பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

புதன், 14 ஜூலை, 2021

நெஞ்சே நெஞ்சே - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 19

குறுந்தொகை 19

ஆண், பெண் இருவரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் 

போன்றவர்கள். நாணயத்தின் ஒரு பக்கத்துக்கு இன்னொரு பக்கம் 

தெரியாது.

அதுபோல இருவரின் எண்ணங்களும், எதிர்பார்ப்புகளும், 

எதார்த்தங்களும் வேறுபட்டிருப்பது இயல்பே. இந்த வேறுபாட்டை 

ஊடல் என்று இலக்கியங்கள் உரைக்கின்றன.

தலைவியின் ஊடலைத் தீர்க்க  பேசிய வார்த்தைகள்  பயனின்றிப் 

போனதால் தலைவன் தன் நெஞ்சோடு பேசுவதாக இப்பாடல் 

அமைகிறது.

எவ்வி என்னும் அரசன் பாணர்களுக்குப் பாதுகாப்பாய்க் கொடை 

வழங்கிவந்தான், 

பொற்பூ வழங்குவதை வழக்கமாகக் கொண்டவன் எவ்வி,

அவனது மறைவுக்குப் பின் பாணர்கள் தம் திறமையை மதிக்கும் 

வள்ளல் இன்றி வருந்தினர். 

பூ அணியாத அந்தப் பாணர்களின் தலைகளைப் போல நெஞ்சே, 

நீயும்  உடல் மெலிந்து, உள்ளம் தளர்ந்து வருந்துக என 

எண்ணிக்கொள்கிறான்.

மருதம்

எவ்வி இழந்த வறுமையர் பாணர்

பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று

இனைமதி வாழியர்-நெஞ்சே!-மனை மரத்து

எல்லுறும் மௌவல் நாறும்

பல் இருங் கூந்தல் யாரளோ நமக்கே?

குறுந்தொகை 19 

பரணர் 

துறை - உணர்வு வயின் வாரா ஊடற்கண், தலைமகன் சொல்லியது

தலைவியை அடையமுடியாத தலைவன் தன் நெஞ்சோடு 

பேசுகிறான்.

எவ்வி இறந்த பின்னர் அவனை இழந்த பாணர் தலையில் பூ 

வைத்துக்கொள்ளாமல் வெறுந்தலையை முடித்துக்கொண்டனர்.

நெஞ்சே! நீயும் அவர்களின் வறுமையுற்ற தலை போலத் 

துன்புறுவாயாக.

வீட்டில் வளரும் மௌவல் மலரைப் பலவாகத் திரண்டு கருநிறம் 

கொண்டுள்ள தன் கூந்தலில் சூடிக்கொண்டுள்ள அவள் நமக்கு யார் 

என்னும் நிலைமை உருவாகிவிட்டதே!

தலைவியைப் பெறாமைக்கு எவ்வியின் இழப்பையும் அதனால் 

வருந்தும் பாணர் நிலைக்குத் தன் நெஞ்சின் நிலையையும் 

உவமித்தான்


சொற்பொருள் விளக்கம்

மௌவல் - முல்லை

இனைமதி - வருந்துவாயாக


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக