பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வியாழன், 21 ஜனவரி, 2021

செந்நிலப் பெரு வழி...

 


பிரிவு என்பது உறவுகளுக்கிடையே இடைவெளியை ஏற்படுத்தலாம்.

அந்த இடைவெளியானது..

சிலருக்கு உடல்சார்ந்து மட்டுமே இருக்கலாம்.

சிலர் பிரிந்தாலும் உள்ளத்தால் இணைந்திருக்கலாம்.

ஆம், நினைத்துப் பார்த்தல் கூட ஒரு வகை சந்திப்புதானே..!

வள்ளுவர் பிரிவாற்றாமை என்றொரு அதிகாரமே வகுத்திருப்பார்.

பாலை நிலம் சார்ந்தே பிரிவு பெரிதும் பேசப்பட்டிருந்தாலும். அந்த பிரிவு தரும் வலி முல்லை நிலத்தில் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வள்ளுவர் காட்டும் தலைவி சொல்வதாக,

செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க்கு உரை (குறள் – 1151)

என்றொரு திருக்குறள் உண்டு. செல்லாவிட்டால் என்னிடம் சொல். நீ என்னைப் பிரிந்துசெல்வதென்றால் உனது வருகையை, உயிருடன் இருப்பவர்களிடம் சொல் என்கிறாள் இத்தலைவி.

இன்று பிரிவு இவ்வளவு பெரிதாகப் பார்க்கபடுவதில்லை. தொலைத் தொடர்பு வளர்சியும், போக்குவரத்து வசதிகளும் தூரத்தையும், நேரத்தையும் சுருக்கிவிட்டன.

அன்று தூரத்திலிருந்தாலும் நினைவுகளால் ஒன்றாக இருந்தனர்.

இன்று அருகிலிருந்தாலும் சமூகத்தளப் பயன்பாடுகளால் பிரிந்து வாழ்கிறோம்.

பிரிவு என்பது ஒருவர் உயிர்விடும் அளவுக்கு சொல்லப்படுவது அன்பின் ஆழத்தைக் காட்டவே ஆகும்.

அகநானூற்றில் முல்லைத் திணைப் பாடலில் தலைவன் சொல்லிச் சென்ற காலம் வந்தும் தலைவன் வாராமையால் வருந்தியிருக்கிறாள் தலைவி. மனதைத் தேற்றிக்கொண்டு எப்போது வருவான் என வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறாள். அவளின் துயரைக் கண்டு வருந்திய பாணன் தலைவியின் தோழியர் கேட்பச் சொல்லியதாக இப்பாடல் அமைகிறது. தலைவியின் நிலைகண்டு அவளுக்கு ஆறுதல் சொல்லமுடியாதவனாக யாழிசைத்துச் செல்லும் பாணன் தலைவனின் தேரின் வருகையைக் காண்பதாக இப்பாடல் அமைகிறது.

அகநானூறு - 14. முல்லை

அரக்கத் தன்ன செந்நிலப் பெருவழிக்

காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்

ஈயன் மூதாய் வரிப்பப் பவளமொடு

மணிமிடைந் தன்ன குன்றங் கவைஇய

அங்காட் டாரிடை மடப்பிணை தழீஇத்

திரிமருப் பிரலை புல்லருந் துகள

முல்லை வியன்புலம் பரப்பிக் கோவலர்

குறும்கொறை மருங்கின் நறும்பூ வயரப்

பதவுமேயல் அருந்து மதவுநடை நல்லான்

வீங்குமாண் செருத்தல் தீம்பால் பிலிற்றக்

கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதரு

மாலையும் உள்ளா ராயிற் காலை

யாங்கா குவங்கொல் பாண வென்ற

மனையோள் சொல்லெதிர் சொல்லல் செல்லேன்

செவ்வழி நல்யாழ் இசையினென் பையெனக்

கடவுள் வாழ்த்திப் பையுள் மெய்ந்நிறுத்

தவர்திறஞ் செல்வேன் கண்டனென் யானே

விடுவிசைக் குதிரை விலங்குபரி முடுகக்

கல்பொரு திரங்கும் பல்லார் நேமிக்

கார்மழை முழக்கிசை கடுக்கும்

முனைநல் லூரன் புனைநெடுந் தேரே.

                                                                  -ஒக்கூர் மாசாத்தனார்.

[பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.]

தோழி முதலானோரைப் பாங்காயினார் என்று அழைப்பதுண்டு.

செவ்வரக்கினைப் போன்ற சிவந்த நிலத்தில் செல்லும் பெருவழியில்

காயாம்பூவின் வாடிய பூக்கள் பரவிக்கிடக்கும்,

தம்பலப் பூச்சிகள் வரிசையாக ஊர்ந்துசெல்லும்,

பவளத்துடன் நீலமணி நெருங்கி இருந்ததைப் போன்று இருக்கும் குன்றுகள் 

சூழ்ந்த அழகிய காட்டின் அரிய வழிகளில் மடப்பமுடைய தம் பெண்மானைத் 

தழுவி, முறுக்கிய கொம்புகளை உடைய இரலை மான்கள்

புல்லை உண்டு தாவி மகிழ்கின்றன,

பசுவினங்களை முல்லை ஆகிய அகன்ற புலத்தில் பரவலாக மேயவிட்டு,

கோவலர்கள் சிறிய குன்றுகளின் பக்கங்களில் உள்ள நறுமணமுள்ள பூக்களைப் பறித்துச் சூடிக்கொண்டனர்,

அறுகம்புல்லை மேய்ந்தமையால் செருக்கான நடையுடைய 

நல்ல  வினங்கள் பருத்த மடியுடன் இனிய பாலைப் பொழிய, கன்றை 

நினைத்து அழைக்கும் குரலையுடையவாய் மன்றத்தில் கூட்டமாய்ப் புகும். 

அந்த மாலைக் காலத்திலும்  தலைவர் வரவில்லை எனின், காலையில் என்ன 

ஆவோமோ பாணனே! என்று சொன்ன தலைவியின் சொல்லுக்கு எதிர்ச்சொல் 

சொல்ல முடியாதவனாகி, செவ்வழிப் பண்ணை நல்ல 

யாழில்  இசைத்தவனாய் மெல்ல, கடவுளை வாழ்த்தி, துயரத்தை 

வெளிக்காட்டிஅவர் வரும்வழியே சென்றேன், விட்ட அம்பு போன்ற 

வேகத்தையுடைய குதிரையின் வேறுபட்ட ஓட்டம் அதிகரிக்க கற்களில் மோதி 

ஒலிக்கும் பல ஆரங்களைக்கொண்ட சக்கரம், கார்காலத்து மழையின்  

இடிமுழக்கின் ஒலியை போல முழங்க போர்முனையே தன் ஊராகக் கொண்ட 

தலைவனின் அலங்கரிக்கப்பட்ட நெடும் தேரினைக் கண்டேன் நானே என்று 

பாணன் உரைப்பதாக இப்பாடல் அமைகிறது.

இப்பாடல் வழியாக பிரிவில் ஏற்படும் வலியும், அன்பின் ஆழமும் உணர்த்தப்படுகிறது. எவ்வளவு துன்பத்தில் தலைவி வாடியிருந்தாலும் தலைவன் வந்துவிடுவான் என்று மனதைத் தேற்றிக்கொண்டு காத்திருக்கும் மாண்பு குறிப்பிடப்படுகிறது.


திங்கள், 18 ஜனவரி, 2021

காட்டு வழி... காட்டும் வழி...

 


சங்கப் பாடல்களுள் அகநானூற்றுப் பாடல்கள் பழந்தமிழரின் அகவாழ்வியலைச் சிறப்பாக எடுத்தியம்பியுள்ளன. அகவாழ்வில் களவு எனப்பட்ட காதலும், கற்பு எனப்பட்ட திருமணவாழ்வும் பல்வேறு நிலைகளில் எடுத்தியம்பப்பட்டுள்ளன. களவும் கற்று மற என்று சொன்ன நம் முன்னோர் மரபுகளை இலக்கியங்கள் வழி அறிந்துகொள்ளமுடிகிறது. காதல் என்றால் என்ன, காதல் என்பது எதுவரை? காதல்  வரைவாக மாறவேண்டிய காரணங்களையும் பாடல்களின் வழியாக அறியமுடிகிறது. இப்பாடலில், திருமணத்தைப் பற்றியே நினைக்காமல் ஒரு தலைவன் காதலித்துக்கொண்டிருக்கிறான். இரவு நேரத்தில் கூட தலைவியைக் காண கொடிய பாதையில் வருகிறான். அவன் தவறை அவனுக்கு உணர்த்தி, அவனைத் திருமணம் செய்துகொள்ளத் தூண்டுவதாக இப்பாடல் அமைகிறது.

 

இருள்கிழிப் பதுபோல் மின்னி வானம்

துளிதலைக் கொண்ட நளிபெயல் நடுநாள்

மின்மினி மொய்த்த முரவுவாய்ப் புற்றம்

பொன்னெறி பிதிரிற் சுடர வாங்கிக்

குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை

இரும்புசெய் கொல்லெனத் தோன்றும் ஆங்கண்

ஆறே அருமர பினவே யாறே

சுட்டுநர்ப் பனிக்கஞ் சூருடை முதலைய

கழைமாய் நீத்தம் கல்பொரு திரங்க

அஞ்சுவந் தமியம் என்னாது மஞ்சுசுமந்

தாடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்

ஈருயிர்ப் பிணவின் வயவுப்பசி களைஇய

இருங்களி றட்ட பெருஞ்சின உழுவை

நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த

மேய்மணி விளக்கின் புலர ஈர்க்கும்

வாள்நடந் தன்ன வழக்கருங் கவலை

உள்ளுநர் உட்கும் கல்லடர்ச் சிறுநெறி

அருள்புரி நெஞ்சமோ டெஃகுதுணை யாக

வந்தோன் கொடியனும் அல்லன் தந்த

நீதவ றுடையையும் அல்லை நின்வயின்

ஆனா அரும்படர் செய்த

யானே தோழி தவறுடை யேனே.

                     -எருமை வெளியனார் மகனார் கடலனார்.

அகநானூறு 72. குறிஞ்சி

 

தலைமகன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாகத் தலை மகள் தோழிக்குச் சொல்லியது.

தோழி தலைமகட்குச் சொல்லி யதூஉமாம்.

 

சிறைப்புறம் – இரவு நேரத்தில் தலைவியைக் காணத் தலைவன் வருவதுண்டு. இந்த சந்திப்பை இரவுக் குறி என்பர். தலைவன் தலைவியும் தோழியும் இருக்கும் இடத்திற்கு அருகில் மரத்தின் பின்னே மறைந்திருப்பான். அவன் மறைந்திருப்பதை தலைவியும் தோழியும் நன்கு அறிவார்கள். இருந்தாலும் அறியாதது போலவே தமக்குள் பேசிக்கொள்வார்கள். அவர்கள் பேசுவதைத் தலைவன் கேட்பான். தலைவனிடம் நேரடியாக சொல்லமுடியாத செய்திகளை இவ்வாறு இருவரும் பேசிக்கொள்ளும்போது அவனுக்குப் புரியவைப்பது சங்க கால மரபு.

     இந்தப் பாடலில் தலைவன் இரவில் தலைவியைச் சந்திக்க, கொடிய பாதையில் வருகிறான். அவன் வரும் பாதையோ கரடி, காட்டுப் பன்றி, கொடிய முதலை, பாம்பு என கொடிய விலங்குகள் வாழக்கூடியது. அவன் இவ்வாறு வந்து செல்வதால் தலைவி அடையும் துயரங்களை அவனுக்கு உணர்த்தி திருமணம் செய்துகொள்ளத் தூண்டுவதாக இப்பாடல் அமைகிறது.

 

இருளைக் கிழிப்பதுபோல் வானம் மின்னுகிறது.

மழை கொட்டி உடல் நடுங்கும் நடு இரவுப்பொழுதில்,

கரடி உணவுக்காகக் கறையான் புற்றைக் தோண்டும், அதிலிருந்து

மின்னமினிப் பூச்சிகள் பறக்கின்றன. அது கொல்லன் உலைக்களத்தில்ப் தீப்பொறி பறப்பது போல் காணப்படுகிறது.

தலைவன் வரும் வழியோ கொடுமையானது.

அவன் கடக்கும் ஆறோ நினைத்தாலே நடுங்கவைக்கும் கொடிய முதலைகளைக் கொண்டது.

படகு, தள்ளும் மூங்கிலை ஊன்றமுடியாத அளவுக்கு ஆற்றில் வெள்ளம் பெருகி வருகிறது.

தனியே வருகிறோமே என்று எண்ணாமல் தலைவன் அஞ்சாமல்

தலைவியைக் காண வருகிறான்.

மேகங்கள் மூடிக்கிடக்கும் மூங்கில் காட்டு மலைப்பிளவு வழியில்

வருகிறான். கருவை வயிற்றில் தாங்கிக்கொண்டு இரண்டு உயிருடன்

இருக்கும் தன் பெண் புலியின் பசியைப் போக்குவதற்காக, ஆண்புலியானது

ஆண் பன்றியைத் தாக்கி பாம்பு உமிழ்ந்த மணி வெளிச்சத்தில்

இழுத்துக்கொண்டு வருகிறது.

வாளின் கூர்மை போன்ற பாதையில் கையில் வேலுடன் அவன் வருகிறான். நினைத்தாலே  நடுங்கவைக்கும் கொடிய பாதையென்றாலும் உன்னைக் காணும் ஆவலுடன் உனக்கு அருள் புரிய வருகிறான்.

அப்படி வரும் அவனும் கொடியவன் இல்லை.

அவனுக்கு உன்னைத் தந்தாயே நீயும் கொடியவள் இல்லை.

உங்கள் இருவரையும் கூட்டிவைத்த நானே தவறு செய்தவள் ஆவேன்.

என்று சொல்கிறாள் தோழி.

 

உள்ளுறை

பெண் புலியின் பசியைப் போக்குவதற்காக, ஆண்புலி, ஆண் பன்றியைத் தாக்கி பாம்பு உமிழ்ந்த மணி வெளிச்சத்தில் இழுத்துக்கொண்டு வருகிறது.  என்ற கருத்தானது தலைவியைத் தலைவன் வரைவு மேற்கொள்ள அதாவது திருமணம் பேச வந்தால் கடுஞ்சொல் பேசாமல் தலைவி வீட்டார் ஏற்றுக்கொள்ளலாம் என்ற குறிப்பும் இதில் உள்ளுறையாக இடம்பெறுகிறது.

பெண் புலி – தலைவி, ஆண் புலி – தலைவன், பாம்பு உமிழ்ந்த மணியின் வெளிச்சம் – தலைவனுக்கு எதிர்பில்லாமல் தலைவியை வரைவு மேற்கொள்ளும் நல்ல வாய்ப்பைக் குறிக்கிறது.

இருங்களி றட்ட பெருஞ்சின உழுவை என்ற பாடலடிகளில் களிறு என்ற சொல்லானது யானையைக் குறிப்பதாகத் தோன்றினாலும், களிறு என்று இப்பாடலில் சுட்டப்பட்டது ஆண் பன்றியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

மேய்மணி விளக்கின் புலர ஈர்க்கும்என்ற அடிகளில் புலி யானையை இழுத்து செல்ல வாய்ப்பில்லை என்பதாலும், களிறு ஆண் விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல் என்பதால் ஆண்பன்றியையே புலவர் குறிப்பிட்டிருக்கலாம்.

 

சனி, 9 ஜனவரி, 2021

திருக்குறள் - அதிகாரம் - 133. ஊடலுவகை


 இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்

வல்லது அவர்அளிக்கு மாறு. - 1321

தவறின்றியும், தவறு காணுதல் அவா் அன்பை பெறும் வழியன்றோ 

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி

வாடினும் பாடு பெறும். - 1322

ஊடலால் வரும் சிறுதுன்பத்தால், அன்பு குறையினும் பெருமை பெறும்

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு

நீரியைந் தன்னார் அகத்து. - 1323

நிலத்துடன் நீர் சேர்ந்தது போன்றவருடன் ஊடுதலைவிட பேரின்பம் ஏது

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்

உள்ளம் உடைக்கும் படை.- 1324

கூடலுக்குக் காரணமான ஊடல் தான், என் மனவுறுதியை அழிக்கிறது  

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்

அகறலின் ஆங்கொன் றுடைத்து. - 1325

தவறின்றியும் அவள்மீது சிறுகோபம் கொண்டு நீங்கியிருத்தலும் சுகமே

உணலினும் உண்டது அறல்இனிது காமம்

புணர்தலின் ஊடல் இனிது. -1326

உண்பதைவிட செரித்தல் இனிது, கூடுவதைவிட ஊடுவது இனிது     

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்

கூடலிற் காணப் படும். - 1327

ஊடலில் தோற்றவரே வென்றார், அது கூடுதலில் வெளிப்படும்

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்

கூடலில் தோன்றிய உப்பு. -1328

கூடிப் பெறும் இன்பத்தை, இவளை ஒருமுறை ஊடிப் பின் பெறுவோமா

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப

நீடுக மன்னோ இரா. - 1329

அவள் ஊடியே இருக்கட்டும், அவளை வேண்டியே இவ்விரவு நீளட்டும் 

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின். - 1330

ஊடுவதே காமத்திற்கு இன்பம், கூடித் தழுவுதலே ஊடலுக்கு இன்பம்   

வெள்ளி, 8 ஜனவரி, 2021

திருக்குறள் - அதிகாரம் - 132. புலவி நுணுக்கம்


பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்

நண்ணேன் பரத்தநின் மார்பு.-1311

பல பெண்கள் உன்னைப் பார்ப்பதால் ஒழுக்கமில்லா உன்னை தழுவேன்

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை

நீடுவாழ் கென்பாக் கறிந்து.1312

ஊடியபோது தும்மினார், நீடு வாழ்க என யாம் வாழ்த்துவோம் என்று 

கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்

காட்டிய சூடினீர் என்று.-1313

மலர் சூடினாலும், யாருக்குக் காட்ட சூடினீர் என கோபம் கொள்வாள்   

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்

யாரினும் யாரினும் என்று. - 1314

யாவரையும் விட காதலுடையன் என்றாலும் யாரைவிட என ஊடுவாள்

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்நிறை நீர்கொண் டனள். - 1315

இப்பிறவியில் பிரியேன் எனினும், அடுத்தபிறவியை எண்ணி அழுவாள்

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்

புல்லாள் புலத்தக் கனள். -1316

உன்னை நினைத்தேன் என்றாலும், ஏன் மறந்தீர் என ஊடல்கொள்வாள்

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீர் என்று. - 1317

நினைப்பவள் நானிருக்க,யார் நினைத்து வந்தது தும்மல் என ஊடினாள் 

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்

எம்மை மறைந்திரோ என்று. - 1318

தும்மலை மறைத்தாலும், காதலியை மறைப்பதாக கோபம் கொள்வாள்

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர்

இந்நீரார் ஆகுதிர் என்று.- 1319

அவளை மகிழ்வித்தாலும், பிறரிடமும் இப்படி நடப்பீரோ என ஊடுவாள்

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும்நீர்

யாருள்ளி நோக்கினீர் என்று.-1320

அவளை ஆழ்ந்து நோக்கினும், யாருடன் ஒப்பிடுகிறீர் என சினப்பாள்

வியாழன், 7 ஜனவரி, 2021

திருக்குறள் - அதிகாரம் - 131. புலவி



புல்லா திராஅப் புலத்தை அவர் உறும்

அல்லல்நோய் காண்கம் சிறிது. - 1301

ஊடல் கொள்ளும்போது தழுவாமல் அவரை சிறிது துன்பம் செய்வோம்

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது

மிக்கற்றால் நீள விடல். - 1302

உணவில் உப்பினைப் போல அளவுடன் ஊடல் கொள்க

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்

புலந்தாரை புல்லா விடல். - 1303

ஊடல்கொண்டு கூடாமலிருப்பது துன்பத்தை மேலும் தருவது போன்றது

ஊடி யவரை உணராமை வாடிய

வள்ளி முதலரந் தற்று. - 1304

ஊடிக் கூடாமை, வாடிய கொடியை அடியோடு அறுத்தது போன்றது

நலத்தகை நல்லவர்ககு ஏஎர் புலந்தகை

பூஅன்ன கண்ணார் அகத்து. - 1305

மலர் போன்ற கண்களையுடைய மகளிரின் ஊடலும் ஆடவர்க்கு அழகு

துனியும் புலவியும் இல்லாயின் காமம்

கனியும் கருக்காயும் அற்று.- 1306

சிறு பிணக்கும், பெரும் பிணக்கும் இல்லாத காமம் பயனற்றது

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது

நீடுவ தன்று கொல் என்று.- 1307

கூடல் நீளுமா என்ற துன்பம் ஊடலில் தோன்றுவது இயல்பே    

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்

காதலர் இல்லா வழி. - 1308

நம்மீது அன்புடைய காதலர் இல்லாதபோது வருந்துவதால் பயனில்லை

நீரும் நிழலது இனிதே புலவியும்

வீழுநர் கண்ணே இனிது. - 1309

நீரும் நிழலும் போல அன்புடையோரிடம் கொள்ளும் ஊடலும் இனிது

ஊடல் உணங்க விடுவாரொடு என்நெஞ்சம்

கூடுவேம் என்பது அவா.- 1310

ஊடியபோது வாடவிட்டவரிடம், கூட நினைப்பது என் நெஞ்சின் ஆசை