வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 2 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 26.புலால் மறுத்தல்

 


தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்

எங்ஙனம் ஆளும் அருள். -  251

அருளுடையவன் புலால் உண்ணமாட்டான்

பொருள்ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள்ஆட்சி

ஆங்குஇல்லை ஊன்தின் பவர்க்கு.  - 252

பொருளைப் போல அருளைக் காக்க புலாலை மறுத்து வாழ்

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்று ஊக்காது ஒன்றன்

உடல்சுவை உண்டார் மனம்.- 253

போராளியைப் போல புலால் உண்பவனும் அன்பில்லாதவன்

அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்

பொருள் அல்லது அவ்வூன் தினல். - 254

கொல்லாமை அருள்! கொல்லுதலும், புலால் உண்பதும் பாவம்

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு. - 255

புலால் உண்ணாதவர் நரகம் செல்லமாட்டார்கள்

தினற்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்

விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். - 256

யாவரும் புலால் மறுத்தால் கறிக்கடைகள் இருக்காது

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்

புண்அது உணர்வார்ப் பெறின். - 257

புலால் இன்னொரு உயிரின் உடற்புண், அதை உண்பதை தவிர்

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்

உயிரின் தலைப்பிரிந்த ஊன்.- 258

அறிவுடையோர் உயிரைப் பிரிந்த ஊனை உண்ணமாட்டார்கள்

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று.- 259

வேள்வி செய்வதைவிட ஊன் உண்ணாமை நன்று

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும்.- 260

கொல்லாதவனை, புலால் மறுத்தவனை உயிர்கள் வணங்கும்

1 கருத்து: