பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வெள்ளி, 9 ஜூலை, 2021

நல்லோள் கணவன் இவன் - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 14

குறுந்தொகை 14

சங்ககாலத்தில் தலைவன் தன் காதலை வெளிப்படுத்தும் வழிகளில் 

மடலேறுதலும் ஒரு வழியாகும். 

தலைவியைச் சந்திப்பதில் தோழியால் ஏற்பட்ட தடையை உணர்ந்த தலைவன் நான் தலைவியை எப்படியும் பெறுவேன்,

மடலூர்ந்தும் பெறுவேன் அது நாணத்தக்க செயல்தான் இருந்தாலும் அவளைப் பெறுவதற்காக அதையும் செய்வேன் என்று உரைப்பதாக இப்பாடல் அமைகிறது.

தலைவன் தன் உருவத்தையும், தலைவியின் உருவத்தையும் ஓவியமாக வரைந்து கையிலேந்தி குதிரைபோல பனங்கறுக்குகளில் செய்த ஊர்தியில் செல்வான். அதைக் கண்டு ஊரார் சிரிப்பார்கள். இவனை இந்த நிலைக்குக் கொண்டு வந்த நல்லோள் இவள் என ஊரார் பழிப்பார்கள். அந்த  நாணமும் பெற்றோர் அவளை மணம் முடித்துக்  கொடுப்பதால் சிறிது காலமே நிலைக்கும் என்கிறான் தலைவன்.

நல்லோள் என்பது இகழ்ச்சிக் குறிப்பாக அமைகிறது.

இவளைப் பெற இவன் என்னவெல்லாம் செய்தான்! என்று ஊரே பேசுவதாகவும் அதைக் கேட்டுத் தலைமக்கள் வெட்கப்படுவதாகவும். தலைவன் தோழியிடம் தன் காதலின் ஆழத்தைச் சொல்கிறான்.


குறிஞ்சி

அமிழ்து பொதி செந்நா அஞ்ச வந்த

வார்ந்து இலங்கு வை எயிற்றுச் சில் மொழி அரிவையைப்

பெறுகதில் அம்ம, யானே! பெற்றாங்கு

அறிகதில் அம்ம, இவ் ஊரே! மறுகில்,

''நல்லோள் கணவன் இவன்'' எனப்

பல்லோர் கூற, யாஅம் நாணுகம் சிறிதே.

குறுந்தொகை - 14

பாடியவர் - தொல்கபிலர்

மடன்மா கூறும் இடனுாமருண்டே என்பதால் தோழி  குறை மறுத்துழி, தலைமகன் மடலேறுவல் என்பது பட சொல்லியது



அவன் தன் பாங்கனிடம் கூறுகிறான்.

அமிழ்தம் பொதிந்த நாக்கு.வரிசையாக ஒளிரும் கூர்மையான பற்கள். 

நாக்கை அஞ்சவைக்கும் பற்கள்.இரண்டும் உள்ள வாயிலிருந்து வரும் சிறுசிறு சொற்கள்.

இத்தனையும் கொண்டவள் அந்த அரிவை.

நான் மடன்மா ஏறுதலாற் பெறுவேனாக; பெற்றபின்பு இந்த ஊரில் உள்ளார் அறிவாராக; 

பலர் வீதியில் இந்த நல்லாளுடைய தலைவன் இவன் என்று சொல்ல அதைக் கேட்டு நாம் சிறிது நாணுவேம்!


சொற்பொருள் விளக்கம்


அமிழ்து - அமுதம்

செந்நா - சிவந்த நாக்கு

இலங்கு - ஒளிவீசும்

எயிறு - பல்

சில் மொழி - சில சொற்கள்

அரிவை - அரிவைப் பருவப் பெண்

மறுகு - தெரு

நாண் - வெட்கம்


தொடர்புடைய இடுகை


மடலின் படிநிலைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக