வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 30 ஜூன், 2021

ஓர்யான் மன்ற துஞ்சா தேனே - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 06

 குறுந்தொகை - 06


திருமணத்திற்கு இடைப்பட்ட காலத்தில் தலைவன் தலைவியைப் பிரிந்த நிலையில் அவன் பிரிவால் தூக்கமின்றி வாடும் தலைவி, தோழியிடம் சொல்லுவதாக இப்பாடல் அமைகிறது.

நெய்தல் 

“நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்து

இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்று

நனந்தலை உலகமும் துஞ்சும்

ஓர்யான் மன்ற துஞ்சாதேனே. ”


குறுந்தொகை - 06

பாடியவர் - -பதுமனார்.

வரைவிடை வைத்துப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழியை நெருங்கிச் சொல்லியது


தலைவனின் நினைவால் உறங்காமல்த் தவிக்கும் தலைவி

நள்ளிரவில் தன் துயரை அறியாது யாவரும் இனிது உறங்குகின்றனர். 

செவ்வாய், 29 ஜூன், 2021

தூக்கத்தைத் தொலைத்தவள் -UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 05


காதலும் ஒரு நோய்தான். வள்ளுவர் இந்நோயை, 

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி 

மாலை மலரும்இந் நோய் - 1227

என்று உரைப்பார். நெய்தல் திணை சார்ந்த இக்குறுந்தொகைப் பாடலில் தலைவனின் பிரிவால் தூக்கத்தைத் தொலைத்த தலைவியின் புலம்பல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

தலைவனின் பிரிவால் தலைவி வருந்துகிறாள், தலைவியின் நிலையறிந்து தோழி கவலைப்படுகிறாள் , 

பிரிவாற்றாமையால் தான் தூக்கமின்றித் தவிக்கும் கொடுமையைத் தோழிக்கு உரைத்து இக்காமநோயின் கொடுமையைத் தலைவி உரைப்பதாக இப்பாடல் அமைகிறது,

5.நெய்தல்

அதுகொல் தோழி காம நோயே?

வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை

உடை திரைத் திவலை அரும்பும் தீம் நீர்

மெல்லம் புலம்பன் பிரிந்தென

பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே. 


குறுந்தொகை - 05

பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

பாடியவர் - நரிவெரூஉத்தலையார் 

அவன் நீரலை புலம்பும் கடல்சார் புலம்புநிலத் தலைவன். 

அவன் பிரிந்திருக்கிறான் என்று பல இதழ்களைக் கொண்ட தாமரை 

போன்ற மை தீட்டிய   என்  கண்கள் மூட மறுக்கின்றன.

தோழி! காமநோய் என்பது அதுதானோ?

புன்னை மர நிழலில் குருகு மட்டும் உறங்குகிறதே!

உடையும் கடலலைத் திவலை அதன் உடலில் தூவப்பட்டு முத்து முத்தாக 

நிற்கும்போதும் தூங்குகிறதே!

என்று தலைவி தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.

திங்கள், 28 ஜூன், 2021

நோம் என் நெஞ்சே - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 04

குறுந்தொகை - 4 Kurunthogai

பிரிவு என்பது வாழ்வில் தவிர்க்க இயலாத ஒன்று. 

சில பிரிவுகள் சிலர் நம் மீது கொண்ட அன்பையும், 

சில பிரிவுகள் அவர்கள் மீது நாம் கொண்ட அன்பையும் 

வெளிப்படுத்தும்.

நெய்தல் திணை என்பது இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ஆகும்.

தலைவனி்ன் பிரிவை எண்ணி ஆற்றாமல் புலம்பும் தலைவியின் 

மனநிலையை இப்பாடல் புலப்படுத்துகிறது.


பிரிவாற்றாமல் வருந்துகின்றாள் என்று கவலையுற்ற

தோழிக்கு,'தலைவன் முன்பு எனக்குக் காட்டிய அன்பை நினைத்து 

ஆற்றினேன் எனத் தலைவி கூறியது.

தலைவன் பிரிவிற்கு ஆற்றாமல் தலைவி வருந்துவாள் எனத் தோழி 

எண்ணி வருந்தினாள். அதனை அறிந்த தலைவி, தோழியிடம் தான் 

வருந்துவது தலைவனின் செயலுக்காக இல்லை. தோழி கூறிய 

சொல்லுக்காகவே என்றாள்.

4. நெய்தல்

நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே

இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி

அமைதற் கமைந்தநங் காதலர்

அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே.


துறை - பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. 

பாடியவர்- காமஞ்சேர் குளத்தார்.  

 குறுந்தொகை - 04


பிரிவு ஆற்றாமல் வரும் கண்ணீர் என்பதால் வெம்மையானதாகக் 

கூறப்பட்டது.  தலைவன் இயற்கைப் புணர்ச்சியின் போது உன்னைப் 

பிரியமாட்டேன் எனத் தலைவியிடம் கூற, 

வெள்ளி, 25 ஜூன், 2021

காந்தள் மலரும் காதல் மனமும் - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 01

குறுந்தொகை - 01

 குறுந்தொகையின் முதல்பாடலாக இப்பாடல் அமைகிறது.

குறிஞ்சித் திணை என்பதால் மலை மலை சார்ந்த செய்தியும், 

கூடலும் கூடல் நிமித்தமும் உரிப்பொருளாகப் பேசப்படுகிறது,

தலைவன் தன் அன்பின் அடையளமாக  தழையாலும் பூவாலும் செய்த

தழையாடை ஒன்றைத் தலைவிக்குப் பரிசளிக்க விரும்புகிறான். 

அதற்குக் கையுறை என்று பெயர். அந்தக் கையுறையை தோழியிடம்

 தருகிறான். அதில் காந்தள் மலர் உள்ளது. இதை தலைவி சூடுதல் தகாது. 

அவ்வாறு சூடினால் பெற்றோரோரும் ஊராரும் அலர் தூற்றுவர் ஏனென்றால்

 காந்தள் மலர் முருகனுக்குரியது என்று சொல்லித் தோழி கையுறையை மறுக்கிறாள்.

திருமணத்திற்கு முன்பு பெண்கள் மலரணிவது சங்ககாலத்தில் மரபல்ல என்பதையும் அவ்வாறு அணிந்தால் ஊரார் அலர் தூற்றுவர் என்பதையும் நினைவில் கொள்வோம்

வியாழன், 24 ஜூன், 2021

கபிலரும் பாரி மகளிரும் - UPSC EXAM TAMIL - புறநானூறு -200



முல்லைக்குத் தேர் கொடுத்தவன் பாரி. இது அறிவுடைமை அல்ல! 

என்றாலும் இதற்குப் பெயர் கொடை மடம்!

கொடுக்கவேண்டும் என்று தோன்றினால் உடனே கொடுத்துவிடவேண்டும். சற்று தாமதித்தாலும் மனம் மாறிவிடும்.

அதனால்தான் பாரியை இன்றும் கடையெழு வள்ளல்களில் ஒருவன் என்று போற்றி வருகிறோம்.  

பாரி, கபிலர் நட்பு சங்க இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கதாப் பேசப்படுகிறது.

சங்கப் புலவர் கபிலர், குறிஞ்சித் திணையில் எண்ணற்ற பாடல்களைப் பாடியுள்ளார். 

பாரிக்கு அங்கவை சங்கவை என்று இரண்டு மகள்கள் இருந்தனர். 

பாரி இறந்தபின், அவன் மகள்களைத் தன் மகள்களாக எண்ணினார் கபிலர், 

அவர்களைத் தக்க அரச குமரர்கட்கு மணம்முடிக்க எண்ணி விச்சிக்கோ என்ற அரசரைச் சந்தித்தார்.

புதன், 23 ஜூன், 2021

புகழை விதைப்பவர்கள் - UPSC EXAM TAMIL - புறநானூறு -199



நெல்லை விதைத்தால் நெல் விளையும்..

சொல்லை விதைத்தால் சொல் விளையும்..

அன்பை விதைத்தால் அன்பே விளையும்..

அதுபோல புகழை விதைத்தால் புகழ் விளையும்..

புகழை விதைக்கும் பரிசிலர் இயல்பைக் காண்போம்,

இன்மையின்  இன்னாதது யாதெனின் இன்மையின்

இன்மையே இன்னாதது - குறள் - 1041

வறுமையைப் போலத் துன்பமானது எது என வள்ளுவரைக் கேட்டால்

வறுமை கொடியது, வறுமையைப் போல துன்பமானது..

வறுமையே அதைவிடத் துன்பமானது வேறு ஏதும் இல்லை என்கிறார்.


அத்தகைய வறுமையில் உள்ளவர்களின்  நிலையறிந்து உதவுவது மிகப் பெரிய செயல் அல்லவா!

அதிலும்  நான் வள்ளல் நீ இல்லாதவன் நான் உனக்கு உதவுகிறேன்..

என்றெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இரவலர் உரிமையோடு தம் தேவையை நிறைவு செய்துகொள்ளும் நற்பண்புடன் வள்ளல்கள் கிடைத்துவிட்டால் இரலவலர்களின் வறுமை அவர்களை விட்டு ஓடிவிடும் அல்லவா..


மரங்களை நாடிச் செல்லும் பறவைகள் தாம் செல்லும் இடங்களிலெல்லாம் அதன் விதைகளை விதைத்து அம்மரங்களைப் பல இடங்களிலும் உருவாக்குகின்றன.

அப்பறவைகளைப் போல பரிசில் நாடிச் செல்லும் இரவலர்கள் அந்த வள்ளல்களின் புகழைப் பல இடங்களிலும் விதைத்து அவர்களைப் போல வள்ளல்களை உருவாக்குகின்றனர். 

ஆலமரத்தை நாடும் பறவைகளைப் போன்று வள்ளல்களை நாடும் பரிசிலர் கூட்டத்தின் இயல்பை இப்பாடல் எடுத்துரைக்கிறது.

புலவர் பெரும்பதுமனார் பரிசில் வேண்டிப் பாடுகிறார். யாரிடம் பரிசில் வேண்டுகிறார் என்னும் குறிப்பு கிடைக்கவில்லை.

கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்

நெருநல் உண்டனம் என்னாது, பின்னும்

செலவுஆ னாவே, கலிகொள் புள்ளினம்;

அனையர் வாழியோ இரவலர்; அவரைப்

புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர் 5

உடைமை ஆகும், அவர் உடைமை;

அவர் இன்மை ஆகும், அவர் இன்மையே.  


புறநானூறு - 199

பாடியவர்: பெரும்பதுமனார்

திணை: பாடாண்

துறை: பரிசில் கடா நிலை


ஒலிக்கும் பறவையினங்கள், பழுத்திருக்கும்  ஆலம்பழம் நேற்று உண்டோமே என்று கடவுள் தன்மையுள்ள அந்த மரத்தைத்தேடி  மறுநாள் வராமல் இருப்பதில்லை,

மீண்டும் மீண்டும் வருவது அப்பறவைகளின் இயல்பு. எத்தனை முறை வந்தாலும் அப்பறவைகளுக்குப் பழம் தருவது ஆலமரத்தின் இயல்பு,

அப்பறவைகளைப் போன்றவர்களே இரவலர்,

அந்த இரவலர்களின் செல்வம் அவரக்ளைக் காக்கும் வள்ளல்களின் செல்வமாகும், அவர்களின் வறுமையும் அவ்வள்ளல்களின் வறுமையே ஆகும்.

ஆலமரத்தில் பறவைகள் உரிமையோடு பழங்களை உண்ணும் அதுபோல வள்ளல்களின் செல்வம் தம் செல்வம் என்றும், தமது வறுமை, தம்மைக் காக்கும் வள்ளல்களின் வறுமையே என்றும் பெரும் பதுமனார் உரைக்கிறார்.

பழங்களை உண்டு செல்லும் பறவைகள் அதன் விதைகளைப் பல இடங்களிலும் விதைப்பதைத்து மரங்களைத் தோற்றுவிக்கும். 

அதுபோல இரவலர்களும் தமக்குப் பரிசில் தந்து காக்கும் வள்ளல்களின் புகழை நாட்டின் பல்வேறு இடங்களிலும் பரப்பி ஆங்காங்கே இவரைப் போன்ற வள்ளல்களைத் தோற்றுவிப்பர்.


சொற்பொருள் விளக்கம்


கடவுள் ஆலம் - தெய்வம் உறையும் ஆலமரம்

சினை - கொம்பு

நெருநல் - நேற்று

செலவு - செல்லுதல்

கலி - ஒலி

புள்ளினம் - பறவையினங்கள்

புரவு - காத்தல்

உடைமை - செல்வம் 

இன்மை - வறுமை 

செவ்வாய், 22 ஜூன், 2021

அந்த வானம்பாடியைப் போல- UPSC EXAM TAMIL - புறநானூறு -198

வானம்பாடி   இனிமையாக பாடும் இயல்புடைய பறவை. வானம்பாடி மழைக்காக ஏங்கிப் பாடும் என்பதும். அவ்வாறு பாடினால் மழை வரும் என்பதும் இலக்கியங்கள் வழி அறிகிறோம். வானம்பாடி மழைக்கு ஏங்கிப் பாடுவதுபோல நான் உன் கொடைக்கு ஏங்கிப் பாடுகிறேன் என பேரிச்சாத்தனார் என்ற புலவர் பாடுவதாக இப்புறநானூற்றுப் பாடல் அமைகிறது.

பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்ற அரசன் பரிசில் வழங்காமல் காலம் தாழ்த்தியதால் வடமவண்ணக்கண் பேரிசாத்தனார் என்ற புலவர் அவனது முன்னோர் பெருமை உரைத்து. இவ்வாறு பரிசில் வழங்காமல் காலம் தாழ்த்துவது தவறு என உணர்த்தி இதனால் உனக்கு ஏதும் தீங்கு வராமல் இருக்கட்டும் என்று வாழ்த்திப் பாடுவதாக இப்பாடல் அமைகிறது.

திங்கள், 21 ஜூன், 2021

வறுமையும் புலமையும் - UPSC EXAM TAMIL - புறநானூறு -197

வறுமையும் புலமையும்  சேர்ந்தே இருப்பது என்று சொல்வதுண்டு.

வள்ளுவர் கூட,

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு - 374

செல்வமுடையவர்களாவதும், அறிவுடையவர்களாவதும் வேறாவதே உலகத்தின் இயற்கை என்று உரைக்கிறார்.

மனிதர்கள் பலவிதம் 

அறிவுடையோர் அறிவைத் தேடுவதால் பணம் அவர்களிடம் எப்போதும் சேர்வதில்லை. 

சங்ககாலத்தில் புலவர்களும் கலைஞர்களும் வள்ளல்களை நாடிச் சென்று பரிசில் பெற்று வருவது மரபாக இருந்தது.

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் பரிசில் வழங்காமல் காலம் தாழ்த்தினான். அப்போது,  கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்ற புலவர் பாடியதாக இப்பாடல் அமைகிறது.

சனி, 19 ஜூன், 2021

சிறக்க நின் நாளே - UPSC EXAM TAMIL - புறநானூறு -196

நன்மை செய்தவர்களை வாழ்த்துவதும்

தீமை செய்தவர்களைப் பழிப்பதும் உலக மரபு.

இப்புறப்பாடலில் பாண்டியன் புலவருக்குப் பரிசில் தருவதற்குக் காலம் கடத்திவந்தான். இது முறையன்று என்று புலவர் ஆவூர் மூலங் கிழார்  எடுத்துரைத்து வாழ்த்துகிறார். 

பரிசில் தராமல் காலம் தாழ்த்தியது தமக்கு ஏமாற்றமாக இருந்தாலும். ஏமாற்றுவது பெருங்குற்றமல்லவா, அதனால் அவனும் அவன் குடும்பமும் பாதிக்கப்படக் கூடாது என்று வாழ்த்துகிறார் புலவர்.

பாடல்,

ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்

ஒல்லாது இல் என மறுத்தலும், இரண்டும்,

ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;

ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது

இல் என மறுத்தலும், இரண்டும், வல்லே  5

இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்

புகழ் குறைபடூஉம் வாயில் அத்தை;

அனைத்து ஆகியர், இனி; இதுவே எனைத்தும்

சேய்த்துக் காணாது கண்டனம்; அதனால்,

நோய் இலராக நின் புதல்வர்; யானும்,  10

வெயில் என முனியேன், பனி என மடியேன்,

கல் குயின்றன்ன என் நல்கூர் வளி மறை,

நாண் அலது இல்லாக் கற்பின் வாள் நுதல்

மெல் இயல் குறு மகள் உள்ளிச்

செல்வல் அத்தை; சிறக்க, நின் நாளே! 15

புறநானூறு - 196

திணை பாடாண் திணை; 

துறை பரிசில் கடா நிலை.

பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் பரிசில் நீட்டித்தானை ஆவூர் மூலங் கிழார் பாடியது.

வெள்ளி, 18 ஜூன், 2021

சங்க இலக்கியப் பொன்மொழிகள் - ஆங்கில விளக்கத்துடன் - மின்னூல்

 


சங்கஇலக்கியங்களில் கூறப்பட்டுள்ள அரிய சிந்தனைகள் பலமொழிகளிலும் மொழிபெயர்க்கப்படவேண்டும். அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டால் தமிழின் செம்மைத்தன்மை உலகத்துக்கே விளங்கும் என்ற சிந்தனையின் அடிப்படையில் சங்க இலக்கியத்திலிருந்து தேர்ந்தெடுத்த 50 பாடலடிகள் ஆங்கில விளக்கத்துடன் உரைக்கப்பட்டுள்ளன.






செவ்வாய், 15 ஜூன், 2021

இல்லறமா? துறவறமா? - UPSC EXAM TAMIL - புறநானூறு -193

            புதிதாகத் திருமணமான மணமக்கள் கோயிலுக்குச் சென்று வந்தனர். வருகின்ற வழியில் ஒரு துறவியைப் பார்த்தனர். 
அந்த மணப்பெண் தன் கணவனிடம் நாம் சென்று அந்தத் துறவியிடம் ஆசிர்வாதம் வாங்கி வரலாம் என்றாள். அவரும் சரி என்று சொல்லி, இருவரும் துறவியைச் சந்தித்து அவர் காலில் விழுந்து எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் ஐயா எனக் கேட்டுக்கொண்டனர். 

பதறிப்போன துறவியோ எழுந்திருங்கள் எழுந்திருங்கள் என் காலில் ஏன் விழுந்தீர்கள் எனக் கேட்டார். அந்த மணமகன் சொன்னார், ஐயா நாங்கள் புதிதாகத் திருமணமானவர்கள் நீங்கள் துறவி. நீங்கள் ஆசி வழங்கினால் எம் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றே தங்கள் காலில் விழுந்தோம் என்றார். அதைக் கேட்ட துறவி அந்த மணமக்கள் காலில் விழுந்தார். 

வியாழன், 3 ஜூன், 2021

இந்திய குடிமைப் பணித்தேர்வுக்கான தமிழ்ப் பாடத்திட்டம் - UPSC - Tamil Optional

 இந்திய குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பாடங்களுள் ஒன்றான தமிழ் குறித்த விளக்கங்களை இந்த தளத்திலும் எனது யூடியூப் பக்கத்திலும் தொடர்ந்து வழங்கவுள்ளேன். அதன் தொடக்கமாக தமிழ்ப் பாடத்திட்டத்தை இன்று வழங்கியுள்ளேன்.

  


இந்தியக் குடிமைப் பணித்தேர்வு

(Union Public Service Commission) 

CIVIL SERVICES MAIN EXAMINATION

தமிழ் விருப்பப்பாடம்

பாடத்திட்டம்

தமிழ் இலக்கியம் - 

தாள் - I

பகுதி -1: தமிழ்மொழி வரலாறு

∙  முதன்மை இந்திய மொழிக் குடும்பங்கள்

பொதுவாக இந்திய மொழிகளிலும் குறிப்பாகத் திராவிட மொழிகளிலும்  தமிழ்மொழி பெறுமிடம்

திராவிட மொழிகளின் கணக்கீடும் வகைப்பாடும்

ங்க இலக்கிய மொழி

இடைக்காலத் தமிழ்: பல்லவர்காலம் மட்டும்

வரலாற்று முறை ஆய்வு: தமிழில் பெயர்கள், வினைகள், பெயரடைகள்வினையுரிச்சொற்கள், காலங்காட்டும் உருபுகள், வேற்றுமை உருபுகள்.

பிறமொழிகளிலிருந்து தமிழுக்குக் கடன் வாங்கப்பட்ட சொற்கள்

∙ வட்டார, சமுதாயக் கிளை மொழிகள்

எழுத்து மொழி, பேச்சு மொழிக்கிடையே உள்ள வேறுபாடுகள்.