வள்ளுவர் காட்டும் தலைவி சொல்வதாக,
செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை (குறள் – 1151)
என்றொரு திருக்குறள் உண்டு. செல்லாவிட்டால் என்னிடம் சொல். நீ என்னைப் பிரிந்துசெல்வதென்றால் உனது வருகையை, உயிருடன் இருப்பவர்களிடம் சொல் என்கிறாள் இத்தலைவி.
இன்று பிரிவு இவ்வளவு பெரிதாகப் பார்க்கபடுவதில்லை. தொலைத் தொடர்பு வளர்சியும், போக்குவரத்து வசதிகளும் தூரத்தையும், நேரத்தையும் சுருக்கிவிட்டன.
அன்று தூரத்திலிருந்தாலும் நினைவுகளால் ஒன்றாக இருந்தனர்.
இன்று அருகிலிருந்தாலும் சமூகத்தளப் பயன்பாடுகளால் பிரிந்து வாழ்கிறோம்.
பிரிவு என்பது ஒருவர் உயிர்விடும் அளவுக்கு சொல்லப்படுவது அன்பின் ஆழத்தைக் காட்டவே ஆகும்.
தலைவன் தன்னைப் பிரிந்துசெல்லப் போகிறான் என்பதை உணர்ந்த தலைவி வருந்தினாள். அவளுக்கு தோழி ஆறுதல் சொல்வதாக இப்பாடல் அமைகிறது.
பாலை
நீர்வார் கண்ணை நீ இவண் ஒழிய,
யாரோ பிரிகிற்பவரே?-சாரல்
சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராஅத்து
வேனில் அம் சினை கமழும்
தேம் ஊர் ஒண்ணுதல்! நின்னொடும், செலவே.
குறுந்தொகை 22
சேரமான் எந்தை
செலவுக் குறிப்பறிந்து ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.
தலைவனின் பிரிவை எண்ணி கண்ணீருடன் காட்சியளிக்கும் தலைவியைப் பார்த்து தோழி,
கண்களில் நீர் ததும்ப நீ இங்கு தங்கியிருக்க,
உன்னைப் பிரிந்துசெல்லும் ஆற்றல் உடையவர் யார்?
மலைப்பகம் தனக்கு அழகாகக் கொண்ட, வலமாக சுரிந்து விளங்கும் கடம்ப மலர்கள் வேனிற் காலத்தில் மலர்ந்து மணம் வீசும்,
அம்மலரின் மணம் கமழும், ஒளி பொருந்திய நெற்றியை உடையவளே, வருந்தாதே!
தலைவன் உன்னைப் பிரிந்து செல்லமாட்டான், சென்றால் உன்னோடுதான் செல்வான் என்று உரைக்கிறாள்.
சொற்பொருள் விளக்கம்
தேம் - வண்டு, தேன்
செலவு - பிரிவு
ஒண்ணுதல் - ஒளி வீசும் நெற்றி
தொடர்புடைய இடுகை
அருமை.... எளிய உரை...🙂👌🙏
பதிலளிநீக்கு