வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 2 ஜனவரி, 2021

திருக்குறள் - அதிகாரம் - 127. அவர் வயின் விதும்பல்

 


வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற

நாளொற்றித் தேய்ந்த விரல். - 1261

அவரின் வழிபார்த்தே கண்களும், நாட்குறித்தே விரல்களும் தேய்ந்தன 

இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்

கலங்கழியும் காரிகை நீத்து. -1262

தோழி பிரிவால் வாடும் நான், அவரை மறந்தால்  மேலும் மெலிவேன்

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்

வரல்நசைஇ இன்னும் உளேன். - 1263

ஊக்கமுடன் போருக்குச் சென்றவரை, எதிர்பார்த்தே இன்னும் உள்ளேன்

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்

கோடுகொடு ஏறுமென் நெஞ்சு. - 1264

என்னுள் கலந்தவா் வருகையை, மரங்களின் உச்சியில் தேடும் நெஞ்சம்

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்

நீங்கும்என் மென்தோள் பசப்பு. - 1265

காதலரைக் கண்ணாரக் கண்டால் என் பசலை நோய் நீங்கும்

வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்

பைதல்நோய் எல்லாம் கெட.- 1266

ஒருநாள் வருவார் காதலர், அப்போது துன்பம் தீர இன்பம் துய்ப்பேன் 

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்

கண்அன்ன கேளிர் வரன்? - 1267

என்னவரைக் கண்டால் ஊடுவேனோ! தழுவுவேனோ! கூடுவேனோ

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து

மாலை அயர்கம் விருந்து. - 1268

வெற்றியுடன் வரும்நாளில், மனைவியுடன் விருந்துண்டு மகிழ்வோம்

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்

வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. - 1269

பிரிந்தவளுக்கு ஒருநாள்கூட ஏழுநாள் போலச் செல்லும்

பெறின்என்றாம் பெற்றக்கால் என்னாம் உறினென்றாம்

உள்ளம் உடைந்துக்கக் கால். -1270

பிரிவால் மனம்வாட பெற்ற வெற்றியால் பயன் இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக