பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

சனி, 8 மே, 2021

செலவு - சங்க இலக்கியச் சிறுகதை - 1

 


கலித்தொகை 9, பாலை பாடிய பெருங்கடுங்கோ

செவிலித்தாய் வைணவத் துறவியிடமும் அவருடைய மாணாக்கர்களிடமும் சொன்னது :

எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்

உறித் தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்

நெறிப்பட சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்

குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!

வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர் இவ் இடை  5

என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்

தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்

அன்னார் இருவரை காணிரோ பெரும?

வைணவத் துறவி:

காணேம் அல்லேம்!  கண்டனம்!  கடத்து இடை

ஆண் எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய,  10

மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறீர்!

பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,

மலை உளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும்?

நினையுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

சீர்கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை,  15

நீர் உளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும்?

தேருங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

 

ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,

யாழ் உளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும்?

சூழுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!  20

என, ஆங்கு

இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்!

சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்,

அறம் தலை பிரியா ஆறும் மற்று அதுவே.

என்ற பாடலை மையக்கருத்தாகக் கொண்டு எழுதப்பட்டது.

 

செலவு

     ஞாயிற்றுக் கிழமையென்பதால் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார் இனியன்.

     வீட்டுக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்ப்பது ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆண்களே! என்ற அணியில் பேசிய கவிஞர் பரிதிசாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை என்று சும்மாவா நம் முன்னோர் சொல்லியிருக்காங்க நடுவரே!” ஆண் குழந்தை என்றால் வரவு பெண் குழந்தை என்றால் செலவு என்பது அன்றும் இன்றும் என்றும் மாறாதது நடுவர் அவர்களே,  என்று பேசினார். தொடர்ந்து விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது.

     ஆண்களுக்கு இணையாக எல்லாத்துறைகளிலும் பெண்கள் சாதித்துவரும் இந்தக் காலத்திலும் பெண்கள் தொடர்பான இத்தகைய கருத்துகள் ஏன் தொடர்கின்றன என்ற கேள்வியோடு சிந்தித்துக் கொண்டிருந்தார் இனியன்.

     பெண்களே என்ற தலைப்பில் பேசவந்த கவிதாயினி யாழினி,          நடுவர் அவர்களே! ஒரு நாணயத்தின் இரு பகுதிகளைப் போலத்தான் ஆண்களும், பெண்களும். வலிமை ஆணுக்கு அழகு என்றால், மென்மை பெண்ணுக்கு அழகு. தாய்நாடு, தாய்மொழி, பூமா தேவி என, பெண்மையைக் கொண்டாடிய தாய்வழிச் சமூகம் தானே நம் மரபுஆணைப் புழு என்றும் பெண்ணைப் பூச்சி என்றும் சொல்வர்கள் ஏன் தெரியுமா நடுவரே அவர்களே?

     நடுவர் சிரித்துக்கொண்டே, “ஆண் என்றால் புழுவைப் போல,பெற்றோரைக் கடைசி காலம்வரை பார்ப்பான். ஆனால், பெண்கள் பூச்சிகளைப் போன்றவர்கள் அவர்கள் பிறந்த வீட்டைவிட்டு இன்னொரு வீட்டுக்குச் சென்று விடுவார்கள் அவர்கள் பெற்றோர்களைக் கடைசிகாலம் வரை பார்ப்பதில்லை என்பதுதான் நானறிந்த பொருள்என்றார்.

     தாங்கள் சொல்வது உண்மைதான் நடுவர் அவர்களே! தங்கள் கருத்தில் கூடுதலாக எனது கருத்தையும் கூற விரும்புகிறேன். செலவு என்றால் பயணம் என்றும் பொருள் உண்டு. பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு இவர்கள் செல்லும் பயணத்தில் பொருள் செலவாகிறது என்பதை நான் மறுக்கவில்லை ஆனால் அந்தச் செலவு, பெற்றவர்கள் விரும்பிச் செய்வதல்லவா, மேலும் இந்தப் பயணத்தால் இரு வீடுகளிலும் மகிழ்ச்சி நிறைகிறது என்பதை நாம் மறுக்கமுடியுமா?

     அப்பா என்னப்பா காலையிலே பட்டிமன்றமா? என்று திரைப்படப் பாடல் ஒளிபரப்பாகும் அலைவரிசையை மாற்றினாள் இனியன் மகள் சுடர்விழி.

     இனியன் கணினித் துறையில் பணியாற்றுகிறார். இவர் மனைவி எழிலரசி, வங்கியில் மேலாளராகப் பணியாற்றுகிறார். சுடர்விழி கோயம்புத்தூரில் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு இளங்கலை ஆடைவடிவமைப்பியல் படிக்கிறாள்.

      இனியனும், எழிலரசியும் வேலைக்குச் சென்றுவிடுவதால் சுடர்விழியைக் குழந்தைப் பருவத்திலிருந்தே பார்த்துக்கொள்ள வீட்டினருகே உள்ள தென்றல் குழந்தைக் காப்பகத்திலே விட்டுச் செல்வது வழக்கம். அந்தக் காப்பகத்தைத் தமிழினி நடத்தி வந்தாள். தமிழினியும் எழிலரசியும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். படிக்கும் காலத்திலிருந்தே இருவருக்கும் நல்ல நட்பு உண்டு. அதனால் சுடர்விழியைத் தன் குழந்தையைப் போலவே பார்த்து வளர்த்து வந்தாள் தமிழினி. அதனால் சுடர்விழிக்கும் தமிழினி மீது அன்பு உண்டு. இப்போதும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சென்று காப்பகத்தில் குழந்தைகளுடன் விளையாடிவிட்டு தமிழினியுடன் பேசிவிட்டு வருவாள் சுடர்விழி.

     இனியனும், சுடர்விழியும் தன் பணி நிமித்தம் ஓடிக்கொண்டே இருந்தார்கள். சுடர்விழி என்ன கேட்டாலும் வாங்கிக்கொடுத்தார்கள். திறன்பேசி, மடிகணினி, இவள் திருமணத்துக்காக நகை, வங்கியில் இவள் பெயரில் கணக்கு என ஒரே குழந்தை என்பதால் இருவரும் செல்லம் கொடுத்தே வளர்த்து வந்தனர். ஒரே வீட்டில் இருந்தாலும் பெற்றோருடன் அதிக நேரம் செலவிட முடியாத வருத்தம் சுடர்விழிக்கு இருந்துகொண்டே இருந்தது. 

     என்னமா சுடர் கல்லூரி வாழ்க்கை எப்படி போகிறதுஎன்று கேட்டுக்கொண்டே வந்தாள் எழிலரசி.

     நல்லா போகுதுமாஎன்றாள் சுடர்விழி. சரி மூன்றுபேரும் இன்று ஏதாவது படத்துக்குப் போய்ட்டு வருவோமா என்று கேட்டாள் சுடர். போலாமே போய்ட்டு அப்படியே வெளியே நல்ல உணவகத்தில் சாப்பிட்டு வருவோம் என்றார் இனியன்.

     நன்றாகத்தான் இவர்களது வாழ்க்கை போய்கொண்டிருந்தது. ஆண்டுகள் இரண்டு உருண்டு ஓடின..

     பெற்றோரிடம் தம் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள போதிய நேரம் கிடைக்காததால் சுடர்விழி பேஸ்புக், வாட்சாப், இன்ஸ்டாகிராம் என சமூக தளங்களில் அதிக நேரம் செலவிட ஆரம்பித்திருந்தாள். புதிய புதிய நண்பர்களால் இவளது உலகம் மாறத் தொடங்கியிருந்தது. கோயம்புத்தூரில் இன்னொரு தனியார் கல்லூரியில் முதுகலை ஆங்கிலம் படிக்கும் குமாருடன் முகநூல் வழி ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. குமார் ஒரு நாள் தன் காதலை வாட்சாப்பில் சுடர்விழிக்குத் தெரிவித்தான். அவனை இவளுக்கும் பிடித்திருந்தது. இவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டனர். பல மணிநேரங்கள் திறன்பேசியிலேயே பேசிக்கெண்டனர். இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரியாமல் சில வாரங்கள் சென்றன. பெற்றோருக்குத் தெரியாமல் தாம் இவ்வாறு ஒருவனுடன் பழகுவது சரியா என்ற கேள்வியும் சுடர்விழி மனதில் அடிக்கடி எழுந்தது. என்றாலும் சொன்னால் இவர்கள் தம் காதலை ஏற்றுக்கொள்வார்களா? சாதி, மதம், படிப்பு, வயது, வேலை என ஏதாவது சொல்லி பிரித்துவிடுவார்களா என்ற எண்ணமும் வர பெற்றோரிடம் இது பற்றிப் பேசாமலே இருந்துவந்தாள்.

     இவளது நடத்தையில் மாறுதல்களை உணர்ந்த எழிலரசி என்ன ஆச்சு, சுடர் ஏன் ஒரு மாதிரி இருக்க? ஒழுங்கா சாப்பிடல, தூங்கல, நீ இயல்பா இல்லையே என்ன ஆச்சு? என்று கேட்டாள். அதற்கு சுடர்விழி ஒன்றும் இல்லை அம்மா என்று சிரித்துக்கொண்டே சமாளித்தாள். மறுநாளே,    

       எனக்குப் பிடித்தவருடன் வாழ்க்கையை வாழப்போகிறேன். என்னைத் தேடவேண்டாம் என ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டை விட்டு புறப்பட்டுவிட்டாள் சுடர்விழி.

     கடிதத்தைப் பார்த்த எழிலரசிக்கு மயக்கமே வந்துவிட்டது. சுடர்விழியின் திறன்பேசியைத் தொடர்புகொண்டாள். திறன்பேசி வீட்டிலேயே அவளது படுக்கையறையில் இருந்தது.

     அக்கம் பக்கத்து வீட்டிலெல்லாம் சுடர்விழி யாரோ ஒரு பையனைக் கூட்டிக்கொண்டு ஓடிப்போய்விட்டாளாம் என பேசிக்கொண்டனர்.

      பாவி மக இவளுக்கு என்ன குறை வைச்சோம் இப்படி வயிற்றில் மண்ணை அள்ளிப் போட்டுப் போய்ட்டாளே. இத்தனை வருசம் பெத்து வளர்த்தோமே இவளுக்கு கொஞ்சம் கூட நன்றியிருக்காதா..“ என கண்களில் நீர் ததும்பக் கேட்ட எழிலரசியை அழாதே என ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார் இனியன். காவல் நிலையம் சென்று புகாரளிப்போமா எனக் கேட்ட இனியனிடம், முதலில் இவளது தோழிகளிடம் விசாரித்துவிட்டு பிறகு காவல் நிலையம் செல்லலாம் என்றாள் எழிலரசி. .

      இனியனும், எழிலரசியும் சுடர்விழியைத் தேடிச் செல்லும் வழியில் தென்றல் காப்பகம் வழியாகச் சென்றனர் அங்கு தமிழினியைச் சந்தித்து சுடர்வழி இப்படி சென்றுவிட்டதைச் சொல்லி வருந்தினர்.

      வளர்த்த பாசத்தில் இவர்களது வலியை முழுதும் உணர்ந்தாள் தமிழினி. என்றாலும் இனியனும் சுடர்விழியும் இப்படித்தானே ஒருநாள் ஊரைவிட்டு ஓடிவந்தார்கள். இவர்களது காதலுக்குத் தாம் உதவி செய்ததையும் அவர்களது பெற்றோரின் துயரம், அதன் பின் உறவுகளின்றி தனியான இவர்களது வாழ்க்கை எல்லாம் தமிழினியின் கண்களில் நிழலாடிச் சென்றன.

     சரி கவலைப்படாதீங்க, இருவரும் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள். அவளை எப்படியும் கண்டுபிடிச்சிடலாம்நீங்க ஒரு பக்கமா தேடுங்க எனக்குத் தெரிந்தவரை நான் தேடுறேன். விவரம் தெரிந்தால் உடனே உங்களை அழைக்கிறேன் என அனுப்பிவைத்தாள் தமிழினி.

     அவர்களை அனுப்பிவைத்த தமிழினி, குழந்தைப் பருவத்திலிருந்து தன்னிடம் வளர்ந்த குழந்தை இன்று பெற்றோரிடம் கூட சொல்லாமல் தன் வாழ்க்கையைப் பற்றி இப்படியொரு முடிவு எடுத்துவிட்டாளே என்று வருந்தினாள்.  அவளுக்கு வேறு எந்த வேலையும் ஓடவில்லை. தனக்குத் தெரிந்தவரை சுடர்விழியின் தோழிகளின் எண்களைத் தொடர்புகொண்டு விசாரித்தாள். கேட்டவரை எல்லோரும் அவள் காதலித்தது தெரியும் இப்போது எங்கே போயிருக்கா என்று தெரியாது என்றே சொன்னார்கள். இனியனும், சுடர்விழியும் கண்ணீர் ததும்ப நின்ற காட்சி மனதில் நிழலாட சரி நேற்று இரவுதானே போயிருக்கா, நேரம் காலை 7 மணிதான் ஆகுது. நாமும் வெளியே போய் கொஞ்சம் விசாரித்துப் பார்ப்போம் எனக் ஓட்டுநரை அழைத்துக்கொண்டு தன் மகிழுந்தில் புறப்பட்டாள் தமிழினி.

     கோயம்புத்தூர் பேருந்து நிலையம், விமானநிலையம், என பல இடங்களில் தேடிய தமிழினி இரயில் நிலையத்திற்கு தேடி வந்தாள். சுடர்விழியின் நிழற்படத்தைத் திறன்பேசியில் வைத்துக்கொண்டு இந்தப் பெண்ணைப் பார்த்தீர்களா? என்று காண்போரிடமெல்லாம் மருட்சியுடன் கேட்டுக்கொண்டே வந்தாள் தமிழினி.

     இவளது நடுக்கத்தையும், கலக்கத்தையும் பார்த்துக்கொண்டே அவளுக்கு முன் வந்த முதியவர் அந்த நிழற்படத்தைப் பார்த்து தமிழினியிடம் இந்தப் பெண்ணை நான் பார்த்தேனே இவளுடன் ஒரு இளைஞனும் இருந்தானே. இருவரும் அன்புடையவர்களாக ஒருவர் மீது ஒருவர் அன்பைப் பொழிந்து சென்றனரே என்றார்.

திகைத்த தமிழினி எங்கு பார்த்தீர்கள் ஐயா! என்று கேட்டாள்.

இங்குதான் பார்த்தேன். அவர்கள் கோயம்புத்தூரிலிருந்து சென்னை செல்லும் இரயிலில் இரவு 11 மணிக்குச் சென்றார்கள் என்றார்.

அவர்களுக்கு இந்த உலகில் யாரைப்பற்றியும் கவலை இல்லை. ஈருடல் ஓருயிர் போல இணைந்து சென்றனர். அவர்களை இனியும் நீங்கள் தேடவேண்டாம். என்றார்.

ஐயா! நல்லாப் பார்த்துச் சொல்லுங்க இவள் தானா என்று கேட்டாள் தமிழினி.

ஆம் அம்மா. இவள்தான் என்ற உறுதிப்படுத்தினார் அந்தத் துறவி.

உடனே எழிலரசிக்குத் திறன்பேசியில் அழைத்து இந்தச் செய்தியைச் சொன்னாள் தமிழினி. சொல்லும்போதே அவளது கண்களில் அவளை அறியாமல் கண்ணீர் ததும்பியது.

பேசிமுடித்ததும் அந்தத் துறவி ஆறுதல் சொன்னார்.

அழாதே மகளே, உன் வலியை என்னால் உணரமுடிகிறது.

நறுமணம் மிக்க சந்தனம் மலையில்தான் பிறக்கிறது. அதனால் அந்த மலைக்குப் பயன் உண்டா? பூசிக்கொள்பவருக்குத் தானே பயன்.

முத்து நீரில்தான் பிறக்கிறது. அதனால் நீருக்கு என்ன பயன்? அணிந்து கொள்பவருக்குத் தானே பயன்.

ஏழிசைப் பண் யாழில்தான் பிறக்கிறது. அந்தப் பண்ணால் யாழுக்கு என்ன பயன்? மீட்டிக் கேட்பவர்க்குத் தானே பயன்.

நன்றாக  எண்ணிப்பார். பெண்களின் வாழ்க்கையே செலவுதானே, செலவு என்றால் பயணம் என்றும் ஒரு பொருள் உண்டு அல்லவா. அவள் சென்றிருப்பதும் ஒரு பயணம் தானே. பிறந்தவீட்டை விட்டு இன்னொருவரோடு சென்று வாழ்வதுதானே இவர்களது வாழ்க்கை.

ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான். நாங்களே பார்த்து திருமணம் செய்துவைத்து அனுப்பி வைத்திருந்தால் அது மனதிற்கு நிறைவாக அமைந்திருக்கும். அவளே இந்த முடிவை எடுத்ததால் அவளது எதிர்காலம் எப்படியிருக்குமோ என்ற கேள்வி தான் மனதில் இத்தனை கலக்கத்திற்கும் காரணம் என்றாள் தமிழினி.

வருந்தாதே மகளே,

பெற்றோர் தம் பிள்ளைகளுக்குச் செய்த கடனைப் பிள்ளைகள் பெற்றொருக்குத் தம் வாழ்நாளில் திருப்பி செலுத்த முடியாது. அக்கடனை அவர்கள் தமது குழந்தைகளுக்குத் திருப்பிச் செலுத்துவார்கள். அவர்களின் குழந்தைகள் அவர்களின் குழந்தைகளுக்கு அந்தக் கடனைச் செலுத்துவார்கள். இதுதான் உலகத்தின் இயல்பு என்றார் துறவி.

இவர் சொல்வதும் உண்மைதானே என்று அந்தத் துறவியை வணங்கிவிட்டு திரும்பிவரும் தமிழினிக்கு எழிலரசியின் அம்மாவின் வலி புரிய ஆரம்பித்திருந்தது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக