பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

செவ்வாய், 24 ஏப்ரல், 2018

சொல்லேருழவரான வில்லேருழவர்கள்




சொல்லை ஏராகக் கொண்டு உழுது, மக்கள் மனங்களை ஆள்வோர் புலவர்கள், வில்லை ஏராகக் கொண்டு உழுது பகைவர் நிலங்களையும் ஆள்வோர் புரவலர்கள். பாடல் பாடுவதை மட்டுமே இயல்பாகக்கொண்ட புலவர்களோடு, நாட்டை ஆளும் புரவலர்களும் பாடல் பாடிய பெருமை உடையன சங்கப்பாடல்கள். புறநானூற்றில் இடம்பெற்ற பாடல்களுள் புரவலர்களால் பாடப்பட்ட பாடல்களின் சிறப்பியல்புகளை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகிறது.


சொல்லை ஆளும் வில்லேருழவர்

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை (திருக்குறள் -872) என்பார் வள்ளுவர். அதாவது வில்லை ஏராகக் கொண்ட உழவராகிய வீரருடன் பகைகொண்டபோதிலும், சொல்லை ஏராகக் கொண்ட உழவராகிய அறிஞருடன் பகைகொள்ளக்கூடாது என்பது இக்குறளின் கருத்தாகும். ‘நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே (புறநா - 312)  என, வேந்தரின் கடனைப் பொன்முடியார் குறிப்பிடுகிறார். வில்லை ஆளும் உழவரான வேந்தர்கள், சொல்லையும் நயம்பட ஆட்சிசெய்தனர் என்பதற்கான சாற்பகரும் பாடல்களுள் புறநானூற்றுப் பாடல்கள் குறிப்பிடத்தக்கன.
வஞ்சினம் மொழிந்த பாடல்கள்

ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் வஞ்சினம் மொழியும்போது, நான் பகைவரை வெல்வேன். இல்லாவிட்டால் என் தேவியை நீங்குவேன், கொடுங்கோலாட்சியான் என இகழப்படுவேன், எம் பாண்டியர் குலப் பெருமையை நீக்கி சிற்றரசனாகப் பிறந்து வன்புலங்களைக் காக்கும் சிறுமைநிலையை அடைவேன் என்று மொழிகிறான். (புறநா – 71) இப்பாடலுள்,

மாவனும், மன் எயில் ஆந்தையும், உரைசால்
அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்
வெஞ்சின இயக்கனும், உளப்படப் பிறரும்
கண்போல் நண்பின் கேளிரொடு கலந்த
இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ (புறநா – 71 -12-16)

என்ற பாடலடடிகளில், மையல் என்னும் ஊருக்குத் தலைவனாகிய மாவனும், நிலையான எயில் என்னும் ஊருக்குத் தலைவனாகிய ஆந்தையும், புகழ் நிறைந்த அந்துவன் சாத்தனும், ஆதன் அழிசியும், வெம்மையான சினமுடைய இயக்கனும் உட்படப் பிறரும் என்னுடன் நட்புடன் கலந்தவர்கள். அவர்களுடன் இனிய பெருமிதம் கூடிய மகிழ்ச்சியான நகைப்பினைத் தவறவிட்டவன் ஆவேன் என உரைக்கிறார். வஞ்சின மொழிதலில் கூட நட்பின் பெருமை பேசும் திறன் நோக்கத்தக்கதாகவுள்ளது.

பாண்டியன் தலையாலங்கானத்து செறுவென்ற நெடுஞ்செழியன் தம் பாடலில், தாம் பகைவரை வெல்லாவிட்டால், என்னைக் கொடுங்கோலன் என உலகம் தூற்றட்டும். என்று வஞ்சினம் மொழிகிறான். இப்பாடலில்,                         

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக என் நிலவரை (புறநா - 72)
என்ற பாடலடிகள் குறிப்பிடத்தக்கன. வேந்தனின் பார்வையில் தன் மானத்தின் எல்லையாக புலர்களின் பாடலைக் கருதியமை அறியமுடிகிறது.
சோழன் நலங்கிள்ளி தம் வஞ்சின மொழிதலில், மெல்ல வந்து என்னைப் பணிந்து நின்றால் என் அரசாட்சியை மட்டுமல்ல என் உயிரையும் தந்துவிடுவேன். மாறாக என்னை எதிர்த்து வந்தால் பலரும் அறியுமாறு உறங்கும் புலியைக் காலால் இடறி எழுப்பிய பார்வையற்றவன் போலப் பிழைப்பது அரிது. யானையிடம் சிக்கிய மூங்கிலைப்போல பகைவரின் ஊர் சென்ற அவர் வருந்துமாறு போர் செய்வேன். அவ்வாறு போரிடாவிட்டால் பொதுமகளிர் தம்முடன் என் மாலை துவள்வதாகுக என்று என்று உரைக்கிறான். இப்பாடலில்,

துஞ்சு புலி இடறிய சிதடன் போல
உய்ந்தனர் பெயர்தலோ அரிதே மைந்துடைக்
கழை தின் யானைக் கால் அகப்பட்ட
வன் திணி நீள் முளை போ (புறநா-73 -7-10)
என்னும் அடிகள் இவ்வேந்தனின் புலமைக்குச் சான்று பகரும் அடிகளாகத் திகழ்கின்றன.

உலக இயல்பு கூறுதல்

சேரமான் கணைக்கால் இரும்பொறை, உயிரைவிட மானம் பெரிது என்று கூறும் பாடலில், வெற்றி பெற்ற மன்னர்கள் தோல்வியுற்றவர்களை நடத்தும் வழக்கத்தையும், மானமுள்ள வேந்தர்களின் மனநிலையையும் புலப்படுத்துகிறார். இப்பாடலில்,

குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார் (புறநா -74 – 1-2)

என்ற பாடலடிகள் தமிழர் வீரத்தின் அடையாளமாகத் திகழ்கின்றன.
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி தம் பாடலில், இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும், அது இனிமையானது என்று தனித்து உண்ண மாட்டர்கள், யாரையும் வெறுக்க மாட்டார்கள், சோம்பலின்றிச் செயல்படுவார்கள், பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள், புகழ் வரும் என்றால் தம் உயிரையும் கொடுப்பார்கள், பழிவரும் என்றால் உலகம் முழுவதும் கிடைப்பதானாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், மனம் தளர மாட்டார்கள், இத்தகைய சிறப்புடையவர்களாகித்  தமக்காக உழைக்காமல் பிறர்க்காக உழைப்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்கிறார்.( புறநா -182 ) சான்றோரின் சான்றான்மையை வியந்து பாடும் இப்பாடலில்,
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் ( புறநா – 182-5-6) புகழ் உயிரைவிட உயர்ந்தது என்ற சிறந்த கருத்து பேசப்படுகிறது

கல்வி

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன் கல்வி பற்றி கூறும் பாடலில், தம் ஆசிரியருக்கு ஒரு துன்பம் வந்தபோது உடன் சென்று அதனைத் தீர்ப்பதற்குத் துணைநிற்க வேண்டும். மிகுதியான பொருளை அவருக்குக் கொடுத்தாவது கல்வி கற்றல் வேண்டும். அவரை வழிபடுவதற்கு வெறுப்படையக் கூடாது. இவ்வாறெல்லாம் செய்து ஒருவன் எப்படியாவது கல்வி கற்கவேண்டும். கல்வி கற்றல் அவ்வளவு நன்மை தரக்கூடியதாகும்.மேலும். ஒரு தாய் வயிற்றில் பிறந்த இருவருள்ளும் அந்தத் தாய் மூத்தவனை விட கல்வி கற்றிருந்தால் இளையவன் மீது பற்றுடையவளாக இருப்பாள்.அதுமட்டுமின்றி. ஒரு குடியில் பிறந்த பலருள்ளும் மூத்தவனை வருக என்று அழைக்காமல் அவருள்ளே அறிவுடையோனையே வருக  என்று அழைத்து அரசனும் அவன் காட்டும் வழியில் நடப்பான். வேற்றுமை தெரிந்த கீழ்க்குல மக்களுள் ஒருவன் கற்று வல்லவனாயின் மேற்குலத்துள் ஒருவனும்  இவன் கீழ்க்குலத்தான் என்று எண்ணாமல் கல்வியின் பொருட்டு அவனிடம் சென்று வழிபட்டு வேண்டி நிற்பான். அதனால் எவ்வகையில் பார்த்தாலும் கல்வி சிறப்புடையதாகும் என்ற கருத்து எடுத்தியம்பப்படுகிறது. (புறநா – 183) இப்பாடலில்,

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே (புறநா – 183 -1-2) அடிகள்
ஆசிரியரை மதிக்கும் மாண்பு பேசப்படுகிறது.

குழந்தைச்செல்வம்

பலசுவைமிக்க உணவுகளைப் படைத்துப் பலரோடும் அமர்ந்து உண்ணும் உடைமை எனப்படும் பெரும்செல்வம் பெற்றவராயினும் என்ன? மெல்ல மெல்ல, குறு குறு என நடந்து சென்று, தம் அழகிய சிறிய கையை நீட்டி, உண்கலத்து நெய்யுடைச் சோற்றில் இட்டும் அக்கையாலேயே, பெற்றோரைக் கட்டிக் கொண்டும், வாயால் கவ்வியும், கையால் துழாவியும், தன் உடல் முழுவதும் சிதறியும், அக்குறும்புகளால் பெற்றோரை மயக்கி இன்பம் கொடுக்கும் புதல்வர்கள் இல்லாதவர்களது வாழ்நாள் பயனற்றதே என்று. பாண்டியன் அறிவுடைநம்பி குழந்தைச் செல்வம் பற்றிக் தம் பாடலில் நயம்பட எடுத்துரைக்கிறார். (புறநா – 188) இப்பாடலில்,

குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி,
இட்டும் தொட்டும், கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழும்நாளே   (புறம் : 188) 

என்ற குழந்தைச் செல்வத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் அழகுபட மொழிந்துள்ளார்.

நட்பு
விளைந்து முற்றிய பின் அறுவடைக்கு முன் உள்ள சிறிய வயலில் இருந்து கதிராகிய உணவைக் கொண்டுசென்று எலி தன் வலைக்குள் மிகுதியாகச் சேர்த்து வைக்கும். அவ்வெலியைப் போல சிறுமுயற்சியும் சுயநலமும் கொண்டவர்களிடம் நட்புக் கொள்வதைவிட, வீரம் செறிந்த புலி முதல்நாள் வேட்டையாடிய ஆண்பன்றி இடப்பக்கம் விழுந்தால் அதனை உண்ணாது அடுத்தநாள் காத்திருந்து பெருமலைப்பக்கத்தில் வீரம் நிறைந்த ஆண்யானையை வலப்பக்கமாக வீழ்த்தி உண்ணும். அத்தகைய புலிபோன்ற பெருமுயற்சியும், கொள்கையும் கொண்டவர்களிடம் நட்புக் கொள்வதே சிறந்தது என்கிறார் சோழன் நல்லுருத்திரன். (புறநா – 190) நான் மகிழ்ந்து செல்வநிலையில் இருந்தபோதெல்லாம் அவன் வராவிட்டாலும் இப்போது நான் துன்பமடைந்திருக்கும் போது எனக்காக வருவான் என கோப்பெருஞ்சோழன் தனக்கும் பிசிராந்தையாருக்குமான நட்பு குறித்து குறிப்பிடுகிறார்.( புறநா - 215 ) மேலும், தன் பெயரைக் கேட்டால் பிறர்க்குக் கூறும்பொழுது என்பெயர் சோழன் என்று என் பெயரைத் தன்பெயராகக் கூறும் நெருங்கிய அன்புரிமை கொண்டவன் என உரைக்கிறார். (புறநா – 216)

வாழ்க்கையின் இலக்கு
கோப்பெருஞ்சோழன் தன் மகன்கள் தன்மீது கொண்ட பகையால் மனம் வாடி தன் நாட்டை அவர்களிடமே கொடுத்து மானம் போனதாகக் கருதி வடக்கிருந்து உயிர்துறக்க முடிவுசெய்தார். அப்போது அவர் பாடியதாகக்கிடைக்கும் பாடலில், அறம் செய்வதையே நம் வாழ்க்கையின் இலக்காகக் கொள்வோம். நல்வினை செய்வோமா? செய்யவேண்டாமா? என்ற சிந்தனை கொண்டோர் நெஞ்சத் துணிவில்லாதவர்களாவர். யானை வேட்டுவன் தவறாது யானையை வேட்டையாடி மீள்வதும் உண்டு. சிறு பறவைகளை வேட்டையாட விரும்பிச் செல்வோர் அவற்றைப் பெறாது வெறுங்கையுடனே வருவதும் உண்டு. சாதிக்கப் பிறந்தவர்கள் நாம் வெறும் வயிற்றுக்கு வாழ்ந்து மடிந்து போவதா? அடுத்தவர்களைப் பார்த்து வாழும் வாழ்க்கையை முதலில் தூக்கி எறிந்து இலக்கோடு வாழப்பழக வேண்டும் அறவழியே வாழ்ந்தால் சொர்க்கம் என்னும் மறு உலகம் கிடைக்கப் பெறும். பிறப்பு என்னும் நோயிலிருந்து மீண்டும் பிறவா நிலை அடையலாம். இவையிரண்டும் கிடைக்காவிட்டாலும் இமையத்தின் உயரத்துக்கு நம் புகழைப் பெற்று குற்றமில்லா உடலுடன் வாழ்ந்து மறையலாம் என்கிறார். இப்பாடலில், வாழ்க்கையில் அறம் செய்ய வேண்டும்.  சொர்ககம், நரகம், என்னும் மறு உலகம் மற்றும் மறுபிறப்பு ஆகியன உண்டு என்றும் இல்லை என்றும் எண்ணிய அக்கால நம்பிக்கை புலப்படுகிறது, மானம் போனால் வடக்கிருந்து உயிர்நீப்பர் எண்ணும் அக்கால மரபு சுட்டப்படுகிறது, அறவழியே வாழ்வதே வாழ்வின் இலக்கு என்னும் வாழ்வியல் அறம் உணர்த்தப்படுகிறது.

கையறு நிலை

கள்ளிச் செடிகள் முளைத்த களர் நிலமான சுடுகாட்டின் வெளிப்பகுதியில் மூட்டப்பட்ட தீயில் என் மனைவி மேலுலகம் அடைந்தாள். அவ்வாறு அவள் சென்றபின்பும் நான் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். என் உயிரைப் போக்கிக்கொள்ளும் வலிமையற்று இருக்கின்ற என் துன்பத்தின் அளவு எவ்வளவோ? இதன் பண்பு எத்தகையதோ? என மனம் வாடி உரைப்பதாக, கையறுநிலைப்பாடலை, பெருங்கோப்பெண்டு இறந்தபோது சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை பாடியுள்ளார் (புறநா – 245)

நிறைவுரை
புறநானூற்றில் வேந்தர்கள் பாடிய பாடல்களுள் வஞ்சின மொழிதல் குறித்த பாடல்களாக மூன்று பாடல்கள் கிடைக்கின்றன. தான் வெற்றி பெறுவேன் என்றும், வெற்றிபெறாவிட்டால் தன் நட்பை இழப்பேன், என்றும், புலவர் அவை பாடாது போகட்டும் என்றும், பொது மகளிருடன் இருந்தேன் என இவ்வுலகம் பழி தூற்றட்டும் என்றும் வேந்தர்கள் கூறும் கருத்துக்களின் வழியாக தன்மானத்தின் எல்லை குறித்த சங்ககாலப் பார்வை புலனாகிறது.
சேரமான் கணைக்கால் இரும்பொறையின் பாடல் உயிரைவிட மானம் பெரிது என்று கூறுகிறது. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடல், புகழுக்காக உயிரையும் விடுவர் என்றும் உரைக்கிறது. இக் கருத்துக்களின் வழியாக மானம், புகழ் இரண்டையும் உயிரைவிட பெரிதாக தமிழர் போற்றினர் என்ற உண்மையும் வெளிப்படுகிறது.
பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியனின் கல்வி குறித்த பாடலில் சங்ககாலக் கல்வியின் மேன்மை உணர்த்தப்படுகிறது. ஆசிரியரை மதிக்கும் மாண்பும், அறிவின் இயல்பையும் நயம்பட நுவலப்படுகிறது.
பாண்டியன் அறிவுடைநம்பி குழந்தைச் செல்வம் பற்றிய பாடல், செல்வங்களுள் சிறந்த செல்வம் குழந்தைச் செல்வமே என்றுரைத்து. அச்செல்வம் இல்லாத வாழ்க்கை பயனற்றது என்று மொழிகிறது.
சோழன் நல்லுருத்திரனின் பாடலில், சிறுமுயற்சியும் சுயநலமும் கொண்ட எலியைப் போன்றவர்களின் நட்பைவிட, பெருமுயற்சியும், கொள்கையும் கொண்ட புலியைப் போன்றவர்களின் நட்பே சிறந்தது என்று காட்டுகிறது.
கோப்பெருஞ்சோழனின் பாடலில் நட்பின் இலக்கணம் பேசப்படுகிறது. உண்மையான நட்புக்கு சந்திப்பு கூட தேவையில்லை என்று உணர்த்தி, இன்பத்தில் பங்குபெறாவிட்டாலும், துன்பத்தைப் பகிர்ந்துகொள்வதே உண்மையான நட்பு என்று பாடம் கற்பிக்கப்படுகிறது.
கோப்பெருஞ்சோழனின் பாடல் வழியாக, அறவழியே வாழ்வதே வாழ்வின் இலக்கு என்னும் வாழ்வியல் அறம் உணர்த்தப்படுகிறது.
கணவனுக்காக உடன்கட்டை ஏறும் மனைவியைப் பற்றி பல பாடல்கள் இருந்தாலும், தன் மனைவியைப் பிரிந்த ஒரு கணவனின் மன வலியைக் கையறுநிலையாக வெளிப்படுத்துகிறது சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை பாடல்.
புலவர்களின் பார்வையில் புரவலர்கள் பற்றி பல பாடல்கள் இருந்தாலும், புரவலர்கள் பார்வையில் தம் ஆட்சி குறித்தும், உலகம் குறித்தும், மானம், கல்வி,  புகழ் குறித்தும் குறிப்பிடப்பட்ட கருத்துக்கள் சிந்திக்கத்தக்கனவாக உள்ளன.
சங்ககாலத்தில் சொல்லேருழவர்கள் போற்றப்பட்டமைக்குக் காரணம் பல வில்லேருழவர்கள், நல்ல சொல்லேருழவர்களாக இருந்தனர் என்பதை புறநானூற்றில் இடம்பெறும் புரவலர்களின் பாடல்களின் வழியாக அறிந்துகொள்ளமுடிகிறது.

1 கருத்து: