வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 2 ஜூலை, 2021

ஆடிப் பாவை போல - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 08

குறுந்தொகை - 08

தலைவி தன்னைப் பழித்துக் கூறினாள் என்பதை அறிந்த காதல் பரத்தை, தலைவன் தன் மனைவிக்கு அஞ்சி அவள் சொல்லும் செயல்களை ஒரு ஆடிப்பாவை போல செய்வதாக கேலி பேசுகிறாள்.

சங்ககாலத்தில் தலைவன் பல பெண்களுடன் உறவு கொள்வது வழக்கமாக இருந்தது. தலைவனுக்கு இற்பரத்தை, காதல் பரத்தை, காமக்கிழத்தி என பல உறவுகள் இருக்கும். தலைவி இதைக் கண்டித்து வாயில் மறுத்தல், உண்டு. மருதம் என்பதல் ஊடலும் ஊடலின் நிமித்தமும் உரிப்பொருளாகிறது.

இப்பாடலில் இடம்பெறும் ஆடிப்பாவை என்ற உவமை புகழ்பெற்றதாகும்.

மருதம்

கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் 

பழன வாளை கதூஉம் ஊரன் 

எம் இல் பெருமொழி கூறி, தம் இல், 

கையும் காலும் தூக்கத் தூக்கும் 

ஆடிப் பாவை போல, 

மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே. 

குறுந்தொகை - 8

ஆலங்குடி வங்கனார் பாடல்

துறை - கிழத்தி தன்னைப் பழித்து உரைத்தாள் எனக்கேட்ட காதல் பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.


பரத்தை தன்னிடம் வந்த தலைவனைப் பற்றிக் கூறுகிறாள்.

கழனி ஓரத்தில் இருக்கும் மாமரத்திலிருந்து விழும் மாம்பழத்தை அந்த 


வயலில் மேயும் வாளை மீன் கவ்வும்படியான ஊரின் தலைவன் அவன்.

அவன் என் இல்லத்தில் இருக்கும்போது தன்னைப் பற்றிப் பெருமையாகப் 

பேசிக்கொள்வான். 

தன் வீட்டுக்குத் திரும்பியதும் தன் மகனின் தாய் ஆட்டியபடியெல்லாம் 

ஆடுகிறான்.

பொம்மலாட்டத்தில் ஆட்டக்காரன் ஆட்டுவது போல் கையையும், காலையும் 

தூக்கி ஆடும் பொம்மை போல் ஆடுகிறான்.


  • (அவள் மாம்பழம். அவன் வாளைமீன். – இறைச்சிப்பொருள்)
  • கண்ணாடியுள் தோன்றுகின்ற பாவையைப்போல தன்னுடைய மனைவிக்கு அவள் விரும்பியவற்றைச் செய்வான் எனவும் பொருள் கொள்வதுண்டு.


சொற்பொருள் விளக்கம்

பாங்காயினார் - சுற்றத்தார்

கதூம் - பற்றும்

எம் இல் - பரத்தை வீடு

தம் இல் - தலைவன் வீடு

ஊரன் - மருத நிலத் தலைவன்

பெருமொழி - பெருமப்படுத்தும் மொழி

தீம்பழம் - இனிய பழம்

ஆடி - கண்ணாடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக