வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 28 ஜூன், 2018

வள்ளுவர் கூறும் அழகு!


                                                                              
உலகின் தலைசிறந்த நூல்களுள் ஒன்றாகவும், மொழி எல்லைகளைக் கடந்து மனிதகுலம் கொண்டாடும் நூலாகவும் திகழ்வது திருக்குறள் ஆகும். தமிழின் அடையாளமாகத் திகழும் இந்நூலில் தமிழ் என்ற சொல்லே பயன்படுத்தப்படவில்லை. இருந்தாலும் தமிழின் சிறப்பை மிகச் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார் வள்ளுவர். அதுபோல அழகு என்ற சொல்லே திருக்குறளில் பயன்படுத்தப்படவில்லை. அச்சொல்லுக்கு இணையாக கவின், எழில், அணி ஆகிய சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். வள்ளுவர் பார்வையில் எது அழகு என்பதையும், அதை அவர் வெளிப்படுத்தும் பாங்கினையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகிறது.

உறுப்புகளின் அழகு

                                உடலில் அமைந்துள்ள உறுப்புகளின் அமைப்பைப் பற்றிக் கூறுவது சாமுத்ரிகா லட்சனம். மனித உடலில் ஒவ்வோர் உறுப்புகளும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துக் கூறும் இந்த சாத்திரம் சிலை வடிப்பவர்களுக்கும் சித்திரம் வரைபவர்களுக்கும் அடிப்படையாகப் போற்றப்படுகிறது. சிலைகளிலும், ஓவியங்களிலும் அழகு என்ற கூறு இதை அடிப்படையாகக் கொண்டே பார்க்கப்படுகிறது. ஆனால் வள்ளுவரோ அன்புடைமை என்ற அதிகாரத்தில்,                          

               புறத்துறுப் பெல்லாம் எவன் செய்யும்  யாக்கை
                                 அகத்துறுப்பு அன்பி லவர்க்கு – 79 என்று உரைக்கிறார்.
இவர் பார்வையில் அழகு என்பது புறத்தோற்றம் சார்ந்தது அல்ல. அன்பு என்னும் அகத்தின் உறுப்பு என்ற பார்வை புலனாகிறது.


கவின்
                துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள் பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன என்ற பொருளில்தொல் கவின் வாடிய தோள் (1234) எனவும்,

                வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு வாடிய தோள்கள் எம் துன்பமறியாத கொடியவரின் கொடுமையைப் பிறர் அறியச் செல்கின்றன என்ற பொருளில்தொல் கவின் வாடிய தோள் (1235) எனவும்,

                நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச் சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம் என்ற பொருளில்,இன்னும் இழத்தும் கவின் (1250) எனவும் கவின் என்ற சொல் மூன்று குறள்களில் அழகு என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எழில்

எழில் என்ற சொல் ஒரே ஒரு திருக்குறளில் மட்டும் ஆளப்பட்டுள்ளது,
              நுண்மாண் நுழைபலம் இல்லான் எழில் நலம்
              மண்மாண் புனைபாவை யற்று – 407
ஆழ்ந்து, தெளிந்த, நுட்பமான அறிவில்லாமல் அழகான தோற்றம் மட்டுமே கொண்டவர்கள் கண்களைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்கள் என மதிக்கப்படுவார்கள் என உரைக்கிறார். இக்குறளில் எழில் என்ற சொல் அழகு என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது.

அணி
                அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணமாகும். குறளில் அணி என்ற சொல் அழகு என்ற பொருளில் சில குறள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

                                பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
                                அணியல்ல மற்றுப் பிற – 95
அடக்கமான பண்பும், இனிய மொழி பேசுதலும் ஒருவர்க்கு மிகச்சிறந்த அணிகலன்கள் ஆகும்.
                                கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
                                புண்ணென்று உணரப் படும் - 575
ஒருவன் கண்களுக்கு அணியும் நகை கருணையே. அந்நகை மட்டும் இல்லை என்றால் அவை கண்களல்ல புண்களே.
                                பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
                                அணியென்ப நாட்டிவ் வைந்து – 738
நோயின்றியிருத்தல், செல்வம், விளைபொருள், இன்பவாழ்வு, நல்ல காவல் என்னும் ஐந்தும் நாட்டிற்கு அழகு.
                                மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
                                காடும் உடைய தரண் - 742
மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழலுடைய காடும் ஆகிய நான்கும் உள்ளதே சிறந்த அரண் எனப்படும்.
                                பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
                                அணியுமாம் தன்னை வியந்து – 798
பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து  நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்து பாராட்டிக்கொள்ளும்.        

             அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
                              பிணி அன்றோ பீடு நடை- 1014
தவறுக்கு வருந்தும் நாணமுடைமை சான்றோர்க்கு நல்ல அணிகலன். அந்த அணியில்லாவிட்டால் அவரின் நடை ஒரு நோய்க்கு ஒப்பானதல்லவோ.

              பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
                                 அணியெவனோ ஏதில தந்து – 1089

பெண்மானைப் போன்ற இளம் பார்வையும், நாணமும் உடைய இவளுக்கு ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அழகுபடுத்துவது எதற்கு?

                                   பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
                                   தன்நோய்குத் தானே மருந்து – 1102

நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன. ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கிறாள்.
                                    மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
                                    அணியில் திகழ்வதொன்று உண்டு – 1273

கோத்த மணியினுள் நூல் மறைந்திருப்பதுபோல இந்தப் பெண்ணின் அழகினுள் என்னை மயக்கும் குறிப்பொன்று உண்டு.

நிறைவுரை
             திருக்குறளில் அழகு என்ற சொல்லே பயன்படுத்தப்படவில்லை. அதற்கு இணையாக கவின், எழில், அணி ஆகிய சொற்கள் உள்ளன. கவின் என்ற சொல் தலைவியின் அழகு நலன் என்ற பொருளில் மூன்று குறட்பாக்களில் உள்ளது. எழில் என்ற சொல் அழகான தோற்றம் என்ற பொருளில் ஒரு குறளில் உள்ளது. அழகு என்ற பொருளில் ஒன்பது குறள்களில் அணி என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது.

                    பணிவே சிறந்த அணி, கண்களுக்கு கருணையே சிறந்த அணி, நாட்டின் அணி, சான்றோரின் வெட்கம் என்ற அணி, பெண்ணின் வெட்கம் என்ற அணி, அணியிழை, அணி என்ற சொல்லாட்சிகளை அழகு என்ற சொல்லுக்கு இணையாகக் காணமுடிகிறது.

                      நாலடியாரில் அழகு என்ற சொல் பயன்பாட்டிலிருக்க, வள்ளுவரோ,கவின், எழில், அணி என்ற சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார். இதனால் அழகு என்ற சொல் வள்ளுவர் காலத்தில் வழக்கில் இல்லை என்றே கருதத்தோன்றுகிறது. இருந்தாலும் அவர் அச் சொல்லைவிட அழகைக் குறிக்க இச்சொற்களே சரியானவை என்ற எண்ணம் கொண்டிருந்தாரோ என்று ஆய்வு எல்லையும் விரிவடைகிறது.


4 கருத்துகள்: