சொல்வதுண்டு. அத்தகு திருவள்ளுவர் மீது பாரதிக்குத் தாக்கம்
ஏற்பட்டதில் வியப்பில்லை.
"கடவுள் மனிதனுக்குச் சொன்னது - பகவத் கீதை
மனிதன் கடவுளுக்குச் சொன்னது - திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது - திருக்குறள் "
என்று திருக்குறளின் பெருமை பேசுவோம்.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே -- அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே -- அவர்
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து
சிறந்தது மிந்நாடே என
தமிழரின் சிந்தனை மரபைப் போற்றியவர் பாரதி.
இன்றைய கல்விநிலையங்கள் பெரிதும் மதிப்பெண் எடுக்கவும்,
மனப்பாடம் செய்யவும் கற்றுத்தருகின்றன.
இன்று நாம் சிந்திக்கவுள்ள வள்ளுவரும் பாரதியும் வாழ்ந்த
காலத்தை எண்ணிப்பார்ப்போம்..
வள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்
பாரதி கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்
வள்ளுவரைப் போல பாரதியையும் இன்று உலகம் கொண்டாடுகிறது.
இருவரின் சிந்தனைகளையும் உள்வாங்க நம் வாழ்நாள் போதாது.
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு. என்பார் வள்ளுவர்
நல்ல நூலிலும், நல்ல நண்பர்களிடமும் நாளும் பல கற்கலாம்
இருவரும் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் புதிய புதிய சிந்தனைகளைத்
தருவதால் இவர்களது எழுத்துகளை மீண்டும் மீண்டும் வாசிக்கிறோம்
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. என்ற வள்ளுவரின் குறளுக்குச்
சான்றாய் தோன்றியவர் பாரதியார் ஆவார்.
வள்ளுவர் வழியில் பாரதியின் சிந்தனைப் பார்ப்போம்.
அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு -1
ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக் கணஞ் செய்து கொடுத்தான்
என்று பாடினார் பாரதி. வள்ளுவர் சொன்ன ஆதி பகவனை ஆதிசிவன் என்றும் அகத்தியனை ஆரிய மைந்தன் எனவும் எடுத்துரைத்தார் பாரதி.
பாரதி 23 வயதில், (26.08.1905 தேதியிட்ட ‘சுதேசமித்திரன்’ இதழில்.. )
1905 ஆகஸ்ட் 23-ல் சென்னை ராஜதானி கலாசாலை (மாநிலக் கல்லூரி)
மாணவர் தமிழ்ச் சங்கத்தில் அக்கல்லூரியின் மாணவர்
குருசாமியின் சொற்பொழிவு நடந்தது.
‘திருவள்ளுவரின் பெருமை’ என்னும் தலைப்பில் அம்மாணவர்
கட்டுரை எழுதி வழங்கினார்.
அந்நிகழ்ச்சிக்கு பாரதி தலைமை வகித்து, விரிவாகத்
தலைமையுரையை ஆற்றினார்.
அப்போது, உ.வே.சாமிநாத அய்யர் இத்தமிழ்ச்சங்கத்தின் தலைவராக
விளங்கினார்.
‘திருவள்ளுவர் பெரிய மகான்; திருக்குறளின் பல இடங்களில்
கவித்திறன் நிரம்பியிருக்கிறது;
ஆனால், அது நீதி நூல்; காவியமோ, நாடகமோ அல்ல; எனவே,
வள்ளுவரை மகாகவி என்று சொல்ல முடியாது’
என்பது பாரதியின் கருத்து.
திருவள்ளுவரைக் குறித்த அந்தச் சொற்பொழிவு நிகழ்ச்சிக்குக்
குறைவான எண்ணிக்கையிலேயே
பார்வையாளர்கள் வந்திருந்தனர். அதையும் தனது பேச்சில்
குறிப்பிட்டார் பாரதி.
‘மேல்நாட்டில் ஓரூரில் ‘ஷெல்லியின் பெருமை’யைப் பற்றி ஒரு
வியாசம் நடக்கப் போகிறதென்றால்
நூற்றுக்கணக்கான ஜனங்கள் தானே வருவார்கள். ‘திருவள்ளுவரின்
பெருமை’ என்ற இவ்வரிய பெரிய விஷயத்தை ஆராய நமது
சங்கத்தில் எத்தனை குறைந்த தொகையான ஜனங்கள்
வந்திருக்கின்றனர் பார்த்தீர்களா?’ என மேல்நாட்டின் நிலையையும்
நம் நாட்டின் நிலையையும் ஒப்பிட்டுக் காட்டினார்.
---------------------------------
1905-ம் ஆண்டு வள்ளுவரை மகாகவியாகக் கொள்ளத் தயக்கம்
காட்டிய பாரதி,
1916-ம் ஆண்டு, கம்பன், இளங்கோ, திருவள்ளுவர்
முதலிய மஹாகவிகளுக்கு ஞாபகச் சிலைகளும்,
வருஷோற்சவங்களும் ஏற்பாடு செய்ய வேண்டும்”
எனக் கம்பனையும் இளங்கோவையும்போல வள்ளுவரையும்
மகாகவி எனப் போற்றி எழுதினார்.
இடைக்காலத்தில் வள்ளுவரை, (1910) தெய்வ வள்ளுவன் வான் மறை
செய்ததும் எனப் போற்றிய பாரதி,
பிந்தைய காலங்களில் வள்ளுவர் குறித்த கருத்து வளர்ச்சியில்,
(1919) வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட
தமிழ்நாடு’எனவும்
(1919)‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர்போல்,
இளங்கோவைப் போல் பூமிதனில்
யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை’
எனவும் பாடிப் போற்றினார்.
முதலில் வள்ளுவரை மகாகவியாகக் கொள்ளாத பாரதி
பிற்காலங்களில் மகாகவியாகக் கொண்டாடிய நிலை,
திருக்குறளைத் தொடர்ந்து ஆழ்ந்து பயின்று சிந்தித்துப் பெற்ற
அவரது கருத்து வளர்ச்சியைக் காட்டுகிறது.
---------------------------------
இனி திருக்குறளின் தாக்கம் பாரதி சிந்தனைகளில் எவ்வாறெல்லாம்
வெளிப்படுகிறது என்று காண்போம்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். -1033 (வள்ளுவர்)
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம். (பாரதி)
சுழன்றும் ஏர் பின்னது உலகம் என்றார் வள்ளுவர்
இன்று உலகம் கணினியின் பின்னே சுழல்கிறது
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல். 637 (வள்ளுவர்)
செயற்கையை அறிந்தாலும் இயற்கையுடன் ஒத்திரு
இன்று செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence), தோற்ற மெய்ம்மை
(Virtual reality, இணைப்பு நிஜமாக்கம் (Augmented Reality)
என நாளொரு நுட்பம் வந்துகொண்டே இருக்கிறது.
இருந்தாலும் கணினி நம் அறிவு வளர்ச்சிக்குத் தேவை, உழவு நாம்
உயிர்வாழத்தேவை. இதை வள்ளுவரும் பாரதியும் அழகாகச்
சொல்லியிருக்கிறார்கள்.
---------------------------------
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். 972 (வள்ளுவர்)
எவ்வுயிர்க்கும் பிறப்பு பொதுவானது, செயலே பெருமை தருகிறது
சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் (பாரதி)
ஒரு காலத்தில் உடல் குறைபாடுள்ளவர்களை வெவ்வேறு
பெயர்களால் அழைத்தோம்.
இன்று மாற்றுத் திறனாளிகள் என்றும் மாற்றும் திறனாளிகள் எனவும்
அழைக்கிறோம்.
சிந்திப்போம். குடிப்பிறப்பும், தோல் நிறமும் வெற்றிக்குத்
தடையல்லல என்பதை உணர்வோம்..
---------------------------------
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். 1062 (வள்ளுவர்)
பிச்சைக்காரர் வாழும் நாட்டைப் படைத்தவன், கெட்டு ஒழியட்டும்
தனியொருவனுக்கு உணவு இல்லையெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம் (பாரதி)
வள்ளுவரின் கோபம் உலகத்தைப் படைத்தவன் மீது
பாரதியின் கோபம் இவ்வுலகில் வாழும் சக மக்களின் மீது..
இருவரும் இன்று இல்லை என்றாலும் பசி இன்னும் இருக்கிறது.
இரவலர்கள் இன்னும் இருக்கிறது அதனால் இவர்களின் சிந்தனையும்
என்றும் இருக்கும்.
பகுத்துஉண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322 (வள்ளுவர்)
என்ற வள்ளுவரின் சிந்தனையை உள்வாங்கிப் பகுத்துண்டு வாழ்வோம்.
---------------------------------
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின். 280 (வள்ளுவர்)
தோற்றத்தைவிட பற்றற்று வாழ்வதே உயர்ந்தது
காவித் துணிவேண்டா,கற்றைச் சடை வேண்டா;
பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே. (பாரதி)
வள்ளுரும் பாரதியும் நம்முள் சென்றால் போலியான துறவிகள்
நம்மைவிட்டுச் சென்றுவிடுவார்கள்
---------------------------------
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம். 239 (வள்ளுவர்)
புகழின்றி மறைந்தவரைத் தாங்கும் நிலம்கூட வளம் குன்றும்
நல்லதேர் வீணை செய்தே அதை
நலம்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ.. (பாரதி)
பிறப்பு பதில் சொல்லமுடியாத கேள்வி
இறப்பு கேள்வி கேட்க முடியா பதில் என்று சொல்வதுண்டு
நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. 336 (வள்ளுவர்)
நேற்றிருந்தவர் இன்றில்லை என்ற நிலையாமையே பெருமை
நிலச் சுமையென வாழாமல் மாநிலம் பயனுற வாழ்வோம்..
---------------------------------
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். 666 (வள்ளுவர்)
மனவுறுதி இருந்தால் நினைத்தது நிறைவேறும்
எண்ணிய முடிதல் வேண்டும் (பாரதி)
எண்ணங்களின் வலிமையை உணர்வோம்.
---------------------------------
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். 428 (வள்ளுவர்)
அஞ்ச வேண்டிவற்றுக்கு அஞ்சுதல் அறிவுடையோர் செயல்
அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே (பாரதி)
வள்ளுவர் அஞ்சவேண்டியவற்றுக்கு அஞ்சவேண்டும் என்கிறார்
பாரதி அஞ்சுவோரின் இழிவையும் அஞ்சாமையின் உயர்வையும்
பேசுகிறார்.
---------------------------------
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. 596 (வள்ளுவர்)
கிடைக்காவிட்டாலும் உயர்வாக எண்ணுவதே என்றும் உயர்வு
புதிய ஆத்திச்சூடியில், எண்ணுவது உயர்வு என்கிறார் பாரதி
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. 391 (வள்ளுவர்)
கல், கசடறக் கல், கற்பவை கல், கற்றபின் நில், சூழல்களுக்குத் தக
இதையே பாரதி கற்றது ஒழுகு என்கிறார்.
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. 339 (வள்ளுவர்)
சாவதற்கு அஞ்சேல் என்கிறார் பாரதி
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. 467 (வள்ளுவர்)
சிந்தித்து செயல்படு, செயல்பட்ட பிறகு சிந்திப்பது இகழ்ச்சி
செய்வது துணிந்து செய் என்கிறார். (பாரதி)
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. 645 (வள்ளுவர்)
சொல்வது தெளிந்து சொல் (பாரதி)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். 26 (வள்ளுவர்)
பெரிதினும் பெரிது கேள் (பாரதி)
என வள்ளுவரின் தாக்கத்தைப் புதிய ஆத்திச்சூடியில் பாரதியிடம் காணமுடிகிறது.
---------------------------------
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு 247 (வள்ளுவர்)
பொருளிலார்க்கில்லை இவ்வுல கென்ற நம் புலவர்
தம்மொழி பொய்யில்லை யன்று காண்
பொருளிலார்க்கு இனமில்லை துணையில்லை (பாரதி)
என பாரதி வள்ளுவரின் குறளை அப்படியே எடுத்தாள்கிறார்.
பாரதி தன் வாழ்வில் சந்தித்த வறுமையையும், அவரது கவிதைகளைப் பதிப்பிக்க அவர் எடுத்த முயற்சிகளையும் நாம் அறிவோம்.
மனதி லுறுதி வேண்டும்.
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்
என்ற பாரதியின் பல கனவுகள் இன்று மெய்பட்டிருக்கின்றன.
---------------------------------
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு - 426 (வள்ளுவர்)
உயர்ந்தோர் வாழும் வழியில் வாழ்வதே அறிவு
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை (பாரதி)
என பாரதி, தமிழ் மொழியின் காலத்திற்கேற்ற தேவையை எடுத்துரைக்கிறார்.
---------------------------------
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர். 410 (வள்ளுவர்)
கல்லாதவரும் விலங்குகளும் ஒன்றாகவே கருதப்படுவர்
ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர்
மானமற்று விலங்குகள் ஒப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வெனலாமோ? (பாரதி)
---------------------------------
குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். 66 (வள்ளுவர்)
குழலையம் யாழையும் விட தம் மக்களின் மழலைச் சொல் இனிது என்கிறார் வள்ளுவர்
சொல்லும் மழலையிலே - கண்ணம்மா
துன்பங்கள் தீர்த்திடுவாய்:
முல்லை சிரிப்பாலே - எனது
மூர்க்கம் தவிர்த்திடு வாய்.
என மழலை மொழியைப் பாடுகிறார் பாரதி
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். 69 (வள்ளுவர்)
தன் மகன் சான்றோன் என்ற போதே தாய் பெரிதும் மகிழ்வாள்
மெச்சி உன்னை ஊரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்கு தடி!
என்கிறார் பாரதி
---------------------------------
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். 969 (வள்ளுவர்)
முடிஉதிர்ந்தால் மானும், மானம் இழந்தால் நல்லோரும் உயிர் நீ்ப்பர்
பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும்
பெற்றியை அறிந்தாரேல் -- மானம்
துறந்தறம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது
சுகமென்று மதிப்பாரோ?
என பாரதி உயிரைவிட மானம் பெரிதென்று பாடுகிறார். (பாரதி)
---------------------------------
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்- 314(வள்ளுவர்)
இன்னா செய்தாருக்கும் அவர் நாண இனிய செய், அவர் செய்த தீமையையும் நீ செய்த நன்மையையும் மறந்து விடு
இதையே பாரதி,
பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்!
என்கிறார்.
---------------------------------
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. 68 (வள்ளுவர்)
தம்மைவிட அறிவுக்குழந்தைகளைப் பெறுதல் உலகிற்கே இனிது
என்று பாடிய வள்ளுவரின் சிந்தனையையும்,
சுடர் மிகும் அறிவுடன் தம் கவிதைகளைத் தந்த மகாகவி பாரதியின் சிந்தனைகளையும் உணர்வோம்.
அடுத்த தலைமுறைக்கும் உணர்த்துவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக