வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 4 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 80. நட்பாராய்தல்

 


நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு. -791

நண்பரை தேர்ந்தபின் பிரிய இயலாது அதனால் ஆராய்ந்து நட்பு கொள்

ஆய்ந்தாய்த்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை   

தான்சாம் துயரம் தரும். - 792

ஆராயாமல் கொள்ளம் நட்பு அழிவிற்கே அடித்தளமாகும்           

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா

இனனும் அறிந்துயாக்க நட்பு. - 793

குணம், குடி, குற்றம், சுற்றம் ஆகியன ஆராய்ந்து நட்பு கொள்

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்

கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. - 794

நற்குடிப் பிறந்து பழிக்கு அஞ்சுவோரை எதைக் கொடுத்தும் நண்பராக்கு

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய

வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.- 795

அழவைத்தோ, அடித்தோ நல்வழி நடத்துவோரை நண்பராகக் கொள்க

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்.- 796

துன்பமே நண்பரையும், நட்பின் ஆழத்தையும் அளக்கும் நற்கருவி   

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்

கேண்மை ஒரீஇ விடல். - 797

ஒருவருக்கு ஊதியம் என்பது அறிவில்லாதாரின் நட்பை விடுவதே   

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க

அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.- 798

ஊக்கம் நீக்கும் செயல்களையும், துன்பத்தில் நீங்கும் நட்பையும் விடுக

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

உள்ளினும் உள்ளஞ் சுடும்.- 799

துன்பத்தில் உதவாத நட்பு சாகின்ற காலத்திலும் துன்பம் தரும்      

மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்

ஒருவுக ஒப்பிலார் நட்பு.- 800

நல்லார் நட்பை நீங்காதே, தீயோர் நட்பை ஒன்று கொடுத்தும் நீக்குக

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக