வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 19 மார்ச், 2017

மொழி ஞாயிறு!


ஞாலமுதல்மொழி தமிழ்!
திராவிட மொழிகளின்  தாய்மொழி தமிழ்!
ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழி தமிழ்! என வாதிட்டவர்!
கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது தமிழ் என  நிறுவியவர்!
40 க்கும் மேலான மொழிகளைக் கற்று சொல்லாராய்ச்சி செய்தவர், மறைமலையடிகளார் வழி நின்று தனித்தமிழ் இயக்கத்தை வளர்த்தெடுத்தவர்,
அவர்தான் தேவநேயப் பாவாணர்!
சொல்லாராய்ச்சி முறையில் தமிழின் தொன்மையையும் சிறப்பையும் உலகறியச் செய்தவர்!
தேவமொழியென்று ஏமாற்றித் தமிழ்நாட்டிற் புகுத்தப்பட்ட வடமொழியாலேயே தமிழ்மொழி தாழ்ச்சியடைந்தது,
அதனால் தமிழனும் தாழ்த்தப்பட்டான். எனவே,
தமிழன் மீண்டும் முன்னேற வேண்டுமானால்,
தமிழ்மொழி வடமொழியினின்று விடுதலையடைதல் வேண்டும்என்று எண்ணினார் பாவாணர்.
இவர் வாழ்வின் திருப்புமுனை,
பாவாணர் ஒருமுறை திருப்பனந்தாள் மடத்திற்குச் சென்றிருந்தார். அங்குப் பாவாணரும் வேறு சில தமிழரும் விடுதித் தாழ்வார அறையில் தங்கியிருந்தனர். பிராமணர்க்கெல்லாம் தங்குவதற்கு உள்ளே அறைகள் கொடுக்கப்பட்டிருந்ததுமல்லாமல், நண்பகல் உணவு பிராமணர்க்கு முதலில் பரிமாறப்பட்ட பின்னரே தமிழர்க்குப் பிற்பகல் மூன்று மணிக்குப் பரிமாறப்பட்டது. காலத்தாழ்வு ஏற்பட்டதைக் குறித்து வினவியபோது, அங்குள்ளோர் அப்போதுதான் பிராமணப் பந்தி முடிந்ததென்று தெரிவித்துள்ளனர். அப்போது, பாவாணர் தமிழர் குமுகாயம் அந்த அளவிற்குத் தாழ்ந்துபோன நிலை கண்டு, மிகுந்த வருத்தமடைந்திருக்கிறார்.

நாடு தமிழ்நாடு! மடம் தமிழர் மடம்! சமயம் தமிழர் சமயம்! பணம் தமிழர் பணம்!” அங்ஙனமிருந்தும், தமிழன் நாய் போல் நடத்தப்படுவது இன்றும் தொடர்கின்றதென்றால், தமிழனைப் பிராமண அடிமைத் தனத்திலிருந்து மீட்டே ஆக வேண்டுமென்று மனம் குமுறுகின்றார் பாவாணர். தமிழனை மீட்கும் பணியிலும் ஈடுபடுகின்றார்

  “தமிழை வடமொழியினின்றும் தமிழனை ஆரியனிடமிருந்தும் மீட்க வேண்டும். அதற்காகவே ஏறத்தாழ அறுபதாண்டு காலமாக மொழியாராய்ச்சியில் ஈடுபட்டேன். தமிழ் திராவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் என்ற உண்மையை உலகறியச் செய்ய வேண்டும். இதற்கு மிகுந்த நெஞ்சுரமும் தற்சார்பு மனப்பான்மையும் வேண்டும். இவை பிறர்க்கு இல்லை. இதற்காகவே இறைவன் என்னைப் படைத்தார்என்று உரைக்கின்றார் பாவாணர்.

வடமொழியினின்று தமிழை மீட்பதே தமது வாழ்க்கைக் குறிக்கோளாகக் கருதி, தமிழ், தமிழர் நலம் காப்பதையே தமது உயிர் மூச்சாகக் கொண்டார் கொண்டு வாழ்ந்த மொழிஞாயிறு பாவாணரின் தமிழ்ப் பணியைப் போற்றுவோம்!
தமிழின் பெருமையை உணர்வோம்!
பிறமொழிகளையும் கற்போம்!
என்றாலும்,
தனித்தமிழில் பேசுவோம்!
தமிழின் பெருமையை உலகறியச் செய்வோம்!



5 கருத்துகள்: