1. மாதவியின்
நாட்டியப் பயிற்சி்
தெய்வ மால்வரைத்
திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திர
சிறுவனொடு
தலைக்கோல் தானத்துச்
சாபம் நீங்கிய
மலைப்பரும் சிறப்பின்
வானவர் மகளிர்
சிறப்பில் குன்றாச்
செய்கையொடு பொருந்திய
பிறப்பில் குன்றாப்
பெருந்தோள் மடந்தை
தாதவிழ் புரிகுழல் மாதவி
தன்னை
ஆடலும் பாடலும் அழகும்
என்றிக்
கூறிய மூன்றின்
ஒன்றுகுறை படாமல்
ஏழாண் டியற்றி ஓரீரா
றாண்டில்
சூழ்கழல் மன்னற்குக்
காட்டல் வேண்டி
தெய்வ மால்வரை என்று போற்றப்படும் பொதியமலை முனிவன் அகத்தியன். அவன்
அருளினால் இந்திரன் மகன் சயந்தன் சாபம் பெற்றான். சாபத்தால் மூங்கிலாக மாறிக்
கிடந்தான். அந்த மூங்கிலால் செய்யப்பட்டது தலைக்கோல். அந்தத் தலைக்கோலை விருதாகப் பெற்றாள் உருப்பசி
(ஊர்வசி). உருப்பசி வானவர் மகளிருள் ஒருத்தி. இவள் சிறப்பில் குன்றா
நாட்டியக்காரி. ஊர்வசியின் பிறப்பில் குறைவில்லாப் பிறப்பில் தோன்றியவள் மாதவி.
மாதவி தேனொழுகும் கூந்தலை உடையவள். இவளுக்கு ஆடல், பாடல்,
அழகுபடுத்திக்கொள்ளும் ஒப்பனை ஆகிய கலைகள் மூன்றனுள் ஒன்றிலும்
குறைவுபடாமல் இருக்கும்படி ஏழு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்பட்டது. பன்னிரண்டாம்
வயதில் இவளது கலைத்திறத்தை
மன்னருக்குக் காட்ட அரங்கேற்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.