வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 25 ஜூன், 2021

காந்தள் மலரும் காதல் மனமும் - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 01

குறுந்தொகை - 01

 குறுந்தொகையின் முதல்பாடலாக இப்பாடல் அமைகிறது.

குறிஞ்சித் திணை என்பதால் மலை மலை சார்ந்த செய்தியும், 

கூடலும் கூடல் நிமித்தமும் உரிப்பொருளாகப் பேசப்படுகிறது,

தலைவன் தன் அன்பின் அடையளமாக  தழையாலும் பூவாலும் செய்த

தழையாடை ஒன்றைத் தலைவிக்குப் பரிசளிக்க விரும்புகிறான். 

அதற்குக் கையுறை என்று பெயர். அந்தக் கையுறையை தோழியிடம்

 தருகிறான். அதில் காந்தள் மலர் உள்ளது. இதை தலைவி சூடுதல் தகாது. 

அவ்வாறு சூடினால் பெற்றோரோரும் ஊராரும் அலர் தூற்றுவர் ஏனென்றால்

 காந்தள் மலர் முருகனுக்குரியது என்று சொல்லித் தோழி கையுறையை மறுக்கிறாள்.

திருமணத்திற்கு முன்பு பெண்கள் மலரணிவது சங்ககாலத்தில் மரபல்ல என்பதையும் அவ்வாறு அணிந்தால் ஊரார் அலர் தூற்றுவர் என்பதையும் நினைவில் கொள்வோம்


குறிஞ்சி


செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த

செங்கோல் அம்பின், செங்கோட்டு யானை,

கழல் தொடி, சேஎய் குன்றம்

குருதிப் பூவின் குலைக் காந்தட்டே


குறுந்தொகை - 1

பாடியவர் - திப்புதோளார்

தோழி கையுறை மறுத்தது.


போர்க்களம் குருதி பாய்தலால் செந்நிறமுடைய களமானது. 

அசுரர்களைக் கொன்று அவர்களின் குலத்தை அழித்த குருதியால் சிவந்த

 திரண்ட அம்பினையும், சிவந்த கொம்புகளைக் கொண்ட யானையையும், 

கழல் இட்ட வீர வளையலையும் உடையவன் முருகன். 

அவனுடைய இம்மலை, கொத்துகளாக விளங்கும் சிவந்த மலர்களைக்

 கொண்ட காந்தள் மலர்களைக் கொண்டது.

பாடல் வழியாக,

போர்க்களம், அம்பு, யானையின் கோடு ஆகிய யாவும் சிவந்த நிறத்துடன் சிவந்த முருகனைப் போன்றே காட்சியளிக்கின்றன.

முருகன் யானை ஊர்தியைக் கொண்டவன் என்பது உணர்த்தப்பட்டது,

காந்தள் மலர் முருகனுக்கு உகந்தது என்று ம் அது வண்டுகள் மொய்க்காத  சிறப்புடையது,

முருகனுக்கு உகந்த மலர் என்பதால் அதை பெண்கள் சூடுவது மரபல்ல என்று தோழி கையுறை மறுக்கிறாள்,

மேலும் இம்மலரைச் சூடினால் இம்மலரைத் தந்தது யார் என அன்னை

முதலானோர் சந்தேகத்துடன் கேட்பார்கள்,


வேலனும் வெறியாடும் காலமன்றி பறியாத இம்மலரை உனக்குப் பறித்துத்

தந்தது யார் எனக் கேட்பார்கள்.

அந்தக் காந்தள் மலர் தாம் வாழும் இந்த மலையில் மிகுதியாக இருப்பதாக நயம்படத் தோழி உரைப்பதாகவும் கொள்ளலாம்.

அதனால் தலைவன் தலைவிக்குத் தந்த கையுறையைத் தோழி மறுக்கிறாள்.

சொற்பொருள் விளக்கம்

செங்கோலம்பு - வளைவில்லாத செந்நிறமுடைய அம்பு

செங்கோடு - பகைவரைக் குத்திச் சிவந்த கொம்பு

கழல் - வீர வளையம்

சேஎய் - செந்நிறமுடையவன், 

குருதிப் பூ - சிவந்த நிறமுடைய பூ

காந்தட்டு - காந்தள் உடையது.


தொடர்புடைய இடுகை 


பெண்களும் மலரணிதலும் (சங்க காலம்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக