கொள்ளிட நதியால் வளம்பெற்ற ஓர் ஊர் ஆதனூர். இவ்வூர்ச் சேரியிலே
அப்புலைப்பாடியில் வாழ்ந்தவர்களின் தலைவராக ‘நந்தனார்’ வாழ்ந்து வந்தார். அவர் சிறுவயதிலிருந்தே சிவபிரானிடத்து மிகுந்த அன்புடையவரானார். திருவடி நினைவன்றி மறந்தும்
மற்றைய நினைவு கொள்ளாதவர். கோயில் பேரிகைகளுக்காக போர்வைத்தோல், விசிவார் என்பன கொடுப்பார்.
அருச்சனைக்காக கோரோசனை என்ற வாசனைப் பொருள்
கொடுப்பார். பேரன்புப் பெருக்கால் ஆடுதலும் பாடுதலும் செய்வார்.
ஒருநாள் அருகேயுள்ள திருப்புன்கூருக்குச் சென்று வழிபட விரும்பினார்.
விருப்பம் போன்று சென்று வாயால் இசைபாடி நின்றார். அப்பொழுது சிவனை நேரில் கும்பிடவேண்டுமென்ற ஆசை
பெருகியது. அவரின் ஆசை தீர்ப்பதற்குப் பெருமான் நந்தியை விலகுமாறு செய்து
நேரே தரிசனம் அளித்தார். நேர்த்தரிசனம் பெற்றுப் பரவசத்தரான நந்தனார்
பணிந்தெழுந்து வீதிவலம் வரும்போது பள்ளமான ஓரிடத்தைக் கண்டார். அவ்விடம் குளம்
தோண்டுவதற்கு ஏற்ப இருப்பதைக் கண்டு குளம் அமைத்தார். பின் கோயிலை வலம் வந்து நடமாடி விடைபெற்று
தம் ஊர் சேர்ந்தார். இவ்வாறு அயலூர்களிலேயுள்ள திருகோயில்கள் பலவற்றிற்கும்
சென்று திருத்தொண்டு புரிந்துவந்த நந்தனாருக்கு ஒருநாள் தில்லை என்றழைக்கப்படும் சிதம்பரம் கோயிலைத் தரிசனம் செய்யும் ஆசை பெருகியது. அதனால் அன்றிரவு உறக்கமின்றிக் கழித்தார். விடிந்ததும்
தில்லைபதியின் பெருமையையும் தம்குலப்பிறப்பையும் நினைத்து செல்லாமல் தவித்தார். மீண்டும் ஆசை அளவின்றிப்
பெருகவே “நாளைப்போவேன்” என்று கூறி நாட்களைக்கழித்தார். இவ்வாறு செல்லவேண்டும் என்ற ஆசை ஒரு பக்கம், தமது பிறப்பு குறித்த எண்ணம் ஒரு பக்கம்
என எண்ணி வருந்தினார். ஒருநாள் தில்லைத் திருத்தல எல்லையைச்
சென்று சேர்ந்தார். சேர்ந்தவர் எல்லையில் வணங்கி நின்று அங்கு எழும்வேள்விப்
புகையைக் கண்டார். வேதம் ஓதும் ஒலியைக் கேட்டார். தாம் பிறந்த குலத்தினை நினைத்து
அதனுள்ளே புகுவதற்கு அஞ்சி நின்றார். ‘அந்தணர் மாளிகைகள் வேள்வி மண்டபங்கள்
நிறைந்த இவ்விடத்தில் எனக்கு அடைதல் அரிது’ என்று கைதொழுது வலங்கொண்டு சென்றார்.
இவ்வாறு இரவு பகல் தில்லைத் திருப்பதியை வீதி வலம்வந்தவர் சிதம்பரம் நடராசரை எவ்வாறு காண்பது என்று எண்ணி ஏக்கத்துடன் உறங்கினார். ‘இன்னல்தரும் இழிபிறப்பாகிய இது இறைவன் ஆடல் புரியும் பொன்னம்பலத்தை
வழிபடுவதற்குத் தடையாயுள்ளதே? என்று வருந்தித் துயில் கொள்பவராகிய நந்தனாரது வருத்தத்தை
நீக்கியருளத் எண்ணம் கொண்ட தில்லைக் கூத்தப் பெருமான், ‘என்று வந்தாய்’ என்னும் புன்முறுவற்
குறிப்புடன் நாளைப்போவாரது கனவில் தோன்றினார். “இப்பிறவி போய் நீங்க எரியினிடை நீ
மூழ்கி, முப்புரிநூல் மார்புடன் முன்னணைவாய்” என மொழிந்து, அவ்வண்ணமே வேள்வித்தீ அமைக்கும்படி
தில்லைவாழந்தணர்க்கும் கனவில் தோன்றி அருள்
புரிந்தார்.
1. பகர்ந்து உலகு சீர் போற்றும் பழைய வளம் பதியாகும்
திகழ்ந்த
புனல் கொள்ளிடம் பொன் செழுமணிகள் திரைக் கரத்தால்
முகந்து
தர இரு மருங்கும் முளரி மலர்க் கையேற்கும்
அகன்
பணை நீர் நல் நாட்டு மேற் காதாட்டு ஆதனூர்.
நீரினையுடைய கொள்ளிடம் என்ற ஆறு, பொன்னையும்
செழுமணிகளையும் அலைகளாகிய கையினால் முகந்துதர இரு பக்கங்களிலும் உள்ள தாமரைகளின்
மலர்க்கையினாலே அவற்றை ஏற்றுக்கொள்கின்ற இடமகன்ற வயல்களையுடை நன்மை தருகின்ற நீர்
நாட்டிலே மேற்கானாட்டின் உள்ள ஆதனூர் என்பது பழைய வளமான ஊராகும்.
2. நீற்று அலர் பேர் ஒளி நெருங்கும் அப்பதியின் நிறை கரும்பின்
சாற்று
அலைவன் குலை வயலில் தகட்டு வரால் எழப் பகட்டு ஏர்
ஆற்று
அலவன் கொழுக் கிழித்த சால் வழி போய் அசைந்து ஏறிச்
சேற்று
அலவன் கரு உயிர்க்க முருகு உயிர்க்கும் செழுங்கமலம்.
திருநீற்றின் பெரிய ஒளி நெருங்கி விளங்கும் அந்த ஊரில் நிறையும் கரும்புச் சாற்றில் அலையும்,
வரம்புகளையுடைய
வயலில், தகடு போன்ற வரால் மீன்கள் எழும்படி
எருமைகள் பூட்டிய ஏர் செல்லும் வழியில், கலப்பையினது வலியகொழுவினாற் கிழிக்கப்பட்ட படைச்சாலின்வழியே, மெல்ல அசைந்து மேலேறிச் சென்று, சேற்றில் வாழும் நண்டுகள் கரு ஈனச், செழுங்கமலங்கள் மலரும்.
3. நனை மருவும் சினை பொதுளி நறு விரை சூழ் செறி தளிரில்
தினகர
மண்டலம் வருடும் செழும் தருவின் குலம் பெருகிக்
கனம்
மருவி அசைந்து அலையக் களி வண்டு புடை சூழப்
புனல்
மழையோ மது மழையோ பொழிவு ஒழியா பூஞ்சோலை.
அரும்புகள் நிறைந்த கொம்புகள்
செறிந்து
மிக்க வாசனை சூழும் செறிந்த தளிர்களினால் ஞாயிற்றின் மண்டலத்தைத் தடவுகின்ற
செழித்த மரங்களின் கூட்டம் பெருகி, மேகங்களும்
பொருந்தி, அசைந்து அலைதலால், தேன் வண்டுகள் பக்கங்களிற் சூழ, மழையோ, தேன்மழையோ, ஒழியாமல் பெய்வன பூஞ்சோலைகள்.
4. பாளை விரி மணம் கமழும் பைங் காய் வன் குலைத் தெங்கின்
தாள்
அதிர மிசை முட்டித் தடம் கிடங்கின் எழப்பாய்ந்த
வாளை
புதையச் சொரிந்த பழம் மிதப்ப வண் பலவின்
நீளம்
முதிர் கனி கிழி தேன் நீத்தத்தில் எழுந்து உகளும்.
இளம் பாளைகள் விரிந்து மணங்கமழ்கின்றனவும், பசிய காய்களையுடைய வலிய குலைகளைக் கொண்டனவுமாகிய
தென்னை மரங்களின் அடிப்பாகத்தில் மரம் அசையுமாறு முட்டிப் பெரிய
நீர்ப்பள்ளங்களினின்றும் மேலெழும்பிப் பாய்ந்த வாளை மீன்கள், தாம் கீழே புதையச்சொரிந்த அத்தென்னைகளின்
நெற்றுக்கள் மிதக்கும்படி பலாமரங்களின் நீண்ட முதிர்ந்த கனிகள் கிழிந்து பெருகிய
தேனின் பெருக்கிலே அவ்வாளை மீன்கள் எழுந்து குதிக்கும்.
5. வயல் வளமும் செயல் படு பைந் துடவை இடை வரும் வளமும்
வியல்
இடம் எங்கணும் நிறைய மிக்க பெருந்திருவின ஆம்
புயல்
அடையும் மாடங்கள் பொலிவு எய்த மலிவு உடைத்தாய்
அயல்
இடை வேறு அடி நெருங்கக் குடி நெருங்கி உளது அவ்வூர்.
வயலின் வரும் வளங்களும், கைவினைச் செயல்களினால்
விளக்கப்படுகின்ற பசிய தோட்ட நிலங்களினின்றும் வரும் வளங்களும் மிக அகன்ற இடமெங்கும் நிறைய, அவற்றால் மிகுந்த பெரிய செல்வங்களை உடையனவாகி, மேகந்தவழுமளவும் உயர்ந்த அளவில்லாத
மாடங்கள் விளங்கப், பக்க இடங்களில் நெருங்கி மேலும்
குடிகள் பெருகும்படியாகக் குடிகளின் நெருக்கத்தினை உடையது அந்த ஆதனூர்.
6. மற்று அவ்ஊர்ப்புறம்
பணையின் வயல் மருங்குபெரும் குலையில்
சுற்றம்
விரும்பிய கிழமைத் தொழில் உழவர் கிளை துவன்றிப்
பற்றிய
பைங்கொடிச் சுரை மேல் படர்ந்த பழம் கூரை உடைப்
புல்
குரம்பைச் சிற்றில் பல நிறைந்து உளது ஓர் புலைப்பாடி.
அந்தவூரின் மற்று வெளிப்புறத்தில் மருத
நிலத்தினைச் சார்ந்த வயல்களின் பக்கத்து உள்ள வரம்புகளின் ஓரத்திலே, சுற்றந் தழுவுதலை விரும்பிய உரிமைத்
தொழிலாளராகிய உழவின் மக்களின் கிளைகள் நெருங்கிப், பற்றிய பசிய சுரைக்கொடி மேலே
படர்ந்த பழைய கூரையினையுடைய புல்லால் வேயப்பட்ட
சிற்றில்கள் பல நிலையாக
நெருங்கியுள்ளது ஒரு புலைப்பாடி.
7. கூர் உகிர் மெல்
அடி அலகின் குறும் பார்ப்புக் குழுச் சுழலும்
வார்
பயில் முன்றிலில் நின்ற வள் உகிர் நாய்த் துள்ளு பறழ்
கார்
இரும்பின் சரி செறிகைக் கரும் சிறார் கவர்ந்து ஓட
ஆர்
சிறு மென் குரைப்பு அடக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி.
கூரிய நகங்களையும் மெல்லிய அடியையும்
உடைய பெட்டைக்கோழியின் சிறிய குஞ்சுகளின் கூட்டம் அதனுடனே சுழலுதற்கிடமாகிய, வார்கள் பயின்றுள்ள முற்றத்திலிருந்த
வளைந்த நகங்களையுடைய நாய்களின் இளைய குட்டிகளைக் கரிய இரும்புக் காப்புக்களை
நெருங்க அணிந்த கரிய சிறுவர்கள் கவர்ந்து ஓட, அந்த நாய்க்குட்டிகளின் நிறைந்த
சிறிய மெல்லிய குரைப்பின் ஓசையை அச்சிறுவர்கள் இடையிற் கட்டிய இரும்புமணிச்
சதங்கைகள் அடக்கும்.
8. வன் சிறு தோல்மிசை உழத்தி மகவு உறக்கும் நிழல் மருதும்
தன்
சினை மென் பெடை ஒடுங்கும் தடம் குழிசிப் புதை நீழல்
மென்
சினைய வஞ்சிகளும் விசிப் பறை தூங்கு இன மாவும்
புன்
தலை நாய்ப் புனிற்று முழைப் புடைத்து எங்கும் உடைத்து எங்கும்.
வலிய
சிறுதோலின் மேல்
உழத்தியர் மகவைத் தூங்க வைக்கும் நிழலுடைய மருதமரங்களையும், தனது
முட்டைகளை அடைகாக்கும் பெட்டைக் கோழிகள் ஒடுங்குதற் கிடமாகிய பெரிய பானைகள்
புதைக்கப்பட்ட நிழல்தரும் மெல்லிய கொம்புகளையுடைய வஞ்சி மரங்களையும், வார்
கட்டிய பறைகளைத் தொங்கவைத்த மாமரங்களையும், சிறிய
தலையினையுடைய நாய்க்குட்டிகள் தங்குதற் கிடமாகிய தென்னை மரங்களையும்
அப்புலைப்பாடி தன்னிடத்தே எங்கும் உடையதாகும்.
9. செறி வலித் திண் கடைஞர் வினைச் செயல்புரிவை கறை யாமக்
குறி
அளக்க உளைக்கும் செங் குடுமி வாரணச் சேக்கை
வெறி
மலர்த் திண் சினைக் காஞ்சி விரி நீழல் மருங்கு எல்லாம்
நெறி
குழல் புன் புலை மகளிர் நெல் குறு பாட்டு ஒலி பரக்கும்.
மிக்க வலிமையுடைய திண்ணிய கடைஞர்கள்
உழவுத் தொழிலுக்குரிய செயல்களைச் செய்யத் தொடங்கவேண்டிய காலமாகிய வைகறையாமத்தின்
நேரத்தை அளந்துகாட்டி அவர்களைத் தொழிலிற் செலுத்துவதற்கு அழைக்கின்ற,
சிவந்த உச்சிக் கொண்டையினையுடைய
கோழிகள் தங்குமிடமாகிய,
வாசனை பொருந்திய குளிர்ந்த
கிளைகளையுடைய காஞ்சியின் விரிந்த நீழலின் பக்கங்களில் எல்லாம், நெறித்த குழலினையுடைய புன்புலை மகளிர்
நெல்லைக் குற்றும் பாட்டு ஒலி மிகுந்திருக்கும்.
10. புள்ளும் தண் புனல் கலிக்கும் பொய்கை உடைப் புடை எங்கும்
தள்ளும்
தாள் நடை அசையத் தளை அவிழ் பூங்குவளை மது
விள்ளும்
பைங்குழல் கதிர் நெல் மிலைச்சிய புன் புலைச்சியர்கள்
கள்
உண்டு களி தூங்கக் கறங்கு பறையும் கலிக்கும்.
பொய்கையின்
பக்கங்களெல்லாம் பறவைகளும்
குளிர்ந்த நீரில் ஒலிக்கும். தள்ளாடிச்
செல்கின்ற காலின் நடை அசைதலால் கட்டு விட்டு அலர்ந்த குவளை மலர்கள் தேனைச்
சொரிதற்கிடமாகிய பைங்கூந்தலிலே, நெற்கதிர்களைச்
சூடிய புலைச்சியர்கள், கள்ளினை உண்டு களியாட்டயர, அதற்கிசைய முழக்கப்படும் பறைகளும் ஒலிக்கும்.
11. இப்படித்து ஆகிய கடைஞர் இருப்பின் வரைப்பினின் வாழ்வார்
மெய்ப்பரிவு
சிவன் கழற்கே விளைத்த உணர்வு ஒடும் வந்தார்
அப்பதியில்
ஊர்ப் புலைமை ஆன்ற தொழில் தாயத்தார்
ஒப்பு
இலவர் நந்தனார் என ஒருவர் உளர் ஆனார்.
உண்மையன்பினைச் சிவன் திருவடிக்கே வழங்கிய முன் உணர்ச்சியொடு இவ்வுலகில் தோன்றிய நந்தனார், இவ்வாறாக உள்ள புலையர் சேரியில் வாழ்ந்து வந்தார். அவ்வூரில் ஊர்ப் புலைமையால் அமைந்த
தொழில் தாய உரிமையுடையவர். தமக்கு
வேறெவரு மிணையில்லாதவர் உள்ளவராயினார்.
12. பிறந்து உணர்வு
தொடங்கிய பின் பிறைக் கண்ணிப் பெருந்தகைபால்
சிறந்த
பெரும் காதலினால் செம்மை புரி சிந்தையராய்
மறந்தும்
அயல் நினைவு இன்றி வரு பிறப்பின் வழி வந்த
அறம்
புரி கொள்கையராயே அடித்தொண்டின் நெறி நின்றார்.
இவ்வுலகில் வந்து பிறந்து தம்முடைய உணர்வு
தெரியத் தொடங்கிய பின்னர், அந்நாள்
முதலாகப், பிறையாகிய கண்ணிமாலையைச் சூடிய
பெருந்தகையாம் சிவபெருமானிடத்துச் சிறப்புடைய பெரிய ஆசையினாலே செம்மையினை
விரும்பும் மனத்தையுடையவராகி, மறந்தாயினும்
வேறு நினைவு இல்லாதவராகித், தாம் பிறந்த மரபினுக்குரிய சிவதருமங்களைச்
செய்யும் கொள்கையையுடையவராகியே சிவனடித் தொண்டின் வழியிலே நிலைபெற்று நின்றனர்.
13. ஊரில் விடும் பறைத் துடவை உணவு உரிமையாக் கொண்டு
சார்பில்
வரும் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால்
கூர்
இலைய முக் குடுமிப் படை அண்ணல் கோயில் தொறும்
பேரிகையே
முதல் ஆய முகக் கருவி பிறவினுக்கும்.
ஊரில் விடப்பட்ட, வெட்டிமைத் தொழிலுக்குள்ள மானிய
நிலத்தின் வருவாயைத் தமக்கு உணவுக்கு ஆதரவாகக் கொண்டு, தமது பிறப்பின் சார்பினால் வரும்
தொழிலைச்செய்து வருவார், திருத்தொண்டினால்
தலைநின்றார்; கூர்மையாகிய இலைவடிவுடைய மூன்று தலைகளையுடையசூலப்படையேந்திய
சிவபெருமானுடைய திருக்கோயில்கள் தோறும் பேரிகை முதலாகிய முகமுடைய கருவிகள்
பிறவற்றுக்கும்.
14. போர்வைத் தோல் விசி வார் என்று இனையனவும் புகலும் இசை
நேர்
வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலை வகையில்
சேர்
உற்ற தந்திரியும் தேவர் பிரான் அர்ச்சனை கட்கு
ஆர்வத்தின்
உடன் கோரோசனையும் இவை அளித்து உள்ளார்.
போர்வைத் தோலும்; விசிவாரும், மற்றும் இவ்வாறாகிய பிற சாதனங்களும், இசை பேசுகின்ற நேர்மையுடைய
வீணைக்கும் யாழுக்கும் அவ்வற்றுக்கேற்ற வகையிற் பொருத்தமுற்ற தந்திரியும், அன்புடனே தேவர் பெருமானுடைய அருச்சனைகளுக்குரிய
கோரோசனை என்ற வாசனைப் பண்டம் முதலிய
பொருள்களும் அளித்துள்ளார்.
15. இவ் வகையால் தம் தொழிலின் இயன்ற வெலாம் எவ்விடத்தும்
செய்வனவும்
கோயில்களில் திரு வாயில் புறம் நின்று
மெய்
விரவு பேரன்பு மிகுதியினால் ஆடுதலும்
அவ்
இயல்பில் பாடுதலுமாய் நிகழ்வார் அந்நாளில்.
இவ்வகையாலே தமது தொழிலில் இயன்ற
அளவு எல்லாவற்றையும் எவ்விடத்திலேயும் செய்வனவும் திருக்கோயிலின் திருவாயிற்
புறத்தே நின்று, உண்மை பொருந்திய பேரன்பின் மிகுதிப்பாட்டினாலே, ஆடுவதும்,
பாடுவதுமாக நிகழ்ந்துவரும் அந்நாளில்.
16. திருப் புன்கூர்ச் சிவலோகன் சேவடிகள் மிக நினைந்து
விருப்பினொடும்
தம் பணிகள் வேண்டுவன செய்வதற்கே
அருத்தியினால்
ஒருப்பட்டு அங்கு ஆதனூர் தனில் நின்றும்
வருத்தம்
உறும் காதலினால் வந்து அவ்வூர் மருங்கு அணைந்தார்.
திருப்புன்கூரில்
எழுந்தருளியிருக்கும் சிவனுடைய செம்மையாகி திருவடிகளை மிகவும் நினைந்து விருப்பத்தோடும் தாம் வேண்டிய
திருப்பணிகளைச் செய்வதற்கே ஆசையினால், அங்கு ஆதனூரிலிருந்து
புறப்பட்டு, சிவன்மீது கொண்ட பக்தியால்
அந்தத் தலத்தை அடைந்தார்.
17. சீர் ஏறும் இசை பாடித் திருத் தொண்டர் திரு வாயில்
நேரே
கும்பிட வேண்டும் என நினைந்தார்க்கு அது நேர்வார்
கார்
ஏறும் எயில் புன் கூர்க் கண் நுதலார் திரு முன்பு
போர்
ஏற்றை விலங்க அருள் புரிந்து அருளிப் புலப்படுத்தார்.
சீர் ஏறும் இசையினைப் பாடித் திருத்தொண்டராகிய நந்தனார், திருவாயிலின் நின்றுகொண்டு இறைவரை
நேரே கண்டு கும்பிடவேண்டுமென்று நினைந்தவர்க்கு அவ்வாறே அருள்புரிவாராய், மேகங்கள் ஏறிச் செல்லும் மதில் சூழ்ந்த
திருப்புன்கூர்ச் சிவலோகநாதர், தம்
முன்பே இருக்கும் போர்வல்ல நந்தியை விலகியிருக்கும்படி ஆணையிட்டருளித் தம்மை நந்தனாருக்கு நேர்
காட்சிப் புலப்படும்படி செய்தார்.
18. சிவலோகம் உடையவர் தம் திரு வாயில் முன் நின்று
பவ
லோகம் கடப்பவர் தம் பணிவிட்டுப் பணிந்து எழுந்து
சுவல்
ஓடுவார் அலையப் போவார் பின்பு ஒரு சூழல்
அவ
லோடும் அடுத்தது கண்டு ஆதரித்துக் குளம் தொட்டார்.
சிவலோகநாதருடைய கோயில் திருவாயின்
முன் நின்று கொண்டு உலகிற் பிறவியைக் கடக்கும் சிவநெறி நின்றவராகிய நந்தனார், இறைவனை வழிபடும் திருப்பணியை
முடித்துக் கொண்டு, பணிந்து எழுந்து, முதுகில் வார்கள் அலையும்படி
செல்பவர், அத்திருக்கோயிலினை அடுத்துப் பின்புறமாக
ஒரு இடம் பள்ளமாக அமைந்திருத்தலைக் கண்டு,விருப்பத்துடன் அதனைக் குளமாகத்
தோண்டினார்.
19. வடம் கொண்ட பொன் இதழி மணி முடியார் திரு அருளால்
தடம்
கொண்ட குளத்து அளவு சமைத்து அதற்பின் தம் பெருமான்
இடம்
கொண்ட கோயில் புறம் வலம் கொண்டு பணிந்து எழுந்து
நடம்
கொண்டு விடை கொண்டு தம் பதியில் நண்ணினார்.
தொடர்பாக மலரும் பொன்னிறமுடைய கொன்றை
மலரைச்சூடிய அழகிய திருமுடியினையுடைய சிவனது
திருவருளினாலே, இடமகன்ற குளத்துக்குத் தக்க அளவுப்படி
தோண்டிய பின்பு, தம் பெருமான் எழுந்தருளிய
திருக்கோயிலைப் புறத்தே வலமாகச்
சூழ்ந்து வந்து, பணிந்து,
எழுந்து, ஆனந்தக் கூத்தாடி, விடைபெற்றுக்கொண்டு தமது ஊரில்
சேர்ந்தனர்.
20. இத் தன்மை ஈசர் மகிழ் பதி பலவும் சென்று இறைஞ்சி
மெய்த்
திருத் தொண்டு செய்து விரவுவார் மிக்கு எழுந்த
சித்தம்
ஒடும் திருத் தில்லைத் திரு மன்று சென்று இறைஞ்ச
உய்த்த
பெரும் காதல் உணர்வு ஒழியாது வந்து உதிப்ப.
ஈசர் மகிழ்ந்தெழுந்தருளியிருக்கும் தலங்கள்
பலவற்றையும் இத்தன்மையிற் போய், வணங்கி, உண்மையான திருத் தொண்டினைச் செய்து
வாழ்பவர், அன்புமேன்மேல் எழுந்த சித்தத்துடனே, சிதம்பரம் நடராசரைச்சென்று வணங்குவதற்கு பெருத்தஆசையுடைய
உணர்ச்சியானது நீங்காமல் வந்து உதித்தது,
21. அன்று இரவு கண்
துயிலார் புலர்ந்து அதன்பின் அங்கு எய்த
ஒன்றி
அணை தரு தன்மை உறு குலத்தோடு இசைவு இல்லை
என்று
இதுவும் எம்பெருமான் ஏவல் எனப் போக்கு ஒழிவார்
நன்று
எழும் காதல் மிக நாளைப் போவேன் என்பார்.
அன்றிரவில் உறங்காதவராயினர் விடிந்த
பின்பு, "அத்
திருத்தலத்தில் சேரும் தன்மை எனது குலத்தினோடு பொருந்துவதில்லை" என்று
எண்ணியவர், "இவ்வெண்ணமும் எமது பெருமானுடைய ஏவலே"
என்று அங்குப்போகும் முயற்சியை ஒழித்திடுவார். அதன்பின்பு
நன்மையாக எழுகின்ற ஆசை மேன்மேல் அதிகரிக்க "நாளைப்போவேன்" என்பார்;
22. நாளைப் போவேன் என்று நாள்கள் செலத் தரியாது
பூளைப்
பூவாம் பிறவிப் பிணிப்பு ஒழியப் போவாராய்ப்
பாளைப்
பூங்கமுகு உடுத்த பழம் பதியின் நின்றும் போய்
வாளைப்
போத்து எழும் பழனம் சூழ் தில்லை மருங்கு அணைவார்.
இவ்வாறு "நாளைப்போவேன்"
என்று பல நாள்களும் கழிய, மனம்
தரியாது, பூளையின் பூப்போன்ற பிறவியாகிய
கட்டு நீங்கப், போவதற்குத் துணிந்தாராகிப், பாளைகளிற் பூக்கள் நிறைந்த கமுகுகள்
சூழ்ந்த அந்தப் பழம்பதியினின்றும் போய்,ஆண் வாளை மீன்கள் எழுந்து பாய்வதற் கிடமாகிய வயல்கள் சூழ்ந்த
திருத்தில்லையின் பக்கத்தில் சென்று சேர்ந்தார்,
23. செல்கின்ற
போழ்து அந்தத் திரு எல்லை பணிந்து எழுந்து
பல்கும்
செந்தீ வளர்த்த பயில் வேள்வி எழும் புகையும்
மல்கு
பெரும் இடை ஓதும் மடங்கள் நெருங்கினவும் கண்டு
அல்கும்
தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார்.
செல்கின்றபோது, அதன் திருவெல்லையினைப் பணிந்து, எழுந்து பெருகும் செந்தீயினை வளர்க்கும்
பயில்கின்ற வேள்விகளில் எழுகின்ற புகையினையும், பொருந்திய பெருங்கிடைகள் மறைகளை
ஓதுகின்ற மடங்கள் அணியனவாதலையும் கண்டு, கீழாகிய தமது குலத்தினை நினைந்தே, பயந்து, மேலும் செல்லாமல் நின்றனர்
24. நின்றவர் அங்கு எய்து அரிய பெருமையினை நினைப்பார் முன்
சென்று
இவையும் கடந்து ஊர் சூழ் எயில் திருவாயிலைப் புக்கார்
குன்று
அனைய மாளிகைகள் தொறும் குலவும் வேதிகைகள்
ஒன்றிய
மூவாயிரம் அங்கு உள என்பார் ஆகுதிகள்.
அவ்வாறு நின்றவராகிய நந்தனார், அங்குத்தாம் சென்று
சேர்வதற்கரியதாகிய பெருமையினை நினைத்து, "இதற்கு மேல், முன்
சென்று, இவற்றையுங் கடந்து ஊரைச்சுற்றிச்
சூழ்ந்த திருமதிலின்றிருவாயிலிற் புகுந்தால் அங்கு மலைபோன்ற மாளிகைகள் தோறும் குலவிய
வேதிகைகளுடன் பொருந்திய மூவாயிரம் ஆகுதிகள் உள்ளன என்று சொல்வார்கள்;"
25. இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல் அரிது என்று அஞ்சி
அப்பதியின்
மதில் புறத்தின் ஆராத பெருங் காதல்
ஒப்ப
அரிதாய் வளர்ந்து ஓங்க உள் உருகிக் கை தொழுதே
செப்ப
அரிய திரு எல்லை வலங் கொண்டு செல்கின்றார்.
இத்தன்மையாய் இருக்க, அதனால் அங்குச் சென்று பொருந்துதல்
எனக்கு அரிதாகும்" என்று அஞ்சி, அத்திருப்பதியின் மதிலின் புறத்திலே அடங்காத பெருங்காதல் ஒப்பரிதாக
மேன்மேல் வளர்ந்து ஓங்க, மனம்
உள்ளுருகிக் கைகளால் தொழுதே, சொல்லுதற்கரிதாகிய அத்திருநகரினைத் திருவெல்லையிலேயே
வலமாக வந்தார்.
26. இவ் வண்ணம் இரவு பகல் வலம் செய்து அங்கு எய்து அரிய
அவ்
வண்ணம் நினைந்து அழிந்த அடித் தொண்டர் அயர்வு எய்தி
மை
வண்ணத் திரு மிடற்றார் மன்றில் நடம் கும்பிடுவது
எவ் வண்ணம்
என நினைந்தே ஏசறவின் ஒடும் துயில்வார்.
இவ்வாறு இரவும் பகலும் வலஞ்செய்து, அங்குச் சென்று சேர்தற்கரியதாகிய
அத்தன்மையை நினைந்து, மனம் அழிந்த அடித்தொண்டர் அயர்ந்து, "கருமையாகிய திருமிடற்றினையுடைய
சிவபெருமானது திருவம்பலத் திருநடனத்தைக் கும்பிடுவது எப்படி?" என்று நினைந்தே துக்கத்தோடும் உறங்கினார்,
27. இன்னல் தரும் இழி பிறவி இது தடை என்றே துயில்வார்
அந்
நிலைமை அம்பலத்துள் ஆடுவார் அறிந்து அருளி
மன்னு
திருத் தொண்டர் அவர் வருத்தம் எலாம் தீர்ப்பதற்கு
முன்
அணைந்து கனவின் கண் முறுவல் ஒடும் அருள் செய்வார்.
துன்பந்தரும் இழிந்த இப்பிறவியே அதற்குத்
தடையாகவுள்ளது" என்றே உட்கொண்டு துயில்வாராயினர். அந்த நிலைமையினைத்
திருவம்பலத்தினுள் ஆடுகின்றவராகிய அம்பலவாணர் அறிந்தருளி, நிலைபெற்ற அந்தத் திருத்தொண்டருடைய
வருத்தங்கள் எல்லாவற்றையும் தீர்ப்பதற்காக அவர் முன்பு கனவினிடத்து அணைந்து, புன்முறுவல் புரிந்தார்,
28. இப் பிறவி போய் நீங்க எரியின் இடை நீ மூழ்கி
முப்புரி
நூல் மார்பர் உடன் முன் அணைவாய் என்ன மொழிந்து
அப்
பரிசே தில்லை வாழ் அந்தணர்க்கும் எரி அமைக்க
மெய்ப்
பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார்.
இப்பிறவி போய் நீங்கும்படி தீயினிடத்து
நீ முழுகிப் பூணூலணிந்த மார்பினையுடைய வேதியர்களுடனே முன் அணைவாயாக" என்று
கூறியருளி, மெய்ப்பொருளாகிய இறைவர், அவ்வாறே சேர்ந்தனர்.
29. தம்
பெருமான் பணி கேட்ட தவ மறையோர் எல்லாரும்
அம்பலவர்
திருவாயின் முன்பு அச்சமுடன் ஈண்டி
எம்பெருமான்
அருள் செய்த பணி செய்வோம் என்று ஏத்தித்
தம்
பரிவு பெருக வரும் திருத் தொண்டர் பால் சார்ந்தார்.
தமது
பெருமானது கட்டளையைக்கேட்ட தவ மறையோர்களாகிய தில்லை வாழந்தணர்கள் யாவரும், அம்பலவாணரது திருவாயிலின் முன்பு அச்சத்தோடு
வந்து சேர்ந்து "எமது பெருமான் திருவருள் புரிந்த
ஏவலைச் செய்வோம்" என்று துதித்துச்சென்று, தம் அன்பு பெருக வருவாராகிய திருத்தொண்டரிடம்
சேர்ந்தார்கள்.
30. ஐயரே அம்பலவர் அருளால் இப் பொழுது அணைந்தோம்
வெய்ய
அழல் அமைத்து உமக்குத் தர வேண்டி என விளம்ப
நையும்
மனத் திருத் தொண்டர் நான் உய்ந்தேன் எனத் தொழுதார்
தெய்வ
மறை முனிவர்களும் தீ அமைத்த படி மொழிந்தார்.
ஐயரே! அம்பலவர் வெவ்விய அழல் உமக்கு
அமைத்துத் தரும்படி அருளியபடியால் இப்பொழுது உம்மிடம்வந்தோம்" என்று சொல்ல, நையும் மனத்தினையுடைய திருத்தொண்டராகிய
நந்தனார் "நான் உய்ந்தேன்" என்று தொழுதனர். தெய்வமறை முனிவர்களும்
அவ்வாறே தீயமைத்த செய்தியைத் தெரிவித்தார்கள்.
31.மறையவர்கள்
மொழிந்து அதன் பின் தென் திசையின் மதில் புறத்துப்
பிறை
உரிஞ்சும் திருவாயில் முன்பாக பிஞ்ஞகர் தம்
நிறை
அருளால் மறையவர்கள் நெருப்பு அமைத்த குழி எய்தி
இறையவர்
தாள் மனம் கொண்டே எரி சூழல் வலம் கொண்டார்.
மறையவர்கள் அவ்வாறு அறிவித்தபின், தென்றிசை மதிற்புறத்தில் உள்ள வான
மதிதடவ உயர்ந்த திருவாயிலின் முன், சிவபெருமானுடைய நிறைந்த பேரருளினால், மறையவர்கள் நெருப்பினை அமைத்த
தீக்குழியினை அடைந்து,
இறைவரது திருவடிகளை மனத்துட் கொண்டே
எரியினைச் சுற்றி வலமாக வந்தவராகி,
32. கை தொழுது நடம் ஆடும் கழல் உன்னி அழல் புக்கார்
எய்திய
அப் பொழுதின் கண் எரியின் கண் இம்மாயப்
பொய்
தகையும் உருவு ஒழித்துப் புண்ணிய மா முனி வடிவாய்
மெய்
திகழ் வெண் நூல் விளங்க வேணி முடி கொண்டு எழுந்தார்.
கைகளைக் கூப்பித்தொழுது ஐந்தொழிற்றிருக்
கூத்தியற்றியருளும் திருப்பாதத்தை நினைந்து தீயினுட் புகுந்தார்; சேர்ந்த அப்பொழுது தீயினிடத்து இந்த
மாயா காரியமாகிய பொய் பொருந்திய உருவினை ஒழித்துப் புண்ணிய உருவமுடைய முனிவர்
வடிவம்கொண்டு, மார்பில் வெண்புரிநூல் விளங்கச்
சடைமுடியும் கொண்டு மேலெழுந்தனர்.
33. செந்தீ மேல் எழும் பொழுது செம்மலர் மேல் வந்து எழுந்த
அந்தணன்
போல் தோன்றினார் அந்தரத்து துந்துபி நாதம்
வந்து
எழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்துப்
பைந்
துணர் மந்தாரத்தின் பனி மலர்மாரிகள் பொழிந்தார்.
அவ்வாறு செந்தீயின்மேல் வந்து எழுகின்றபோது
செம்மலரின்மேல் வந்து எழுந்த அந்தணன் போலத் தோன்றினார். அப்பொழுது பெரிய ஆகாயத்தில் வான துந்துபி
முழக்கம் எழுந்தது; தேவர்கள் மகிழ்ந்து ஆரவாரித்துப் புதிய
இதழ்களை உடைய மந்தாரத்தின் புதுமலர்மழை பொழிந்தனர்.
34. திரு உடைய தில்லைவாழ் அந்தணர்கள் கை தொழுதார்
பரவு
அரிய தொண்டர்களும் பணிந்து மனம் களி பயின்றார்
அரு
மறை சூழ் திரு மன்றில் ஆடுகின்ற கழல் வணங்க
வருகின்றார்
திரு நாளைப் போவாராம் மறை முனிவர்.
திருவுடைய தில்லைவாழந்தணர்கள்
கைகூப்பித் தொழுதனர்; போற்றற்கரிய சிறப்புடைய
திருத்தொண்டர்கள் பணிந்து மனமிகக் களிப்படைந்தனர். அரிய வேதங்கள் சூழ்ந்து துதிக்கும் திருமன்றில்
அருட்பெருந் திருக்கூத்தாடுகின்ற திருப் பாதத்தை வணங்கும் பொருட்டுத்
திருநாளைப் போவாராகிய மறைமுனிவர் வருகின்றார்.
35. தில்லை வாழ் அந்தணரும் உடன் செல்லச் சென்று எய்திக்
கொல்லை
மான் மறிக் கரத்தார் கோபுரத்தைத் தொழுது இறைஞ்சி
ஒல்லை
போய் உட்புகுந்தார் உலகு உய்ய நடம் ஆடும்
எல்லையினைத்
தலைப்பட்டார் யாவர் களும் கண்டிலர் ஆல்.
தில்லைவாழந்தணர்களும் உடன்வரச்சென்று
திருநகரத்தின் உள்ளே சேர்ந்து, கொல்லை
மானை ஏந்திய கையினையுடைய சிவபெருமானது திருக்கோபுரத்தைத் தொழுது வணங்கி விரைந்து
போய் உள்ளே புகுந்தனர். உலகெலாம் உய்யும் பொருட்டு அருட் கூத்தாடுகின்ற
எல்லையினைத் தலைப்பட்டனர். அதன்பின் அவரை யாரும் கண்டிலர்.
36. அந்தணர்கள் அதிசயித்தார் அருமுனிவர்
துதி செய்தார்
வந்து
அணைந்த திருத் தொண்டர் தம்மை வினை மாசு அறுத்துச்
சுந்தரத்
தாமரை புரையும் துணை அடிகள் தொழுது இருக்க
அந்தம்
இலா ஆனந்தப் பெருங்கூத்தர் அருள் புரிந்தார்.
அந்தணர்கள் அதிசயித்தனர். அரிய முனிவர்கள் துதித்தனர்; தம்மை வந்தடைந்த திருத்தொண்டரை வினைமாசு
அறுத்து அழகிய தாமரை போலும் துணையடிகளைத் தொழுதுகொண்டு இருக்கும்படி அந்தமில்லாத
ஆனந்தப் பெருங் கூத்தராகிய அம்பலவாணர் திருவருள் புரிந்தார்.
37. மாசு உடம்பு விடத் தீயின் மஞ்சனம் செய்து அருளி எழுந்து
ஆசுஇல்
மறை முனி ஆகி அம்பலவர் தாள் அடைந்தார்
தேசு
உடைய கழல் வாழ்த்தித் திருக் குறிப்புத் தொண்டவினைப்
பாசம்
அற முயன்றவர்தம் திருத் தொண்டின் பரிசு உரைப்பாம்.
மாசு பொருந்திய உடம்பினை விடும்பொருட்டுத் தீயிலே குளித்தருளி மேல் எழுந்து குற்றமற்ற மறைமுனிவராகி அம்பலவாணரின் திருவடியடைந்தாரது தேசுடைய திருவடிகளை வாழ்த்தி, அத்துணையானே திருக்குறிப்புத் தொண்டர் என்கின்ற வினைப்பாசம் போக்க முயன்றவருடைய திருத்தொண்டின் பரிசினை இனி உரைப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக