வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 31 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 126. நிறையழிதல்

 


காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்

நாணுத்தாழ் வீழ்த்த கதவு.- 1251

காமம், கோடரியாக மாறி, நாணத்தாழிட்ட மனஅடக்கத்தை வீழ்த்தும் 

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை

யாமத்தும் ஆளும் தொழில். - 1252

இரக்கமற்ற காமம் நள்ளிரவிலும் என்னை ஆள்கிறது     

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்

தும்மல்போல் தோன்றி விடும். - 1253

தும்மலைப் போன்றது இக்காதல் எப்படி மறைத்தாலும் வெளிப்படும்   

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்

மறையிறந்து மன்று படும். - 1254

அடங்கியிருந்த காமம், தற்போது அடங்கமறுத்துத் பொதுவில்தோன்றும்

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்

உற்றார் அறிவதொன்று அன்று. - 1255

பிரிந்த காதலர்பின் செல்லாத தன்மானம் காதலுற்றவா்களுக்கு இல்லை

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ

எற்றென்னை உற்ற துயர். - 1256

விரும்பாதவா் பின் செல்வதால் காமம்நோய் கொடியது

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்

பேணியார் பெட்ப செயின். - 1257

காமத்தால் நாணத்தை மறக்கிறேன்

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்

பெண்மை உடைக்கும் படை. - 1258

பலமாயம் செய்யும், காதலரின் அன்புமொழியே பெண்மையை அழிக்கும்

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்

கலத்தல் உறுவது கண்டு.-1259

சண்டையிடச் சென்றவள், நெஞ்சம் அவருடன் கலந்ததால் தழுவினேன்

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ  

புணர்ந்தூடி நிற்பேம் எனல்.- 1260

கொழுப்பை தீயிலிட்டாரன்ன நெஞ்சுடையார் கூடி பின் ஊட முடியுமா

புதன், 30 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 125. நெஞ்சோடு கிளத்தல்

 


நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்

எவ்வநோய் தீர்க்கும் மருந்து. - 1241

நெஞ்சே! பிரிவுநோய் தீர நல்லதொரு மருந்தைச் சொல்லாயோ!

காதல் அவரிலர் ஆகநீ நோவது

பேதைமை வாழியென் நெஞ்சு. - 1242

அன்பில்லாத அவரிடம் நீமட்டும் அன்பைப் பொழிவது அறியாமையே 

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்

பைதல்நோய் செய்தார்கண் இல். - 1243

பிரிந்தவா் வருந்தாதிருக்க, நெஞ்சே நீ என்னுடன் வருந்திப் பயனென்ன

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்

தின்னும் அவர்க்காணல் உற்று. - 1244

நெஞ்சே!அவரைக் காண, கொல்லும் கண்களையும் அழைத்துச்செல்

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்

உற்றால் உறாஅ தவர். - 1245

நாம் விரும்பியும், நம்மை விரும்பாதவரை வெறுக்க இயலவில்லையே

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்

பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. - 1246

காதலரைக் கண்டால் கோபம் மறக்கும் நெஞ்சே உனக்கேன் ஊடல்!   

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே

யானோ பொறேன்இவ் விரண்டு.- 1247

நெஞ்சே! காமம், நாணம் இரண்டில் ஒன்றைவிடு! இரண்டும் கொல்லும்

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்

பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. - 1248

அன்பின்றிப் பிரிந்த காதலர் பின்செல்வது ஏன் பேதை நெஞ்சே

உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ

யாருழைச் சேறியென் நெஞ்சு. - 1249

மனதில் நீங்கா காதலரைத் தேடி நீ யார் பின்னே செல்கிறாய்? 

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா

இன்னும் இழத்தும் கவின். - 1250

பிரிந்தவரை நெஞ்சத்தில் நினைத்தால் மீதி  அழகையும் இழப்போம் 

 


செவ்வாய், 29 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 124. உறுப்பு நலன் அழிதல்


 

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி

நறுமலர் நாணின கண். - 1231

பிரிந்து சென்ற காதலரை எண்ணி வருந்திய என் கண்கள் அழகிழந்தன

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்

பசந்து பனிவாரும் கண். - 1232

காதலரின் அன்பின்மையை, என் பசலையும், அழும் கண்களும் கூறும்  

தணந்தாமை சால அறிவிப்ப போலும்

மணந்தநாள் வீங்கிய தோள். - 1233

அவரைக் கூடிப்பருத்த தோள்கள், பிரிவால் வாடி, துயரின் சாட்சியாகும்

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்  

தொல்கவின் வாடிய தோள். - 1234

பிரிவால், தோள்கள் வாடி, வளையல்கள் கழன்று விழும்

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு

தொல்கவின் வாடிய தோள். - 1235

காதலரின் கொடுமையை என் தோள் நலிவைப் பார்த்தே அறியலாம்

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்

கொடியர் எனக்கூறல் நொந்து.-1236

பசலையைவிடக் கொடியது காதலர் கொடியவர் என்ற சொல்லே     

பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்

வாடுதோட் பூசல் உரைத்து.- 1237

நெஞ்சே என் தோள்மெலிவை அவரிடம் கூறிப் பெருமைப்படுவாயோ

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது

பைந்தொடிப் பேதை நுதல். - 1238

தழுவலைத் தளர்த்தியதும்  பேதை  நெற்றியில் படர்ந்தது பசலை

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற

பேதை பெருமழைக் கண். - 1239

தழுவலுக்கிடையே காற்று புகினும், பசலை கொள்கிறாள் இப்பேதை   

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே

ஒண்ணுதல் செய்தது கண்டு. - 1230

பிரிவால் வாடிய நெற்றியைக் கண்டு, கண்களும் பசலையடைந்தன 

திங்கள், 28 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 123. பொழுது கண்டு இரங்கல்

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்

வேலைநீ வாழி பொழுது. - 1221

மாலைக் காலமே நீ பொழுதல்ல! பிரிந்தோர் உயிரை உண்ணும் வேல்!

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்

வன்கண்ண தோநின் துணை?    - 1222

மயங்கும் மாலையே? உன் துணையும் என் காதலர் போல் கொடியவரோ

பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்

துன்பம் வளர வரும். - 1223

பிரிவில் வாடும் என்னை மேலும் துன்பத்தால் வாட்டும் இந்த மாலைநேரம்

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து

ஏதிலர் போல வரும்.-1224

காதலர் இல்லாத போது கொலைக்களத்தில் எதிரிபோல வரும் மாலை!

காலைக்குச் செய்தநன்றுஎன்கொல்? எவன்கொல்யான்

மாலைக்குச் செய்த பகை? - 1225

காலைக்கு என்ன நன்மை செய்தேன்? மாலைக்கு என்ன தீங்கிழைத்தேன்?

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத

காலை அறிந்த திலேன். - 1226

மாலை நேரம் கொடியது என்பது,காதலரில்லாத போதே தெரிகிறது! 

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலரும்இந் நோய். - 1227

காலை அரும்பி, பகலில் பேரரும்பாகி, மாலையில் மலரும் காதல் நோய்

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்

குழல்போலும் கொல்லும் படை. - 1228

தீ போன்ற மாலைக்கு,ஆயனின் குழலும் கொல்லும் படையாகிவிடும் 

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு

மாலை படர்தரும் போழ்து. - 1229

என் அறிவை மயக்கும் மாலைப்பொழுது இந்த ஊரையும் மயக்குமோ!

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை

மாயும்என் மாயா உயிர். - 1230

பொருளுக்காகப் பிரிந்தவரையே எண்ணி என் அழியாத உயிர் அழிகிறது

 

வெள்ளி, 25 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 122. கனவு நிலை உரைத்தல்

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு

யாதுசெய் வேன்கொல் விருந்து. - 1211

காதலர் அனுப்பிய தூதினைக் கொண்டு வந்த கனவுக்கு நன்றி         

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு

உயலுண்மை சாற்றுவேன் மன்.-1212

கண்கள் உறங்கினால் கனவில், என் துயரை காதலரிடம் சொல்வேன் 

நனவினால் நல்கா தவரைக் கனவினால்

காண்டலின் உண்டென் உயிர்.- 1213

கனவிலாவது காதலரைக் காண்பதால்தான் இன்னும் உயிர் வாழ்கிறேன்

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்

நல்காரை நாடித் தரற்கு. - 1214

நனவில் நடக்கா இன்ப நிகழ்வுகள் கனவிலே நடக்கின்றன            

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்

கண்ட பொழுதே இனிது.- 1215

நனவைப் போலவே கனவிலும் காதலரைக் காண்பது இன்பமே       

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்

காதலர் நீங்கலர் மன். - 1216

விழிப்பு இல்லையென்றால் காதலர் என்னைவிட்டு நீங்காதிருப்பார்   

நனவினால் நல்காக் கொடியார் கனவனான்

எனஎம்மைப் பீழப் பது? - 1217

நேரில் வராத கொடியவர், கனவில் வந்தென்னை வருத்துவது ஏன்

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்

நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.- 1218

கனவில் தோள் மீது இருந்த காதலர் நனவில் நெஞ்சில் உள்ளார்    

நனவினால் நல்காரை நோவர் கனவினால்

காதலர்க் காணா தவர். - 1219

கனவில் காதலரைக் காணாதவரே நனவில் புலம்புவர்

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்

காணார்கொல் இவ்வூ ரவர். - 1220

கனவில் நான் காணும் காதலரை இந்த ஊரார் கண்டதில்லையோ 

 

 

வியாழன், 24 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 121. நினைத்தவர் புலம்பல்

 

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்

கள்ளினும் காமம் இனிது. - 1201

குடித்தால்தான் மகிழ்ச்சிதரும் கள்! நினைத்தாலே மகிழ்ச்சிதரும் காமம்

எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்

நினைப்ப வருவதொனறு இல். -1202

பிரிவில் நினைத்தாலும் இனிமை தருவதால் காமமே இனிது         

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்

சினைப்பது போன்று கெடும். -1203

எமை நினைக்கிறாரா? இல்லையா? தும்பல் வருவது போல் மறைகிறதே

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து

ஓஒ உளரே அவர். - 1204

அவர் இங்கு நலமே! நான் அங்கு நலமா?

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்  

எம்நெஞ்சத்து ஓவா வரல். - 1205

என்னை நினைக்காதவர், என் மனதில் மட்டும் ஓயாது வருவது ஏனோ

மற்றுயான் என்னுளேன் மன்னோ அவரொடு இயான்

உற்றநாள் உள்ள உளேன். - 1206

அவரோடு இருந்த நாளை நினைப்பதால் தான் வாழ்கிறேன்

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்

உள்ளினும் உள்ளம் சுடும்.-1207

அவரை மறக்க நினைத்தாலே மனம்வாடும்! நினைக்க மறந்தால்?    

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ

காதலர் செய்யும் சிறப்பு. - 1208

அவரை எவ்வளவு நினைத்தாலும் அதற்காக கோபப்படமாட்டார்      

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்

அளியின்மை ஆற்ற நினைந்து. - 1209

நாம் இருவரல்ல ஒருவரென்றவர் இன்று மறந்ததால் வருந்தும் உயிர்

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்

படாஅதி வாழி மதி. - 1210

நீங்காமலிருந்து நீங்கியவரைக் காணும்வரை நிலவே நீ துணையாயிரு


புதன், 23 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 120. தனிப்படர் மிகுதி

 

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே

காமத்துக் காழில் கனி. - 1191

விரும்பியவர் விரும்பினால் அக்காதல் விதையில்லா பழம் போன்றது

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு

வீழ்வார் அளிக்கும் அளி. - 1192

விரும்பியவர் மீது பொழியும் அன்பானது, மழை பொழிவது போன்றது

வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே

வாழுநம் என்னும் செருக்கு. -1193

விரும்பியவர் பிரிந்தாலும் சேர்வோம் என்ற செருக்குடன் வாழ்வர் 

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்

வீழப் படாஅர் எனின். - 1194

ஒருவருக்கொருவர் அன்புடன் வாழ்வதே நல்வாழ்வு

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ

தாம்காதல் கொள்ளாக் கடை. - 1195

நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்காவிட்டால், அவரால் பயனில்லை

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல

இருதலை யானும் இனிது. - 1196

ஒருதலைக் காதல் துன்பம், காவடி போன்ற இருதலைக் காதலே இன்பம்

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்

ஒருவர்கண் நின்றொழுகு வான். - 1197

காமன் ஆண்கள் பக்கமே இருந்து பெண்கள் மீது போர் தொடுக்கிறான் 

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து

வாழ்வாரின் வன்கணார் இல். - 1198

காதலரின் இன்சொல்லின்றி பிரிந்து உயிர்வாழ்வோரே கல் நெஞ்சத்தவர்

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு

இசையும் இனிய செவிக்கு. - 1199

காதலர் விரும்பாவிட்டாலும், அவரது புகழைக் கேட்பது இன்பம் செவிக்கு

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்

செறாஅய் வாழிய நெஞ்சு. - 1200

கல்நெஞ்சத்தவரிடம் துன்பம் கூறுவதைவிட, கடலை தூர்ப்பது எளிது