வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 13 ஜூலை, 2021

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 18

Kurunthogai 18


குறுந்தொகையில் உவமையால் புகழ் பெற்ற பாடல்கள் பல. 

அப்பாடல்களுள் இப்பாடல் குறிப்பிடத்தக்கது. 

பெரிய பலாப் பழத்தைச் சிறிய காம்பு தாங்கி நிற்கும், 

அதுபோல தலைவியின் பெரிய காமத்தை அவளுடைய சிறிய உயிர் 

தாங்கி நிற்கிறது 

என்ற உவமை காலத்தைக் கடந்து மக்கள் உள்ளங்களைக் 

கவர்ந்துள்ளது.

இரவில் வந்து தலைவியைச் சந்தித்துச் செல்லும் தலைவனுக்குத் 

“தலைவியினது காமம் அவளால் தாங்கற்கு அரியதாதலின் விரைவில் 

அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று 

உரைக்கிறாள்.

குறிஞ்சி

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்

சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!

யார் அஃது அறிந்திசி னோரே சாரல்

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு இவள்

உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.

குறுந்தொகை - 18

பாடியவர் - கபிலர் 

இரவுக்குறி வந்து மீளும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு வரைவுகடாயது


மூங்கிலை வேலியாக உடைய, வேரில் பழக்குலைகளை உடைய பலா 

மரங்கள் செறிந்த பக்கத்தை உடைய மலை நாடனே! 

பக்க மலையில் பலாமரத்தின் சிறிய கொம்பில் பெரிய பழம் 

தொங்கியது போல இத்தலைவியினது உயிரானது மிகச் சிறியது

இவளது காமநோய் மிகப் பெரிது அவள் நிலையை அறிந்தவர் 

உன்னையன்றி வேறு யார் உள்ளார்?

அவளைத் திருமணம் செய்து அவள் துன்பத்தை நீங்குவாயாக எனத் 

தோழி தலைவனிடம் சொல்கிறாள்.

இப்பாடலில் இரண்டு வகையான பலா மரங்கள் இடம்பெறுகின்றன. 

ஒன்று வேர்ப் பலா இதில் பழுக்கும் பழங்களைத் தரை 

தாங்கிக்கொள்ளும். 

இரண்டாவது பலா கொம்பில் பழுப்பது. அதற்கு சிறிய காம்புதான் 

இருக்கும் பழத்தின் எடை அதிகமாகும்போது எப்போது 

வேண்டுமானாலும் கீழே வீழும். அதனால் அதனை சரியாக 

காலத்தில் நுகர்வோர் பறித்துக்கொள்வர். 

இந்த உவமையே உள்ளுறையாக அமைகிறது. 

கொம்பில் பழுத்த பலா போன்றது தலைவியின் காதல். அவளது 

உயிரானது அவளது காமத்தை நோக்கினால் மிகச் சிறிது அதனால் நீ 

அவளை மணந்து கொள்ளவேண்டும் என்கிறாள் தோழி

இப்பாடலில் முதற் பொருளாக மலைப்பக்கமும்

கருப்பொருளாக பலாவும் மூங்கிலும்

உரிப்பொருளாக தலைவன் தலைவியின் புணர்தலும்  

குறிப்பிடப்படுகிறது.

சொற்பொருள் விளக்கம்

இரவுக்குறி - தலைவன் தலைவியை இரவில் சந்தித்தல்

வரைவு கடாயது - திருமணம் செய்துகொள்ள அறிவுறுத்தல்

வேரல் - சிறு மூங்கில்

வேலி - முள்வேலி

சாரல் - பக்க மலை

கோடு - கொம்பு

செவ்வி - தலைவியை மணந்துகொள்ளும் காலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக