பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

திங்கள், 25 மே, 2020

கூகுளுக்கு என்னை அறிமுகப்படுத்திய வலைப்பதிவு



தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
வேர்களைத்தேடி என்ற இந்த வலைப்பதிவை நான் தொடங்கி 12 ஆண்டுகளாகிவிட்டன. செவ்வாய் கிழமை 22 தேதி, ஏப்ரல், 2008 அன்று நான் இந்த வலைப்பதிவில் மடலின் படிநிலைகள் என்ற முதல் பதிவை எழுதினேன். இன்று எனது 1352 வது பதிவை வெளியிடுகிறேன். இந்தப் பதிவு கூகுளின் அட்சென்சு ஒப்புதலுடன் வருகிறது என்ற மகிழ்சியையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். 

       2008 ல் நான் பதிவு எழுதத் தொடங்கிய காலத்தில் எனது தமிழ் ஆய்வுக்கட்டுரைகளை மட்டும் வெளியிட்டேன். அதற்குக் கிடைத்த மறுமொழிகளால் தொடர்ந்து சங்க இலக்கியம் சார்ந்தும், கணினி நுட்பங்கள் சார்ந்தும் எழுதினேன். என்னை அறியாமல் எனது பதிவுளுக்கு நான் வழங்கிய தலைப்புகளும், குறிச்சொற்களும் என்னை கூகுளுக்கு அறிமுகப்படுத்தின. இன்று முனைவர் இரா.குணசீலன், வேர்களைத்தேடி, https://www.gunathamizh.com/, https://www.gunathamizh.blogspot.in/ என எப்படித் தேடினாலும் என்னை கூகுள் அடையாளம் காட்டும்.

அந்தக் காலகட்டத்தில் வலைப்பதிவர் சந்திப்புகள் அடிக்கடி நிகழும். இருந்தாலும் தமிழ்த்துறை சார்ந்த பதிவர்களை அரிதாகவே காணமுடியும். பதிவர்கள் பலர் தம் பதிவுகளை நூலாக்கினர். அந்த வரிசையில் உயிருள்ள பெயர்கள், சங்க ஓவியங்கள், என்ற இரண்டு நூல்களை இந்த வலைப்பதிவில் எழுதிய சங்கஇலக்கியக் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டேன். இன்றை சிந்தனைகள் என்ற நூலும் இந்த வலைப்பதிவின் தொகுப்பாகவே வெளியிடப்பட்டது.

தமிழ் உதவிப்பேராசிரியராக என்னை நான் அறிகப்படுத்திகொண்டாலும், வலைப்பதிவராக என்னை கூகுள் அடையாளப்படுத்தியது. இந்த வலைப்பதிவுக்கு அமெரிக்காவிருந்து தமிழ் மணம் என்ற இணைதளம் தமிழ் பண்பாடு கலாச்சாரம் என்ற பிரிவில் விருது வழங்கியது. ஆனந்த விகடன், தினமணியில் இந்த வலைப்பதிவைப் பற்றி செய்திகள் வெளியாகின. இதில் வெளியான உயர்தனிச் செம்மொழி தமிழ் என்ற கட்டுரையை கற்பகம் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைத்தனர். வலைப்பதிவில் எழுதிய கட்டுரைகளைப் பார்த்து பல கல்லூரிகளில் கணினித் தமிழ் குறித்து பேச அழைத்தனர். 50க்கும் மேற்பட் கல்லூரிகளில் இதுவரை, கணினித் தமிழ் பற்றிப் பேசியிருக்கிறேன்.

இப்போது, முனைவர் இரா.குணசீலன் என்ற பெயரில் யூடியூப் வலைக்காட்சி நடத்தி வருகிறேன். அதற்கு ஆட்சென்சு ஒப்புதல் உள்ளது. அமேசான் தளத்தில் மின்னூல் வெளியிட்டிருக்கிறேன். 

வேர்களைத்தேடி பதிப்பகம் வழி நூல்களைப் பதிப்பித்து வருகிறேன்.விக்கிப்பீடியாவில் எழுதிவருகிறேன், கோரா தளத்தில் கேள்வி பதில் எழுதி வருகிறேன். எனது ஒவ்வொரு முயற்சிக்குப் பின்புலமாகவும் இந்த வலைப்பதிவு திகழ்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக உலகுபரவி வாழும் தமிழர்களுடன் அறிமுகம் கிடைத்தது. நான் தனியாக 1350 பதிவுகள் எழுத 12 ஆண்டுகள் தேவைப்பட்டது என்றாலும், நான் பணியாற்றிய கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 8 மாதங்களிலேயே 50மாணவிகள் சேர்ந்து 1000க்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதினர். குறிப்பாக எனது பிறந்த நாளன்று ஒரே நாளில்100 தமிழ்ப்பதிவுகளைக் கல்லூரி வலைப்பதிவில் எழுதி என்னை மகிழ்வித்தனர்.

இந்த வலைப்பதிவை https://www.gunathamizh.com/  என மாற்ற ஆண்டுதோறும் கட்டணம் செலுத்தி வருகிறேன். இந்நிலையில் ஆட்சென்சு தமிழுக்கான இடம் வழங்கியபோது இந்த வலைப்பதிவை சேர்க்க முயன்றேன். இருந்தாலும் தொழில்நுட்பம் சார்ந்து சரியான புரிதல்  இல்லாததால் ஆட்சென்சு ஒப்புதல் கிடைக்காமல் இருந்தது. இணையத்தில் தமிழ் சார்ந்த மின் உள்ளக்கங்களின் தேவையைப் பல்வேறு கல்லூரிகளிலும் எடுத்துரைத்தபோது வலைப்பதிவு, ஆட்சென்சு பற்றி எழுந்த கேள்விகளால் மேலும் தேடி எனது வலைப்பதிவின் கட்டமைப்பை ஆட்சென்சு விதிகளுக்கேற்ப மாற்றினேன். இந்த அனுபவத்தை வலைப்பதிவில், ஆட்சென்சு ஒப்புதல் பெற விரும்பும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் என்னால் அனுபவத்துடன் சொல்ல இயலும்.

வேர்களைத்தேடி என்ற இந்த வலைப்பதிவின் கொள்கை, மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை என்பதாகும். தமிழ் இலக்கியங்களைப் போற்றுதல், சங்கஇலக்கியத்தின் பெருமைகளை எடுத்துரைத்தல், தொழில்நுட்பங்களைத் தமிழ் வழி எடுத்துரைத்தல், என்ற நோக்கில் எழுதப்பட்ட பல்வேறு பதிவுகள் எனக்குப் பெரிய வாசகர் வட்டத்தை உருவாக்கியது. அதில் சில பதிவுகளை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.


தமிழால் இணைந்த உறவுகளுக்கு,
தொடர்ந்து கணினி வழியாகத் தமிழ் வளர்ப்போம், காலத்தை வெல்வோம். நன்றி.

8 கருத்துகள்:

  1. தமிழ்கூறு நல்லுலகம் பெருமிதம் கொள்கிறது. பாராட்டுக்குரிய பெருமுயற்சியும் பணியும் இது.

    பதிலளிநீக்கு
  2. மனமார்ர்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் குணசீலன்.

    பதிலளிநீக்கு
  4. மிக்க மகிழ்ச்சி....தொடர நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு