வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 18 ஏப்ரல், 2018

புறநானூற்றில் அறிவின் வாயில்கள்



           மனிதனின் அறிவுத் தேடலில் அனுபவங்களைப் பதிவு செய்வது என்பது தனித்துவமான பண்பாக அமைகிறது. பிற உயிரினங்களுக்கு இயற்கை அறிவு என்ற அடிப்படையில் இப்புரிதல் அமைந்தாலும் மனிதனுக்கு, இயற்கை அறிவுடன் செயற்கை அறிவு குறித்த தேடலும் இருந்தது. இத்தேடலே இவ்வுலகில் எல்லா உயிர்களையும், வளங்களையும் மனிதனே ஆட்சி செய்யத் துணைநின்றது. பல்வேறு நாடுகளிலும், பல்வேறு மொழிகளிலும் இதுவரை நடைபெற்ற அறிவு குறித்த ஆய்வின் பயனாக, பல்வேறு சிந்தனைகளின் தொகுப்பாக மெய்ப்பொருளியல் அமைகிறது. அம்மெய்ப்பொருளியலின் ஒரு கூறாக விளங்குவது அறிவாய்வியல். அவ்வறிவாய்விலின் ஒரு பிரிவாக அமையும் அறிவின் வாயில்கள் பற்றிய சிந்தனைகளைப் புறநானூற்றின் வழி எடுத்தியம்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகிறது.


மெய்ப்பொருளியல்
     உலக மெய்ப்பொருளியல் வரலாறு இரண்டு பிரிவுகளைக் கொண்டது. ஒன்று கிரேக்க சிந்தனைகளைக் கொண்ட மேலை நாட்டு வரலாறு, இரண்டாவது இந்திய சிந்தனைகளைக் கொண்ட கீழை நாட்டு வரலாறு ஆகும்.  மனித சிந்தனை ஆற்றலின் பயனாக பல்வேறு அறிவுத் துறைகள் தோன்றின. ஆனால் வரலாற்றின் தொடக்கத்தில் அனைத்தும் மெய்ப்பொருளியலின் பகுதிகளாகவே இருந்தன. அதனால்தான் மெய்ப்பொருளியல் என்பதே அறிவியலின் தாய் என்று அழைத்து வருகிறோம். நாளடைவில் மெய்ப்பொருளியலின் பகுதிகளாக இருந்த மருத்துவம், கணிதம், அறிவியல் முதலிய பிரிவுகள் தனித்தனியாக வளர்ச்சியடைந்தன. இருந்தாலும் மெய்ப்பொருளியல் இன்றும் ஆராய்சிக்குரிய தனிப்பெரும் துறையாகவே திகழ்கிறது.
மெய்ப்பொருளியலின் உட்பிரிவுகள்
     அளவையியல், நுண்பொருளியல், அண்டவியல், மெய்ப்பொருளியல் சார்ந்த இறையியல், மெய்ப்பொருளியல் சார்ந்த உளவியல் அல்லது மானிடவியல், அறிவாய்வியல், அறவியல், அழகியல். என எட்டு பிரிவுகள் உண்டு. இவ்வகைப்பாட்டில் அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. என்றாலும் எல்லா அறிஞர்களின் வகைப்பாட்டிலும் தவறாமல் இடம்பெறும் உட்பிரிவுகளில் ஒன்றாக எப்பிஸ்டமாலஜி என்னும் அறிவாய்வியல் அமைகிறது.
அறிவாய்வியல் (எப்பிஸ்டமாலஜி)
     ‘அறிவாய்வியல் என்பதைக் குறிக்கும் ஆங்கிலப் பெயரான எப்பிஸ்டமாலஜி என்னும் சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்தது. இப்பெயர் அறிவு என்பதைக் குறிக்கும். எப்பிஸ்டமி ( Episteme ) “பகுத்தறிவு” என்பதைக் குறிக்கும். லோகோஸ்  ( Logos ) என்னும் இரு கிரேக்க சொற்களின் கூட்டிலிருந்து உருவானது ’ 1 என கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது. ‘ஆங்கிலத்தில் எப்பிஸ்டமாலஜி என்பதற்கும், சமஸ்கிருதத்தில் ‘ பிரமாண சாத்திரம் ’ என்பதற்கும் இணையாகத் தமிழில் அறிவறிவு என்ற சொல் காணப்படுகிறது. அறிவைப் பற்றிய அறிவு எதுவோ அது, அறிவறிவு எனப்படும்.’ 2 என உரைப்பார் இராச.திருமாவளவன். ‘ அறிவைப் பற்றி ஆராய்ந்து கண்ட முடிவுகளின் தொகுப்பினை அறிவுக் கோட்பாடு என்பர். அறிவின் இயல்பு, அறிவைப் பெறுவதற்கான வழிகள், அறிவின் ஏற்புடைமை, அறிவின் பயன், என்பன பற்றி எழும் சிக்கல்களுக்கு விளக்கம் தேட முற்படுவது அறிவுக்கோட்பாடு. அறிவு பற்றிய சிக்கல்களைக் கருப்பொருளாகக் கொண்டு ஆராய்வது அறிவு அறிவியல். அவ்வாராய்ச்சியின் முடிவாக உருவாக்கப்படுவது அறிவுக்கோட்பாடு’ 3. அறிவாய்வியல், அறிவுக்கோட்பாடு என இரண்டு நிலைகளில் இத்துறை ஆராயப்பட்டாலும் அறிவின் வாயில்கள் என்பன பொதுவாகவே கருதப்படுகிறன.
அறிவின் வாயில்கள்
     பிரமாணம் எனப்படும் அறிவின் வாயில், அடிப்படையில் நேர்மையான அறிவைப் பெறுவதற்கான வழி என்னும் கருத்தை இந்திய மெய்ப்பொருளியில் பிரிவுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டாலும் அதனை வரையறை செய்வதிலும் அதன் எண்ணிக்கையை முடிவுசெய்வதிலும் வேறுபடுகின்றன. அறிவின் வாயில்களாக, “1. பிரத்தியட்சம், 2. அனுமானம், 3. சப்தம் 4. உவமானம் 5. அருத்தாபத்தி  6.அனுபலப்தி 7.சம்பவம் 8. ஐதிகம் 9. பாரிசேசம் 10 ஸ்வபாலிங்கம் என்பவாகும். இவற்றை தமிழில் முறையே, 1. காட்சி 2. கருதல் 3. உரை 4. உவமம் 5. உய்த்துணர்தல் 6.இன்மை 7.உண்டாநெறி 8. மரபு 9. ஒழிபு 10 இயல்பு என்று கூறுவர் ‘4
     தொல்காப்பியம் அறிவின் வாயில் என்பதற்கு இணையாக உணர்ச்சி வாயில்  என்ற தொடரைக் குறிப்பிட்டுள்ளது. (தொல் - சொல் - உரி – 95) அறிவு என்ற சொல்லும் உணர்ச்சி என்ற சொல்லும் ஒரே பொருளுடன் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.
அறிவின் வாயில்களும் பொறிகளும்
     அறிவைப் பெறும் வாயில்களுள் பொறிகள் சிறப்பிடம் பெறுகின்றன. ‘மேலை நாட்டு மெய்ப்பொருளியல் காட்சி, கருதல் என்னும் இரு வாயில்களையே ஏற்கிறது. காட்சி என்னும் அறிவின் வாயிலுக்கு உரிய  பொறிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்தினையே மேலை நாட்டார் ஏற்கின்றனர். மனம் என்ற ஒன்றை அகப்பொறி என இந்திய மெய்ப்பொருளாளர் போல் தனியாகக் குறிப்பிட்டுப் பொறிகளோடு சேர்த்துக் கருதும் போக்கை அவர்களிடம் காணமுடியவில்லை.’5. தொல்காப்பியர்  பொறிகள் பற்றி,                 ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
                  இரண்டறி வதுவே அதனொடு நாவே
                  மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
                  நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
                  ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
                  ஆறறி வதுவே அவற்றொடு மனனே
      நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே – தொல்-பொரு-மரபியல் 27
என உரைக்கிறார். இந்நூற்பா மெய்ப்பொருளியல் கருத்துக்கள் பலவற்றையும் உள்ளடக்கியதாகத் திகழ்கிறது. அறிவுப் பொறிகள் ஆறு. அவை இருவகைப்படும். ஒன்று புறப்பொறி. இதில் மெய், வாய், மூக்கு, கண், செவி என ஐந்தும் அடங்கும். இரண்டாவது அகப்பொறி. இதில் மனம் என்ற ஒன்று மட்டுமே அடங்கும்.
புறநானூற்றில் அறிவின் வாயில்கள்
     அறிவின் வாயில்களை வகைப்படுத்துவதில் மெய்பொருளார்களிடம் கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும், புறநானூற்றில் 1. காட்சி 2. கருதல் 3. உரை 4. உவமம் 5. உய்த்துணர்தல் ஆகிய அறிவு வாயில்கள் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. பிற அறிவு வாயில்களான, 6.இன்மை 7.உண்டாநெறி 8. மரபு 9. ஒழிபு 10 இயல்பு ஆகியன சிறப்பிடம் பெறவில்லை.
1. காட்சி வாயில்
     கண் – காட்சி – புறத்தோற்றம் – மனத்தோற்றம் – அறிவு – அறிவு தரும் நூல்கள் என அறிவின் வாயில்களுள் காட்சி முதன்மை பெறுகிறது. இதனைப் புலன் என்னும் சொல்லால் தொல்காப்பியர் ( தொல் – பொரு – மெய் -11) குறிப்பிடுவர். புலன் என்ற சொல் ஐம்புலன்களின் நுகர்ச்சி என்ற பொருள் தருகிறது. அறிவையே கருவியாகக் கொண்டு மனதினை உழுது பயன்கொள்பவர் புலவர் என்ற பொருளில், “ புலன் உழுது உண்மார் ” (46-3) என்ற சொல்லாட்சி புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.
     புறநானூற்றில், காட்சி என்ற சொல் அறிவு என்ற பொருளில்,  திறவோர் காட்சி (192 –9-11) - அறிவுடையோரின் நூல்கள், எண்ணில் காட்சி ( 213 -15) ஆராய்ச்சி இல்லாத அறிவு, கசடு ஈண்டு காட்சி (214 -2) - அறிவுத் தெளிவற்றவர் என்ற பொருளிலும்  இடம்பெற்றுள்ளது. கல்லாக் காட்சி (170-3) வேட்டைத் தொழில் மட்டுமே அறிந்தவர் கல்வியறிவற்றவர் என்றும், அறன் இல் காட்சி  (210 – 2) அறமற்ற நோக்கம் என்ற பொருளிலும் இச்சொல் பயின்று வருகிறது.
     சேரன் ஆட்சியில் நாடு தேவருலகத்தைப் போல உள்ளது என்பதைக் கேட்டு வந்தேன். அதன் உண்மையைக் கண்டு மகிழ்ந்தேன் என்கிறார் குறுங்கோழியூர் கிழார். (22-34-36) இதன்வழியாக செவியால் கேட்டாலும் கண்களால் பார்ப்பதே சிறந்த அறிவு என்ற அக்காலப் புரிதலை உணரலாம்.
     கடலின் ஆழம், காற்று வீசும் திசைகள், வானம் ஆகியவற்றை அளந்தறிந்து கூறினாலும், சேரனின் ஆற்றலை அளவறிந்து கூறமுடியாது ( 20-1-6) என்கிறார் குறுங்கோழியூர்கிழார். பொது நோக்கு ஒழிமதி புலவர் மாட்டே ( 121 -6 ) என்ற பாடலடிகள் புலவர்களை எல்லோரையும் ஒரே நிலையில் பார்க்கக்கூடாது ஒவ்வொருவருக்கும் தனித்திறன் உண்டு என்கிறார் கபிலர்.  கண்களில் கிடைக்கும் காட்சியறிவு மட்டும் போதாது என்ற சிந்தனையையும் இப்பாடலடிகள் தருகின்றன.
     பாண்டியன் போரில் வென்ற வீரர்களின் மகளிர் கைம்மை நோன்புக்காக தம் கூந்தலைக் களைந்தனர். அந்த அவல நிலையைக் கண்ட பாண்டியன் தம் கொலைத் தொழிலை நிறுத்தினான் என்கிறார் கல்லாடனார் ( 25-10-14) அவன் கண்ட காட்சி அவன் மனதில் மனிதாபிமானம் என்ற உணர்வு மலரக் காரணமானது.
     பல தீய குறிகளைக் கனவில் கண்டாலும், அதைக் கருதாது நனவில் போர் புரியும் வலியவனே என புகழ்கிறார் கோவூர் கிழார். ( 41- 5-11) இப்பாடலடிகளின் வழியாக கனவிலும், நனவிலும் காட்சி ஆராய்ந்து உணரப்பட்டமை அறிகிறோம்.
     ஆறுகளின் நோக்கம் கடலைச் சேர்வது, புலவர்களின் நோக்கம் உன்னைச் சேர்வது உனது நோக்கம் எதிரிகளை அழிப்பது ( 42-21-24) என்றொரு பாடல் காட்சியின் பொருள் என்ன என்று உரைக்கிறது.
     சோழனின் வெண்கொற்றக் குடையைப் போல நிலவு தோன்றியதால் அதைக் கண்டதும் பலமுறை விரைவாகத் தொழுதோம் (60-3) என்ற பாடலடிகள் காட்சியறிவானது மனதும் விளைவிக்கும் மதிப்பைச் சுட்டுகின்றன.  
2. கருதல் வாயில்
      கருதுதல் என்பது சிந்தனையின் அடித்தளமாகிறது. கருதலும், காட்சியும் ஒன்றே எனறு கூறுகின்றவர்களும் உள்ளனர். அவர்கள் கருத்துப்படி, ஒரு பொருளைக் காட்சி வாயிலால் மட்டும் யாரும் அறிவதில்லை.  காட்சி வாயிலால் ஒரு பொருளை அறிகிறபோதே அங்கு கருதல் வாயிலும் இடம்பெற்றுவிடுகிறது” 6
     எனது எல்லாப் பகையையும் நன்கறிந்தவன் வள்ளல் ஆய் என்று கருதி வந்தேன் என்கிறார் துறையூர் ஓடைக்கிழார். (     136-16) இங்கு கருதி என்ற சொல் இடம்பெற்றுள்ளது. சிவந்த ஞாயிற்றின் பாதையையும், அதன் இயக்கமும், பார்வட்டம், காற்று இயங்கும் திசைகள், வானம் ஆகியவற்றை சென்று அளந்தறிந்தவர்களைப் போல கூறுவோரும் உண்டு. அத்தகைய அறிவிருந்தாலும் அடக்கம் என்பதை அவர்கள் அறியார். நீ அடக்கத்தை உடையவனாகத் திகழ்வதால் உன் ஆற்றலைப் புலவர் பாடுதற்கியலவில்லை என்கிறது ஒரு பாடல். (30 1- 11) இதன் வழியாக அறிவைவிட அடக்கம் பெரிது என்றும், அடக்கமானவரிகளின் ஆற்றலை கருத இயலாத நிலையும் நுவலப்படுகிறது. “அறி அறிவு ஆகாச் செறிவினை ” என்ற தொடர் இக்கருத்தைப் புலப்படுத்துகிறது.
      சேரனின் சிந்திக்கும் ஆற்றலை “சூழ்ச்சியது அகலம்” (2-7)  என உரைக்கிறார் முரஞ்சியூர் முடிநாகராயர்.  கருவூர் முற்றியிருந்தானை “ நீ அளந்து அறிதி” என உரைக்கிறார் ஆலத்தூர் கிழார்.    ஆய் வள்ளலின் புகழைப் பாடிய புலவர் ஏணியூர் முடமோசியார்,
          முன் உள்ளுவோனைப் பின் உள்ளினேன்
          ஆழ்க என் உள்ளம் போழ்க என் நாவே
          பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க என் செவியே – 132 1 -3
     முன்னே நினைக்க வேண்டியவனைப் பின்னே நினைத்தேன். என் உள்ளம் அமிழ்க, என் நா பிளக்கப்படுக, என் செவி பாழ் படுக என மனம் வாடும் இப்புலவரின் பாடலடிகள் வழியாக, பேசுதல், கேட்டல் என்ற இரு புலன்களைக் காட்டிலும் உள்ளத்தின் உயர்வு பேசப்படுகிறது. இப்பாடலடிகளில் தம் கருதலின் தவறை உணர்ந்த புலவரின் நிலைப்பாட்டைக் காண்கிறோம்.
           சிந்தித்தல் என்ற பொருளில்  எண்ணுதல்” (7-7, 138-6, 222-5 ), “ஆராய்ச்சி” என்ற பொருளில் “நாடல்”, “நாட்டம்”, “நாடி” ( 15-25, 35 -14, 136-24) என்ற சொற்கள் இடம்பெற்றுள்ளன.
     கருதல் வாயிலில் காட்சி வாயிலின் பங்கு மேற்கண்ட சான்றுகள் வழி உணர்த்தப்பட்டுள்ளன. முன்னர் பெற்ற காட்சியறிவை அடிப்படையாகக் கொண்டதே கருதல் வாயில் என்பதும் கருதல் என்ற சிந்தனை முயற்சியால்தான் காட்சி வாயில் முழுமை பெறுகிறது என்பதையும் சிந்திக்கவேண்டும்.
3. உரை வாயில்
     தமிழில் உரை வாயிலுக்குரியனவாக நூல்களும், உயர்ந்தோர் கூற்றுகளும் அமைந்துள்ளன. வேதங்களை அடிப்படையாகக் கொண்டே உரைவாயில் பேசப்படுவதால் வேதங்களை ஏற்போர் இவ்வாயிலை ஏற்றனர்.
     புறநானூற்றில், உரைசால் தோன்றல் (211 – 6) உரைசால் நன்கலம்         (352 – 10), உரைசெல (398-29), ஆகிய பாடலடிகளில் புகழ் என்ற பொருளிலும் போர்க்கு உரைஇ (97 -1) என்ற பாடலடியில் போரை விரும்பி என்ற பொருளிலும் உரை என்ற சொல் இடம்பெற்றுள்ளது.
     முன்னும் அறிந்தோர் கூறினர் (28-6), அறம் பாடின்றே (34 -7), அறநெறி முதற்றே அரசின் கொற்றம் (55 -10), உணர்த்திசினோரே (365 -11), சான்றோர் (375-8, 218-6), நால்வேத நெறி (2-18), நான்கு மறை முனிவர் (6-20), நான்கு மறை முதல்வர் (26-13,93-7), ஒளியோர் (53-9) “ ஆர் அறிவாளீர் ” (216 -5), போன்ற புறநானூற்றுக் குறிப்புகள் உரை வாயில் பற்றிய பழந்தமிழரின் அறிவுக்குத் தக்க சான்றாக அமைகின்றன.
4. உவம வாயில்
      அறிந்த ஒன்றைக் காட்டி அறியாத ஒன்றை விளக்குதல் உவமம் ஆகும். தொல்காப்பியத்தில் உவமையியல் என தனி இயலில் உவம வாயிலின் கருத்தை விளக்கியுள்ளார் தொல்காப்பியர். அறிந்தவர் கருத்தை அறியாதவருக்கு உரைப்பதால் உரை வாயிலோடும், நேரே கண்டறிவதால் காட்சி வாயிலோடும், உவமானம், உவமேயம் என்னும் இரண்டின் ஒற்றுமைகளை ஆராய்வதால் கருதல் வாயிலோடும் உவமவாயில் தொடர்புகொள்கிறது.
      ஐம்பெரும் பூதத்து இயல்பைப் போல ஆற்றலுடையவன் சேரன் என்கிறார் முரஞ்சியூர் முடிநாகராயர். (2-1-6) நிழல் இல் நீள் இடைத் தனிமரம் போல ( 119-5) என்கிறது ஒரு பாடல். “துஞ்சுபுலி இடறிய சிதடன் போல”
(73-7) என ஒரு பாடலில் உவமை இடம்பெற்றுள்ளது. மேலும் புறநானூற்றில் உவமைகள் பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளன. சான்றாக (94-13, 276-5, 54-13, 6-9 ,27-2) ஆகிய பாடல்களைக் குறிப்பிடலாம்.      அறிவின் வாயில்களுள் அதிகமாக எடுத்தாளப்பட்ட வாயில்களுள் ஒன்றாக உவம வாயில் இடம்பெறுகிறது. புறநானூற்றில் உவம வாயில் பற்றியே தனித்து ஆய்வுகள் நிகழ்த்த இயலும்.
5. உய்த்துணர்தல் வாயில்
     காட்சி, கருதல், உரை, உவமை என்னும் நான்கு வாயில்களாலும் அடையமுடியாத அறிவை வழங்குவதே உய்த்துணரல் என்னும் வாயிலாகும்.       உய்த்துணர்தல் இரு வகை உடையது. அவை காண்பதிலிருந்து கொள்ளும் உய்த்துணர்தல், கேட்பதிலிருந்து கொள்ளும் உய்த்துணர்தல் என்பன ஆகும். உய்தல் ( 97-17, 181-7, 193-3, 300-2, 226-2) என்ற சொல் பிழைத்தல் என்ற பொருளில் பயன்பட்டுள்ளது. புறநானூற்றில் உய்த்துணர்தல் என்ற சொல் இடம்பெறவில்லை என்றாலும். காண்பதிலிருந்தும், கேட்பதிலிருந்தும் தோன்றும் புரிதல் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.
      பொது மன்றத்தில் தொங்கும் முழவில் காற்றடிப்பதால் எழுந்த ஓசை போர்ப்பறையின் முழக்கம் (89-9) எனக் கருதும் தலைவனின் உள்ளம், பறையொலி கேட்டு வள்ளல் பரிசில் நல்கியமை ( 400 – 8) ஆகிய பாடல்களின் வழியாக செவியால் கேட்கும் ஒலி மனதில் தோற்றுவிக்கும் எண்ணத்தின் வெளிப்பாடுகள் உய்த்துணர்தலுக்கான வாயில்களாகவே அமைகின்றன. அதியமானைப் பாடும் ஔவையார், வள்ளன்மை மிக்காரின் செவிகளில் நல்ல சொற்களை விதைத்து தாம் கருதிய பரிசிலை விளைவிக்கும் வலிமை மிக்க உள்ளம் கொண்ட பரிசிலைத் தகுதியறிந்து வழங்குபவனே என்கிறார். (206-1-3). இச்சிந்தனை உய்த்துணர்தலில் தமிழரின் செம்மாந்த அறிவைப் புலப்படுத்துவதாகவே அமைகிறது. செவிவழியாக சோழனின் பெருமைகளைக் கேட்டு நட்பு கொண்டவர் பிசிராந்தையார், “கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்
              காண்டல் இல்லாது – 216–1-2 இப்பாடலடிகள் கண்களால் காணும் காட்சியறிவைவிட செவிகளால் பெற்ற அறிவு சிறந்து விளங்குகிறது. குமணனின் வள்ளன்மையை சான்றோர் கூறக் கேட்டு, தம் உள்ளம் துரப்ப வந்தேன் (160-12-13) என உரைக்கிறார் பெருஞ்சித்திரனார். இதன்வழி  செவியில் கேட்ட செய்தி அப்புலவரை அவ்வள்ளலின் புகழை உய்த்துணரச் செய்தமை அறியலாம்.  சேரனைப் புகழும் இளங்கீரனார், விரிப்பின் அகலும், தொகுப்பின் எஞ்சும் ( 53 -6) என்கிறார் இதன்வழியாக மிகப்பெரிய புகழையுடையவன் சேரன் என்ற கருத்தை நாம் உய்த்துணரமுடிகிறது.
நிறைவாக
     மெய்ப்பொருளியலின் ஒரு பிரிவான அறிவாய்வியல் விரிவான ஆய்வுக்களத்தைக் கொண்டு விளங்குகிறது. இதன் ஒரு ஒரு பிரிவாகத் திகழும் அறிவின் வாயில்கள் குறித்த புறநானூற்றுக் குறிப்புகளின் வழியாக தமிழர் அறிவாய்வியல் என்ற துறையில் நுட்பமான அறிவுடையவர்களாகத் திகழ்ந்தனர் என்பதை அறிய முடிகிறது. அறிவின் வாயில்கள் பத்து என்றாலும் முதல் ஐந்து வாயில்கள் பற்றிய குறிப்புகளே புறநானூற்றில் சிறப்பிடம் பெறுகின்றன.
     அறிவின் வாயில்களில் முதலாவதாகப் பேசப்படும் காட்சி பற்றிய புறநானூற்றுப் பதிவுகளின் வழியாக, காட்சி என்ற சொல் கண்களில் தோன்றும் புறக்காட்சி என்ற பொருளில் மட்டுமின்றி கருதல் என்னும் இரண்டாம் வாயிலுடன் சேர்ந்து அறிவு என்ற பொருளிலும் ஆளப்பட்டமை அறியமுடிகிறது. இரண்டாவதாகப் நுவலப்படும் கருதல் வாயிலானது காட்சியின் சேர்க்கையால் முழுமை பெறுகிறது. சூழ்ச்சி, உள்ளுதல், நாடுதல் என்ற சொற்கள் கருதல் வாயிலின் சான்றுகளாகத் திகழ்கின்றன. மூன்றாவதாகக் குறிப்பிடப்படும் உரை வாயிலானது, அறிந்தோர், அறம்பாடின்றே, உணர்த்திசினோரே, சான்றோர், மறை, ஒளியோர் ஆகிய சான்றுகளால் விளக்கம்பெறுகிறது. நான்காவதாக உவம வாயில், அறிந்தவர் கருத்தை அறியாதவருக்கு உரைப்பதால் உரை வாயிலோடும், நேரே கண்டறிவதால் காட்சி வாயிலோடும், உவமானம், உவமேயம் என்னும் இரண்டின் ஒற்றுமைகளை ஆராய்வதால் கருதல் வாயிலோடும் தொடர்புகொள்கிறது. ஐந்தாவதான உய்த்துணர்தல் வாயில், முதல் நான்கு வாயில்களாலும் அடையமுடியாத அறிவை வழங்குவதாக அமைகிறது. அறிவாய்வியலின் ஒரு பிரிவாகத் திகழும் அறிவின் வாயில்கள் பற்றிய புறநானூற்றுக் குறிப்புகளின் வழியாக பழந்தமிழரின் பண்பட்ட அறிவு புலப்படுகிறது.
சான்றெண் விளக்கம்
1. Encyclopedia Britanica, Vol. IV, p. 528
2. பழந்தமிழர் அறிவாய்வியல் சிந்தனைகள் – இராச. திருமாவளவன் ப- 43
3.க.நாராயணன், தமிழர் அறிவுக்கோட்பாடு – ஓர் அறிமுகம் ப – 38-39
4. பழந்தமிழர் அறிவாய்வியல் சிந்தனைகள் – இராச. திருமாவளவன் ப- 117-118
5. A concise Psycological Dictionary, p. 281
6. . பழந்தமிழர் அறிவாய்வியல் சிந்தனைகள் – இராச. திருமாவளவன் ப- 156.

1 கருத்து:

  1. அருமையான ஆய்வுக் கட்டுரை
    பாராட்டுகள்
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    பதிலளிநீக்கு