வீடு நன்னனின் பாழி நகரம் போலக் கட்டுக்காவல் மிக்கது. அதனை மீறி என் மகள் தன் காதலனுடன் சென்றுவிட்டாள்.
நானும் அவளது தோழியும் புலம்புகிறோம்.
மூங்கில் போல் திரண்ட தோளினை உடைய என் மயில் சென்றுவிட்டாள்.
கரடிகள் பரந்து நடமாடும் குன்றின் வழியே அவள் சென்றுவிட்டாள்.
வழியில்  இலுப்பைப் பூக்கள் கொட்டிக் கிடக்கும்.
(இனிப்புச் சுவை கொண்ட) அந்தப் பூவைக் கரடிகள் விரும்பி உண்ணும்.
மற்றும் கொன்றைப் பழங்களையும் உண்ணும்.
அவை வலிமையான கைகளை உடையவை. கூட்டமாக மேயும்.
அந்த வழியில் அவள் தன் துணைவனொடு செல்லும் கொள்கை உடையவளாகச் சென்றுவிட்டாள்.
அவள் சென்ற புதிய ஊரில் அவளை அறிந்த மக்கள் இருக்கவேண்டும்.
இதுதான் என் ஆசை என்கிறாள் நற்றாய்.

எம் வெங் காமம் இயைவது ஆயின்,
மெய்ம் மலி பெரும் பூண், செம்மற் கோசர்
கொம்மைஅம் பசுங் காய்க் குடுமி விளைந்த
பாகல் ஆர்கைப் பறைக் கட் பீலித்
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன,
வறுங் கை வம்பலர்த் தாங்கும் பண்பின்
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்,
அறிந்த மாக்கட்டு ஆகுகதில்ல
தோழிமாரும் யானும் புலம்ப,
சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன்
பாழி அன்ன கடியுடை வியல் நகர்ச்
செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி,
அத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத்
துய்த்த வாய, துகள் நிலம் பரக்க,
கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி,
வன் கை எண்கின் வய நிரை பரக்கும்
இன் துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்கு
குன்ற வேயின் திரண்ட என்
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே!

அகநானூறு - மாமூலனார்  - பாடல் 15 
துறை - மகள் போக்கிய தாய்  சொல்லியது.
களவொழுக்கத்தில் (களவு - காதல்) சிக்கல் மிகுந்ததால் தம் உறவினர் அறியாமல் தலைவனுடன் சேர்ந்து தலைவி
இரவில் சென்றுவிட்டாள். அதை அறிந்த நற்றாய் வருந்தி உரைக்கிறாள்.