வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 1 ஜூலை, 2021

கழலும் சிலம்பும் - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 07

 

Kurunthogai - 07

தலைவன் தலைவியை அழைத்துக்கொண்டு பெற்றோரை விட்டு உடன்போக்கில் தம் ஊருக்குச் செல்கிறான்.

பாலை நிலம் என்பது பிரிவைப் பேசக்கூடியது,

இப்பாடலில் பெற்றோரைப் பிரிந்து தலைமக்கள் செல்கின்றனர். 

பாலை கொடிய வழி. அவ்வழியில் வீரக்கழலணிந்த தலைவனும், சிலம்பணிந்த தலைவியும் கண்டோர் கண்களில் படுகின்றனர். 

இவ்வரிய வழியில் செல்லும் இவர்களின் நிலையறிந்து கண்டோர் வருந்துவதாக இப்பாடல் அமைகிறது.

தலைமக்கள் அணிந்த கழல், சிலம்பு ஆகிய அணிகலன்களைப் பார்த்தே கண்டோர் அவர்கள் காதலர்கள் என்பதையும், பெற்றோரை நீங்கிச் செல்கின்றனர் என்பதையும், தலைவன் தலைவி மீது மிகுந்த அன்புடையவன் என்பதும், அவளை மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறான் என்பதையும் அறிந்து இக்கொடிய வழியில் செல்கின்றனரே என வருந்துகின்றனர்.

வில்லோன் காலன கழலே; தொடியோள் 

மெல் அடி மேலவும் சிலம்பே; நல்லோர் 

யார்கொல்? அளியர்தாமே-ஆரியர் 

கயிறு ஆடு பறையின், கால் பொரக் கலங்கி 

வாகை வெண் நெற்று ஒலிக்கும் 

வேய் பயில் அழுவம் முன்னியோரே 

குறுந்தொகை 7 

பாடியவர் - பெரும்பதுமனார்

பாலை

செலவின் கண் இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது.


வில்லேந்திச் செல்லும் அவன் காலில் வீரக்கழல் இருக்கிறது. 

கையில் வளையல் அணிந்துள்ள அவள் காலில் சிலம்பு உள்ளது. 

இப்படிப்பட்ட நல்லவர்களாகிய இவர்கள் யார்? 

நாம் இரக்கம் கொண்டு உதவிசெய்யத் தக்கவர்களாக அவர்கள் உள்ளனர்.

வாகை மரத்திலுள்ள வெள்ளை நெற்றுகள்,

ஆரியர் கயிற்றில் ஆடும்போது இசைக்கப்படும் ஒலி போல் ஒலி எழுப்பும் மூங்கில்காட்டு வழியில் செல்லத் துணிந்திருக்கிறார்களே!


உடன்போக்கில் செல்லும் வழியில் வரும் இடையூறுகளை நீக்குவதற்காகத் தலைவன் வில் ஏந்தியவனாக முன்னர் சென்றான்,

தலைவன் காலில் அணிந்தது வீரக்கழல் என்பதும், தலைவியை அவன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது அவள் காலில் அணிந்த சிலம்பின் வழியாகவும் தெரிந்தது.

திருமணத்திற்கு முன் பெற்றோர் அணிந்த சிலம்பை நீக்கும் மரபு சிலம்புகழி நோன்பு என்று அன்று கடைபிடிக்கப்பட்டது.

பாலை நிலத்தில் நடப்பதால் தலைவியின் அடிகள் மெல்லடி எனப்பட்டன.


சொற்பொருள் விளக்கம்

உடன்போக்கு - தலைவன் தலைவியைப் பெற்றோர் அறியாது தன்னுடன் அழைத்துச் செல்வது

செலவு - பயணம்

இடைச்சுரம் - இடை வழி

கண்டார் -வழியல் காண்போர்

வில்லோன் - கையில் வில்லைக் கொண்டவன்

தொடியோள் - கையில் வளையல் அணிந்தவள்

ஆரியர் - கழைக்கூத்தர்

அழுவம் - பாலை நிலப்பரப்பு

முன்னியோர் - கருதிச் செல்பவர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக