பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வியாழன், 24 ஜூன், 2021

கபிலரும் பாரி மகளிரும் - UPSC EXAM TAMIL - புறநானூறு -200



முல்லைக்குத் தேர் கொடுத்தவன் பாரி. இது அறிவுடைமை அல்ல! 

என்றாலும் இதற்குப் பெயர் கொடை மடம்!

கொடுக்கவேண்டும் என்று தோன்றினால் உடனே கொடுத்துவிடவேண்டும். சற்று தாமதித்தாலும் மனம் மாறிவிடும்.

அதனால்தான் பாரியை இன்றும் கடையெழு வள்ளல்களில் ஒருவன் என்று போற்றி வருகிறோம்.  

பாரி, கபிலர் நட்பு சங்க இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கதாப் பேசப்படுகிறது.

சங்கப் புலவர் கபிலர், குறிஞ்சித் திணையில் எண்ணற்ற பாடல்களைப் பாடியுள்ளார். 

பாரிக்கு அங்கவை சங்கவை என்று இரண்டு மகள்கள் இருந்தனர். 

பாரி இறந்தபின், அவன் மகள்களைத் தன் மகள்களாக எண்ணினார் கபிலர், 

அவர்களைத் தக்க அரச குமரர்கட்கு மணம்முடிக்க எண்ணி விச்சிக்கோ என்ற அரசரைச் சந்தித்தார்.


விச்சிக்கோவும்      பாரி      மகளிரை      மணந்துகொள்ளும் தகுதியுடையவனாயிருந்தான்.  

விச்சிக்கோவும்   கபிலரை  வரவேற்றுச் சிறப்பித்தான். 

அவர் அவனை நோக்கி, 

“விச்சிக்கோவே! யான் கொணர்ந்திருக்கும் இம் மகளிர், முல்லைக்கு நெடுந்தேர் அளித்த

பரந்தோங்கிய சிறப்பினையுடைய வேள்பாரியின் மகளிர்.

யான் பரிசில் பெற்று வாழ்பவன். அந்தணன்,

நீ சிறப்பு மிக்க பகைவரை வணங்கச்செய்யும் வாட்போரில் வல்லவன். 

அடங்கா மன்னரை அடக்குபவன். உண்டு மடங்காத விளைச்சல் தரும் நாட்டை உடையவன். 

நான் பாரிமகளிரைக் கொடுக்கிறேன். நீ பெற்றுக்கொள்க என்று பாரிக்குப் பின் பாரி மகளிரைத் தன் மகளிராக எண்ணி அவர்களை தகுதியுடைய அரசனிடம் மணம் முடித்துவைப்பதாக நட்பின் பெருமை பேசுவதாக இப்பாடல் அமைகிறது.


  பனிவரை நிவந்த பாசிலைப் பலவின்

கனிகவர்ந் துண்ட கருவிரற் கடுவன்

செம்முக மந்தியொடு சிறந்துசேண் விளங்கி

மழைமிசை யறியா மால்வரை யடுக்கத்துக்

5 கழைமிசைத் துஞ்சுங் கல்லக வெற்ப

நிணந்தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடுவேற்

களங்கொண்டு கனலுங் கடுங்கண் யானை

விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக் கோவே

இவரே, பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை

10 நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்

கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த

பரந்தோங்கு சிறப்பிற் பாரி மகளிர்

யானே, பரிசிலன் மன்னு மந்தண னீயே

வரிசையில் வணக்கும் வாண்மேம் படுநன்

15 நினக்கியான் கொடுப்பக் கொண்மதி சினப்போர்

அடங்கா மன்னரை யடக்கும்

மடங்கா விளையு ணாடுகிழ வோயே.  

புறநானூறு - 200 

திணை: அது. துறை: பரசிற்றுறை. பாரி மகளிரை விச்சிக்

கோனுழைக்கொண்டு சென்ற கபிலர் பாடியது.


பனிக்காலத்திலே பழுக்கும் பசுமையான இலைகளை உடைய பலாப்பழத்தைக் கவர்ந்து உண்ட கருமையான விரல்களை உடைய கடுவன் என்னும் ஆண்குரங்கு தன் சிவந்த முகத்தை உடைய மந்தி என்னும் பெண் குரங்கோடு சேர்ந்து பெருமலை அடுக்கத்தில் மழைமாசி படராத மூங்கிலின் மேல் உறங்கும் மலையகத்துத் தாழ்ந்த வரையைக் கொண்டவனே!

நிணத்தைத் தின்று செருக்கிய நெருப்புப் போன்ற தலையுடைய நெடுவேலினையும், போர்க்களத்தைத் தனதாக்கிக்கொண்டு சினக்கும் வலிமையுள்ள யானையையும் விளங்கிய மணிகளால் செய்யப்பட்ட அணிகலன்களையும் கொண்ட விச்சிக்கோவே,

பருவம் இல்லாமல் எப்போதும் பூக்கும் கொடிமுல்லை தான் படரக் கொம்பில்லை என்று முல்லைக்கொடி படரத் நெடுந்தேரைக் கொடுத்தவன் வள்ளல் பாரி, பாரியின் மகள்கள் இவர்கள்,

யான் பரிசில் பெற்று வாழ்பவன். அந்தணன் 

நீ சிறப்பு மிக்க பகைவரை வணங்கச்செய்யும் வாட்போரில் வல்லவன். அடங்கா மன்னரை அடக்குபவன். 

உண்டு மடங்காத விளைச்சல் தரும் நாட்டை உடையவன்

நான் பாரிமகளிரைக் கொடுக்கிறேன். நீ பெற்றுக்கொள்க.


சொற்பொருள் விளக்கம்


பனிவரை - குளிர்ந்த மலை

கடுவன் - ஆண்குரங்கு

மந்தி - பெண் குரங்கு

சேண் - தொலைவு

மழை - முகில்

வரை அடுக்கம் - மலைப் பக்கம்

கழை - மூங்கில்

மிசை - உச்சி

களம் - போர்க்களம்

கனலும் - சினக்கும்

பூண் - அணிகலன்

கறங்கும் - ஒலிக்கும்

வரிசை - முறை

வணக்கம் - அடக்கும்

அடங்கா மன்னர் - பகை வேந்தர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக