வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 19 ஜனவரி, 2017

திருக்குறள் மொழிபெயர்ப்புகளில் மனிதனும், கணினியும்

திருக்குறள் மொழிபெயர்ப்புகளில் மனிதனும், கணினியும்


முனைவர் இரா.குணசீலன்;
தமிழ் உதவிப் பேராசிரியர்
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு
திருக்குறள் மொழிபெயர்ப்பில் மனிதனின் உழைப்பையும், கணினியின் தேவையையும் எடுத்துரைத்து கணினிக்கு திருக்குறள் சார்ந்த அறிவைக் கற்பிக்கும் வழிமுறைகளைக் கூறுகிறது இகட்டுரை.
                          உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் செம்மைத் தன்மைக்கு சான்று பகரும் நூல்களுள் ஒன்று திருக்குறள். மதம் சார்ந்து பரப்பப்பட்ட விவிலியத்துக்கு அடுத்து நூறு மொழிகளுக்கு மேல் மொழிபெயர்க்கப்பட்ட பெருமைக்குரியது இந்நூல். திருக்குறள் கடல் என்றால் அதன் உரைகள் கடலின் நிழற்படங்களைப் போன்றன. மொழிபெயர்ப்புகள் கடலின் காணொளிகளைப் போன்றன. நிழற்படங்களோ, காணொளிகளோ கடலின் முழுமையான தோற்றத்தைக் காட்டிவிடமுடியாது என்றாலும், கடலைத் தம் வாழ்நாளில் ஒரு முறை கூடக் காணாதவர் கடலின் நிழற்படத்தையோ, காணொளியையோ காணும்போது கடலை நேரில் காணவேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். அதுபோலத்தான் இந்த உரைகளும், மொழிபெயர்ப்புகளும். உரைகள் குறளை தமிழர்களிடம் பரவச் செய்தன என்றால் மொழிபெயர்ப்புகள் குறளை உலகமக்களிடம் கொண்டு சேர்த்தன. திருக்குறள் மொழிபெயர்ப்புகளில் மனிதனின் உழைப்பையும், கணினியின் தேவையையும் எடுத்துரைத்து திருக்குறள் மொழிபெயர்ப்பின் எதிர்காலத்தை எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.
திருக்குறள் மொழி பெயர்ப்பின் தேவை
                நாம் எந்தப் பொருள் வாங்கினாலும் அதை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்ற செயல் விளக்கக் கையேடும் அதோடு வழங்குவார்கள். ஆனால் எந்தக் குழந்தையும் தம் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்ற வழிகாட்டும் விளக்கக் குறிப்பேட்டுடன் பிறப்பதில்லை. மனிதனின் பிறப்பு மட்டும் புதிரானதாக இருக்கிறது. இந்த வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்ற கேள்வி எல்லோரிடமும் உள்ளது. அந்தக் கேள்விக்கான பதில்களை உள்ளடக்கிய நூல்களுள் ஒன்று திருக்குறள் என்பதால் இந்நூல் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.
                நவில்தொறும் நூல்நயம் போலும் என்ற தொடர் இந்தத் திருக்குறளை ஏன் ஒவ்வொருவரும் வாசிக்கிறார்கள்? வாசிக்கச் சொல்கிறார்கள் என்ற கேள்விக்குப் பதிலாக அமைகிறது. ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சிந்தனைகளைத் தரும் கருவூலமாகவே இந்நூல் திகழ்கிறது. திருக்குறளை வைத்து வள்ளுவர் இந்தத்துறையில்தான் சிறந்தவர் என்று பகுத்தறிய இயலாது. உழவாக இருந்தாலும் மருத்துவமாக இருந்தாலும் அதில் நுட்பமான அறிவுடையவராகவே வள்ளுவர் தோன்றுகிறார். பல்வேறு துறைகளையும் வள்ளுவர் எடுத்துரைத்துள்ளதால் பல்வேறு துறை சார்ந்தவர்களும் திருக்குறளைக் கொண்டாடுகின்றனர். மேலும் தமிழின் பெருமையை உலகறியச் செய்யவும், மனித இனம் நல்வழியில் வாழவும் திருக்குறள் போன்ற நூல்கள் மொழிபெயர்க்கப்படுவது காலத்தின் தேவை.
திருக்குறள் மொழிபெயர்ப்பில் மனிதன்                   
                வணிகம் செய்யவும், சமயத்தைப் பரப்பவும் வந்த வெளிநாட்டவர்கள் தமிழின் இனிமையைக் கண்டு வியந்தனர். திருக்குறளின் பொதுமைத் தன்மையையும், சிறப்பியல்புகளையும் கண்ட இத்தாலி நாட்டு கிறித்துவ பாதிரியார் வீரமாமுனிவர் கிபி 1730 ஆம் ஆண்டிலேயே இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். அவரைத் தொடர்ந்து பலரும் ஐரோப்பிய மொழிகளிலும் பிற மொழிகளிலும் திருக்குறளை மொழி பெயர்த்தனர். சான்றாக,
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
                செயற்கரிய செய்கலா தார் 26 என்ற குறளுக்கு, செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர் என உரை வகுப்பார் மு.. இந்தக் குறளுக்கு ஜியு.போப் அவர்கள்,
                Things hard in the doing will great men do;
            Things hard in the doing the mean eschew. 26 என்றும்,
யோகி சுத்தானந்த பாரதி அவர்கள்
                                    The small the paths of ease pursue
                        The great achieve things rare to do என்றும் மொழிபெயர்த்துள்ளார். திருக்குறளின் மூல அடிகள் ஒரே மொழியில் விளக்கும்போது வெவ்வேறு நிலைகளில், சொல், மற்றும் தொடர்களால் மாறுபடுகின்றன. தமிழ்மொழியிலிருந்து வேறு மொழிக்கு மொழிபெயர்க்கப்படும்போது இந்த மாற்றம் இன்னும் இலக்குமொழியின் சூழலுக்கு ஏற்ப மாறிவிடுகிறது.
இந்திய மொழிகள்
குஜராத்தி, இந்தி, வங்காளம், கன்னடம், கொங்கணி, மலையாளம், மராத்தி, மணிப்புரி, ஒரியா, பஞ்சாபி, இராஜஸ்தானி, சமற்கிருதம், சௌராட்டிர மொழி, தெலுங்கு போன்ற 14 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
ஆசிய மொழிகள்
அரபி, பருமிய மொழி, சீனம், பிஜியன், இந்தோனேசியம், யப்பானியம், கொரியா, மலாய், சிங்களம், உருது போன்ற 10 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய மொழிகள்
செக், டச்சு, ஆங்கிலம், பின்னிய மொழி, பிரெஞ்சுமொழி, செருமன், அங்கேரிய மொழி, இத்தாலிய மொழி, இலத்தீன், நார்வே மொழி, போலிய மொழி, ரசிய மொழி, எசுப்பானியம், சுவீடிய மொழி ஆகிய 14 ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட திருக்குறள் மொழிபெயர்ப்புகள் யாவும் மனிதனின் உழைப்பால் இந்த வையத்துக்குக் கிடைத்த கொடைகளாகும்.
மொழிபெயர்ப்பில் உரைகளின் ஆளுமை
                திருக்குறள் மொழிபெயர்ப்பில் மூல அடிகள் பொருள் புரியாத நிலையில் உரைகளின் வழி புரிந்துகொண்டு மொழிபெயர்க்கும் வாய்ப்பும் உள்ளதால் மொழிபெயர்ப்பில் உரைகளும் சிறப்பிடம் பெறுகின்றன. உரையாசிரியர்களின் செல்வாக்கு, மொழிபெயர்ப்பாளர்களிடமும் காணப்படுகிறது. எல்லீசு என்னும் அறிஞர் அறத்துப்பாலுக்குத் தாம் மொழிபெயர்த்த 304 குறள்களுக்கு 300 நூல்களை மேற்கோள் காட்டியுள்ளார். திருக்குறளின் ஆழ்ந்த பொருளை நுட்பமாக உணர்ந்துகொள்ளவும், உணரவைக்கவும் உரைகள் தேவை என்பதை இதனால் உணரலாம். திருக்குறளுக்கு எழுதப்பட்ட 300க்கும் மேற்பட்ட உரைகளுள் பரிமேலழகர், மு. ஆகியோரின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கதாக அமைகிறது.
மனித மொழிபெயர்ப்பின் இடர்பாடுகள்                    
                மனித மொழிபெயர்ப்பில் மொழிப்புலமை, இலக்கண அறிவு, உலகியல் அறிவு, தமிழர் பண்பாட்டு அறிவு ஆகியன தேவைப்படுகின்றன. உரைகளைக் கடந்து குறளின் மூலஅடிகளைப் புரிந்துகொள்ளும் இயல்பும் மொழிபெயர்பாளரின் அடிப்படைத் தேவையாகிறது. இவற்றில் ஏதோ ஒன்று குறைவாக இருந்தாலும் அந்த மொழிபெயர்ப்பு முழுமையாக பெயர்க்கப்படும் மொழிக்கு சென்று சேர இயலாத நிலை ஏற்படுகிறது.
திருக்குறள் மொழிபெயர்ப்பில் கணினி
                இன்று உலகின் ஒரே மொழி கணினி. கணினியை எந்தமொழி சார்ந்தவரும் தம் மொழியிலேயே பயன்படுத்த முடியும் என்ற தன்னிறைவை அடைந்துள்ளனர். தமிழ் எழுத்துருவை கணினியில் பயன்படுத்தவே இயலாமல் தவித்த காலங்களைக் கடந்து இன்று ஒருங்குறி எழுத்துருவால் இணையத்தில் எங்கும் தமிழ் எழுதுகிறோம். எழுத்துக்களைப் பேச்சாகவும், பேச்சை எழுத்தாகவும், எழுத்துருக்களை மாற்றவும், எந்த மொழியில் உள்ள எழுத்துக்களையும் மொழிபெயர்க்க இயலும் என்ற நிலையை நாம் இன்று அடைந்துள்ளோம். கணினிகளுக்கு செயற்கை நுண்ணறிவுத்திறனை ஊட்டிவரும் இன்றைய ஆய்வுகள் எதிர்காலத்தில் கற்பனைக்கும் எட்டாத உயரங்களைத் தொடக்கூடும். இந்நிலையில் திருக்குறள் மொழிபெயர்ப்புகளில் கணினிகள் சிறப்பான பங்காற்றிவருகின்றன. ஒரு மொழிபெயர்ப்பாளருக்குத் தேவையான தகுதிகள் யாவும் இன்று ஒரு கணினிக்கு ஊட்டப்பட்டு வருகின்றன. விக்கிப்பீடியாவிலும், கூகுள் மொழிமாற்றித் தொழில்நுட்பத்திலும் இன்று திருக்குறள் மொழி பெயர்ப்பு முயற்சிகளைக் காணமுடிகிறது.
காலத்துக்கு ஏற்ற குறளின் வடிவங்கள்
                சுவடிகளில் இருந்த திருக்குறள் அச்சாக்கம் பெற்று உரைவிளக்கம் பெற்று, ஒலியாகவும், காணொளியாகவும் மாறி கணினியின் வரவால் இணையத்திலும் வலைப்பதிவுகளிலும் யுடியூப்பிலும் பரவலாக்கம் பெற்று இன்று குறுஞ்செயலிகளாக பல்வேறு வடிவங்களில் வாசிப்பில் உள்ளது. கட்டுக்கட்டாக இருந்த திருக்குறள்களை இன்று சிறிய ஆப்சு என்னும் குறுஞ்செயலியில் வாசிக்கமுடியும். அதில் குறள் அதன் பல்வேறு உரைகள், அதன் மொழிபெயர்ப்பு, விளக்கம் என்று தொழில்நுட்பம் திருக்குறளை உலகமக்களின் பார்வைக்குக் கொண்டு சேர்த்துள்ளது.
இணையத்தில் திருக்குறள் மொழி பெயர்ப்புகள்
                1. http://tamilelibrary.org/teli/thkrl.htmlஉலக அளவில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்ட விவரங்களை உள்ளடக்கியதாக இவ்விணையதளம் விளங்குகிறது.
                2. http://tamilvu.org/library/libindex.htm திருக்குறளுக்கான உரைகளுள், பரிமேலழகர், மு.வரதராசனார், மணக்குடவர், ஞா.தேவநேயப் பாவாணர் ஆகியோரின் தமிழ் உரைகளுடன் ஜியு.போப் மற்றும் யோகி சுத்தானந்த பாரதியாரின் ஆங்கில உரைகளும் காணக் கிடைக்கின்றன. மேலும் இசைவடிவில் திருக்குறளையும், சீனம் மற்றும் அரபி மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்புகளைக் கொண்டதாக இவ்விணையதளம் திகழ்கிறது.
                3. . http://www.oocities.org/nvkashraf/kur-trans/languages.htm என்ற இணையதளம் திருக்குறள் மொழிபெயர்ப்புகளை ஒருங்குறி வடிவில் வரிசைப்படுத்தியுள்ளது.
கணினி மொழிபெயர்ப்பின் இடர்பாடுகள்
                விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
                சொல்லுதல் வல்லார்ப் பெறின் - 648
என்ற குறளுக்கு ஏற்ப கணினி செய்யவேண்டிய பணிகளை  ஒழுங்காக அதற்குப் புரியுமாறு சொல்லவல்லவரைப் பெற்றால் கணினி விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும். ஆனால் கணினி மொழிபெயர்ப்பு இன்னும் முழுமையானதாக இல்லை. தமிழ் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கோ, சீனமொழிக்கோ அல்லது வேறு ஏதோ ஒரு மொழிக்கோ கூகுள் மொழி மாற்றி மூலம் மொழி பெயர்த்தால் 60 விழுக்காடுதான் சரியான மொழிபெயர்ப்பு வருகிறது. 100 விழுக்காடு மொழிபெயர்ப்பு வரவில்லை. கணினிக்குப் புரியுமாறு கட்டளைகளை முறைப்படி சொல்லத் தேவையான தமிழ்மொழியறிவு கணினித்துறை சார்ந்தவருக்கும், தமிழ்த்துறை சார்ந்தவருக்குக் கணினி அறிவும் இல்லாமை கணினி மொழிபெயர்ப்பின் குறைபாடுகளுள் ஒன்றாகும்.
கணினிக்குத் தேவையான செயற்கை நுண்ணறிவு
                திருக்குறள் மொழிபெயர்ப்பானது உலகமொழிகள் யாவற்றிலும் முழுமையாக சென்று சேர கணினித் தொழில்நுட்பம் தேவையான ஒன்றாகும். இதுவரை இணையப்பரப்பில் கிடைக்கும் திருக்குறள் குறித்த ஒருங்குறி வடிவிலான மூலபாடங்களையும், உரைகளையும், மொழிபெயர்ப்புகளையும் ஒரே இணைப்பில் கொண்டுவரவேண்டும். ஒருங்குறி வடிவில் தமிழ் எழுத்துருக்கள் வந்ததால் இன்று திருக்குறளில் ஆளப்பட்ட சொல்லையோ, எழுத்தையே கணினி இனம் கண்டுகொள்வது மிகவும் எளிதான செயலாகும். சான்றாகஅறிவு என்று தேடினால் சில நொடிகளில் 17 குறள்களில் இந்த சொல் இடம்பெற்றுள்ளது என்று கணினி  சொல்லிவிடும். அரிது என்ற சொல்லைத் தேடினால் 18 குறள்களில் இச்சொல் இடம்பெற்றுள்ளது என்று திறன்பேசியில் உள்ள ஒரு திருக்குறள் செயலி கூட சொல்லிவிடும். இந்நிலையில் இன்னும் நுட்பமாக ஒரு சொல்லை வள்ளுவர் எந்தெந்த பொருள்களில் பயன்படுத்தியுள்ளார் என்றும், உரையாசிரியர்கள் தாம் கூறும் கருத்துக்களை எவ்வாறெல்லாம் விளக்கியுள்ளார்கள் என்பதையும் கூட கணினிக்கு சொல்லித்தரவேண்டும். பாடபேதங்களையும், பண்பாட்டுக் கூறுகளையும், வட்டார வழக்குச் சொற்களையும், சமய, தத்துவ விளக்களையும் கணினிக்கு ஒருமுறை கட்டளையாகக் கற்பித்தால் திருக்குறள் மொழிபெயர்ப்பானது இன்னும் செம்மைத் தன்மையுடையதாக உலகமே போற்றக்கூடிய அறிவுக் கருவூலமாகத் திகழும்.
எதிர்காலத்தில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்
                கணினிக்குத் தேவையான செயற்கை நுண்ணறிவை ஊட்டிவிட்டால் கணினி சார்ந்த திருக்குறள் மொழிபெயர்ப்புகள் இன்னும் ஆழமானதாக, அதே நேரம் எளிமையானதாகவும் அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப புரியும்விதமாக அமையும். சான்றாக கல்வி குறித்தோ மருந்து குறித்தோ நட்பு குறித்தோ நாம் மேற்கோள்களை கணினியில் தேடினால் கூகுள் தேடுபொறி செய்தி வழங்குவதுபோல, நாம் எந்த மொழியில் குறளையும், விளக்கத்தையும் காண விரும்புகிறோம் என்ற வழிகாட்டுதலுடன் பல்வேறு மேற்கோள்களுடன் ஒலி, மற்றும் காணொளி வடிவில் கூடக் காணக் கிடைக்கும். மேலும் அன்றாட வாழ்வில் நாம் பேசும் சூழல்களுக்கு ஏற்ப குறள் குறித்த பரிந்துரைகளை கணினியில் செயலிகள் வழங்கும்விதமாகக் கூடச் செய்யலாம்.
                சான்றாக சமூகத் தளத்தில் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது, இன்னொருவரைப் பற்றி இவர் எவ்வளவு பெரிய அறிவாளி, மிகச்சிறந்த பேச்சாளரான  இவர் எப்படி இந்த அடிப்படைச் செய்திகூட தெரியாதவராக இருக்கிறார் என்று தாம் மனதளவில் மிகப் போற்றிய ஒருவரின் அறியாமை குறித்துப் பேசுகிறார் என்றால் அவருக்குப் புரியும்விதமாக குறள் வழியாக என்ன பதில் சொல்லலாம் என்று கணினியிடம் கேட்டால் கணினி தம் தரவுத்தளத்திலிருந்து திருக்குறள் மூலம் மட்டும் போதுமா? இல்லை உரைவிளக்கம் வேண்டுமா? எந்த மொழியில் வேண்டும் என்று கேட்கும் அளவுக்கு மொழிபெயர்ப்பை உருவாக்கமுடியும். அதற்குப் பதிலாக எனக்கு இதற்கு ஏற்ற திருக்குறள் தமிழில் மூலம் மட்டும் போதும் என்று சொன்னால் சில மணித்துளிகளில்,
                அரிய கற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
                இன்மை அரிதே வெளிறு – 503
என்று கணினி பதிலளிக்கலாம். இதற்கு விளக்கம் வேண்டுமானால், கணினி ஒலி வடிவில் கூட விளக்கம் தரலாம். அரிய நூல்களைக் கற்றுத் தேர்ந்த குற்றமற்றவரிடத்திலும் ஆராய்ந்து பார்த்தால் அறியாமை இருக்கும் என்று. இதற்கு வேறு உரையாசிரியர்களின் மேற்கோள் வேண்டும் என்று கேட்டால் அதையும் கணினி சொல்லும்விதமாக கணினிக்கு நாம் கட்டளையிடமுடியும்.
நிறைவாக

                 கற்றோர் மட்டும் படித்து மகிழ்ந்த திருக்குறள் உரையாசிரியர்களால் கல்லாதவர்களும் அறிந்துகொள்ளும் நிலைக்கு வந்தது. தமிழர் மட்டும் கொண்டாடிய திருக்குறள் மொழிபெயர்ப்பாளர்களால் உலகமே கொண்டாடும் உயர்ந்த நிலையை அடைந்துள்ளது. மதம் சார்ந்து பரப்பப்படும் நூல்களுக்கு இடையில் கருத்தால் மக்கள் மனதைக் கவர்ந்த இலக்கியமாகத் திகழ்கிறது இந்நூல். திருக்குறள். மொழிபெயர்ப்பில் மனிதர்களின் முயற்சியால் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் இந்நூலுல் வாசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் தமிழில் மூலஅடிகளை வாசிக்கும் நிறைவு மொழிபெயர்ப்பில் முழுமையாகக் கிடைக்கவில்லை என்பது உண்மை. அதற்கு தமிழ்மொழியின் இலக்கண மரபுகளும், சொல் மற்றும் தொடர் நிலையில் வள்ளுவரின் ஆளுமைத் திறனும் பிறமொழிகளில் மாற்றும் போது அதற்கிணையாக இல்லை என்பதையும் நாம் கருத்தில்கொள்ளவேண்டும். ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் தம் அறிவுக்கேற்ப தம் புரிதலுக்கேற்ப மொழிபெயர்த்துள்ளனர். திருக்குறள் மொழிபெயர்ப்பில் தமிழ்இணையக் கல்விக்கழகம், மற்றும் விக்கிப்பீடியா ஆகிய தளங்கள் குறிப்பிடத்தக்கனவாகத் திகழ்கின்றன. கூகுள் மொழிமாற்றித் தொழில்நுட்பம் இன்னும் பல மொழிகளில் குறளை மொழிபெயர்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறுஞ்செயலிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் காணக்கிடைக்கின்றன. இன்றைய கணினிகளுக்கு செயற்கை நுண்ணறிவை ஊட்டிவருவதால் எதிர்காலத்தில் கற்பனைக்கும் எட்டாத அளவில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் எளிமையாகும் வாய்ப்பு உள்ளது. அதற்கு கணினிக்கு இன்னும் நிறைய தமிழறிவை ஊட்டவேண்டும். இதுவரை வந்த திருக்குறள் உரைகளையும், மேற்கோள்களையும், மொழிபெயர்ப்புகளையும் ஒருங்குறி வடிவில் கணினிக்கு ஊட்டினால் எதிர்காலத்தில் திருக்குறள் மொழிபெயர்ப்பு உயிரோட்டமானதாகவும், எளிமையாகவும், மூலபாடத்துடன் இயைபுடையதாகவும் அமையும். திருக்குறளை உலகமே போற்றும்.

10 கருத்துகள்:

  1. வாசிக்க வாசிக்க மிகவும் மகிழ்ந்தேன்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  2. இப்பபதிவு மூலமாக பல செய்திகளை அறிந்தேன். ஒரு ஆக்கபூர்வமான பணி அமைதியாக நடைபெற்றதறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  3. சிறந்த ஆய்வுக் கட்டுரை
    சிந்திக்க வைக்கும் பதிவு

    பதிலளிநீக்கு
  4. தமிழ் அவமானம் அல்ல அடையாளம் என்பதற்கு சிறந்த கட்டுரையை தான் தாங்கள் முன் வைத்து உள்ளீர் ஐயா.

    கணினியிலும் தமிழ் உண்டு என்பதை திருக்குறள் மூலம் சிறப்பாக தாங்கள் முன்மொழிந்துள்ளீர்.தங்களின் தமிழ்ச் சேவை தொடர வாழ்த்துகள் எனது குருநாதரே.

    பதிலளிநீக்கு
  5. அழகான ஆய்வு. அகமகிழ்ந்து செய்யும் ஆலோசனைகள். கணினிக் குறள் கற்போம்! மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு