பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வெள்ளி, 22 மே, 2020

வாத்தியார் பிள்ளை மக்கு!


வைத்தியன் பிள்ளை நோயாளி, வாத்தியார் பிள்ளை மக்கு என்ற பழமொழியைப் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். நான் வாத்தியார் பிள்ளை என்பதால் இந்தப் பழமொழி என்னை அதிகமாகவே சிந்திக்கவைத்திருக்கிறது. எனது அப்பா பள்ளி ஆசிரியராக இருந்தார், நான் கல்லூரியில் ஆசிரியராக உள்ளேன். என் மகள் வகுப்பில் முதன்மையான மாணவியாகவே படித்துவருகிறாள். அதனால் இந்தப் பழமொழியைக் கேட்கும்போதெல்லாம் மனம் ஆழ்ந்த சிந்தனைக்குள்ளாகிறது.
இது போன்ற பழமொழிகள் சொல்லப்பட்ட காலம் அதன் நோக்கம், காலப்போக்கில் அதை மக்கள் தவறாகப் புரிந்துகொள்வது என்பது இயற்கையே.. 
வாக்குக் கற்றவன் வாத்தியார் வேலைக்குப் போவான், திருடனின் போக்குக் கற்றவன் போலீசு வேலைக்குப் போவான் என்பது வக்கத்தவன் வாத்தியார் வேலைக்குப் போவான், போக்கத்தவன் போலீசு வேலைக்குப் போவான் என்று மாறியது போல, இந்தப் பழமொழியும் சொல்லபட்ட நோக்கமும் வழங்கப்படும் பொருளும் மாறியிருக்கலாம். எனது பார்வையில் இந்தப் பழமொழியின் இன்றைய பொருளையும் எனது கருத்தையும் பதிவுசெய்கிறேன்.


இந்தப் பழமொழியின் இன்றைய பொருள், வைத்தியரின் பிள்ளை நோயாளியாகவும், வாத்தியாரின் பிள்ளை மக்காகவும் இருக்கும். இந்த வைத்தியரிடம் வைத்தியம் பார்க்கலாமா? இந்த வாத்தியாரிடம் நமது பிள்ளையைப் படிக்க அனுப்பலாமா? என்ற பொருளில் இந்தப் பழமொழிக்கு பொருள் வழங்கப்பட்டு  வருகிறது. 
வைத்தியர், வாத்தியார் என இருவரும் சமூகத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்குகின்றனர். வைத்தியரால் நோய் நீங்குகிறது. வாத்தியாரால் அறியாமை என்ற நோய் நீங்குகிறது. அதே நேரம் இவர்களது வீட்டில் குழந்தைகளுக்கு நோய் வருவதும், அவர்கள் அறியாமையுடன் இருப்பதும் இயல்புதான். ஆனால் இந்த சமூகம் இதுபோல ஒரு நிலை வந்தால் அவர்களது இயலாமையைச் சுட்டிக் காட்டி நகைப்பது காலந்தோறும் நடக்கிறது.
எவ்வளவு சிறந்த வைத்தியராக இருந்தாலும் அவருக்கும் நோய்வரும், எவ்வளவு சிறந்த வாத்தியராக இருந்தாலும் அவருக்கும் அறியாமை இருக்கும். இப்படியிருக்கும்போது இவர்களது குழந்தைகள் மட்டும் நோய்நொடியில்லாமல், அறிவாளியாகவே இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது எப்படி அறிவுடைமையாகும்?
மக்கு மனுசன் என்ற தலைப்பில் நான் ஒரு கவிதை எழுதினேன்,
மக்கு மனுசன் பயன்படுத்துவதெல்லாம் மக்காப் பொருட்கள்
அதனால் மன்னே மக்காப் போச்சு
மக்கா யோசிங்க
நாம மக்கிப் போகலாம்,
நம்ம மண்ணு மக்காமப் போகலாமா?
இந்தக் கவிதையில் மக்கு என்ற சொல்லின் பல்வேறு பொருள்களை அறியலாம். இதுபோல வாத்தியார் என்ற சொல்லின் பொருளையும் நாம் ஆராயவேண்டும். குருகுலக் கல்வி, திண்ணைப் பள்ளி, மெக்காலே கல்வி என காலந்தோறும் ஏற்பட்ட கல்விச்சூழலையும் நாம் சிந்திக்கவேண்டும். கல்வி என்பது போர், தொழில், கலை என காலந்தோறும் மாறிவந்ததையும் நாம் உணரவேண்டும்.
                தான் அறிவாளி என எண்ணும்போது ஓர் அறிவாளி முட்டாளாகிறான்
            தான் முட்டாள் என உணரும்போது ஓர் முட்டாள் அறிவாளியாகிறான் என்றொரு பொன்மொழி உண்டு.
            எவ்வளவு சொல்லிக்கொடுத்தாலும் புரிந்துகொள்ளாத மாணவர்களை மக்கு என்று அழைப்பதுண்டு. இன்றைய சூழலில் படித்து நிறைய மதிப்பெண் எடுத்த மாணவர்கள் படிக்காத முதலாளிகளிடம் வேலை பார்ப்பதையும் நாம் பார்க்கிறோம். இவர்களில் யார் மக்கு? என்ற கேள்வியே என் மனதில் எழுகிறது.
போலியான வைத்தியர்களையும், பட்டம் பெற்று அறியாமையுள்ள ஆசிரியர்களையும் அவர்களது இயலாமையைச் சுட்டிக்காட்ட இத்தகைய பழமொழி தோன்றியிருக்கலாம்.
கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்தில் ஏறி வைகுந்தம் போறேன் என்றானாம் என்றொரு பழமொழி உண்டு . வைத்தியரென்றால் அவரது வீட்டிலுள்ள யாவரும் நோய்நொடியில்லாமல் இருக்கவேண்டும், வாத்தியார் என்றால் அவரது பிள்ளை அவரைப்போல அறிவுடையவராக இருக்கவேண்டும் என்ற சமூகத்தின் எதிர்பார்ப்பாகவும் இந்தப் பழமொழி தோன்றியிருக்கலாம்.
பொறியாளர், மருத்துவர், வழக்கறிஞர் என எந்தப் பணியாக இருந்தாலும் அவரால் அந்தத் துறைசார்ந்து மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் ஆனால் ஒரு ஆசிரியரால் இதுபோன்ற பல திறமையானவர்களை உருவாக்க முடியும். 
நிறைவாக, எனது அனுபவத்தில் இந்தப் பழமொழிக்கான பொருளைச் சொல்கிறேன்.
வாத்தியாரின் பிள்ளையாகப் பிறந்ததாலேயே அந்தப் பிள்ளை மக்காகிவிடுவதில்லை. அந்த ஆசிரியர் தன் மாணவர்களுக்குச் செலவிடும் நேரத்தைத் தன் பிள்ளைக்கும் செலவிட்டால் தன் பிள்ளையைத் தன்னை விட அறிவாளியாக்க முடியும்.
புதல்வரைப் பெறுதல் என்ற அதிகாரத்தில் வள்ளுவர்,
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது – ( திருக்குறள் -68) சொன்ன இந்தக் குறளின் பொருள்,
தன்னைவிடத் தன் பிள்ளை அறிவுடையவராக இருந்தால் அது தமக்கு மட்டுமல்ல இந்த உலகத்திற்கே இனிமையானது என்பதாகும்.  வள்ளுவரின் இக்குறளை நினைவுபடுத்தி, தன் பிள்ளையை மட்டுமல்ல தன்னிடம் படிக்கும் பிள்ளைகளையும் வாழ்வில் உயர்த்திக்காட்டும் வாத்தியார் தன் பிள்ளைகளிடமும் கற்பிக்க நேரம் ஒதுக்கினால் வாத்தியார் பிள்ளைகள் மக்காகிவிடுவதில்லை என்று கூறி இப்பதிவை நிறைவுசெய்கிறேன்.
அன்பான தமிழ் உறவுகளுக்கு, எனது யூடியூப்பில் அதிகமாக கவனம் செலுத்தியதால் இந்த வலைப்பதிவில் தொடர்ந்து எழுத இயலவில்லை. நீண்ட நாட்களுக்குப்பிறகு இந்தப்  பதிவை எழுதியுள்ளேன். இந்தப் பழமொழி குறித்த எனது பார்வை இது . தங்களது பார்வையில் இப்பழமொழியின் பொருளை மறுமொழியில் கூறினால் மகிழ்வேன்

8 கருத்துகள்:

  1. உண்மை. நூறு சதவீதம் உண்மை.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் குணசீலன். பாராட்டுகள்.

    யூவில் அதிக நேரம் - :) இப்படியும் சில பதிவுகளை அவ்வப்போது வெளியிடுங்கள்.

    பதிலளிநீக்கு