வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 12 ஜூலை, 2021

மா என மடலும் ஊர்ப - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 17

மடலூர்தல் என்பது சங்க அகப்பாடல்களில் குறிப்பிடப்படும் ஒரு மரபாகும். தலைவன் தன் காதல் கைகூடாதபோது மடலூர்ந்தாவது காதலைப் பெறுவான்.

மடலூர்தல் நாணத்தக்க செயல் என்பதால் பலரும் செய்யத் தயங்குவர். இருந்தாலும் மடலூர்ந்து வந்துவிட்டால் தலைவனின் காதலை அறிந்து அவன் விரும்பிய பெண்ணை மணம்முடித்துக்கொடுப்பதும் உண்டு. 

இப்பாடலில்,

தலைவன் தலைவியை அடைய உதவுமாறு அவளது தோழியிடம் வேண்டுகிறான். 

தோழி உதவ மறுக்கிறாள். 

தலைவன் தோழியிடம் காமம் மிக்கவர்கள் மடலேறுவார்கள்; வரைபாய்தல் முதலியவற்றையும் செய்யத் துணிவார்கள் என்று தான் மடலேற எண்ணியிருத்தலை உலகின்மேல் வைத்துக் கூறுகிறான்.

தலைவன் இவ்வாறு தோழியிடம் கூறி, தலைவியைச் சேர்த்துவைக்குமாறு வேண்டுகிறாள்.

குறிஞ்சி

மா என மடலும் ஊர்ப; பூ எனக்

குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப

மறுகின் ஆர்க்கவும் படுப;

பிறிதும் ஆகுப-காமம் காழ்க்கொளினே.

குறுந்தொகை - 17

பேரெயின்முறுவலார்

தோழியிற் கூட்டம் வேண்டிப் பின் நின்ற தலைமகன், தோழி குறைமறாமல் கூறியது.


காம நோயானது முதிர்வுற்றால் பனை மடலையும் குதிரை எனக் கொண்டு ஆண்கள் அதனை ஊர்வர்; 

குவிந்த அரும்பை உடைய எருக்கம் பூ மாலையையும் அடையாள மாலையைப் போல தலையில் அணிந்து கொள்வர்

வீதியில் பிறர் தம்மைக் கண்டு ஆரவாரிக்கவும் படுவர்

தம் காதல் நிறைவேறாவிட்டால் சாதலுக்குரிய வரைபாய்தல் முதலிய வேறு செயலும் செய்வர்.

சொற்பொருள் விளக்கம்

 மா - குதிரை

மடல் - பனைமடலால் செய்யப்பட்ட குதிரை

பிறிது - வேறு, சாதலுக்குரிய

காழ் - விதை


தொடர்புடைய இடுகை


மடலின் படிநிலைகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக