வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 3 ஜூன், 2020

வலைப்பதிவு முதல் ஆட்சென்சு வரை - பகுதி 1- வலைப்பதிவு உருவாக்கம் (BtoA)


            புதிது புதிதாக தொழில்நுட்பங்கள் வந்து மக்களைத் தன்வயப்படுத்தும் இக்காலத்தில் எல்லாத் தொழில்நுட்பங்களும் காலத்தைக் கடந்து நிலைத்திருப்பதில்லை.   சில தொழில்நுட்பங்கள் மட்டுமே காலத்தை வென்று நிலைபெறுகின்றன. அவ்வடிப்படையில் வலைப்பதிவுகள் தனிச்சிறப்பு பெறுகின்றன. வலைப்பதிவு (Blog) என்பது, அடிக்கடி இற்றைப்படுத்துவதற்கும், கடைசிப்பதிவு முதலில் வருமாறு ஒழுங்குபடுத்துவதற்கும் என சிறப்பாக வடிவமைத்த தனிப்பட்ட வலைத்தளமாகும். இற்றைப்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வாசகர் கலந்துரையாடுவதற்குமான வழிமுறைகள், இணையதளங்களைக் காட்டிலும் வலைப்பதிவுகளில் எளிமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொருவரும் இலவசமாகத் தம் கருத்துகளை தம் மொழியில் வெளியிட இவ்வலைப்பதிவுகள் பெரிதும் உதவுகின்றன.
·         WebLog என்ற பெயர் முதன் முதலில் 17-12-1997 இல் Jorn Barger என்பவரால் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது.
·         குறுக்க வடிவமான blog என்ற சொல்லை Peter Merholz என்பவரே முதன் முதலில் பயன்படுத்தினார். 1999 ஏப்ரல் அல்லது மே மாதமளவில் இவரது வலைப்பதிவின் பக்கப்பட்டையில் WebLog என்ற சொல் இரண்டாக உடைக்கப்பட்டு we blog என்றவாறு காண்பிக்கப்பட்டிருந்தது.
·         1994 இலிருந்து தனது தனிப்பட்ட வலைப்பதிவை எழுதிவரும் Justin Hall என்பவர் வலைப்பதிவின் முன்னோடிகளுள் ஒருவராக பொதுவில் கருதப்படுகிறார்.
·         1996 இல் 'Xanga என்ற வலைத்தளம் வலைப்பதிவுச் சேவையை வழங்கத் தொடங்கியது. 1997 அளவில் 100 நாட்குறிப்பேடுகள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. டிசம்பர் 2005 அளவில் அவற்றின் எண்ணிக்கை 50,000 இனைத் தாண்டியது, தற்போது உலக அளவில் 3639-ம் இடத்தில் உள்ளதாக அலெக்ஸா தெரிவிக்கின்றது
·         ஏறத்தாழ இதே காலப்பகுதியில் blogger.com என்ற வலைப்பதிவுச் சேவை வழங்குநர்கள் தமது சேவையைத் தொடங்கினர். இச்சேவை பின்னர் 2003 பெப்ரவரியில் google நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
·         முதல் தமிழ் வலைப்பதிவாளராக, கார்த்திகேயன் இராமசுவாமி கருதப்படுகிறார். இவரது முதல் தமிழ் இடுகை ஜனவரி 01 2003 இல் இப்பதிவு இடப்பட்டுள்ளது.
·     ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் கடைசி நாள் (31.08) அன்று உலக வலைப்பதிவாளர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
          வலைப்பதிவு சேவை வழங்கும் இணையதளங்கள்
ப்ளாக்கர் (https://www.blogger.com )
வேர்டுபிரசு (http://ta.wordpress.com)
தம்ளர் (https://www.tumblr.com)
ப்ளாக்சம் (http://www.blogsome.com)
டைப்பேட்( http://www.typepad.com/ )
லைப்ஜர்னல் (http://www.livejournal.com),
ப்ளாக்ஆர் ( https://blogr.org/)
ஜங்கா ( http://xanga.com/)
மேற்கண்ட இணையதளங்களில் இலவசமாக வலைப்பதிவுகளை உருவாக்கிக்கொள்ளலாம். எந்த இலவச வலைப்பதிவுகளாக இருந்தாலும்  அவற்றை உருவாக்குதல், பயன்படுத்துதல், வெளியிடுதல் என பல நிலைகளிலும் எளிமையானதாக இருப்பது வலைப்பதிவுகளின் தனிச்சிறப்புகளுள் ஒன்றாகும். மேலும் இவ்வலைப்பதிவுகளை இணையதளங்களுக்கு இணையாக வடிவமைக்கமுடியும் என்பதும், வலைப்பதிவுளில் எழுதப்படும் கருத்துக்கள் தேடுபொறிகளில் கிடைக்கப்பெறுவதும் கூடுதல் சிறப்பாக அமைகின்றன.

3 கருத்துகள்: