தலைவனைக் குறை கூறினாள். தலைவன் சென்ற கொடிய வழியை எண்ணி வருந்தாமல் குறைகூறும் தோழி மீது கோபம் கொண்டாள் தலைவி,
தன் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல் பேசும் தோழியை ஊரார் என்று சுட்டி, ஊர் பேசுகிறதே என்று தலைவி வருந்திக் கூறும் சொற்கள் இவை.
பாலை - தலைவி கூற்று
எறும்பி அளையின் குறும் பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறி,
கொடு வில் எயினர், பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப, அவர் தேர் சென்ற ஆறே;
அது மற்று அவலம் கொள்ளாது,
நொதுமல் கழறும், இவ் அழுங்கல் ஊரே.
குறுந்தொகை 12
ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
ஓதலாந்தையார் பாடல்
திணை - பாலை
அவன் இவள் வருந்தும்படி கொடுமை செய்துவிட்டானே என்று ஊர்
பொறுப்பில்லாமல் பேசுகிறது.
அவர் சென்றுள்ள வழியில் உள்ள கொடுமையை எண்ணிப்
பார்க்கவில்லை. எறும்புப் புற்று போல் பாறைகள்,
அப்பாறைகள் கொல்லனின் உலைக்கூடத்தில் உள்ள இரும்பு
அடிக்கும் கல்லைப் போன்ற சூடானவை.
கொடிய வில் ஏந்திய வேட்டுவர்கள் அப்பாறையின் மீது ஏறித் தங்கள்
அம்புகளைக் கூர்மையாக்கிக்கொள்வர்..
பிறகு, வழிப்போக்கர்களைக் கொல்வதற்காக காத்து நிற்பார்கள்
அந்த வழியில் தலைவன் பொருள் தேடச் சென்ற தேர் சென்றது என்று
சொல்கின்றனர்.
அவர் சென்ற வழியை எண்ணி என்னைப் போல வருந்தாமல்,
இந்த ஆரவாரத்தைக் கொண்ட ஊரார் என்னை அயலாகக் கருதி
இடித்துரைக்கும்.
இங்கு ஊரார் என்று தலைவி சுட்டுவது தோழியையே. தோழி தலைவன் சென்ற வழியின் கொடுமையும் தன் நிலையும் எண்ணித் தனக்காக வருந்தாமல், தன் நிலையை மட்டுமே நினைத்து வருந்துவது தவறு என்பதால் தோழியை அயலார் போல ஊரார் என்று குறிப்பிடுகிறாள்.
சொற்பொருள் விளக்கம்
ஆறலைக் கள்வர் - பாலை நிலத்தில் வாழும் வேடர்கள், வழிப்பறி செய்வோர், எயினர்
அளை - வளை, புற்று
ஆறு - நெறி
பகழி - அம்பு
மாய்த்தல் - தீட்டுதல், கூர்மைப்படுத்துதல்
நொதுமல் - அயலவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக