யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.- 341
எதிலிருந்தெல்லாம் நீங்குகிறோமோ அவற்றால்
துன்பங்கள் வராது
வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.- 342
இன்பம் பெற பொருளைத் துற, துறந்தபின் பெறும் இன்பம் பல
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு. - 343
ஆசைகளை வெல்ல ஐம்புலன்களை அடக்கவேண்டும்
இயல்புஆகும் நோன்பிற்குஒன்று இன்மை உடைமை
மயல்ஆகும் மற்றும் பெயர்த்து.- 344
பற்றற்ற நிலையே துறவு, சிறு பற்றும் மயக்க நிலையைத் தரும்
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.- 345
பிறப்பை அறுக்க நினைப்பவர் உடலையே சுமையாக
கருதுவா்
யான் எனது என்னுஞ் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.- 346
நான் என்ற உணா்வை கடந்தால் வீடுபேறு அடையலாம்
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.-347
பற்றுகளைப் பற்றியவரைத் துன்பங்கள் பற்றிக்கொள்ளும்
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர். - 348
முழுத் துறவிகள் மாயவலையில் வீழார்
பற்றுஅற்ற கண்ணே பிறப்புஅறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.- 349
ஆசையில்லாத நிலையே பிறவிப் பிணியைப் போக்கும்
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.- 350
பற்றற்று வாழ்பவர்களைப் பின்பற்றுவதே
வீடுபேறடையும் வழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக