வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 26 மே, 2020

நிற்க அதற்குத் தக



  மனித இனத்தின் கண்டுபிடிப்புகளில் தனித்துவமானது மொழியாகும். மொழியே ஒரு இனத்தின் வரலாறு, பண்பாடு, அறிவு, வளர்ச்சி என பலவற்றுக்கும் அடைப்படையாகிறது. உலக மொழிகளுள் தொன்மையானது, தொடர்ச்சியான இலக்கிய, இலக்கண மரபுடையது, காலத்திற்கேற்ப, தன்னைத் தகவமைத்துக்கொள்வது என பல்வேறு சிறப்புகளையுடைய தமிழ் மொழிக்கு, மேலும் பெருமை சேர்க்கும் தலைசிறந்த இலக்கியம் திருக்குறளாகும். உலகமே போற்றும் திருக்குறளை கற்பதும், கற்பிப்பதும் நமது கடமை மட்டுமின்றி காலத்தின் தேவையாகவும் அமைகிறது.

திருக்குறள் கற்றல்
      கற்க, கசடறக் கற்க, கற்பவை கற்க, கற்றபின் நிற்க அதற்குத் தக (391) என்று கல்வி கற்கும் நுட்பம் குறித்து வள்ளுவர் கூறும் சிந்தனையை திருக்குறள் கற்கும் அடிப்படை நுட்பமாகவும் கொள்ள இயலும். வள்ளுவர் கூறும் நுட்பத்தை ஆழ்ந்து நோக்கினால், 1. அறிதல்  2. தெரிதல்  3. தெளிதல் 4. நிற்க அதற்குத் தக ஆகிய கருத்துக்களைக் கற்றல், கற்பித்தல் சார்ந்த நுட்பங்களாகவே காணமுடிகிறது.

1. அறிதல்
        அறிதல் என்ற சொல்லை வள்ளுவர், செய்நன்றி அறிதல் (11), வலி அறிதல்(48), காலம் அறிதல்(49), இடன் அறிதல்(50), குறிப்பறிதல் (71) குறிப்பறிதல் (11), அவையறிதல் (72) எனவும் அறிதல் என்ற சொல்லை பல குறள்களிலும் பயன்படுத்தியுள்ளார். அறியாமையை உணர்தலும், அறிந்துகொள்வதும் சிந்தனையின் அடையாளம். கற்பதும் பின்பற்றுவதும் அவ்வளவு எளிதானதா என்ற கேள்வி அவர் மனதிலும் எழுந்திருக்கவேண்டும். செய்யும் செயலை நுட்பமாக எவ்வாறு செய்வது என்று கூறும்போது, சொல்லுவது யாருக்கும் எளிது, அதைச் செய்து முடிப்பதே அரிது (664) என்றும் கூறுகிறார். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்பவரே பெரியோர், செய்வதற்கரிய செயல்களைச் செய்யமாட்டாதவர்கள் சிறியோர் என்றும் கூறுகிறார். அறிதல் என்பது கற்றல், கேட்டல், சிந்தித்தல் என மூன்று நிலைகளில் நிகழ்கிறது. இதையே கற்க என்கிறார்.

2. தெரிதல் 
         தெரிந்து செயல்வகை (47), தெரிந்து தெளிதல் (51), தெரிந்து வினையாடல் (52) என அதிகாரங்களிலும், பல குறள்களிலும் தெரிந்து என்றசொல்லைப் பயன்படுத்தியுள்ளார். தெரிதல் என்பதை கண்ணுக்குத் தெரிதல் என்று மட்டும் காணாது மனதுக்குப் புரிதல் என்றும் காணவேண்டும். அதனால்தான் வள்ளுவர் தெரிந்து தெளிதல் என்றே அதிகாரம் வகுத்தார். இருளில் பாம்பு போல ஏதோ தெரிகிறது என்று வைத்துக்கொள்வோம். முதலில் அது என்ன? பாம்பா? கயிறா? என உணர அறிவு தேவைப்படுகிறது. அது அறிதல், பின் இரண்டில் ஒன்றை மயக்கமின்றி உணர்வதே தெரிதல் ஆகிறது. தெரிதலின் முதிர்ந்த நிலையே தெளிதல் எனப்படுகிறது. இதனையே வள்ளுவர், எப்பொருளை யாரிடம் கேட்டாலும் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவு (423) என்று உரைக்கிறார். எப்பொருள் எத்தன்மையில் தோன்றினாலும் அதன் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு என்கிறார். தீ எரிவதைப் பார்த்து அது தீ என அறிகிறோம். ஆனால் அதைத் தொட்டால்தான் அது சுடும் என்பது புரிகிறது. தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா  நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா  நந்தலாலா என்ற பாரதியின் சிந்தனையை முழுவதும் உணர நமக்கு தீ பற்றிய அறிவியலும், பாரதியார் கவிதைகள் பற்றியும் தெரிந்தால் மட்டுமே முழுவதும் புரியும். இதைத்தான் கசடறக் கற்க என்கிறார்.

3. தெளிதல்
      ஆராய்ச்சியால் ஐயம் நீங்கித் தெளிவு பிறக்கும். அதன்பின் தெளியப்பட்டதன்மீது நம்பிக்கையுண்டாகும். தெரிந்து தெளிதல் (51), என்றே தெளிதல் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் வள்ளுவர். கசடறக் கற்றறிந்தபோது, எதைக் கற்பது என்ற தெளிவு ஏற்படும். ஒரு சிற்பிக்குத்தான் தெரியும் கல்லில் மறைந்துள்ள அழகு எது என்று. அவன் தேவையான உருவத்தைக் கொண்டுவர தேவையில்லாத கற்களையே நீக்குகிறான். நமக்கு எதுவுமே தெரியாது என்பதைத் தெரிந்துகொள்ள எவ்வளவு தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது என்று கூட பொன்மொழி உண்டு. நல்ல நூல்கள் பல கண்டு அவற்றுள் சிறந்தவை கற்றவனே பண்டிதன் என்பதைக் கண்டதைக் கற்றவன் பண்டிதனாவான் என்று  பழமொழியாகக் கூறுவதுண்டு. பல நூல்களைக் கண்டு அவற்றுள் கருத்தில் தெளிதலையே கற்பவை கற்க என்கிறார்.

4. நிற்க அதற்குத் தக
 
      நிற்க என்பதும் அதன்படி நிற்க என்பதும் சிந்திக்கத்தக்கன. அறிந்து, புரிந்து, தெளிந்து கற்றால் அதை வாழ்வில் பின்பற்ற முடியுமா என்ற கேள்வி இக்குறளைக் கற்போர் மனதில் தோன்றுவது இயல்பே. அதற்குத்தான் வள்ளுவர், அறிந்து நிற்க! புரிந்து நிற்க! தெளிந்து நிற்க! என்று பதில் சொல்கிறார். நீ, நின்றால் மட்டும் போதாது அதற்குத் தக நில்! என்கிறார். அதற்குத் தக என்றால் நீ எதிர்கொள்ளும் சூழலுக்குத் தக என்று பொருள் கொள்வோம். அப்படி நின்றால்தான் நீ கற்றதை நீ பின்தொடர்கிறாய் என்ற பொருள். ஆயிரம் அறிவுரைகளைவிட ஒரு செயல் மேலானது என்பதுபோல வள்ளுவர் கூறும் நிற்க என்ற சிந்தனை, நீ அறிந்து, புரிந்து, தெளிந்ததைப் பின்பற்றினால் உன்னை உலகம் பின்பற்றும் என்பதே ஆகும். சான்றாக உடல் வலிமை பெற்றுத்தராத விடுதலையை மனவலிமையே பெற்றுத் தந்தது. மகாத்மா காந்தியடிகள் அகிம்சை என்ற கொள்கையைப் பின்பற்றினார். அதன் வழி முன்மாதிரியாக நின்றார். மக்கள் அவர் பின் நின்றனர். உயர்ந்த புகழ் அல்லாமல் உலகில் நிலைத்து நிற்பது வேறு எதுவுமே இல்லை (233) என்ற வள்ளுவரின் கருத்திற்கேற்ப, உலகில் புகழ் பெற்று நிலைத்து நிற்க, மக்கள் மனதில் நிற்க, கற்றபடி நிற்க அதற்குத் தக.

கற்றலே கற்பித்தலுக்கான வழி

      நேற்றைய பட்டதாரி இன்று படிக்காவிட்டால் நாளை முட்டாளாகிவிடுவான். கற்றல் என்பது ஒவ்வொரு மணித்துளியும் நிகழவேண்டும், கற்றதை வாழ்க்கையில் பின்பற்றுபவரை முன்மாதிரியாகக் கொண்டு பலர் செயல்படுவர். மாணவர்களிடம் திருக்குறளைப் படி, வள்ளுவர் அப்படி சொல்லியிருக்கிறார், இப்படி சொல்லியிருக்கிறார் என்று சொல்வதால் மட்டுமே அவர்கள் படித்துவிடுவதில்லை. மாறாக வள்ளுவர் சொன்ன ஏதோ ஒரு குறளை வாழ்க்கையில் கடைபிடித்து வாழ்ந்துகாட்டும் போது தான் தாக்கம் ஏற்படுகிறது. நாம் யாருக்கும் எதையும் கற்றுக்கொடுத்துவிட முடியாது. அறிவுலகக் கதவுகளைத் திறந்துவிடலாம் உள்ளே வருவதும், வராமலிருப்பதும் அவரவர் விருப்பம். மனதில் நினைப்பதைக் குறிப்பால் உணர்ந்துகொள்பவரிடம் ஏதும் பேசவேண்டியது கூட இல்லை அவர்களின் முகத்தைப் பார்த்து நின்றாலே போதும் (708) என்றும், நவில்தொறும் நூல் நயம் போலும் என்றும் கூறும் வள்ளுவரின் சிந்தனைகளை மனதில் கொண்டு குறளை மீண்டும் மீண்டும் கற்கும்போதே கற்பிக்கும் இயல்பும் தோன்றிவிடும். 
                 
திருக்குறள் கல்வி
           எண்ணும், எழுத்தும் நாம் வாழும் வாழ்க்கைக்குக் கண்களைப் போன்றன (391) என கல்வியின் எல்லையைச் சுட்டிய வள்ளுவர், கல்லாமை பற்றி கூறும்போது கற்றவர்களுடன் கல்லாதவர்களை மக்களோடு, விலங்குகளுக்குமான வேறுபாடு (410) என்று உரைக்கிறார். செல்வங்களுள் தலைசிறந்த செல்வம் கேள்விச் செல்வம் (411) என்றும் கற்காவிட்டாலும் கேட்டறிய வேண்டும் அது தளச்சியுற்றபோது ஊன்றுகோலாகும் (414) என்றும் உரைக்கிறார். அறிவுடையாரே எல்லாம் உடையார், அறிவிலார் வேறு என்ன உடையவராக இருந்தாலும் அவர் ஏதுமற்றவரே என்றும் நுவல்கிறார். இவ்வாறு கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை ஆகிய அதிகாரங்கள் கற்றல் கற்பித்தல் சார்ந்த பரந்த பார்வையை நல்குகின்றன.

     அறிவை விரிவு செய் ; அகண்டமாக்கு !
      விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை !
      அணைந்து கொள் ! உன்னைச் சங்கமமாக்கு ,
    மானிட சமுத்திரம் நானென்று கூவு என்ற பாவேந்தரின் கனவை நனவாக்க திருக்குறள் கல்வி தேவையாகிறது.  நுட்பமான, நல்ல நூல்கள் பல கற்றாலும் இயற்கையான  அறிவே மிகும்     (373) என்கிறார். வள்ளுவர், கற்றல் என்பது நூல் வாசிப்பு மட்டுமன்று, கற்றல் என்பது வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. அதனால் தான் வள்ளுவர் பல்வேறு பல்வேறு ஒழுக்கங்களையும் கூறி கல்வியை 40வது அதிகாரமாக வைத்துள்ளார். கல்வி தேவைதான் என்றாலும் எல்லோரும் கற்றுவிடமுடியாது என்பதை உணர்ந்து கல்லாமையின் இழிவையும் உரைக்கிறார். கற்காவிட்டாலும் கேள்வியறிவு செல்வங்களுள் சிறந்த செல்வம் என்றுரைக்கிறார். இவ்வதிகாரங்களின் தொடர்ச்சியாகத்தான் அறிவுடைமை என்ற அதிகாரம் வகுத்துள்ளார். இந்த அதிகாரவைப்பு முறையை நாம் சிந்திக்கவேண்டும்.
        பள்ளி, இளங்கலை, முதுகலை, ஆராய்சிப் படிப்பு என மீண்டும் மெக்காலே கல்வித்திட்டத்தின் பாதையிலேயே செல்லாமல், காலத்துக்கேற்ற மாற்று சிந்தனையில் திருக்குறளை எடுத்துச்செல்வோம்.  யுடிமி என்ற இணையதளத்தில் 80000 இணையவழி படிப்புகள் உள்ளன. தமிழ் இணையக் கல்விக் கழகம் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்து வருகிறது. சான்றிதழ் படிப்புகளை வழங்கும் நெப்டெல்  இணையதளத்தைப் பலரும் அறிவோம். இவை போல திருக்குறள் கல்வியை அறிமுகம் செய்யவேண்டும். திருக்குறள் பட்டச் சான்றிதழ் பெறுபவர்களுக்குக் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்கலாம். படிக்கும் காலத்திலேயே பட்டத்தைவிட மதிப்பானது நாம் படிக்கும் திருக்குறள் கல்வி என்பதை உணர்த்துவதாக அக்கல்வி அமையவேண்டும்.

திருக்குறள் பாடத்திட்டம்
            திருக்குறள் பாடத்திட்டம் என்பது இப்போது மாணவர்களுக்கு, வழங்குவது போல சில  குறள்களையோ அதிகாரங்களையோ வழங்கி தேர்வு வைத்து மதிப்பெண் வழங்காமல் திருக்குறளின் பன்முகத்தன்மையை உணர்த்துவதாகவும், பல்துறை அறிவை வளர்ப்பதாகவும், தனிமனித ஒழுக்கத்தைச் சுட்டிக்காட்டுவதாகவும், உரையாசிரியர்களைக் கடந்து திருக்குறளைப் புரிந்துகொள்ளும் விதமாகவும் அமையவேண்டும்.
     திருக்குறள் அதிகார வைப்பு, அமைப்பு முறை, அதிகார பெயர்கள், குறள் காட்டும் இல்லறம், துறவறம், பொருளியல்,  அறவியல், அரசியல், அறிவியல், மருந்தியல், உழவியல், செய்யுளியல், உவமையியல், அணியியல், உளவியல், வணிகவியல், எண்ணியல் என ஒவ்வொரு அதிகாரங்களையும் தனித்தனியாகவோ இன்னொரு அதிகாரத்துடனோ இன்னொரு இலக்கியத்துடனோ ஒப்பிட்டு தனித்தனிப் பாடங்களாக வழங்கலாம். உரைநயங்கள், மொழிபெயர்ப்பு நயங்கள், ஆராய்ச்சிகள், திருக்குறள் ஆசிரியர் வரலாறு, நூல் வரலாறு, பதிப்பு வரலாறு, உரை வரலாறு, திருக்குறளின் இலக்கியத் தாக்கங்கள், திரைப்படப் பாடல்களில் குறள், ஆண்ட்ராய்டு செயலிகளில் குறள், யுடிபில் குறள், வலைப்பதிவு மற்றும் சமூகத் தளங்களில் குறள் குறித்த பாடங்களைக் கட்டமைக்கலாம். பெண்ணியம், ஆணாதிக்கம், பகுத்தறிவு, கடவுள் சிந்தனைகள், மனிதம், கொல்லாமை, விலங்கியல், தாவரவியல், சொர்க்கம், நரகம் மறுபிறவி பற்றிய சிந்தனைகளையும் பாடத்தின் உட்கூறுகளாக்கலாம்.

     கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை ஆகிய அதிகாரங்கள் கற்றல் கற்பித்தல் சார்ந்த பரந்த பார்வையை நல்குகின்றன. அவற்றுள், கற்க கசடற (391) என்ற குறளை வள்ளுவரின் கல்வி குறித்த பார்வைக்கு சிறந்த விளக்கமாக அமைகிறது. கற்க என்ற சொல்லை அறிதல் என்றும், கசடறக் கற்க என்ற சொல்லை தெரிதல் என்றும் கற்பவை என்ற சொல்லை தெளிதல் என்றும் நிற்க அதற்குத் தக என்பதை, அறிந்து நிற்க!, தெரிந்து நிற்க!, தெளிந்து நிற்க! சூழலுக்குத் தக நிற்க! எனப் பொருள்கொள்ளும்போது குறளின் ஆழமான பொருள் மேலும் விளங்குகிறது.
     அறம், பொருள், இன்பம் கூறிய வள்ளுவர் வீடு பற்றிக் கூறாவிட்டாலும் இவர் சொல்லுமாறு வாழ்ந்தாலே வீடு கிடைத்துவிடும் என்று எவ்வாறு புரிந்ததோ, அதுபோல அறிந்து, தெரிந்து, தெளிந்து, அதற்குத் தக நின்றால் நாம் கற்பிக்கவேண்டியதே இல்லை. கற்றலே கற்பித்தலாகிவிடும்     என்ற உண்மையும் இக்குறள் வழி வெளிப்படுகிறது 

8 கருத்துகள்:

  1. ஆஹா...அற்புதமான விளக்கம்...மீண்டும் மீண்டும் படித்து மகிழ்தேன்..பகிர்ந்தமைக்கு நன்றியும் வாழ்த்துகளும்...

    பதிலளிநீக்கு
  2. குறள்நெறி நின்று குவலயம் காப்போம்..
    அருமையான பதிவு ஐயா.. நன்றி.

    பதிலளிநீக்கு