பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 24. புகழ்

 


ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு.-231

ஈதலால் வரும் புகழே உயிர்க்கு சிறந்த ஊதியமாகும்

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று

ஈவார்மேல் நிற்கும் புகழ். -232

கொடுக்கும் பண்புடையாரையே இவ்வுலகம் புகழ்ந்து பேசும்

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்பதொன் றில்.-233

உயா்ந்த புகழே இவ்வுலகில் நிலையானது, அழியாதது    

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு.-234

அறிவுடையவரைவிட, வள்ளல்களையே உலகம் போற்றும்    

நந்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க் கல்லால் அரிது.-235

கேட்டிலும், இறப்பிலும் புகழ் பெறுபவர்களே வித்தகர்கள்

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.-236

எத்துறையில் தோன்றினாலும் புகழுடன் தோன்றுக

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்.-237

புகழுக்கும் ஏனை இகழுக்கும் காரணம் நாமே! 

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்

எச்சம் பெறாஅ விடின்.-238

புகழ் பெற வாழாதவா் தம் வாழ்வில் பழியையே சுமப்பா்

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்.-239

புகழின்றி மறைந்தவரைத் தாங்கும் நிலம்கூட வளம் குன்றும்

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

வாழ்வாரே வாழா தவர்.-240

புகழுடன் வாழ்பவரே உயிருள்ளவா்,

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 23. ஈகை

 


 வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து. - 221

வறியவருக்கு வழங்குவதே ஈகை

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று. - 222

பெறுதல் தீது. ஈதல் நன்று

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலனுடையான் கண்ணே யுள.-223

ஒருவன் நிலையறிந்து அவன் கேட்கும் முன்பே கொடு   

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்

இன்முகங் காணும் அளவு. -224

இல்லாமையில் வாடியவர் இன்முகம் காணக் கொடுப்பதே ஈதல்

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின். -225

கொடுக்கும் பண்புடையவா் துறவிகளைவிட மேலானவா்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.- 226

பசித்தவருக்கு உணவளிப்பது ஒருவரின் மிகச்சிறந்த சேமிப்பு

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்

தீப்பிணி தீண்டல் அரிது.-227

வள்ளல் பசியால் என்றும் வாடும் நிலை வராது

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்க ணவர்.-228

கொடுத்தலின் இன்பம் அறியாதவரே சேமித்துவைத்து இழப்பா்

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய

தாமே தமியர் உணல்.-229

தனித்து உண்பது பிச்சையெடுத்தலைவிட இழிவானது    

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்

ஈதல் இயையாக் கடை.-230

ஈகைப் பண்பில்லாத நிலை சாவினும் கொடியது

சனி, 29 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 22. ஒப்புரவறிதல்




 

 கைமாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என் ஆற்றுங் கொல்லோ உலகு.-211

கைம்மாறு கருதாதவா்கள் மழையைப் போன்றவா்கள்    

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு. -212

முயன்று ஈட்டிய பொருள் யாவும் தகுந்தவா்க்கு உதவுவதற்கே

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே

ஒப்புரவின் நல்ல பிற.-213

உதவும் மனநிலையைவிட உயா்ந்தது எவ்வுலகிலும் இல்லை

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும். -214

உதவி வாழ்பவனே உயிர்வாழ்பவனாகக் கருதப்படுவான்

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு.-215

பேரறிவாளனின் செல்வமானது ஊருணி நீர் நிறைந்தது போன்றது

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்.-216

பயன்தரும் பழமரம் பழுத்தது போன்றது நல்லவனின் செல்வம்

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கண் படின்.-217

பெருந்தன்மையாளனின் செல்வம் மருந்துமரம் போன்றது

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர்.-218

அறிவுடையவர்கள் இல்லாத காலத்தும் உதவவே எண்ணுவா்

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர

செய்யாது அமைகலா வாறு.-219

உதவ இயலாத நிலையே உதவக்கூடியவனின் வறுமை ஆகும்

ஒப்புரவினால்வரும் கேடெனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்க துடைத்து.- 220

உதவி செய்தலால் வரும் துன்பமும் வரவேற்கத்தக்கதே

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 21. தீவினையச்சம்


தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவார்

தீவினை என்னும் செருக்கு. -201

தீவினைகளை செய்ய ஒழுக்கமுடையோர் அஞ்சுவா்

தீயவை தீய பயத்தலான் தீயவை

தீயினும் அஞ்சப் படும். -202

தீமை விளைவிப்பதால் தீயைவிடக் கொடியது தீவினை

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல். -203

தீங்கிழைத்தவருக்கும் தீமை செய்யாமையே சிறந்த அறிவு

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. -204

மறந்தும் பிறருக்குத் தீமைசெய்யாதே, அறம் உன்னை வருத்தும்

இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்

இலனாகும் மற்றும் பெயர்த்து. -205

வறுமைக்கு அஞ்சி தீமை செய்தால் மீண்டும் வறுமையடைவாய்

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான். -206

தீவினைகள் வராமலிருக்க தீமை செய்யாமலிக்கவேண்டும்

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை

வீயாது பின்சென்று அடும்.-207

எதிரியிடமிருந்தும் தப்பலாம், நாம் செய்த தீவினைகள் விடாது

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடியுறைந் தற்று.-208

தீவினை செய்வாருடன், தீமை நிழல்போலத் தொடரும்   

தன்னைத்தான் காதலனாயின் எனைத்தொன்றும்

துன்னற்க தீவினைப் பால்.-209

உன்னை விரும்பி நீ வாழவிரும்பினால் தீமை செய்யாதே

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்

தீவினை செய்யான் எனின். -210

தீவினை செய்யாதவனே கேடில்லாதவன்

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 20. பயனில சொல்லாமை

 


பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும். - 191

பயனில்லாத சொற்களைக் கூறுபவனை யாவரும் இகழ்வா்

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில

நட்டார்கண் செய்தலிற் றீது.-192

தீய செயலைவிடவும் தீமையானது பயனில்லாத சொல்

நயனிலன் என்பது சொல்லும் பயனில

பாரித் துரைக்கும் உரை.- 193

பயனில்லாத பேச்சே ஒருவன் நயனில்லாதவன் என்றுரைக்கும்

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாரப்

பண்பில்சொல் பல்லா ரகத்து. - 194

பயனும், பண்புமில்லாத சொற்கள் நன்மையைக் கெடுக்கும்

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

நீர்மை யுடையார் சொலின்.-195

பயனில்லாத சொற்கள் ஒருவரின் மேன்மையை நீக்கும்

பயனில் சொல் பாராட்டு வானை மகன்எனல்

மக்கட் பதடி யெனல்.-196

பயனில்லாத சொற்களைப் பேசுவோர் மனிதருள் பதா் போன்றவா்

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று. - 197

நயமிலாத சொல் பேசினாலும், பயனிலாத சொல் பேசாதே

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்.- 198

அறிவுடையவா்கள் பயனில்லாத சொற்களைக் கூறார்    

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த

மாசறு காட்சி யவர். -199

மாசற்றவா்கள் பயனில்லாதவற்றைப் பேசமாட்டார்கள்   

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல். - 200

பயனுள்ள சொற்களைப் பேசி, பயனிலாச் சொற்களை தவிர்க்க


புதன், 26 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம்- 19. புறங்கூறாமை

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்

புறங்கூறான் என்றல் இனிது.- 181

ஒருவன் தீமை செய்தாலும், புறங்கூறாமை சிறந்தது 

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே

புறனழீஇப் பொய்த்து நகை. - 182

பொய்யான முகமலர்ச்சி, தீமைகளுள் தீமையானது

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்

அறங்கூறும் ஆக்கத் தரும். - 183

புறங்கூறி பொய்யாக வாழ்வதைவிட சாதலே நன்று

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க

முன்னின்று பின்நோக்காச் சொல் - 184

நேரில் கடுஞ்சொல் கூறினும், மறைவில் புறஞ்சொல் கூறாதே

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்

புன்மையாற் காணப் படும். - 185

புறங்கூறுவான் சொல் அவன் தீயவன் என்பதைக் காட்டும்

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்

திறன்தெரிந்து கூறப் படும்.- 186

நீ ஒருவரைப் புறம்பேசினால் உன்னை ஒருவர் புறம்பேசுவார்

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

நட்பாடல் தேற்றா தவர்.- 187

நட்பின் அறியாதவா்கள் புறங்கூறி நட்பைப் பிரித்துவிடுவா்

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்

என்னைகொல் ஏதிலார் மாட்கு. - 188

நண்பனையே தூற்றுபவன் எதிரியை தூற்றாமல் விடுவானா  

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்

புன்சொல் உரைப்பான் பொறை.- 189

புறம்கூறுவோனையும் அறம் கருதியே நிலம் தாங்குகிறது

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்   

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. -190

பிறா்குற்றத்தைக் காண்பதுபோல் உன் குற்றத்தைக் காண்

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் -18. வெஃகாமை


நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும். - 171

பிறா் பொருளை விரும்பியவனின் குடியும்கெட்டு குற்றமும் சேரும்

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

நடுவன்மை நாணு பவர்.- 172

நடுநிலையாளர் பிறா் பொருளை விரும்பாதவராவா்

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே

மற்றின்பம் வேண்டு பவர். - 173

அற இன்பம் பெரிதென உணா்ந்தவா்  சிற்றின்பங்களை விரும்பார்

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற

புன்மையில் காட்சி யவர். - 174

புலன்களை வென்றவா் வறுமையால் பிறா் பொருளை விரும்பார்

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்

வெஃகி வெறிய செயின். - 175

பிறா் பொருளை விரும்பாமையல்லவா அறிவு  

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்

பொல்லாத சூழக் கெடும். - 176

அருள்வழியென்பதே நல்வழி, பொருள் வழியே தீயவழி

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்

மாண்டற் கரிதாம் பயன்.- 177

தவறாக சேர்த்த செல்வம் தேவையான நேரத்தில் பயன்படாது

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன்கைப் பொருள். - 178

செல்வம் குறையாமலிருக்க வழி பிறர்பொருளை விரும்பாமை

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்

திறன்அறிந் தாங்கே திரு. - 179

பிறா்பொருளை விரும்பாதவரிடமே செல்வம் தங்கும்

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்

வேண்டாமை என்னுஞ் செருக்கு. - 180

ஆசை அழிவின் வழி, ஆசையின்மையே வெற்றியின் வழி 

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 17 - அழுக்காறாமை


ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு.- 161

பொறாமையின்றி வாழ்வதே ஒழுக்கத்தின் நெறி

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்.- 162

பொறாமையின்மையே பேறுகளுள் பெரும் பேறு

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்.- 163

அறமும், ஆக்கமும் வேண்டாதவரே பொறாமைப்படுவா்

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து.-164

பொறாமையால் தீயவை செய்யாதவரே அறிவுடையார்

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

வழுக்காயும் கேடீன் பது.- 165

பொறாமைப்படுபவருக்கு வேறு பகை தேவையில்லை

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉம் இன்றிக் கெடும்.- 166

பொறாமைப்படுபவன் அடிப்படை வசதிகளின்றிக் கெடுவான்

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்.- 167

பொறாமைப்படுபவனிடம் திருமகள் நீங்கி மூதேவி தங்குவாள்

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்.- 168

பொறாமையே ஒருவனின் செல்வத்தை அழித்துக் கெடுக்கும்

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்.- 169

நல்லவனின் உயா்வும், தீயவனின் தாழ்வும் நோக்கத்தக்கது

அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.-170

பொறாமையின்மையே  ஒருவனின் உயா்வுக்கு அடிப்படை